பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்
கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர்
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.
|
1
|
சிவபெருமான் உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்ட வடிவமுடையவர் . பெருக்கெடுக்கும் கங்கை நீரோடு , பிறைச்சந்திரனையும் தலை மாலையாக அணிந்தவர் . விரைந்த நடையுடைய எருதினை வாகனமாகக் கொண்டவர் . தம் திருவடிகளைத் தொழுது போற்றும் அடியவர்களின் நோயைத் தீர்த்து அருள்புரிபவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற உயர்ந்த பதியாவது , புண்ணியம் தரும் மறைகளை ஓதும் அந்தணர்கள் நிறைந்து இறைவனைப் புகழ்கின்ற ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் . | |
கொக்கு உடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்கு உடை வடமும் ஒர் அரவமும் அலர் அரைமிசையினில்
திக்கு உடை மருவிய உருவினர், திகழ் மலைமகளொடும்
புக்கு உடன் உறைவது புதுமலர் விரை கமழ் புறவமே.
|
2
|
கொக்கின் இறகோடும் , பிறைச்சந்திரனோடும் கூடிய குளிர்ந்த சடைமுடியுடையவர் சிவபெருமான் . எலும்பு மாலை அணிந்தவர் . பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவர் . திசைகளையே ஆடையாகக் கொண்ட உருவினர் . அவர் மலைமகளான உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் கமழும் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் . | |
கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை, உமை ஒரு-
பங்கு இயல் திரு உரு உடையவர்; பரசுவொடு இரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர்; விடையவர்; உறைபதி
பொங்கிய பொருகடல் கொள, அதன்மிசை உயர் புறவமே.
|
3
|
வாசனை பொருந்திய சுரிந்த கூந்தலையும் , வரிகளையுடைய வளையல்களையும் , இளமை வாய்ந்த முலைகளையும் உடைய உமாதேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்டு அர்த்த நாரீசுவர வடிவில் விளங்குபவர் சிவபெருமான் . அவர் மழுவோடு , மானையும் கரத்தில் ஏந்தியவர் , இடப வாகனமுடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது ஊழிக்காலத்தில் கடல் பொங்கிக் கரையில் மோதி உலகத்தை அழிக்க , அதில் மூழ்காது அக்கடலின்மீது உயர்ந்து மிதந்த சிறப்புடைய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் . | |
மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை,
மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார்
சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வரு
போதக உரி-அதள் மருவினர்; உறை பதி-புறவமே.
|
4
|
பெரிய தவம் செய்த மறையவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைத் தம் பெருமை பொருந்திய திருவடி சற்றே பொருந்திய மாத்திரத்தில் அவனது உயிர் விலகும்படி செய்தவரும் , பூதகணங்கள் உலவும் காட்டில் உமாதேவி அஞ்சும்படி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் . | |
காமனை அழல் கொள விழிசெய்து, கருதலர் கடிமதில்
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி
ஓமமொடு உயர்மறை, பிற இயவகைதனொடு, ஒளி, கெழு
பூமகள், அலரொடு, புனல்கொடு, வழிபடு புறவமே.
|
5
|
சிவபெருமான் மன்மதன் எரியுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர் . பகையசுரர்களது காவலுடைய மும்மதில்களும் புகையெழும்படி வலிய நெருப்புப் பற்றும்படி செய்தவர் . அவர் வீற்றிருந்தருளும் தலமாவது , வேள்வி வளர்த்து , வேத மந்திரங்கள் ஓதி , பிற வாத்தியங்கள் ஒலிக்க , தீபமேற்றிப் பிரமன் , மலரும் , நீரும் கொண்டு வழிபட்ட திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் . | |
| Go to top |
சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட,
முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே.
