சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.042   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நிறை வெண் திங்கள் வாள்முக
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருச்சிற்றேமம் பொன்வைத்தநாதர் அகிலாண்டேசுவரியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=UspcUKwHxic
7.038   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தம்மானை அறியாத சாதியார் உளரே?
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருவதிகை வீரட்டானம் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=fsTkXgqkqbY
Audio: https://www.youtube.com/watch?v=r1DQ7uTccCE
7.039   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தில்லை வாழ் அந்தணர் தம்
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருவாரூர் )
Audio: https://www.youtube.com/watch?v=F-qNMxHIme8
Audio: https://www.youtube.com/watch?v=j3zT6yhDffM
7.040   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   வள் வாய மதி மிளிரும்
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருக்கானாட்டுமுள்ளூர் பதஞ்சலியீசுவரர் கானார்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=jdRPem0RxXw
7.041   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முது வாய் ஓரி கதற,
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருக்கச்சூர் ஆலக்கோயில் தினம்விருந்திட்டநாதர் கன்னியுமையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=GAXwrWFKRSE
7.042   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   எறிக்கும் கதிர் வேய் உரி
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருவெஞ்சமாக்கூடல் விகிர்தேசுவரர் விகிர்தேசுவரி)
Audio: https://www.youtube.com/watch?v=mRtC8oUEKNQ
7.043   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நஞ்சி, இடை இன்று நாளை
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Ju6apsximE4
7.044   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருஅஞ்சைக்களம் )
Audio: https://www.youtube.com/watch?v=yoM_GiP8gR8
7.045   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருஆமாத்தூர் அழகியநாதர் அழகியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Vbsn6ICya_0
7.046   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பத்து ஊர் புக்கு, இரந்து,
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=P-LoRs-kJuE

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.042   நிறை வெண் திங்கள் வாள்முக  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருச்சிற்றேமம் ; (திருத்தலம் அருள்தரு அகிலாண்டேசுவரியம்மை உடனுறை அருள்மிகு பொன்வைத்தநாதர் திருவடிகள் போற்றி )
நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக்
குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-
சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ்
சிற்றேமத்தான்;
இறைவன்! என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே.

[1]
மாகத்திங்கள் வாள்முக மாதர் பாட, வார்சடைப்
பாகத்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய பண்டங்கன்-
மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான்;
ஆகத்து ஏர் கொள் ஆமையைப் பூண்ட அண்ணல் அல்லனே!

[2]
நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட, நீள் சடைக்
கொடு வெண்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-
படு வண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்;
கடுவெங்கூற்றைக் காலினால் காய்ந்த கடவுள் அல்லனே!

[3]
கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட, கண்ணுதல்,
முதிர் ஆர் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய முக்கணன்-
எதிர் ஆர் புனல் அம் புன்சடை எழில் ஆரும் சிற்றேமத்தான்;
அதிர் ஆர் பைங்கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே!

[4]
வான் ஆர் திங்கள் வாள்முக மாதர் பாட, வார்சடைக்
கூன் ஆர் திங்கள் சூடி, ஒர் ஆடல் மேய கொள்கையான்-
தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான்;
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே!

[5]
பனி வெண்திங்கள் வாள்முக மாதர் பாட, பல்சடைக்
குனி வெண்திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்,
தனி வெள்விடையன்-புள் இனத் தாமம் சூழ் சிற்றேமத்தான்;
முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே!

[6]
கிளரும் திங்கள் வாள்முக மாதர் பாட, கேடு இலா
வளரும் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய மா தவன்-
தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான்;
ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே!

[7]
சூழ்ந்த திங்கள் வாள்முக மாதர் பாட, சூழ்சடைப்
போழ்ந்த திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய புண்ணியன்-
தாழ்ந்த வயல் சிற்றேமத்தான்; தடவரையைத் தன் தாளினால்
ஆழ்ந்த அரக்கன் ஒல்க, அன்று அடர்த்த அண்ணல் அல்லனே!

[8]
தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே.

[9]
வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே.

[10]
கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.038   தம்மானை அறியாத சாதியார் உளரே?  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருவதிகை வீரட்டானம் ; (திருத்தலம் அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி )
திருவதிகை திருநாவுக்கரசர் உழவாரத் திருப்பணி செய்யப் பெற்ற தலம். ஆதலால் அதனை மிதித்துச் செல்ல விரும்பாது அருகில் இருந்த சித்தவடம் என்னும் மடத்தில் தங்கினார். உடன் வந்த அடியார்களோடு அதிகை வீரட்டானேஸ்வரரை இடைவிடாது எண்ணிய வண்ணம் துயின்றார். இறைவன் முதிய அந்தணர் வடிவம் பூண்டு யாரும் அறியாதபடி புகுந்து சுந்தரர் தலையின் மேலே தமது திருவடி படும்படியாக வைத்துத் துயில் கொள்வாரைப் போன்று இருந்தார். உடனே நம்பியாரூரர் விழித்து எழுந்து அருமறை யோனே! உன் அடிகளை என் தலைமேல் வைத்தனையே என்று கேட்டார். நீர் துயிலும் திசையை அறியாவகை செய்தது என் முதுமை என்றார் அந்தணர். நம்பிகள் வேறொரு திசையில் தலையினை வைத்துத் துயில்கொள்ளத் தொடங்கினார். மீண்டும் அம் முதியவர் நாவலூரர் தலைமேல் தம் திருவடிகளை நீட்டிப் பள்ளி கொண்டார். நாவலூரர் எழுந்து இவ்வாறு பலதடவை மிதிக்கும் நீர் யார் என்று சினந்து கேட்டார். உடனே முதியவர் என்னை நீ இன்னும் அறிந்திலையோ என்று கூறியவாறு மறைந்தருளினார். அம்மொழி கேட்ட ஆரூரர் தம் முடியில் திருவடி வைத்தருளியவர் சிவபிரானே என்று தெளிந்து தம் பொருட்டு எளிவந்தருளிய எம்பெருமானைக் காணப்பெற்றும் அறியாமையால் இறுமாந்து இகழ்ந்துரைத்தேனே என்று வருந்தித் தம்மானை அறியாத சாதியார் உளரே என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித்துதித்தார்.
தம்மானை அறியாத சாதியார் உளரே? சடைமேல் கொள் பிறையானை, விடை மேற்கொள் விகிர்தன்,
கைம்மாவின் உரியானை, கரிகாட்டில் ஆடல் உடையானை, விடையானை, கறை  கொண்ட கண்டத்து
அம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால்  வாழ்கின்ற அறிவு இலா நாயேன்-
எம்மானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறை போதும் இகழ்வன் போல்  யானே! .

