சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.006   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அங்கமும் வேதமும் ஓதும் நாவர்
பண் - நட்டபாடை   (திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் மாணிக்கவண்ணர் கணபதீசுவரர் வண்டுவார்குழலி திருக்குழல்நாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=9o9uMkq3Qd4
Audio: https://sivaya.org/audio/1.006_angamum vedhamum.mp3
1.061   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நறை கொண்ட மலர் தூவி,
பண் - பழந்தக்கராகம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=C_MQ8sSlZyk
3.063   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்!
பண் - பஞ்சமம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ESlxr1wjoeI
6.084   திருநாவுக்கரசர்   தேவாரம்   பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,
பண் - திருத்தாண்டகம்   (திருச்செங்காட்டங்குடி கணபதீசுவரர் திருக்குழல்மாதம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=74eetbWjWn0

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.006   அங்கமும் வேதமும் ஓதும் நாவர்  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் ; (திருத்தலம் அருள்தரு வண்டுவார்குழலி திருக்குழல்நாயகி உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணர் கணபதீசுவரர் திருவடிகள் போற்றி )
திருஞானசம்பந்தர் திருமருகலில் தங்கியிருந்தபோது, சிறுத் தொண்ட நாயனார் அவரை வணங்கி மீண்டும் திருச்செங்காட்டங் குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். மருகற் பெருமானை வணங்கி விடைபெறச் சென்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் செங்காட்டங்குடிக் காட்சியைக் காட்ட இரு தலங்களையும் இணைத்து அங்கமும் வேதமும் என்ற திருப்பதிகம் பாடிப் போற்றிச் சிறுத் தொண்டருடன் செங்காட்டங்குடி சென்று கணபதீச் சுரத்தை வழிபட்டுக் கொண்டு சிலநாள் அங்குத் தங்கியிருந்தார்.
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,
மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[1]
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரிநூல் மறையாளர் ஏத்த,
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செய் தவ நால் மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[2]
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர், தொகும் மறையோர்கள், வளர்த்த செந்தீ
மால்புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கால் புல்கு பைங் கழல் ஆர்க்க ஆடும் கணபதி யீச்சுரம் காமுறவே?

[3]
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நால் மறையோர் வழிபாடு செய்ய,
மா மருவும் மணிக் கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[4]
பாடல் முழவும் விழவும் ஓவாப் பல் மறையோர் அவர்தாம் பரவ,
மாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேடகம் மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[5]
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்தொறும் போற்றி இசைப்ப,
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சினை கெழு தண் வயல், சோலை, சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[6]
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடுந்தோள் வரையால் அடர்த்து,
மாண் தங்கு நூல் மறையோர் பரவ, மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேண் தங்கு மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[7]
அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவு அணையானும், அறிவு அரிய,
மந்திரவேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே?

[8]
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்குத் தின்னும்
நிலை அமண் தேரரை நீங்கி நின்று, நீதர் அல்லார் தொழும் மா மருகல்,
மலைமகள் தோள் புணர்வாய்! அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள்
கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

[9]
நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன், நலம் திகழும்
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன்மேல் மொழிந்த,
சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
சூலம் வல்லான் கழல் ஏத்து, பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.061   நறை கொண்ட மலர் தூவி,  
பண் - பழந்தக்கராகம்   (திருத்தலம் திருச்செங்காட்டங்குடி ; (திருத்தலம் அருள்தரு திருக்குழல்மாதம்மை உடனுறை அருள்மிகு கணபதீசுவரர் திருவடிகள் போற்றி )
நறை கொண்ட மலர் தூவி, விரை அளிப்ப, நாள் தோறும்
முறை கொண்டு நின்று, அடியார் முட்டாமே பணி செய்ய,
சிறை கொண்ட வண்டு அறையும் செங்காட்டங்குடி அதனுள்,
கறை கொண்ட கண்டத்தான்-கணபதீச்சரத்தானே.

[1]
வார் ஏற்ற பறை ஒலியும் சங்கு ஒலியும் வந்து இயம்ப,
ஊர் ஏற்ற செல்வத்தோடு ஓங்கிய சீர் விழவு ஓவாச்
சீர் ஏற்றம் உடைத்து ஆய செங்காட்டங்குடி அதனுள்,
கார் ஏற்ற கொன்றையான்-கணபதீச்சரத்தானே.

[2]
வரந்தையான், சோபுரத்தான், மந்திரத்தான், தந்திரத்தான்,
கிரந்தையான், கோவணத்தான், கிண்கிணியான், கையது ஓர்
சிரந்தையான், செங்காட்டங்குடியான், செஞ்சடைச் சேரும்
கரந்தையான், வெண் நீற்றான்-கணபதீச்சரத்தானே.

[3]
தொங்கலும் கமழ்சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு,
அங்கையால் தொழுது ஏத்த, அருச்சுனற்கு அன்று அருள்செய்தான்;
செங்கயல் பாய் வயல் உடுத்த செங்காட்டங்குடி அதனுள்,
கங்கை சேர் வார்சடையான்-கணபதீச்சரத்தானே.

