நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக்
குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-
சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ்
சிற்றேமத்தான்;
இறைவன்! என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே.
|
1
|
வெண்மையான முழுநிலவு போன்று ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, நடனம் புரிகின்ற இயல் புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்று ஒலிக்கும் பசுமையான சோலைகளும், வயல்களும் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவர் உலகமெல்லாம் ஏத்திப் போற்றுகின்ற சிவபெருமானே ஆவர். | |
மாகத்திங்கள் வாள்முக மாதர் பாட, வார்சடைப்
பாகத்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய பண்டங்கன்-
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான்;
ஆகத்து ஏர் கொள் ஆமையைப் பூண்ட அண்ணல் அல்லனே!
|
2
|
ஆகாயத்தில் விளங்கும் சந்திரன் போன்று ஒளியுடைய முகத்தையுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடையில் பிறைச்சந்திரனைச் சூடிப் பண்டரங்கம் என்னும் கூத்தாடும் இறைவர், மேகம் திகழும் சோலைசூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந் தருளுகின்றார். அப்பெருமான் திருமார்பில் ஆமை ஓட்டினை ஆபரணமாகப் பூண்ட அண்ணலான சிவபெருமான் அல்லரோ? | |
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட, நீள் சடைக்
கொடு வெண்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-
படு வண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்;
கடுவெங்கூற்றைக் காலினால் காய்ந்த கடவுள் அல்லனே!
|
3
|
வெண்ணிறப் பூரண சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவி இன்னிசையோடு பாட, நீண்ட சடையில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி நடனம் செய்கின்ற பெருமானாய், வண்டுகள் யாழ்போன்று ஒலி செய்யப் பசுமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவன் கொடிய காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுளான சிவபெருமான் அல்லனோ? | |
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட, கண்ணுதல்,
முதிர் ஆர் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய முக்கணன்-
எதிர் ஆர் புனல் அம் புன்சடை எழில் ஆரும் சிற்றேமத்தான்;
அதிர் ஆர் பைங்கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே!
|
4
|
கதிர்வீசும் சந்திரனைப் போன்ற ஒளிபொருந்திய முகம்கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் இளம்பிறைச் சந்திரனைச் சூடி, ஆடுகின்ற முக்கண்ணர் ஆவார். அவர் கங்கையும், சடைமுடியும் கொண்டவராய் அழகுடைய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர், கழுத்தில் கட்டிய சதங்கைமணி ஒலிக்கும், பசிய கண்களையுடைய இடபத்தை வாகனமாகக் கொண்ட ஆதிமூர்த்தி அல்லரோ? | |
வான் ஆர் திங்கள் வாள்முக மாதர் பாட, வார்சடைக்
கூன் ஆர் திங்கள் சூடி, ஒர் ஆடல் மேய கொள்கையான்-
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான்;
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே!
|
5
|
வானில் விளங்கும் சந்திரனைப் போன்று ஒளிபொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணோடு பாட, நீண்ட சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்பவனாய்ப் பூக்களிலுள்ள தேனை அருந்திய வண்டு இசைபாடுகின்ற அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளும் இறைவன், மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியோடு மகிழ்ந்திருக்கும் வீரமுடைய சிவபெருமான் அல்லரோ? | |
| Go to top |
பனி வெண்திங்கள் வாள்முக மாதர் பாட, பல்சடைக்
குனி வெண்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்,
தனி வெள்விடையன்-புள் இனத் தாமம் சூழ் சிற்றேமத்தான்;
முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே!
|
6
|
குளிர்ந்த வெண்ணிலவைப் போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப் பாட, சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி ஆடல்புரிகின்றவர் இறைவர். அவர் ஒற்றை வெள் இடபத்தை வாகனமாகக் கொண்டு, பறவை இனங்களும் நறுமண மலர்களும் சூழ்ந்து விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர் விருப்பு வெறுப்பு அற்றவராய், மூப்பினை அடையப்பெறாதவரான முக்கண் மூர்த்தியான சிவபெருமான் அல்லரோ? | |
கிளரும் திங்கள் வாள்முக மாதர் பாட, கேடு இலா
வளரும் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய மா தவன்-
தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான்;
ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே!
|
7
|
கிளர்ந்து எழுந்த பூரண சந்திரனைப் போன்று ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, குறைவிலாது வளரும் தன்மையுடைய பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் இறைவர், தளிரும், கொம்புகளும், தேன் துளிக்கும் மலர்மாலைகளும் சூழ விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமான் ஒளிரும் முப்புரிநூலை அணிந்த திருமார்பினராய் என் உள்ளத்திலுள்ளவர் அல்லரோ? | |
சூழ்ந்த திங்கள் வாள்முக மாதர் பாட, சூழ்சடைப்
போழ்ந்த திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய புண்ணியன்-
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான்; தடவரையைத் தன் தாளினால்
ஆழ்ந்த அரக்கன் ஒல்க, அன்று அடர்த்த அண்ணல் அல்லனே!
|
8
|
சந்திரனைப் போன்று ஒளியுடைய முகம் கொண்ட உமாதேவியார் பண் இசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச் சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமான், வயல்வளமிக்க திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தம்காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அரக்கனான இராவணன் நெருக்குண்ணும்படி அன்று அடர்த்த அண்ணல் அல்லரோ? | |
தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே.
|
9
|
ஒப்பற்ற வெண்ணிறச் சந்திரன் போன்று ஒளிரும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசையோடு பாட, தாழ்ந்த சடையில் இளம்பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்கின்ற மிகப் பழமையான இறைவன், அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், நீலரத்தினம் போன்ற நிறமுடைய திருமாலும் காணமுடியாதவாறு மழுப்படை ஏந்தி விளங்குகின்ற செல்வர் அல்லரோ? | |
வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.
|
10
|
வெண்ணிறச் சந்திரன் போன்ற ஒளி திகழும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, திருநடனம் செய்யும் இறைவன் விரும்பி வீற்றிருந்தருளுவது திருச்சிற்றேமம் என்ற தலமாகும். அப்பெருமான் புத்தர், சமணர் ஆகியோர்களைப் படைத்தும், அவர்கட்குத் தோன்றாதவாறு மறைந்தும் விளங்குபவர். | |
| Go to top |
கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே.
|
11
|
கற்களால் ஆகிய மதிலில் கடல்அலைகள் மல்கும், குளிர்ந்த கடற்கரைச் சோலைசூழ்ந்த சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன், செல்வனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருச்சிற்றேமத்தைப் போற்றி நல்ல இன்தமிழில் அருளிய சிறப்புடைய இப்பாடல்களை நாவினால் ஓதவல்லவர்கள் துன்பம் அற்று வாழ்வார்கள். | |