சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.088   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவிளமர் - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி ராகத்தில் திருமுறை அருள்தரு யாழினுமென்மொழியம்மை உடனுறை அருள்மிகு பதஞ்சலிமனோகரேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=IxnRQYoM4Lg   Add audio link Add Audio

மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல், கரம்
ஒத்து, அகம் நக, மணி மிளிர்வது ஒர் அரவினர்; ஒளி கிளா
அத் தகவு அடி தொழ, அருள் பெறு கணனொடும் உமையவள்
வித்தகர்; உறைவது விரி பொழில் வள நகர் விளமரே.

1
சிவபெருமான் , தலையில் அழகுற விளங்கும் பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியுடையவர் . கரத்தில் விளங்கும் நகங்களைப் போலத் தலையிலுள்ள இரத்தினங்கள் பிரகாசிக்கும் ஐந்தலைப் பாம்பைக் கங்கணமாகக் கட்டியவர் . இத்தகைய சிவ பெருமானின் திருவடிகளைத் தொழுதுயாம் உய்யும்பொருட்டு , அருள்பெருகும் கண்களையுடைய உமாதேவியோடு வித்தகராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளுவது விரிந்த சோலைகள் சூழ்ந்த வளமை வாய்ந்த திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி
ஒட்டு இலகு இணை மர வடியினர், உமை உறு வடிவினர்,
சிட்டு இலகு அழகிய பொடியினர், விடைமிசை சேர்வது ஒர்
விட்டு இலகு அழகு ஒளி பெயரவர், உறைவது விளமரே.

2
சிவபெருமான் , உலகில் பட்டாடையால் மூடப்பட்ட முலைகளையுடைய பெண்கள் இடுகின்ற பலிகளை ஏற்க , இசைத்துச் செல்கின்ற மரப்பாதுகைகளை அணிந்த திருவடிகளை உடையவர் . உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தர் . தூய்மையையும் , ஞானத்தையும் உணர்த்தும் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ளவர் . இடபவாகனத்தில் வீற்றிருப்பவர் . சொல்லொணாப் பேரழகிய தோற்றப் பொலிவுடன் நடக்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

அம் கதிர் ஒளியினர்; அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு
செங்கதிர் அன நிறம், அனையது ஒர் செழு மணி மார்பினர்;
சங்கு, அதிர் பறை, குழல், முழவினொடு, இசை தரு சரிதையர்
வெங்கதிர் உறும் மழு உடையவர்; இடம் எனில் விளமரே.

3
சிவபெருமான் அழகிய ஒளிவீசும் தோற்றப் பொலிவுடையவர் . இடையிலே பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . செந்நிற கதிர் போன்ற நிறமுடையவர் . அக்கதிர்போல் ஒளிவீசும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்துள்ள மார்பினர் . சங்குகள் ஒலிக்க , பறை , குழல் , முழவு போன்ற வாத்தியங்கள் இசைக்கத் திருக்கூத்து ஆடுபவர் . வெண்ணிற ஒளிவீசும் மழுப் படையை உடையவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

மாடம் அது என வளர் மதில் அவை எரி செய்வர், விரவு சீர்ப்
பீடு என அருமறை உரை செய்வர், பெரிய பல் சரிதைகள்
பாடலர், ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில்
வேடம் அது உடையவர், வியல் நகர் அது சொலில் விளமரே.

4
மாடம் போன்று உயர்ந்து விளங்கிய , தேவர்கட்குத் தீமை செய்த பகையசுரர்களின் மும்மதில்களைச் சிவபெருமான் எரித்தவர் . தமது புகழ் பாடுவதையே பொருளாகக் கொண்ட வேதங்களை அருளிச்செய்தவர் . தமது வரலாறுகள் அடியவர்களால் பாடலாகப் பாடப்படும் பெருமையுடையவர் . சுடுகாட்டை அரங்க மாகக் கொண்டு திருநடனம் செய்யும் கோலத்தர் . இத்தகைய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் பெருமை மிக்க நகரானது திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

பண் தலை மழலை செய் யாழ் என மொழி உமை பாகமாக்
கொண்டு, அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர்
விண்தலை அமரர்கள் துதி செய அருள்புரி விறலினர்
வெண்தலை பலி கொளும் விமலர் தம் வள நகர் விளமரே.

5
பண்ணின் இசையை ஒலிக்கும் யாழ்போன்ற இனியமொழி பேசும் உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் சிவபெருமான் . அவருடைய , அசைகின்ற ஒலிக்கும் வீரக்கழல்களை அணிந்துள்ள திருவடிகளைத் தொழும் அடியவர்களை வினை சாராது . விண்ணுலகிலுள்ள தேவர்கள் தொழுது போற்ற அருள்செய்யும் பெருங்கருணையாளர் . பிரமனு டைய மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவரும் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவருமான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளம் மிகுந்த நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .
Go to top

மனைகள் தொறு இடு பலி அது கொள்வர், மதி பொதி சடையினர்
கனை கடல் அடு விடம் அமுது செய் கறை அணி மிடறினர்,
முனை கெட வரு மதில் எரி செய்த அவர், கழல் பரவுவார்
வினை கெட அருள் புரி தொழிலினர், செழு நகர் விளமரே.

