பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்! பயப்பு ஊர,
சங்கு ஆட்டம் தவிர்த்து, என்னைத் தவிரா நோய் தந்தானே
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய,
வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே.
|
1
|
பசுமையான கிளைகளில் மலர்களையுடைய புன்னைமரத்தில் வீற்றிருக்கும் பறவைகளே! தலைவனான சிவபெருமான் என்னைப் பிரிந்ததால் உடம்பு பசலைநிறம் பெற, ஓடி ஆடி உல்லாசமாக இயங்கிய என் மகிழ்ச்சியை நீக்கி எனக்குத் தாங்காத துன்பம் தந்தான். அவன் திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் சிறுத்தொண்டர் பணி செய்ய சுடுகாட்டுள், கையில் அனல் ஏந்தி திருநடனம் புரியும் பெருமானாவான். | |
பொன் அம் பூங் கழிக் கானல் புணர் துணையோடு உடன் வாழும்
அன்னங்காள்! அன்றில்காள்! அகன்றும் போய் வருவீர்காள்
கல்-நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய
இன் அமுதன் இணை அடிக்கீழ் எனது அல்லல் உரையீரே!
|
2
|
பொன்போன்ற மகரந்தத்தை உதிர்க்கும் புன்னைப் பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தம் துணையோடு சேர்ந்து வாழும் அன்னப் பறவைகளே! அன்றில் பறவைகளே! நீங்கள் இச்சோலையிலிருந்து வெளி இடங்கட்கும் சென்று வரும் இயல்புடையவர்கள். கல் போன்று திண்மையான அழகிய தோள்களையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யக் கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற இனிய அமுது போன்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் இருந்து என்னுடைய துன்பத்தைச் சொல்லமாட்டீர்களா? | |
குட்டத்தும், குழிக் கரையும், குளிர் பொய்கைத் தடத்து அகத்தும்,
இட்டத்தால் இரை தேரும், இருஞ் சிறகின் மட நாராய்!
சிட்டன் சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வட்ட வார்சடையார்க்கு என் வருத்தம், சென்று, உரையாயே!
|
3
|
குட்டை, குழி, குளிர்ந்த பொய்கை ஆகிய இடங்களில் விருப்பத்துடன் இரையைத் தேர்கின்ற பெரிய இரு சிறகுகளை உடைய இள நாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் நியமத்தோடு வழிபடத் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற நீண்ட அடர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைக்க மாட்டாயோ? உரைப்பாயாக என்பது குறிப்பு. | |
கான் அருகும், வயல் அருகும், கழி அருகும், கடல் அருகும்,
மீன் இரிய, வருபுனலில் இரை தேர் வண் மடநாராய்!
தேன் அமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம், சென்று,
உரையாயே!
|
4
|
கடற்கரைச் சோலையின் அருகிலும், வயல், கழி, கடல் ஆகியவற்றின் அருகிலும் பெருகும் நீரில் ஓடுகின்ற மீன்களை இரையாகத் தேரும் வெண்ணிறமான மட நாரையே! தேன் துளிக்கும் மாலைகளையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யத் திருச்செங்காட்டங் குடியில் வீற்றிருந்தருளுகின்ற, மாலை வானம் போன்ற சிவந்த சடையுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைப்பாயாக. | |
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து, அகன் கழனிச் சிறகு
உலர்த்தும்,
பாரல் வாய்ச் சிறு குருகே! பயில் தூவி மடநாராய்!
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை, சென்று, உரையீரே!
|
5
|
ஆரல், சுறவம் ஆகியன பாய்கின்ற அகன்ற கழனிகளில் சிறகுகளை உலர்த்துகின்ற நெடிய மூக்கையுடைய சிறிய உள்ளான் பறவையே!. அடர்ந்த சிறகுடைய இளநாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் பணி செய்ய திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என்னுடைய நிலையினை உரைப்பீர்களாக. | |
| Go to top |
குறைக் கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே?
