உற்று உமை சேர்வது மெய்யினையே; உணர்வதும் நின்
அருள் மெய்யினையே;
கற்றவர் காய்வது காமனையே; கனல் விழி காய்வது காமனையே;
அற்றம் மறைப்பதும் உன் பணியே; அமரர்கள் செய்வதும் உன் பணியே;
பெற்று முகந்தது கந்தனையே; பிரமபுரத்தை உகந்தனையே.
|
1
|
இறைவரே ! உமாதேவியார் பிரியாது பொருந்தி இருப்பது உம் திருமேனியையே . சிவஞானிகள் உணர்ந்து போற்றுவது உமது பேரருளையே . கற்றுணர்ந்த துறவிகள் வெறுப்பது மனைவி முதலிய குடும்பத்தையே . நெற்றிக்கண் எரித்தது மன்மதனையே . உமது திருமேனியை மறைப்பது பாம்பே . தேவர்கள் செய்வது உமது பணிவிடையே . நீர் பெற்றெடுத்து விரும்பி அணைத்தது முருகப் பெருமானையே . நீர் திருப்பிரமபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றீர் . | |
சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே!
அதிர் ஒளி சேர் திகிரிப்படையால் அமர்ந்தனர் உம்பர்,
துதிப்பு அடையால்,
மதி தவழ் வெற்பு அது கைச் சிலையே; மரு விடம் ஏற்பது கைச்சிலையே
விதியினில் இட்டு அவிரும் பரனே! வேணுபுரத்தை விரும்பு
அரனே!
|
2
|
வஞ்சனை செய்து வந்தவன் சலந்தரன் என்னும் அசுரனே . அவன் தலையை வெட்டியவன் கங்கையைத் தாங்கிய அரன் . கண்டவர்கள் நடுங்கத்தக்க ஒளிபொருந்திய சக்கராயுதத்தால் சலந்தரனைக் கொல்லத் தேவர்கள் துதித்து மகிழ்ந்தனர் . சந்திர மண்டலத்தை அளாவிய மேருமலை , கையிலேந்திய வில்லாம் . பொருந்திய நஞ்சை உணவாக ஏற்பதில் வெறுத்திலீர் . விதிக்கப்பட்ட அறவழியில் உலகவர் ஒழுகுவதில் விருப்பத்தையுடைய பெரிய மேலான கடவுளே . வேணுபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அரனே ! | |
காது அமரத் திகழ் தோடினனே; கானவனாய்க் கடிது ஓடினனே;
பாதம் அதால் கூற்று உதைத்தனனே; பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே;
தாது அவிழ் கொன்றை தரித்தனனே; சார்ந்த வினை அது அரித்தனனே
போதம் அமரும் உரைப் பொருளே, புகலி அமர்ந்த
பரம்பொரு
|
3
|
இறைவர் காதில் தோட்டை அணிந்தவர் . வேடுவனாகி மிக விரைந்து சென்றவர் . யமனைக் காலால் உதைத்தவர் . அர்ச்சுனனது உடலைக் கவசம் போல் மூடினவர் . மகரந்தத்தோடு மலர்ந்த கொன்றையை அணிந்தவர் . அன்பர்களின் வினைகளை அழித்தவர் . சிவஞானக் கருத்தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவர் . அவரே திருப்புகலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் பரம்பொருள் . | |
மைத் திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை
சேர்வதும்; மா சு(ண்)ணமே
மெய்த்து உடல் பூசுவர்; மேல் மதியே; வேதம் அது ஓதுவர், மேல் மதியே;
பொய்த் தலை ஓடு உறும், அத்தம் அதே; புரிசடை வைத்தது, மத்தம் அதே;
வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர்,
வெங்குருவே.
|
4
|
கருநிறமுடைய நஞ்சைக் கக்கும் பாம்பை மகிழ்ந்து இடுப்பில் அணிந்துள்ளவர் . திருநீற்றினையே சந்தனம் போல் உடம்பில் பூசியவர் . அவர் தலைமேல் விளங்குவது சந்திரனே . அவர் வேதம் அருளியது உயிர்கட்கு மேலான ஞானம் அருளவே . மண்டையோடு ஏந்தி மயானத்தில் விளங்குபவர் . முறுக்குண்ட சடையில் அவர் அணிந்துள்ளது ஊமத்த மலரே . வித்தகராகிய அப் பெருமான் எம் குரு ஆவார் . அவர் விரும்பி வீற்றிருந்தருளுவதும் திருவெங்குரு என்னும் திருத்தலமாகும் . | |
உடன் பயில்கின்றனன், மாதவனே, உறு பொறி காய்ந்து
இசை மா தவனே;
திடம் பட மாமறை கண்டனனே, திரிகுணம் மேவிய கண்டனனே;
படம் கொள் அரவு அரை செய்தனனே; பகடு உரிகொண்டு அரை செய்தனனே;
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே, தோணிபுரத்து
உறை நம் சிவனே.