[1]
முன்னே எம்பெருமானை மறந்து என்கொல்? மறவா-தொழிந்து என்கொல்? மறவாத  சிந்தையால் வாழ்வேன்;
பொன்னே! நல்மணியே! வெண் முத்தே! செய் பவளக் குன்றமே! ஈசன்! என்று உன்னையே  புகழ்வேன்;
அன்னே! என் அத்தா! என்று அமரரால் அமரப் படுவானை, அதிகை மா நகருள்  வாழ்பவனை,
என்னே! என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல்  யானே! .

[2]
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே! விண்ணவர் தம் பெருமானே!   மண்ணவர் நின்று ஏத்தும்
கரும்பே! என் கட்டி! என்று உள்ளத்தால் உள்கி, காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும் புனலும் சடைக்கு அணிந்து, வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில வைத்து    அருளும் எந்தை,
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன்    போல் யானே! .

[3]
நால்-தானத்து ஒருவனை, நான் ஆய பரனை, நள்ளாற்று நம்பியை, வெள்ளாற்று விதியை,
காற்றானை, தீயானை, கடலானை, மலையின் தலையானை, கடுங் கலுழிக் கங்கை நீர் வெள்ள-
ஆற்றானை, பிறையானை, அம்மானை, எம்மான்தம்மானை, யாவர்க்கும் அறிவு அரிய செங்கண்
ஏற்றானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

[4]
சேந்தர் தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும் உடையானை, அதிகை மா நகருள்   வாழ்பவனை,
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் சடை இடையில் கயல் இனங்கள்   குதி கொள்ளக் குலாவி,
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணக்கி, மறிகடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

[5]
மைம் மான மணிநீல கண்டத்து எம்பெருமான், வல் ஏனக் கொம்பு அணிந்த மா தவனை,   வானோர்-
தம்மானை, தலைமகனை, தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை, தாழ்வரைக்கை   வென்ற
வெம் மான மதகரியின் உரியானை, வேத-விதியானை, வெண்நீறு சண்ணித்த மேனி
எம்மானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல்   யானே! .

[6]
வெய்து ஆய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி, அருள் புரிந்து, வீடு பேறு       ஆக்கம்
பெய்தானை, பிஞ்ஞகனை, மைஞ் ஞவிலும் கண்டத்து எண்தோள் எம்பெருமானை,  பெண்பாகம் ஒருபால்
செய்தானை, செக்கர் வான் ஒளியானை, தீ வாய் அரவு ஆடு சடையானை, திரிபுரங்கள் வேவ
எய்தானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல்   யானே! .

[7]
பொன்னானை, மயில் ஊர்தி முருகவேள் தாதை, பொடி ஆடு திருமேனி, நெடுமால் தன்    முடிமேல்-
தென்னானை, குடபாலின் வடபாலின் குணபால் சேராத சிந்தையான், செக்கர்வான் அந்தி
அன்னானை, அமரர்கள் தம் பெருமானை, கருமான் உரியானை, அதிகை மா நகருள் வாழ்பவனை,
என்னானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல் யானே! .

[8]
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவச் சிலை வளைவித்து, ஒரு கணையால்-   தொழில் பூண்ட சிவனை,
கருந் தான மதகளிற்றின் உரியானை, பெரிய கண் மூன்றும் உடையானை, கருதாத  அரக்கன்
பெருந்தோள்கள் நால்-ஐந்தும், ஈர்-ஐந்து முடியும், உடையானைப் பேய் உருவம் ஊன்றும் உற   மலை மேல்
இருந்தானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன் போல்   யானே! .