[4]
பாலினால் நறு நெய்யால் பழத்தினால் பயின்று ஆட்டி,
நூலினால் மணமாலை கொணர்ந்து, அடியார் புரிந்து ஏத்த,
சேலின் ஆர் வயல் புடை சூழ் செங்காட்டங்குடி அதனுள்,
காலினால் கூற்று உதைத்தான்-கணபதீச்சரத்தானே.

[5]
நுண்ணியான், மிகப் பெரியான், நோய் உளார் வாய் உளான்,
தண்ணியான், வெய்யான், நம் தலைமேலான், மனத்து உளான்,
திண்ணியான், செங்காட்டங்குடியான், செஞ்சடை மதியக்
கண்ணியான், கண் நுதலான்-கணபதீச்சரத்தானே.

[6]
மையின் ஆர் மலர் நெடுங்கண் மலைமகள் ஓர் பாகம் ஆம்
மெய்யினான், பை அரவம் அரைக்கு அசைத்தான், மீன் பிறழ் அச்
செய்யின் ஆர் அகன் கழனிச் செங்காட்டங்குடி அதனுள்
கையின் ஆர் கூர் எரியான்-கணபதீச்சரத்தானே.

[7]
தோடு உடையான், குழை உடையான், அரக்கன்தன் தோள் அடர்த்த
பீடு உடையான், போர் விடையான், பெண் பாகம் மிகப் பெரியான்,
சேடு உடையான், செங்காட்டங்குடி உடையான், சேர்ந்து ஆடும்
காடு உடையான், நாடு உடையான்-கணபதீச்சரத்தானே.

[8]
ஆன் ஊரா உழி தருவான், அன்று இருவர் தேர்ந்து உணரா
வான் ஊரான், வையகத்தான், வாழ்த்துவார் மனத்து உளான்,
தேனூரான், செங்காட்டங்குடியான், சிற்றம்பலத்தான்,
கானூரான், கழுமலத்தான்-கணபதீச்சரத்தானே.

[9]
செடி நுகரும் சமணர்களும், சீவரத்த சாக்கியரும்
படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான்;
பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கு அருள் செய்யும் பொருட்டாகக்
கடி நகர் ஆய் வீற்றிருந்தான்-கணபதீச்சரத்தானே.

[10]
கறை இலங்கு மலர்க்குவளை கண் காட்டக் கடிபொழிலின்
நறை இலங்கு வயல் காழித் தமிழ் ஞானசம்பந்தன்,
சிறை இலங்கு புனல் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும்
மறை இலங்கு தமிழ் வல்லார் வான் உலகத்து இருப்பாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.063   பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்!  
பண் - பஞ்சமம்   (திருத்தலம் திருச்செங்காட்டங்குடி ; (திருத்தலம் அருள்தரு திருக்குழல்மாதம்மை உடனுறை அருள்மிகு கணபதீசுவரர் திருவடிகள் போற்றி )
பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்! பயப்பு ஊர,
சங்கு ஆட்டம் தவிர்த்து, என்னைத் தவிரா நோய் தந்தானே
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய,
வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே.

[1]
பொன் அம் பூங் கழிக் கானல் புணர் துணையோடு உடன் வாழும்
அன்னங்காள்! அன்றில்காள்! அகன்றும் போய் வருவீர்காள்
கல்-நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய
இன் அமுதன் இணை அடிக்கீழ் எனது அல்லல் உரையீரே!

[2]
குட்டத்தும், குழிக் கரையும், குளிர் பொய்கைத் தடத்து அகத்தும்,
இட்டத்தால் இரை தேரும், இருஞ் சிறகின் மட நாராய்!
சிட்டன் சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வட்ட வார்சடையார்க்கு என் வருத்தம், சென்று, உரையாயே!

[3]
கான் அருகும், வயல் அருகும், கழி அருகும், கடல் அருகும்,
மீன் இரிய, வருபுனலில் இரை தேர் வண் மடநாராய்!
தேன் அமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம், சென்று,
உரையாயே!

[4]
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து, அகன் கழனிச் சிறகு
உலர்த்தும்,
பாரல் வாய்ச் சிறு குருகே! பயில் தூவி மடநாராய்!
சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை, சென்று, உரையீரே!

[5]
குறைக் கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே?
குளிர்பொய்கைத்
துறைக் கெண்டை கவர் குருகே! துணை பிரியா மடநாராய்!
கறைக்கண்டன், பிறைச்சென்னி, கணபதீச்சுரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே?
[6]
கரு அடிய பசுங் கால் வெண்குருகே! ஒண் கழி நாராய்!
ஒரு அடியாள் இரந்தாள் என்று, ஒரு நாள் சென்று, உரையீரே!
செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
திருவடி தன் திரு அருளே பெறல் ஆமோ, திறத்தவர்க்கே?

[7]
கூர் ஆரல் இரை தேர்ந்து, குளம் உலவி, வயல் வாழும்
தாராவே! மடநாராய்! தமியேற்கு ஒன்று உரையீரே!
சீராளன், சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பேராளன், பெருமான் தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே?

