சிவய.திருக்கூட்டம்
sivaya.org

Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.005   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பூந்தராய் - காந்தாரபஞ்சமம் கனகாங்கி கேதார கெளளை கர்நாடக சுத்த சவேரி ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=tJUB5BtwJ8Y   Add audio link Add Audio

தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய
மிக்க செம்மை விமலன், வியன் கழல்
சென்று சிந்தையில் வைக்க, மெய்க்கதி
நன்று அது ஆகிய நம்பன்தானே.

1
சிவனை மதியாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனாகிய , திருப்பூந்தராய்த் தலத்தில் எழுந்தருளிய மிகுந்த சிறப்புடைய , இயல்பாகவே பாசங்களில் நீங்கிய சிவபெருமானின் பெருமையுடைய திருவடிகளைச் சிந்தியுங்கள் . அனைத்துயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற , அனைவராலும் விரும்பப்படுகின்ற அச் சிவபெருமானே நமக்கு வீடுபேற்றினைத் தருவான் .

புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ,
ஞாலத்தில் உயர்வார், உள்கும் நன்நெறி
மூலம் ஆய முதலவன் தானே.

2
பறவையினங்களும் புகழ்ந்து போற்றிய திருப் பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள கங்கையைத் தாங்கி யுள்ள விகிர்தனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுதலே இந்நிலவுலகில் உயர்வடைவதை விரும்புபவர்கள் சிந்திக்கும் நன்னெறியாகும் . ஏனென்றால் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங்குபவன் அச்சிவபெருமானே ஆவான் .

வேந்தராய் உலகு ஆள விருப்பு உறின்,
பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல்
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட,
சாதியா, வினை ஆனதானே.

3
நீங்கள் மன்னராகி உலகாள விரும்பினால் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பொன்னார் திருவடிகளை வழிபடுங்கள் . மேலும் அத்திருவடிகளை விதிமுறைப்படி நினைந்து , போற்றித் தியானித்தால் வினைகள் தம் தொழிலைச் செய்யா . எனவே பிறவி நீங்கும் . வீடுபேறு உண்டாகும் .

பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட,
சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
இந்து வார்சடை எம் இறையே.

4
இப்பூவுலகில் தேவர்கள் போன்று பெருமையாகக் கருதப்படுகின்ற அந்தணர்கள் வணங்கிப் போற்றும் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் செம்மை வாய்ந்த திருவடிகளைத் துதித்து இறைஞ்சிடச் சந்திரனை அணிந்த நீண்ட சடைகளையுடைய இறைவன் நம் மனக்கவலைகளைப் போக்கி அருள்புரிவான் . ` தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ` ( குறள் - 7) என்ற வள்ளுவர் வாக்கு இங்கு நினைவு கூர்தற்குரியது .

பொலிந்த என்பு அணி மேனியன்-பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட,
நும்தம் மேல்வினை ஓட, வீடுசெய்
எந்தை ஆய எம் ஈசன்தானே.

5
எலும்பு மாலைகளைத் தன் திருமேனியில் அணிந்து திருப்பூந்தராய் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை , நிறைந்த உள்ளத்தோடு வணங்கிட , நம் அனைவர்க்கும் தந்தையாகிய அவ்விறைவன் , நீங்கள் முன்பு ஈட்டிய சஞ்சிதவினையைப் போக்கு தலோடு , இனிமேல் வரும் ஆகாமிய வினையும் ஏறாதபடி செய்து வீடுபேறு அருளுவான் . தத்தம் கால எல்லைகளில் நீங்கிய திருமால் , பிரமன் இவர்களின் எலும்புகளைச் சிவபெருமான் மாலையாக அணிந் துள்ளது சிவனின் அநாதி நித்தத்தன்மையையும் , யாவருக்கும் முதல்வனாம் தன்மையையும் உணர்த்தும் .
Go to top

பூதம் சூழப் பொலிந்தவன், பூந்தராய்
நாதன், சேவடி நாளும் நவின்றிட,
நல்கும், நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.