[9]
என்பினையே கலன் ஆக அணிந்தானை, எங்கள் எருது ஏறும் பெருமானை, இசை      ஞானி சிறுவன்-
வன் பனைய வளர் பொழில் சூழ் வயல் நாவலூர்க்கோன், வன்தொண்டன், ஆரூரன்-   மதியாது சொன்ன
அன்பனை, யாவர்க்கும் அறிவு அரிய அத்தர்-பெருமானை, அதிகை மா நகருள்    வாழ்பவனை,
என் பொன்னை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறைபோதும் இகழ்வன்  போல் யானே! .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.039   தில்லை வாழ் அந்தணர் தம்  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருவாரூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் தியாகேசன் திருக்கோயிலை அடைந்து வணங்கப் புறப்பட்டு சென்று அடைந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ? என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார். தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து பெருமான், அவரைப் பார்த்து முறைப்படி அடியார்களைப் பணிந்து அவர்களைப் பாடுக என்றருளிச் செய்தார். நம்பியாரூரர், அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார். நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.
சிவனடியார்கள் ஆசி பெற
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;
திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;
இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்;
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்;
விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;
அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[1]
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்;
ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்;
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்;
கடவூரில் கலயன் தன் அடியார்க்கும்  அடியேன்;
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன்,
எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும்  அடியேன்;
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[2]
மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்;
முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்;
செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்;
திருக்குறிப்புத் தொண்டர் தம்    அடியார்க்கும் அடியேன்;
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க,
வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால்  எறிந்த,
அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[3]
திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்;
பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்;
பெரு மிழலைக் குறும்பற்கும்,   பேயார்க்கும், அடியேன்;
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்;
ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு  அடியேன்;
அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[4]
வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும்
மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா
எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்;
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும்  அடியேன்;
நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்;
நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும்,  அடியேன்;
அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .

[5]
வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே
மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்;
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்;
செங்காட்டங்குடி மேய  சிறுத்தொண்டற்கு அடியேன்;
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்;
கடல் காழி கணநாதன்  அடியார்க்கும் அடியேன்;
ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்;
ஆரூரன் ஆரூரில்   அம்மானுக்கு ஆளே .

[6]
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்;
பொழில் கருவூர்த் துஞ்சிய  புகழ்ச்சோழற்கு அடியேன்;
மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்;
விரி திரை சூழ் கடல் நாகை  அதிபத்தற்கு அடியேன்;
கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன்,
கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,-  அடியார்க்கும் அடியேன்;
ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[7]
கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த
கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்;
நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற
நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும்  அடியேன்;
துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித்
தொல் மயிலை வாயிலான்   அடியார்க்கும் அடியேன்;
அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில்அம்மானுக்கு ஆளே .

[8]
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்-
காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்;
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை
மன்னவன் ஆம்செருத்துணை தன்  அடியார்க்கும் அடியேன்;
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி
பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்   துணைக்கும் அடியேன்;
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[9]
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்;
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்;
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்;
திரு ஆரூர்ப் பிறந்தார்கள்  எல்லார்க்கும் அடியேன்;
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்;
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்;
அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[10]
மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல்,
வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்;
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்;
திருநீல கண்டத்துப்  பாணனார்க்கு அடியேன்;
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன்,
இசைஞானி, காதலன்-திரு   நாவலூர்க் கோன்,
அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பர்  ஆவாரே .

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.040   வள் வாய மதி மிளிரும்  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருக்கானாட்டுமுள்ளூர் ; (திருத்தலம் அருள்தரு கானார்குழலம்மை உடனுறை அருள்மிகு பதஞ்சலியீசுவரர் திருவடிகள் போற்றி )
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை, மறையவனை, வாய்மொழியை, வானவர் தம் கோனை,
புள் வாயைக் கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை, பொன்நிறத்தின் முப்புரிநூல் நான்  முகத்தினானை,
முள் வாய மடல்-தழுவி, முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து, விரை நாறும் முருகு விரி  பொழில் சூழ்,
கள் வாய கருங்குவளை கண் வளரும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .

[1]
ஒரு மேக-முகில் ஆகி, ஒத்து உலகம் தான் ஆய், ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தான் ஆய்,
பொரு மேவு கடல் ஆகி, பூதங்கள் ஐந்து ஆய், புனைந்தவனை, புண்ணியனை,  புரிசடையினானை,
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திருத் தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும்
கருமேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .

[2]
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை, இறையவனை, மறையவனை, எண்   குணத்தினானை,
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை, விடையானை, சோதி  எனும் சுடரை,
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி, அன்னங்கள் விளையாடும் அகன்   துறையின் அருகே
கரும்பு உயர்ந்து, பெருஞ் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு  தொழுதேனே .

[3]
பூளை புனை கொன்றையொடு புரிசடையினானை, புனல் ஆகி, அனல் ஆகி, பூதங்கள் ஐந்து ஆய்,
நாளை இன்று நெருநல் ஆய், ஆகாயம் ஆகி, நாயிறு ஆய், மதியம் ஆய், நின்ற    எம்பரனை,
பாளை படு பைங்கமுகின் சூழல், இளந் தெங்கின் படு மதம் செய் கொழுந் தேறல் வாய்  மடுத்துப் பருகி,
காளை வண்டு பாட, மயில் ஆலும் வளர் சோலை கானாட்டு முள்ளூரில் கண்டு     தொழுதேனே .

[4]
செருக்கு வாய்ப் பைங்கண் வெள் அரவு அரையினானை, தேவர்கள் சூளாமணியை, செங்கண் விடையானை,
முருக்குவாய் மலர் ஒக்கும் திருமேனியானை, முன்னிலை ஆய் முழுது உலகம் ஆய  பெருமானை,
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும்  நகர், எங்கும்
கருக்கு வாய்ப் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டு முள்ளூரில் கண்டு  தொழுதேனே .