6
சிவபெருமான் தாருகவனத்தில் மனைகள்தொறும் சென்று பிச்சை ஏற்றவர். சந்திரனைத் தரித்த சடையுடையவர். ஒலிக்கின்ற கடலில் தோன்றி உயிர்களைக் கொல்ல வந்த விடத்தை அமுதமாக உண்டு கறை படிந்த அழகிய கண்டத்தர். போர் முனைப்பு உடன் எழுந்த பகையசுரர்களின் மும்மதில்களை எரித்தவர். தம் திருவடிகளை வணங்குபவர்களின் வினைகெடும்படி அருள்புரியும் தொழிலுடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் செழிப்பான நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.

நெறி கமழ் தரும் உரை உணர்வினர், புணர்வு உறு மடவரல்
செறி கமழ் தரு உரு உடையவர், படை பல பயில்பவர்,
பொறி கமழ் தரு பட அரவினர், விரவிய சடை மிசை
வெறி கமழ் தரு மலர் அடைபவர், இடம் எனில் விளமரே.

7
சிவபெருமான் சரியை முதலிய நான்கு நெறிகளாலும் , ஆகமங்களாலும் மன்னுயிர்கட்கு மெய்யுணர்வு நல்கியவர் . தம்மின் வேறாகாத ஞானமே வடிவான உமாதேவியை இடப் பாகமாகப் பொருந்தி விளங்கும் உருவுடையவர் . திருக்கரங்களில் படைகள் பல ஏந்தியவர் . புள்ளிகளையுடைய படமெடுத்தாடும் பாம்பை அணிந்தவர் . கங்கை , பிறைச்சந்திரன் , பாம்பு இவை கலந்த சடைமுடியின் மீது அடியவர்கள் புனையும் நறுமணமலர்கள் அடையப் பெற்றவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

தெண்கடல் புடை அணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப்
பண் பட வரைதனில் அடர் செய்த பைங்கழல் வடிவினர்,
திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார்
விண் கடல் விடம் மலி அடிகள் தம் வள நகர் விளமரே.

8
தெளிவான நீரையுடைய கடல்சூழ்ந்த , அழகிய நீண்ட மதில்களையுடைய இலங்கை அரசனான இராவணன் பண் படையும்படி , கயிலைமலையின் கீழ் அடர்த்த கழலணிந்த திருவடிகளையுடையவர் சிவபெருமான் . கடலையடையும் கங்கையை , சடையில் தாங்கியவர் . விண்ணுலகிலுள்ள பரந்த பாற்கடலில் தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர் . இத்தகைய தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளமை பொருந்திய நகர் திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

தொண்டு அசைவு உற வரு துயர் உறு காலனை மாள்வு உற
அண்டல் செய்து, இருவரை வெரு உற ஆர் அழல் ஆயினார்
கொண்டல் செய்தரு திருமிடறினர்; இடம் எனில் அளி இனம்
விண்டு இசை உறு மலர் நறு மது விரி பொழில் விளமரே.

9
சிவனுக்கு அடிமை பூணும் திருத்தொண்டின் நிலை அழியும்படி , மார்க்கண்டேயருக்குத் துன்பம் செய்ய வந்த காலனை மாளும்படி செய்து , பின்னர்த்தம் ஆணையின்படி ஒழுகுமாறு செய்தவர் சிவபெருமான் . பிரமன் , திருமால் என்னும் இருவரையும் அஞ்சுவிக்கக் காண்டற்கரிய அழல் வடிவானவர் . மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவர் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வண்டினங்கள் விரிந்த மலர்களைக் கிண்டி நல்ல தேனை ஒலியுடன் பருகும் சோலைகளை உடைய திருவிளமர் என்னும் திருத்தலமாகும் .

ஒள்ளியர் தொழுது எழ, உலகினில் உரை செயும் மொழிபல;
கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார்
பள்ளியை மெய் எனக் கருதன்மின்! பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே!

10
உலகத்து அறிவுடையார்களால் வணங்கி ஏத்துதற்குரிய மதங்கள் பல உண்டு . வடமொழி , தமிழ் முதலிய பல மொழிகளிலுமுள்ள உயர்ந்த பொருள்களைக் களவுசெய்து தம்மதாகக் காட்டும் திருட்டுத்தனமிக்கவரும் , தவம் அறிகிலாதவருமான சமண , புத்தர்தம் பள்ளியினர் கூறும் நெறிகளை மெய்யென்று கருதற்க . வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய , வளம் மிகுந்த நகரான திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை அன்போடு போற்றி வழிபடுங்கள் .
Go to top

வெந்த வெண்பொடி அணி அடிகளை, விளமருள் விகிர்தரை,
சிந்தையுள் இடைபெற உரை செய்த தமிழ் இவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகு அமர் அருமறை ஞானசம்-
பந்தன மொழி இவை உரை செயுமவர் வினை பறையுமே.

11
பசுவின் சாணம் வெந்ததாலான திருவெண் நீற்றினை அணிந்த தலைவரை , திருவிளமர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வேறுபட்டவரை ( விகிர்தர் ), சிந்தையுள் இடை யறாது இருத்தும்படி , அந்தணர்கள் வாழ்கின்ற செழுமையான திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தர் போற்றி அருளிச் செய்த தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓதுவோர் வினை அழியும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவிளமர்
3.088   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மத்தகம் அணி பெற மலர்வது
Tune - சாதாரி   (திருவிளமர் பதஞ்சலிமனோகரேசுவரர் யாழினுமென்மொழியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000