6
திருப்பூந்தராய் என்னும் தலத்தில் பூதகணங்கள் சூழ விளங்கும் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை எந்நாளும் போற்றி வணங்க , குளிர்ந்த கங்கைநீர் சொட்டுகின்ற நீண்ட சடை முடியுடைய அப்பெருமான் நமக்கு நாள்தோறும் பேரின்பம் அருளுவான் .

புற்றின் நாகம் அணிந்தவன், பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிட,
பாவம் ஆயின தீரப் பணித்திடும்
சே அது ஏறிய செல்வன் தானே.

7
புற்றில் வாழும் பாம்பை ஆபரணமாக அணிந்து , திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள , அனைவருக்கும் மேலான கடவுளான சிவபெருமானைப் பாடி வணங்க , விடையேறும் செல்வனான அவன் , நாம் மனம் , வாக்கு , காயத்தால் செய்த பாவங்களனைத்தையும் தீர்த்தருளுவான் .

போதகத்து உரி போர்த்தவன், பூந்தராய்
காதலித்தான்-கழல் விரல் ஒன்றினால்,
அரக்கன் ஆற்றல் அழித்து, அவனுக்கு அருள்
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே.

8
யானையின் தோலை உரித்துப் போர்த்தித் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியுள்ள எனது பிஞ்ஞகனாகிய சிவபெருமானே தனது திருவடி விரல் ஒன்றினால் அரக்கனது ஆற்றலை அழித்துப் பின்னர் அவனுக்கு அருள் செய்தான் .

மத்தம் ஆன இருவர் மருவு ஒணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்,
ஆள் அது ஆக, அடைந்து உய்ம்மின்! நும் வினை
மாளும் ஆறு அருள்செய்யும், தானே.

9
தாமே தலைவர் என்று செருக்குக் கொண்ட திரு மாலும் , பிரமனும் , அறிந்து அடைய முடியாது உயர்ந்து விளங்கிய சிவ பெருமான் எழுந்தருளிய திருப்பூந்தராய் என்னும் தலத்தை அவனுக்கு ஆட்படும்படி அடியவராய்ச் சென்று சேர்ந்து மேல் நிலையை அடை யுங்கள் . அவன் தானே வந்து உங்கள் வினைகள் அழியுமாறு அருள் புரிவான் .

பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய் கடிந்து,
இருத்தல் செய்த பிரான்-இமையோர் தொழ,
பூந்தராய் நகர் கோயில் கொண்டு, கை
ஏந்தும் மான்மறி எம் இறையே.

10
வேத நெறிகட்குப் பொருந்தாத சமணர் , புத்தர் களின் பொய்யுரைகளை ஒதுக்கி , விண்ணோர்கள் வணங்கும்படி வீற்றிருக்கும் கடவுள் , திருப்பூந்தராய்த் தலத்தைக் கோயிலாகக் கொண்டு தனது கையில் மான்கன்றை ஏந்தியுள்ள சிவபெருமானே ஆவான் .
Go to top

புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல் எம் அடிகளை, ஞானசம்
பந்தன் மாலை கொண்டு ஏத்தி வாழும்! நும்
பந்தம் ஆர் வினை பாறிடுமே.

11
உள்ளத்தால் மிக நல்ல சிவனடியார்கள் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள , என்றும் அழிதலில்லாத எம் தலைவனான சிவபெருமானைத் திருஞான சம்பந்தன் அருளிச் செய்த இப்பதிகப் பாமாலையைக் கொண்டு போற்றி வாழுங்கள் . உங்களைப் பந்தித்து நின்ற வினைகள் யாவும் நீங்கும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பூந்தராய்
2.001   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செந்நெல் அம் கழனிப் பழனத்து
Tune - இந்தளம்   (திருப்பூந்தராய் )
3.002   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பந்து சேர் விரலாள், பவளத்துவர்
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )
3.005   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )
3.013   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மின் அன எயிறு உடை
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000