[5]
விடை அரவக் கொடி ஏந்தும் விண்ணவர் தம் கோனை, வெள்ளத்து மால் அவனும் வேத முதலானும்
அடி இணையும் திருமுடியும் காண அரிது ஆய சங்கரனை, தத்துவனை, தையல்  மடவார்கள்
உடை அவிழ, குழல் அவிழ, கோதை குடைந்து ஆட, குங்குமங்கள் உந்தி வரு    கொள்ளிடத்தின் கரை மேல்,
கடைகள் விடு வார் குவளைகளை வாரும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு    தொழுதேனே .

[6]
அருமணியை, முத்தினை, ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள் தம் பெருமானை,   அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் தெரிவரிய மாமணியைத் திகழ்தருசெம் பொன்னைக்
குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியுந் திரைவாய்க் கோல்வளையார் குடைந்தாடுங் கொள்ளிடத்தின் கரைமேல்
கருமணிகள் போல்நீலம் மலர்கின்ற கழனிக் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.


[7]
இழை தழுவு வெண்நூலும் மேவு திருமார்பின் ஈசன், தன் எண்தோள்கள் வீசி எரி ஆட,
குழை தழுவு திருக்காதில் கோள் அரவம் அசைத்து, கோவணம் கொள் குழகனை, குளிர்சடையினானை,
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடந் தரள மென் கரும்பின் தாழ்      கிடங்கின் அருகே,
கழை தழுவித் தேன் கொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டு முள்ளூரில் கண்டு      தொழுதேனே .

[8]
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை, குண்டலம் சேர் காதவனை, வண்டு    இனங்கள் பாடப்
பனி உதிரும் சடையானை, பால் வெண் நீற்றானை, பல உருவும் தன் உருவே ஆய      பெருமானை,
துனிவு இனிய தூய மொழித் தொண்டை வாய் நல்லார், தூ நீலம் கண் வளரும் சூழ்      கிடங்கின் அருகே
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில்-சோலை கானாட்டு முள்ளூரில் கண்டு      தொழுதேனே .

[9]
தேவி, அம்பொன்மலைக்கோமன் தன் பாவை, ஆகத் தனது உருவம் ஓருபாகம்    சேர்த்துவித்த பெருமான்;
மேவிய வெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேத      முதலானை;
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப, துறைக் கெண்டை மிளிர்ந்து, கயல்      துள்ளி விளையாட,
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .

[10]
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கைக் கோனைச் செற்றவனை, செஞ்சடை மேல் வெண் மதியினானை,
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டு முள்ளூரில் கண்டு  கழல்-தொழுது,
உரையின் ஆர் மதயானை நாவல் ஆரூரன், உரிமையால் உரை செய்த ஒண் தமிழ்கள்   வல்லார்
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும், தாம் போய், வானவர்க்கும், தலைவராய்      நிற்பர், அவர் தாமே .

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.041   முது வாய் ஓரி கதற,  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருக்கச்சூர் ஆலக்கோயில் ; (திருத்தலம் அருள்தரு கன்னியுமையம்மை உடனுறை அருள்மிகு தினம்விருந்திட்டநாதர் திருவடிகள் போற்றி )
தொண்டைநாட்டுத் தலங்களை வழிபட விரும்பிய சுந்தரர், திருநாவலூரினின்றும் புறப்பட்டுத் திருக்கழுக்குன்றத்தை அடைந்து வணங்கித் திருக்கச்சூர் ஆலக்கோயிலைப் பணிந்து போற்றிக் கோயிற் புறத்தே வந்தார். அப்பொழுது வெயில் வெம்மை மிக்க நண்பகற் பொழுதாகியும் அவருக்கு அமுது சமைத்தளிக்கும் பரிசனங்கள் அங்கு வந்து சேரவில்லை. அடியார் பசித்திருக்கப் பொறாத இறைவன், மறையவர் வடிவுடன் வந்து, வன்றொண்டரை நோக்கி, நீர் பசியால் மிகவும் வாட்டமடைந்துள்ளீர். யான் சிறிது நேரத்தில் இங்குள்ள வீடுகளில் இரந்து உணவு கொண்டுவருமளவும் இங்கேயே இருப்பீராக என்று கூறிச்சென்று, அருகில் உள்ள வீடுகளில் கறியும் சோறும் இரந்து பெற்று வந்து, நம்பியாரூரர்க்கு வழங்கி, இதனை உண்டு பசிதீரும் என்று உபசரித்தார். சுந்தரர், அந்தணர் தந்த அமுதை அடியார்களோடு உண்டு மகிழ்ந்தார். மறையவர் விரைவில் மறைந்தார். அந்நிலையில் வன்றொண்டர் தமக்கு உணவு இரந்து பெற்று உண்பித்தவர் இறைவனே யெனத் துணிந்து, இறைவன் பெருங்கருணையை வியந்து ஆலக்கோயில் பெருமானை, முதுவாயோரி என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
முது வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே!
மது வார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள் தன் மணவாளா!
கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே?
அதுவே ஆம் ஆறு இதுவோ? கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.

[1]
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து, கழலும் சிலம்பும் கலிக்க, பலிக்கு என்று
உச்சம் போதா ஊர் ஊர் திரியக் கண்டால் அடியார் உருகாரே?
இச்சை அறியோம்; எங்கள் பெருமான்! ஏழ் ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய்!
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே!.

[2]
சாலக் கோயில் உள நின் கோயில்; அவை என் தலை மேல் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன்; வினையும் துரந்தேன்-வானோர் அறியா நெறியானே!
கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர் பூங் கச்சூர் வடபாலை
ஆலக்கோயில், கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே!.