[8]
நறப் பொலி பூங் கழிக் கானல் நவில் குருகே! உலகு எல்லாம்
அறப் பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே?
சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
பிறப்பு இலி பேர் பிதற்றி நின்று, இழக்கோ, என் பெரு நலமே?

[9]
செந்தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய,
வெந்த நீறு அணி மார்பன், சிறுத்தொண்டன் அவன் வேண்ட,
அம் தண் பூங் கலிக் காழி அடிகளையே அடி பரவும்
சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.084   பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருச்செங்காட்டங்குடி ; (திருத்தலம் அருள்தரு திருக்குழல்மாதம்மை உடனுறை அருள்மிகு கணபதீசுவரர் திருவடிகள் போற்றி )
பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை, பேணி நினைந்து எழுவார் தம் மனத்தே மன்னி
இருந்த மணி விளக்கு அதனை, நின்ற பூமேல் எழுந்தருளி இருந்தானை, எண்தோள் வீசி
அருந் திறல் மாநடம் ஆடும் அம்மான் தன்னை, அம் கனகச்சுடர்க் குன்றை, அன்று ஆலின்கீழ்த்
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள் செய்தானை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

[1]
துங்க நகத்தால் அன்றித் தொலையா வென்றித் தொகு திறல் அவ் இரணியனை ஆகம் கீண்ட
அம் கனகத்திருமாலும், அயனும், தேடும் ஆர் அழலை; அநங்கன் உடல் பொடி ஆய் வீழ்ந்து
மங்க, நகத் தான் வல்ல மருந்து தன்னை; வண் கயிலை மாமலைமேல் மன்னி நின்ற,
செங்கனகத்திரள் தோள், எம் செல்வன் தன்னை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

[2]
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை, உம்பர் மணி முடிக்கு அணியை, உண்மை நின்ற
பெருகு நிலைக் குறியாளர் அறிவு தன்னை, பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை, பின்னும்
முருகு விரி நறுமலர் மேல் அயற்கும் மாற்கும்
முழுமுதலை, மெய்த் தவத்தோர் துணையை, வாய்த்த
திருகுகுழல் உமை நங்கை பங்கன் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

[3]
கந்த மலர்க் கொன்றை அணி சடையான் தன்னை; கதிர்விடு மா மணி பிறங்கு கனகச்சோதிச்
சந்த மலர்த் தெரிவை ஒரு பாகத்தானை; சராசர நல்-தாயானை; நாயேன் முன்னைப்
பந்தம் அறுத்து, ஆள் ஆக்கி, பணி கொண்டு, ஆங்கே பன்னிய நூல்-தமிழ்மாலை பாடுவித்து, என்
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

[4]
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன் தன்னை, நளிர்மலர்ப்-பூங்கணை வேளை நாசம் ஆக
வெஞ்சினத்தீ விழித்தது ஒரு நயனத்தானை, வியன்கெடில வீரட்டம் மேவினானை,
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம் கொண்ட மைந்தன் தன்னை,
செஞ் சினத்த திரிசூலப்படையான் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

[5]
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான் தன்னை, கடவூரில் வீரட்டம் கருதினானை,
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன் தன்னை, பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை,
பன்னிய நால்மறை விரிக்கும் பண்பன் தன்னை,
பரிந்து இமையோர் தொழுது ஏத்தி, பரனே! என்று
சென்னிமிசைக்கொண்டு அணி சேவடியினானை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

[6]
எத்திக்கும் ஆய் நின்ற இறைவன் தன்னை; ஏகம்பம் மேயானை; இல்லாத் தெய்வம்
பொத்தித் தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே, போத வாங்கி,
பத்திக்கே வழி காட்டி, பாவம் தீர்த்து, பண்டை வினைப் பயம் ஆன எல்லாம் போக்கி,
தித்தித்து, என் மனத்துள்ளே ஊறும் தேனை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

[7]
கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள் தன்னை; கற்றார்கள் உற்று ஓரும் காதலானை;
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ, அன்று, பொரு சரம் தொட்டானை;
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க, நிறை   தவத்தை அடியேற்கு நிறைவித்து, என்றும்
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

[8]
அரிய பெரும் பொருள் ஆகி நின்றான் தன்னை; அலைகடலில் ஆலாலம் அமுது செய்த
கரியது ஒரு கண்டத்து, செங்கண் ஏற்று, கதிர்   விடு மா மணி பிறங்கு காட்சியானை;
உரிய பல தொழில் செய்யும் அடியார் தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பு இலானை;
தெரிவை ஒருபாகத்துச் சேர்த்தினானை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

[9]
போர் அரவம் மால்விடை ஒன்று ஊர்தியானை, புறம் பயமும் புகலூரும் மன்னினானை,
நீர் அரவச் செஞ்சடை மேல் நிலா வெண்திங்கள்   நீங்காமை வைத்தானை, நிமலன் தன்னை,
பேர் அரவப் புட்பகத்தேர் உடைய வென்றிப் பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடியச் செற்ற
சீர் அரவக் கழலானை, செல்வன் தன்னை, செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list