திருமறைக்காடு (வேதாரண்யம்) - பியந்தைக்காந்தாரம் கரகரப்பிரியா நவரோசு கன்னடகௌலா ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது. சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார். கோளறு பதிகம், சனி, இராகு, கேது பெயர்ச்சி, கோள்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய பதிகம்.
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,
மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி,
சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
மூங்கில்போன்ற தோளினை உடைய உமை யம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள் கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்த வனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையைமீட்டிக்கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு , திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம் . அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும் .
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க,
எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும்,
உடன் ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
என்பு , பன்றிக்கொம்பு , ஆமையோடு ஆகியன மார்பின்கண் இலங்கப் பொன்போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தைமலர்மாலை , கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமை யம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத் தலால் , அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது , பத்து , பதினாறு , பதினெட்டு , ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவன வும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் .
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து,
உமையோடும், வெள்ளை விடை மேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி,
திசை தெய்வம் ஆன பலவும்,
அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை , திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள் , துர்க்கை , செயமகள் , நிலமகள் , திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும் . அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும் .
மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர்,
கொடு நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையா ரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை , கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , சினம் மிக்க காலன் , அக்கினி , யமன் , யமதூதர் , கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடை யனவாய் நல்லனவே செய்யும் . அடியவர்களுக்கும் மிகவும் நல்ல னவே செய்யும் .
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும்,
மிகை ஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
நஞ்சணிந்த கண்டனும் , எந்தையும் , உமையம்மை யாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான் , இருள் செறிந்தவன்னிஇலை , கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர் , இடி , மின்னல் , செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் .
வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள் தனோடும் உடன் ஆய்,
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால்
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல், கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.
ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோலாடையை உடுத்து வரிந்து கட்டிய கோவண ஆடையராய் உள்ள பெருமானார் உமையம்மையாரோடும் உடனாய் அன்றலர்ந்த மலர்கள் , வன்னி , கொன்றை , கங்கை ஆகியவற்றை முடிமிசைச் சூடிவந்து என் உளத்தின் கண் புகுந்துள்ள காரணத்தால் வலிய குரங்கு , புலி , கொலையானை , பன்றி , கொடிய பாம்பு , கரடி , சிங்கம் ஆகியன நமக்கு நல்லனவே செய்யும் ! அடியார் கட்கும் மிக நல்லனவே செய்யும் .
செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும், வாதம், மிகை ஆன பித்தும், வினை ஆன, வந்து நலியா;
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.
செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும் , கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய் , என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத் தால் , வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா . அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும் .
வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள் தனோடும் உடன் ஆய்,
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடர் ஆன வந்து நலியா;
ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.
மன்மதன் அழியுமாறு நெற்றி விழியைத்திறந்து எரித்து விடைமீது உமைமங்கையோடும் உடனாய் இருந்து , முடிமிசை ஒளிபொருந்திய பிறை , வன்னி , கொன்றைமலர் ஆகியனவற்றைச் சூடிச் சிவபெருமான் வந்து என் உளம்புகுந்துள்ள காரணத்தால் ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனாலும் பிற ராலும் வரும் இடர்கள் நம்மை வந்து நலியா ; ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவே செய்யும் . அடியார்களுக்கும் அவை நல்லனவே புரியும் .
பல பல வேடம் ஆகும் பரன், நாரிபாகன், பசு ஏறும்
எங்கள் பரமன்,
சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலம் ஆன பலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும் , உமைபாகனும் , எருதேறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான் , முடிமீது கங்கை , எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரைமலர்மேல் உறையும் பிரமன் , திரு மால் , வேதங்கள் தேவர்கள் ஆகியோராலும் , கெட்ட காலங்கள் , அலைகடல் , மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும் . அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும் .
பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள்புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர் , பிறை , பாம்பு ஆகியவற்றை அணிந்து , என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும் . நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும் . அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும் .
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி, வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.
தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும் , கரும்பு , விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும் , வளரும் செம் பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும் , நான்முகனால் முதன்முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர் . இது நமது ஆணை .