[3]
விடையும் கொடியும் சடையும் உடையாய்! மின் நேர் உருவத்து ஒளியானே!
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னி மாடம் கலந்து, எங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவி, பூமேல்-திருமாமகள் புல்கி,
அடையும் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.

[4]
மேலை விதியே! வினையின் பயனே! விரவார் புரம் மூன்று எரி செய்தாய்!
காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய்! கறைக் கண்டா!
மாலை மதியே! மலை மேல் மருந்தே! மறவேன், அடியேன்; வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.

[5]
பிறவாய்; இறவாய்; பேணாய், மூவாய்; பெற்றம் ஏறிப் பேய் சூழ்தல்
துறவாய்; மறவாய், சுடுகாடு என்றும் இடமாக் கொண்டு நடம் ஆடி;
ஒறுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் உருகாரே?
அறவே ஒழியாய் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே! .

[6]
பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வோனே!
மெய்யே! எங்கள் பெருமான்! உன்னை நினைவார் அவரை நினை கண்டாய்!
மை ஆர் தடங்கண் மங்கை பங்கா! கங்கு ஆர் மதியம் சடை வைத்த
ஐயா! செய்யாய்! வெளியாய்! கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! .

[7]
ஊனைப் பெருக்கி, உன்னை நினையாதொழிந்தேன், செடியேன்; உணர்வு இல்லேன்-
கானக் கொன்றை கமழ மலரும் கடிநாறு உடையாய்! கச்சூராய்!
மானைப் புரையும் மட மென் நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட
ஆனைத்தோலாய்! ஞானக்கண்ணாய்! ஆலக்கோயில் அம்மானே! .

[8]
காதல் செய்து, களித்து, பிதற்றி, கடிமாமலர் இட்டு உனை ஏத்தி,
ஆதல் செய்யும் அடியார் இருக்க, ஐயம் கொள்வது அழகிதே!
ஓதக் கண்டேன்; உன்னை மறவேன்; உமையாள் கணவா! எனை ஆள்வாய்!
ஆதல் பழனக் கழனிக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.

[9]
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன்-ஆரூரன் பேர் முடி வைத்த
மன்னு புலவன், வயல் நாவலர் கோன், செஞ்சொல் நாவன், வன்தொண்டன்
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலைமேல் பயில்வாரே .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.042   எறிக்கும் கதிர் வேய் உரி  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருவெஞ்சமாக்கூடல் ; (திருத்தலம் அருள்தரு விகிர்தேசுவரி உடனுறை அருள்மிகு விகிர்தேசுவரர் திருவடிகள் போற்றி )
எறிக்கும் கதிர் வேய் உரி முத்த(ம்)மொடு, ஏலம்(ம்), இலவங்கம், தக்கோலம், இஞ்சி,
செறிக்கும் புனலுள் பெய்து கொண்டு, மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல்
முறிக்கும் தழை மா முடப்புன்னை, ஞாழல், குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா,
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

[1]
குளங்கள் பலவும் குழியும் நிறைய, குட மா மணி சந்தனமும்(ம்) அகிலும்
துளங்கும் புனலுள் பெய்து கொண்டு மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல்
வளம் கொள் மதில் மாளிகை, கோபுரமும், மணி மண்டபமும்(ம்), இவை மஞ்சு தன்னுள்
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

[2]
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார், வடிவேல் கண் நல்லார் பலர் வந்து   இறைஞ்ச,
திரை ஆர் புனலுள் பெய்து கொண்டு மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை      மேல்
நிரை ஆர் கமுகும், நெடுந் தாள்-தெங்கும், குறுந் தாள் பலவும், விரவிக் குளிரும்
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

[3]
பண் நேர் மொழியாளை ஓர் பங்கு உடையாய்! படு காட்டு அகத்து என்றும் ஓர் பற்று   ஒழியாய்!
தண் ஆர் அகிலும், நல சாமரையும், அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல்
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப, மடவார் நடம் ஆடும்(ம்) மணி அரங்கில்
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

[4]
துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில்-துளங்கும் படியாய்!
க(ள்)ளையே கமழும் மலர்க் கொன்றையினாய்! கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே!
பி(ள்)ளை வெண் பிறையாய்! பிறங்கும் சடையாய்! பிறவாதவனே! பெறுதற்கு அரியாய்!
வெ(ள்)ளை மால் விடையாய்! வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே.

[5]
தொழுவார்க்கு எளியாய்! துயர் தீர நின்றாய்! சுரும்பு ஆர் மலர்க் கொன்றை துன்றும்   சடையாய்!
உழுவார்க்கு அரிய விடை ஏறி! ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய்! அழகா!
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

[6]
கடம் மா களியானை உரித்தவனே! கரிகாடு இடமா, அனல் வீசி நின்று
நடம் ஆட வல்லாய்! நரை ஏறு உகந்தாய்! நல்லாய்! நறுங்கொன்றை நயந்தவனே!
படம் ஆயிரம் ஆம் பருத் துத்திப் பைங்கண் பகுவாய் எயிற்றோடு அழலே உமிழும்
விட வார் அரவா! வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே.