குளிர்பொய்கைத்
துறைக் கெண்டை கவர் குருகே! துணை பிரியா மடநாராய்!
கறைக்கண்டன், பிறைச்சென்னி, கணபதீச்சுரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே? |
6
|
தங்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுபவர்களின் துன்பத்தைப் போக்குதல் தலைவரானவரின் கடமை அன்றோ? குளிர்ந்த குளத்தின் கரையில் கெண்டை மீனைக் கவர்ந்து இரையாகக் கொள்ளும் பறவையே! துணையைப் பிரியாதிருக்கும் மடநாரையே! நீலகண்டரும், பிறைச்சந்திரனைத் தலையிலே சூடியுள்ளவரும், கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் சிறுத்தொண்டரால் வழி படப்படுபவரும் ஆகிய சிவபெருமானது சீராகிய எய்ப்பிடத்து உதவும் பேரருளை நான் பெறுமாறு தூது சென்றுரைப்பீர்களாக! | |
கரு அடிய பசுங் கால் வெண்குருகே! ஒண் கழி நாராய்!
ஒரு அடியாள் இரந்தாள் என்று, ஒரு நாள் சென்று, உரையீரே!
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
திருவடி தன் திரு அருளே பெறல் ஆமோ, திறத்தவர்க்கே?
|
7
|
கரிய சேற்றில் அளைந்த பசுங்காலையுடைய வெண்குருகே! அழகிய கழியிலுள்ள நாரையே! போர் செய்வதால் வலிமை பெற்ற அழகிய வடிவுடைய தோள்களையுடைய சிறுத் தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியிலுள்ள திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திரு வடிகளை வழிபடும் திறத்தவர்களே அவன் திருவருளைப் பெறலாமோ? ஓர் அடியாள் அவருடைய திருவருளைக் கெஞ்சி வேண்டினாள் என்று ஒரு நாளாவது சென்று அவரிடம் உரைப்பீராக! | |
கூர் ஆரல் இரை தேர்ந்து, குளம் உலவி, வயல் வாழும்
தாராவே! மடநாராய்! தமியேற்கு ஒன்று உரையீரே!
சீராளன், சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பேராளன், பெருமான் தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே?
|
8
|
கூர்மையான அலகால் இரையைக் கொத்திக் குளங்களிலும், வயல்களிலும் வாழ்கின்ற தாரா என்ற பறவையே! மட நாரையே! என் பொருட்டுச் சிவபெருமானிடம் சென்று ஒரு செய்தியைச் சொல்வீரோ? சிறந்த புகழுடைய சிறுத்தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கீர்த்தியுடைய சிவபெருமான் திருவருளை ஒருநாள் அடியேன் பெறுதல் இயலுமா? | |
நறப் பொலி பூங் கழிக் கானல் நவில் குருகே! உலகு எல்லாம்
அறப் பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே?
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பிறப்பு இலி பேர் பிதற்றி நின்று, இழக்கோ, என் பெரு நலமே?
|
9
|
தேனுடைய பூக்கள் நிறைந்த கழியின் கரையிலுள்ள சோலையில் வாழ்கின்ற பறவையே! உலக மக்களெல்லாம் அறத்தைக் கருதி இடுகின்ற பிச்சையை ஏற்று உழல்கின்ற சிவபெருமானுக்குப் பிறர் என்னைத் தூற்றுமாறு செய்வது அழகாகுமா? சிறப்புடைய சிறுத்தொண்டன் வழிபடும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற பிறப்பிலியாகிய சிவபெருமானுடைய திருநாமத்தைப் போற்றித் துதிசெய்யும் நான் எல்லாவிதப் பெருமைக்குரிய நலங்களை இழப்பது முறைமையா? | |
செந்தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய,
வெந்த நீறு அணி மார்பன், சிறுத்தொண்டன் அவன் வேண்ட,
அம் தண் பூங் கலிக் காழி அடிகளையே அடி பரவும்
சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே.
|
11
|