|
6
|
இனிய சொற்களாலமைந்த பொருள் நயமிக்க தோத்திரங்களைச் சொல்பவர்களும் , வேதங்கள் கடைப்பிடிக்கும்படிக் கூறிய கர்மாக்களைச் செய்பவர்களும் , வேதத்தின் பிற்பகுதியான உபநிடதங்கள் என்னும் ஞானகாண்டத்தைக் கடைப்பிடிப்பவர்களும் , வேதத்தின் நடுவில் அதன் உள்ளீடாக விளங்கும் பொருள் சிவனே என்பதை உணர்ந்த பெருமையுடையவர்களும் , தம் திருவடிகளைப் போற்றி வழிபட , அவர்களைத் தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் ஆணவம் , கன்மம் இவை அறும்படி செய்பவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது , பொன் முடிப்புப் போன்ற புன்னை யரும்பு , பொதியவிழ்வது போல மலர , அதிலிருந்து பொன் போன்ற மகரந்தம் சிந்தும் சோலைவளமுடைய அழகிய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் . | |
வரி தரு புலி அதள் உடையினர், மழு எறி படையினர்
பிரிதரு நகுதலைவடம் முடிமிசை அணி பெருமையர்,
எரிதரும் உருவினர், இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே.
|
7
|
சிவபெருமான் வரிகளையுடைய புலியின்தோலை ஆடையாக உடுத்தவர் . பகைவர்மேல் வீசும் மழுப்படையையுடையவர் . யாகத்திலிருந்து பிரிந்து வந்த நகுதலையைத் திருமுடியின் மீது மாலைபோல் அணிந்து கொண்ட பெருமையுடையவர் . எரிபோல் மிளிர்கின்ற சிவந்த மேனியுடையவர் . தேவர்களால் தொழப்படும் தன்மையுடையவர் . இத்தகைய சிவபெருமான் பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடு இனிதே வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் . | |
வசி தரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிவு உற
ஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளி வளர் வெளிபொடி
பொசிதரு திரு உரு உடையவர், உறை பதி புறவமே.
|
8
|
வாளேந்திய கோலத்தோடு இடமகன்ற இவ்வுலகத்தைத் தன் வலிமையால் துன்புறுத்திய அரக்கனான இராவணனின் உடலோடு நெடிய தலைகள் பத்தும் நொறுங்கித் துவளும்படி தம் காற்பெருவிரலை ஊன்றியவரும் , ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற வெண்ணிறத் திருவெண்ணீற்றைப் பூசிய திருவுருவமுடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் . | |
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில்
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும்,
வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப்
போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.
|
9
|
உள்ளிடத்தில் தேன் பொருந்திய , இதழ்கள் பல செறிந்த தாமரை மலராகிய ஆசனத்தில் அமர்ந்து , சிவபெருமானின் ஆணையினால் மன்னுயிர்கட்குத் தனு , கரண , புவன , போகங்களைப் படைக்கும் பிரமனும் , ஏழுவகையாக அமைந்த வானகம் , மலை , கடல் , நிலன் இவற்றை உணவாக உண்டவனான திருமாலும் அறிதற் கரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் . | |
கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர் அன துகிலினர்
பாசுர வினை தரு பளகர்கள், பழி தரு மொழியினர்
நீசரை விடும், இனி! நினைவு உறும் நிமலர்தம் உறைபதி,
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி, புறவமே!
|
10
|
நீரில் சஞ்சரிக்கின்ற மீன்களை உணவாகக் கொள்பவர்களும் , துவர் தோய்க்கப்பட்ட ஆடையணிபவர்களாகிய புத்தர்களும் ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறியாது வெறும் பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய குற்றமுடையவர்கள் . பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழிகளையுடையவர்கள் சமணர்கள் , இவ்விருவகை நீசர்களை விட்டு , சிவபெருமானைத் தியானியுங்கள் . இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , இப்பூவுலக தேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் வேதங்களைப் பயின்று இறைவனைப் புகழும் ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் . | |
| Go to top |
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை,
வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்-
ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே.
|
11
|
மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருப்புறவம் என்ற நல்ல நகரில் வீற்றிருந்தருளுகின்ற தூய உடம்பினனான சிவபெருமானைப் போற்றி , அந்தணர்களின் தலைவனும் , மிக்க முதன்மையுடைய தமிழ்ச் சமர்த்தனுமாகிய திருஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் உரிய இசையுடன் ஓதும் முறைமை தவறாதவர்கள் இப்பெரிய நிலவுலகில் இனி நிகழ்தலாகிய பிறவி இல்லாதவர்களாவர் . | |