[7]
காடும் மலையும் நாடும் இடறி, கதிர் மா மணி சந்தனமும்(ம்) அகிலும்
சேடன்(ன்) உறையும்(ம்) இடம் தான் விரும்பி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க் கரை மேல்
பாடல் முழவும் குழலும்(ம்) இயம்ப, பணைத் தோளியர் பாதலொடு ஆடல் அறா,
வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டிதியே .

[8]
கொங்கு ஆர் மலர்க் கொன்றை அம் தாரவனே! கொடு கொட்டி ஒர் வீணை உடையவனே!
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா! புனம் சூழ்ந்து அழகு ஆர்
துங்கு ஆர் புனலுள் பெய்து கொண்டு மண்டி, திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல்
வெங் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே .

[9]
வஞ்சி நுண் இடையார் மயில் சாயல் அன்னார், வடிவேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும்
வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே” என்று தான் விரும்பி,
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர் கோன்-வனப் பகை அப்பன், வன் தொண்டன்- சொன்ன
செஞ்சொல்-தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே! .

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.043   நஞ்சி, இடை இன்று நாளை  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி )
நஞ்சி, இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார்
துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்!
பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்!
முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே!

[1]
ஏரிக் கனகக்கமலம் மலர் அன்ன சேவடி
ஊர் இத்தனையும் திரிந்தக்கால் அவை நோம்கொலோ?
வாரிக்கண் சென்று வளைக்கப்பட்டு, வருந்திப் போய்,
மூரிக் களிறு முழக்கு அறா முதுகுன்றரே!

[2]
தொண்டர்கள் பாட, விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்!
பண்டு அகம் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே?
கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர்
மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே!

[3]
இளைப்பு அறியீர்; இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என்?
விளைப்பு அறியாத வெங் காலனை உயிர் வீட்டினீர்;
அளைப் பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர்
முளைப்பிறைச் சென்னிச் சடைமுடி முதுகுன்றரே!

[4]
ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம் தொறும்
பாடிப் படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ?
மாடம், மதில், அணி கோபுரம், மணி மண்டபம்,
மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே!

[5]
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டு இடைக்
குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே?
மழை வளரும் நெடுங்கோட்டு இடை மதயானைகள்,
முழை வளர் ஆளி, முழக்கு அறா முதுகுன்றரே!

[6]
சென்று இல் இடைச் செடி நாய் குரைக்க, செடிச்சிகள்
மன்றில் இடைப் பலி தேரப் போவது வாழ்க்கையே?
குன்றில் இடைக் களிறு ஆளி கொள்ள, குறத்திகள்
முன்றில் இடைப் பிடி கன்று இடும் முதுகுன்றரே!

[7]
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்தொறும்
சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே?
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே!

[8]
செட்டு நின் காதலி ஊர்கள் தோறும் அறம் செய,
அட்டுமின், சில்பலிக்கு! என்று அகம் கடை நிற்பதே?
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர்! பரிசு என்கொலோ?
முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே!

[9]
எத்திசையும் திரிந்து ஏற்றக்கால் பிறர் என் சொலார்?
பத்தியினால் இடுவார் இடைப் பலி கொண்மினோ!
எத்திசையும் திரை ஏற மோதிக் கரைகள் மேல்
முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரே!

[10]
முத்தி முத்தாறு வலம் செயும் முதுகுன்றரைப்
பித்தன் ஒப்பான் அடித்தொண்டன்-ஊரன்-பிதற்று இவை
தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்று இலார்,
எத்தவத்தோர்களும், ஏத்துவார்க்கு இடர் இல்லையே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.044   முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருஅஞ்சைக்களம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
முடிப்பது கங்கையும், திங்களும்; செற்றது மூ எயில்;
நொடிப்பது மாத்திரை நீறு எழக் கணை நூறினார்;
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன்; திருக்கைகளால்
பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ, எம்பிரானுக்கே?

[1]
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ? சுடலைப் பொடி-
நீறு அன்றிச் சாந்தம் மற்று இல்லையோ? இமவான் மகள்
கூறு அன்றிக் கூறு மற்று இல்லையோ? கொல்லைச் சில்லை வெள்-
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ, எம்பிரானுக்கே?

[2]
தட்டு எனும் தட்டு எனும், தொண்டர்காள்! தடுமாற்றத்தை,
ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை;
சிட்டனும், திரிபுரம் சுட்ட தேவர்கள் தேவனை,
வெட்டெனப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!

[3]
நரி தலை கவ்வ, நின்று ஓரி கூப்பிட, நள் இருள்
எரி தலைப் பேய் புடை சூழ, ஆர் இருள் காட்டு இடைச்
சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை,
பிரிதலைப் பேசன்மின், தொண்டர்காள், எம்பிரானையே!

[4]
வேய் அன தோளி மலை மகளை விரும்பிய
மாயம் இல் மாமலை நாடன் ஆகிய மாண்பனை,
ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும்,
பேயனே! பித்தனே! என்பரால், எம்பிரானையே!

[5]
இறைவன்! என்று எம்பெருமானை வானவர் ஏத்தப் போய்,
துறை ஒன்றி, தூ மலர் இட்டு, அடி இணை போற்றுவார்;
மறை அன்றிப் பாடுவது இல்லையோ? மல்கு வான் இளம்-
பிறை அன்றிச் சூடுவது இல்லையோ, எம்பிரானுக்கே?

[6]
தாரும், தண் கொன்றையும் கூவிளம் தனி மத்தமும்;
ஆரும் அளவு, அறியாத ஆதியும் அந்தமும்;
ஊரும், ஒன்று இல்லை, உலகு எலாம், உகப்பார் தொழப்
பேரும் ஓர் ஆயிரம் என்பரால், எம்பிரானுக்கே.

