திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய
படம் மலி அரவு உடையீரே;
படம் மலி அரவு உடையீர்! உமைப் பணிபவர்
அடைவதும், அமருலகு அதுவே.
|
1
|
வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே ! அவ்வாறு படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள் சிவலோகம் அடைவர் . | |
சிற்றிடை உடன் மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடியீரே;
சுற்றிய சடைமுடியீர்! உம தொழு கழல்
உற்றவர் உறு பிணி இலரே.
|
2
|
குறுகிய இடையையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சுற்றிய சடைமுடியுடைய சிவபெருமானே ! சுற்றிய சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழுது வணங்குபவர்கட்குப் பிணி எதுவும் இல்லை . | |
தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய
துள்ளிய மான் உடையீரே;
துள்ளிய மான் உடையீர்! உம தொழு கழல்
உள்ளுதல் செய, நலம் உறுமே.
|
3
|
தெளிந்த நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , துள்ளிக் குதிக்கும் மானைக் கரத்தில் ஏந்தியுள்ள சிவபெருமானே ! துள்ளிக் குதிக்கும் மானை உடைய உம்முடைய திருவடிகளை நினைத்துத் தியானிக்கும் அடியவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர் . | |
செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரம் எரித்தீரே;
ஒன்னலர் புரம் எரித்தீர்! உமை உள்குவார்
சொல்-நலம் உடையவர், தொண்டே.
|
4
|
செந்நெல் விளையும் வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , நம்மோடு சேராது பகைமை கொண்ட அசுரர்கள் வாழும் திரிபுரங்களை எரித்த சிவபெருமானே ! திரிபுரம் எரித்த உம்மை நினைத்துப் போற்றும் சொல் நலமுடையவர்களே திருத்தொண்டர்கள் ஆவர் . ( உமது வழிபாட்டின் பலனைப் பற்றிப் பிறருக்கு உபதேசிக்கும் தக்கோர் ஆவர் என்பர் ). | |
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய
பெற்றி கொள் பிறை முடியீரே;
பெற்றி கொள் பிறை முடியீர்! உமைப் பேணி நஞ்சு
அற்றவர் அருவினை இலரே.
|
5
|
பாத்திகளில் குன்றாது பாயும் நீர்வளமுடைய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , முடியில் தங்கும் பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமானே ! பேறுபெற்ற பிறைச்சந்திரனை அணிந்த திருமுடியுடைய உம்மை மனம் குழைந்து வழிபடுபவர்கள் உலகப் பற்றற்றவர்கள் . அதன் காரணமாக மேல்வரும் அருவினையும் இல்லாதவராவர் . | |
| Go to top |
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய
மங்கையை இடம் உடையீரே;
மங்கையை இடம் உடையீர்! உமை வாழ்த்துவார்
சங்கை அது இலர்; நலர், தவமே.
|
6
|
செங்கயல்மீன் விளங்கும் நீர்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமானே ! உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்டு விளங்கும் உம்மை வாழ்த்தும் அடியவர்கள் அச்சம் இல்லாதவராவர் . நலமிக்கவரும் , தவப்பேறு உடையவரும் ஆவர் . | |
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறி கமழ் சடைமுடியீரே;
வெறி கமழ் சடைமுடியீர்! உமை விரும்பி மெய்ந்-
நெறி உணர்வோர் உயர்ந்தோரே.
|
7
|
அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நறுமணம் கமழும் சடைமுடியுடைய சிவபெருமானே ! நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம்மை விரும்பி , அடைவதற்குரிய நெறிகளில் சன்மார்க்க நெறியில் நிற்போர் உயர்ந்தோராவர் . | |
திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரம் நெரித்தீரே;
தசமுகன் உரம் நெரித்தீர்! உமைச் சார்பவர்
வசை அறுமது வழிபாடே.
|
8
|
எல்லாத் திக்குக்களிலுமுள்ளவர்கள் தொழுது போற்றும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவரும் , இராவணனின் வலிமை அடங்கும்படி கயிலைமலையின் கீழ் அவனை நெரித்தவருமான சிவபெருமானே ! அவ்வாறு இராவணனின் வலிமையை அடக்கிய உம்மைப் பற்றுக்கோடாகக் கொண்டு வழிபடுபவர்களின் குற்றம் யாவும் தீர்ந்து குணம் பெருகும் . அது உம்மை வழிபட்டதன் பலனாகும் . | |
செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவு செய்தீரே;
இருவரை அசைவு செய்தீர்! உமை ஏத்துவார்
அருவினையொடு துயர் இலரே.
|
9
|
வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் , மாறுபாடு கொண்ட திருமால் , பிரமன் இவர்களை வருத்தியவருமான சிவபெருமானே ! அவ்விருவரையும் வருத்திய உம்மைப் போற்றி வழிபடுபவர்கள் நீக்குவதற்குரிய வினையும் , அதன் விளைவால் உண்டாகும் துன்பமும் இல்லாதவர்கள் ஆவர் . | |
செய்த்தலைப் புனல் அணி சிறுகுடி மேவிய
புத்தரொடு அமண் புறத்தீரே;
புத்தரொடு அமண் புறத்தீர்! உமைப் போற்றுதல்
பத்தர்கள் தம் உடைப் பரிசே.
|
10
|
வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப் , புத்தர் , சமணர்கட்குப் புறம்பாக இருக்கும் சிவபெருமானே ! புத்தர் சமணர்கட்குப் புறம்பான உம்மைப் போற்றி வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக் கொள்வர் . | |
| Go to top |
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய
மான் அமர் கரம் உடையீரே;
மான் அமர் கரம் உடையீர்! உமை வாழ்த்திய
ஞானசம்பந்தன தமிழே.
|
11
|
வண்டுகள் விரும்பும் சோலைகளை உடைய அழகிய திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , மான் ஏந்திய கரமுடைய சிவபெருமானே ! மான் ஏந்திய கரமுடைய உம்மை வாழ்த்திப் போற்றிய ஞானசம்பந்தனின் இத் தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர்கள் இம்மை , மறுமைப் பலன்களைப் பெறுவர் . | |