மண் அது உண்ட(அ)ரி மலரோன் காணா
வெண்நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணது ஓங்கிய கயிலையாரும்,
அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
|
1
|
மண்ணுண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் காணமுடியாதபடி, திருமயேந்திர மலையில் எழுந்தருளி யிருப்பவரும், காட்சிமிக்க திருக்கயிலையில் எழுந்தருளி இருப்பவரும், திருவாரூரில் வீற்றிருப்பவரும், வெண்ணாவல் மரத்தின்கீழ் எழுந்தருள விரும்புபவரும் ஆகிய தலைவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவானைக்காவேயாகும். | |
வந்து மால் அயன் அவர் காண்பு அரியார்
வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும்;
கந்த வார்சடை உடைக் கயிலையாரும்;
அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
|
2
|
சிவபெருமான், திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவர். அவர் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்தவராய்த் திருமயேந்திரத்திலும், நறுமணம் கமழும் சடையுடையவராய்த் திருக்கயிலையிலும், அழகிய, குளிர்ச்சிமிக்க திருவாரூரிலும், பழமை வாய்ந்த திருவானைக்காவிலும் விளங்குபவர். | |
மால் அயன் தேடிய மயேந்திரரும்,
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்,
வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும்,
ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே.
|
3
|
திருமாலும், பிரமனும் தேடிய சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவரே மார்க்கண்டேயருக்காகக் காலனை மாய்த்த கயிலைநாதர். பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்(நீர்) தலமாக விளங்கும் திருஆனைக்காவில் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருந்தருளுபவர். கருப்பங்கழனிகளை உடைய திருவாரூரில் வீற்றிருந்தருளுபவரும் அவரே. | |
கருடனை ஏறு அரி, அயனார், காணார்
வெருள் விடை ஏறிய மயேந்திரரும்;
கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும்;
அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
|
4
|
கருடவாகனம் கொண்ட திருமாலும், பிரமனும் காணமுடியாதவராகிய சிவபெருமான், பகைவர் அஞ்சத்தக்க இடப வாகனத்தில் விளங்குகின்ற திருமயேந்திரர், கருநிறக் கண்டத்தையுடைய திருக்கயிலைநாதர். அருளே திருமேனியாகக் கொண்ட திருஆரூரர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுபவர். | |
மதுசூதனன் நான்முகன் வணங்க(அ)ரியார்
மதி அது சொல்லிய மயேந்திரரும்,
கதிர்முலை புல்கிய கயிலையாரும்,
அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
|
5
|
மது என்ற அசுரனைக் கொன்றவனாகிய திருமாலும், பிரமனும் வணங்குதற்கு அரியராய் விளங்குபவர் சிவபெருமான். ஆகமங்களை உபதேசித்தருளிய திருமகேந்திர மலையில் வீற்றிருந்தருளுபவர். ஒளி பொருந்திய கொங்கைகளையுடைய உமாதேவியைத் தழுவிய திருக்கயிலைநாதர். எவர்க்கும் மேம்பட்டவர். திருவாரூரில் வீற்றிருந்தருளுபவர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார். | |
| Go to top |
சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா
மிக்கவர் கயிலை மயேந்திரரும்,
தக்கனைத் தலை அரி தழல் உருவர்
அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே.
|
6
|
சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற திருமாலும், பிரமனும் காணாத வண்ணம் விளங்கிய, யாவரினும் மேம்பட்டவரான சிவபெருமான், திருக்கயிலைமலையிலும், திருமயேந்திரத்திலும் வீற்றிருந்தருளுகின்றார். அவர் தக்கனின் தலையை அரிந்தவர். நெருப்புருவானவர். உருத்திராக்கமாலை அணிந்தவர். திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுபவர். | |
கண்ணனும், நான்முகன், காண்பு அரியார்
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை எங்கள்
அண்ணல், ஆரூர் ஆதி ஆனைக்காவே.
|
7
|
கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவரான சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவர் கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலைநாதர். எங்கள் தலைவரான திருவாரூரர். அவர் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருக்க விரும்பும் திருவானைக்காவிலுள்ள ஆதிமூர்த்தி ஆவார். | |
கடல் வண்ணன் நான்முகன் காண்பு அரியார்
தடவரை அரக்கனைத் தலை நெரித்தார்
விடம் அது உண்ட எம் மயேந்திரரும்;
அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே.
|
8
|
கடல்போலும் கருநிறமுடைய திருமாலும், பிரமனும் காண்பதற்கரிய சிவபெருமான், பெரிய கயிலைமலையின் கீழ் இராவணனின் தலையை நெரித்த கயிலைநாதர். விடமுண்ட திருமயேந்திரர். வலிய இடபத்தில் ஏறும் திருவாரூரர். அவரே திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தி ஆவார். | |
ஆதி, மால் அயன் அவர் காண்பு அரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்;
காதில் ஒர் குழை உடைக் கயிலையாரும்;
ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே.
|
9
|
தொன்றுதொட்டுத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், வேதங்களால் துதிக்கப்பெறும் மயேந்திரரும், காதில் குழையணிந்த கயிலைநாதரும், ஆதியாகிய திருவாரூர் எந்தையும் ஆவர். அவரே திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார். | |
அறிவு இல் அமண்புத்தர் அறிவு கொள்ளேல்!
வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும்,
மறிகடலோன் அயன் தேடத் தானும்
அறிவு அரு கயிலையோன்-ஆனைக்காவே.
|
10
|
இறைவனைப் பற்றி எதுவுமே கூறாத அறிவிலிகளாகிய சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ள வேண்டா. மடங்கிவீசும் அலைகளையுடைய பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் அறிவதற்கரியவரான கயிலை மலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே, மருண்ட பார்வையுடைய மான்கன்றைக் கையிலேந்தித் திருவாரூரிலும், திருமயேந்திரத்திலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார். | |
| Go to top |
ஏனம்மால் அயன் அவர் காண்பு அரியார்
கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும்,
ஆன ஆரூர், ஆதி ஆனைக்காவை
ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே!
|
11
|
பன்றி உருவமெடுத்த திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த திருக்கயிலையிலும், நல்ல திரு மயேந்திரத்திலும், திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார். அத்தகைய சிவ பெருமானைப் போற்றி ஞானசம்பந்தர் அருளிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் பெறலரும் பிறவிப் பயனைப் பெறுவார்கள். | |