[7]
அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்;
வரி தரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரி தரு புன்சடை வைத்த எம் புனிதற்கு, இனி
எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ, எம்பிரானுக்கே?

[8]
கரிய மனச் சமண் காடி ஆடு கழுக்களால்
எரிய வசவுணும் தன்மையோ? இமவான் மகள்
பெரிய மனம் தடுமாற வேண்டி, பெம்மான்-மதக்-
கரியின் உரி அல்லது இல்லையோ, எம்பிரானுக்கே?

[9]
காய்சின மால்விடை மாணிக்கத்து, எம் கறைக் கண்டத்து,
ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய
ஆயின சீர்ப் பகை ஞானி அப்பன், அடித்தொண்டன் தான்,
ஏசின பேசுமின், தொண்டர் காள், எம்பிரானையே!

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.045   காண்டனன் காண்டனன், காரிகையாள் தன்  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருஆமாத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகியநாயகியம்மை உடனுறை அருள்மிகு அழகியநாதர் திருவடிகள் போற்றி )
காண்டனன் காண்டனன், காரிகையாள் தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன்; ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆட்-
பூண்டனன் பூண்டனன்; பொய் அன்று; சொல்லுவன்; கேண்மின்கள்:
மீண்டனன் மீண்டனன், வேதவித்து அல்லாதவர்கட்கே.

[1]
பாடுவன் பாடுவன், பார்ப் பதிதன் அடி பற்றி, நான்
தேடுவன் தேடுவன்; திண்ணெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளை,
கூடுவன் கூடுவன், குற்றம் அது அற்று என் குறிப்பொடே.

[2]
காய்ந்தவன் காய்ந்தவன், கண் அழலால் அன்று காமனை;
பாய்ந்தவன் பாய்ந்தவன், பாதத்தினால் அன்று கூற்றத்தை;
ஆய்ந்தவன் ஆய்ந்தவன், ஆமாத்தூர் எம் அடிகளார்,
ஏய்ந்தவன் ஏய்ந்தவன், எம்பிராட்டியைப் பாகமே.

[3]
ஓர்ந்தனன் ஓர்ந்தனன், உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள்,
சேர்ந்தனன் சேர்ந்தனன், சென்று திரு ஒற்றியூர் புக்கு;
சார்ந்தனன் சார்ந்தனன், சங்கிலி மென்தோள் தடமுலை;
ஆர்ந்தனன் ஆர்ந்தனன், ஆமாத்தூர் ஐயன் அருள் அதே.

[4]
வென்றவன் வென்றவன், வேள்வியில் விண்ணவர் தங்களை;
சென்றவன் சென்றவன், சில்பலிக்கு என்று தெரு இடை;
நின்றவன் நின்றவன், நீதி நிறைந்தவர் தங்கள் பால்;
அன்று அவன் அன்று அவன், செய் அருள்; ஆமாத்தூர் ஐயனே.

[5]
காண்டவன் காண்டவன், காண்டற்கு அரிய கடவுளாய்;
நீண்டவன் நீண்டவன், நாரணன் நான்முகன் நேடவே;
ஆண்டவன் ஆண்டவன், ஆமாத்தூரையும் எனையும் ஆள்;
பூண்டவன் பூண்டவன், மார்பில் புரிநூல் புரளவே.

[6]
எண்ணவன் எண்ணவன், ஏழ் உலகத்து உயிர் தங்கட்கு;
கண் அவன் கண் அவன், காண்டும் என்பார் அவர் தங்கட்கு;
பெண் அவன் பெண் அவன், மேனி ஓர்பாகம்; ஆம், பிஞ்ஞகன்;
அண்ணவன் அண்ணவன்-ஆமாத்தூர் எம் அடிகளே.

[7]
பொன்னவன் பொன்னவன்; பொன்னைத் தந்து என்னைப் போக விடா
மின்னவன் மின்னவன்; வேதத்தின் உள் பொருள் ஆகிய
அன்னவன் அன்னவன்; ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன்! என் மனத்து இன்புற்று இருப்பனே.

[8]
தேடுவன் தேடுவன், செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்;
நாடுவன் நாடுவன், நாபிக்கு மேலே ஓர் நால்விரல்;
மா(ட்)டுவன் மா(ட்)டுவன், வன் கை பிடித்து; மகிழ்ந்து உளே
ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளே.

[9]
உற்றனன், உற்றவர் தம்மை ஒழிந்து, உள்ளத்து உள்பொருள்
பற்றினன், பற்றினன், பங்கயச் சேவடிக்கே செல்ல;
அற்றனன் அற்றனன்; ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆட்-
பெற்றனன் பெற்றனன், பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே.

[10]
ஐயனை, அத்தனை, ஆள் உடை ஆமாத்தூர் அண்ணலை,
மெய்யனை, மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை,
மையனை, மை அணி கண்டனை, வன் தொண்டன்-ஊரன்-சொல்
பொய் ஒன்றும் இன்றிப் புலம்புவார் பொன் கழல் சேர்வரே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.046   பத்து ஊர் புக்கு, இரந்து,  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருத்தலம் திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) ; (திருத்தலம் அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி )
சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார் (கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே , காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் ; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும்) . இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறு மணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரை களும் பரிசாக வழங்கியருளினார். அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையினின்றும் புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார்.
நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள்,விருந்து உணவு கிடைக்க; அனைத்து ‌ சுக போகங்களும் கிடைக்க
பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, | பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்;
செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; | செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்;
முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-|அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும்
கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[1]
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனைத் தீற்றி, | விருத்தி நான் உமை வேண்ட, துருத்தி  புக்கு அங்கு இருந்தீர்;
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டிப் | பகட்ட நான் ஒட்டுவனோ? பல    காலும் உழன்றேன்;
சேம்பினோடு செங்கழு நீர் தண் கிடங்கில்-திகழும் |திரு ஆரூர் புக்கு இருந்த தீவண்ணர்   நீரே;
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி   இருந்தீரே! .

[2]
பூண்பது ஓர் இள ஆமை; பொருவிடை ஒன்று ஏறி,| பொல்லாத வேடம் கொண்டு,  எல்லாரும் காணப்
பாண் பேசி, படுதலையில் பலி கொள்கை தவிரீர்;| பாம்பினொடு படர் சடை மேல் மதி   வைத்த பண்பீர்;
வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால்,| வெற்பு அரையன் மடப்பாவை   பொறுக்குமோ? சொல்லீர்
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடுவீதிக் | கடல் நாகைக்காரோணம் மேவி      இருந்தீரே! .

[3]
விட்டது ஓர் சடை தாழ, வீணை விடங்கு ஆக,| வீதி விடை ஏறுவீர்; வீண் அடிமை   உகந்தீர்;
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடிச்| சுந்தரராய்த் தூ மதியம் சூடுவது சுவண்டே?
வட்டவார் குழல் மடவார் தம்மை மயல் செய்தல் | மா தவமோ? மாதிமையோ? வாட்டம்    எலாம் தீரக்
கட்டி எமக்கு ஈவது தான் எப்போது? சொல்லீர்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[4]
மிண்டாடித் திரி தந்து, வெறுப்பனவே செய்து,| வினைக்கேடு பல பேசி, வேண்டியவா திரிவீர்;
தொண்டாடித் திரிவேனைத் தொழும்பு தலைக்கு ஏற்றும் | சுந்தரனே! கந்தம் முதல் ஆடை  ஆபரணம்
பண்டாரத்தே எனக்குப் பணித்து அருள வேண்டும்;| பண்டு தான் பிரமாணம் ஒன்று உண்டே? நும்மைக்
கண்டார்க்கும் காண்பு அரிது ஆய்க் கனல் ஆகி நிமிர்ந்தீர்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே!

[5]
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி, பூதம் | இசை பாட, இடு பிச்சைக்கு எச்சு உச்சம் போது,
பல அகம் புக்கு, உழிதர்வீர்; பட்டோடு சாந்தம்| பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ?
உலவு திரைக் கடல் நஞ்சை, அன்று, அமரர் வேண்ட | உண்டு அருளிச் செய்தது, உமக்கு இருக்க ஒண்ணாது இடவே;
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வக்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[6]
தூசு உடைய அகல் அல்குல்-தூமொழியாள் ஊடல்| தொலையாத காலத்து ஓர் சொல்பாடு ஆய் வந்து,
தேசு உடைய இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்து,| திப்பிய கீதம் பாட, தேரொடு வாள் கொடுத்தீர்;
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த,| நிறை மறையோர் உறை வீழிமிழலை  தனில் நித்தல்
காசு அருளிச் செய்தீர்; இன்று எனக்கு அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி   இருந்தீரே! .

[7]
மாற்றம் மேல் ஒன்று உரையீர்; வாளா நீர் இருந்தீர்;| வாழ்விப்பன் என ஆண்டீர்; வழி அடியேன், உமக்கு;
ஆற்றவேல்-திரு உடையீர்; நல்கூர்ந்தீர் அல்லீர்;| அணி ஆரூர் புகப் பெய்த அரு நிதியம்   அதனில்-
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும்;| தாரீரேல், ஒரு பொழுதும் அடி எடுக்கல்   ஒட்டேன்;
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும்| கடல் நாகைக்காரோணம் மேவிஇருந்தீரே! .

[8]
மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி;| மலை அரையன் பொன் பாவை,   சிறுவனையும், தேறேன்;
எண்ணிலி உண் பெரு வயிறன் கணபதி ஒன்று அறியான்;| எம்பெருமான்! இது தகவோ?      இயம்பி அருள் செய்வீர்!
திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில்,| திருமேனி வருந்தவே வளைக்கின்றேன்;   நாளை,
கண்ணறையன், கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா | கடல் நாகைக்காரோணம்     மேவி இருந்தீரே! .

[9]
மறி ஏறு கரதலத்தீர்; மாதிமையேல் உடையீர்;| மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்;
கிறி பேசி, கீழ்வேளூர் புக்கு, இருந்தீர்; அடிகேள்!| கிறி உம்மால் படுவேனோ? திரு ஆணை   உண்டேல்,
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர்| பொன் பூவும் பட்டிகையும் புரிந்து     அருள வேண்டும்;
கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .

[10]
பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் | பற்று ஆய பெருமானே! மற்று ஆரை   உடையேன்?
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்க வேண்டும்;| ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண்     பட்டும், பூவும்,
கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும், வேண்டும் |கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர்!   என்று
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன | அருந்தமிழ்கள் இவை வல்லார்    அமருலகு ஆள்பவரே .

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list