|
5
|
இறைவனே ! திருமாலைத் தம்முடன் இடப் பாகத்தில் இருக்கும்படி செய்கின்றவர் . தம்வழிச் செல்லும் இயல்புடைய இந்திரியங்களை அடக்கும் பெரிய தவம் செய்தவர் . உறுதி பயக்கும் சிறந்த வேதங்களை அருளியவர் . முக்குண வயப்பட்டுச் செய்த புறச்சமயக் கொள்கைகளைக் கண்டனம் செய்பவர் . பட மெடுக்கும் பாம்பை இடுப்பில் அணிந்தவர் . யானையின் தோலை உரித்து அதைக் கொன்றவர் . தொடர்ந்த துன்பங்களை அழிப்பதில் இவர் விடம் போன்றவர் . இவரே திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் நம் சிவபெருமான் ஆவார் . | |
| Go to top |
திகழ் கையதும் புகை தங்கு அழலே; தேவர் தொழுவதும் தம் கழலே;
இகழ்பவர் தாம் ஒரு மான் இடமே; இருந் தனுவோடு எழில் மானிடமே;
மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே, மின்
நிகர்கின்றதும், அம் சடையே,
தக இரதம் கொள் வசுந்தரரே, தக்க தராய் உறை சுந்தரரே.
|
6
|
இறைவன் அழகிய கையில் ஏந்தியுள்ளது புகைகொண்டு எழும் நெருப்பே . தேவர்கள் போற்றுவது அவருடைய திருக்கழல்களையே . தம்மை இகழ்ந்த தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை இடக்கரத்தில் ஏந்தியுள்ளார் . பக்குவான்மாக்கட்கு ஞானோபதேசம் செய்ய அவர் காட்சி தந்தது மானிட உடம்பில் . பெருக்கெடுக்கும் கங்கையைத் தாங்கியது அழகிய சடையிலே . மின்னலைப் போன்று ஒளிரும் அழகிய சடையை உடையவர் . தகுந்த விரதம் கொள்ளும் சுந்தர வடிவினர் . அவர் எக்காலத்திலும் அழியாது நிலைத்து நிற்கும் பூந்தராய் என்னும் திருப்பதியில் வீற்றிருந்தருளும் அழகர் . | |
ஓர்வு அரு கண்கள் இணைக்க(அ)யலே; உமையவள் கண்கள்
இணைக் கயலே;
ஏர் மருவும் கழல் நாகம் அதே; எழில் கொள் உதாசனன், ஆகம் அதே;
நீர் வரு கொந்து அளகம் கையதே, நெடுஞ்சடை மேவிய கங்கையதே;
சேர்வு அரு யோக தியம்பகனே! சிரபுரம் மேய தி அம்பு அகனே!
|
7
|
இறைவனையும் , அடியாரையும் காணாத கண்கள் புறம்பானவை . உமாதேவியின் கண்கள் இரு கயல்மீன்கட்கு ஒப்பானவை . அழகிய திருவடிகளில் கட்டியிருப்பது நாகத்தையே . அவருடைய திருமேனியானது நெருப்பு வண்ணம் உடையது நீர்மயமான கொத்தான கூந்தல் ஒழுங்காய் உள்ளது . நெடுஞ்சடையில் தங்கியுள்ளது , கங்கையே . சேர்தற்கரிய யோகநிலையைக் காட்டிய மூன்று கண்களையுடையவரே . நெருப்பாகிய அம்பைக் கையின் இடத்துக்கொண்டு சிரபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார் . | |
ஈண்டு துயில் அமர் அப்பினனே இருங் கண் இடந்து அடி அப்பினனே;
தீண்டல் அரும் பரிசு அக் கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே;
வேண்டி வருந்த நகைத் தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே
பூண்டனர்; சேரலும் மா பதியே, புறவம் அமர்ந்த
உமாபதியே.
|
8
|
பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால் , தமது பெரிய கண்ணைத் தோண்டிச் சிவபெருமானின் திருவடிகளில் அர்ச்சித்தனர் . தீண்டுதற்கரிய தன்மையுடைய அந்தக் கரத்தில் ஒளியுடையதாய் விளங்குவது சக்கரமே . தாருகாவனத்து முனிவர்கள் விரும்பி யாகம் செய்து சிரமப்படச் சிவனைக் கொல்ல வந்தது நகுவெண்டலை . அம்முனிவர்களைப் பரிகசிப்பது போல வெண்டலை களை மாலையாக அணிந்து கொண்டனர் . அவர் சேர்வது எவற்றிலும் சிறந்த அடியார் உள்ளமாகிய இடமாம் . புறவம் என்னும் திருத் தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் அந்த உமாபதியே ஆவார் . | |
நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே;
உன்னி, மனத்து, எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே;
கன்னியரைக் கவரும் க(ள்)ளனே! கடல்விடம் உண்ட கருங் களனே;
மன்னி வரைப் பதி, சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே.
|
9
|
சிவபெருமானே ! மணிகட்டிய உன் கோயில் வாசலின் நிழலையே அருளிடமாகக் கொண்ட நேசமுடைய அடியவர்களிடமிருந்து நீங்கமாட்டாய் . அவர்களின் அடிச்சுவட்டை எண்ணி . மனத்தில் தொழுகின்ற அடியவர்கள் விளங்குகின்ற இடமே அடியவர் திருக்கூட்டம் எனத்தகும் . அவர் தாருகாவனத்தில் வாழும் மகளிர் உள்ளத்தைக் கவர்ந்த கள்வர் . கடலில் எழுந்த விடத்தை உண்ட கரிய கண்டத்தர் . அப்பெருமான் நிலையாக விரும்பி வீற்றிருந்தருளும் வரையறுத்தலை உடையபதி சண்பைப்புல்லாலே அழகாகச் சூழப் பட்டதாகிய . கடல்வளமும் , வயல் வளமும் உடைய சண்பை நகராகும் . | |
இலங்கை அரக்கர் தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க, இறையே,
புலன்கள் கெட உடன் பாடினனே; பொறிகள் கெட உடன்பாடினனே;
இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே;
கலந்து அருள் பெற்றதும் மா வசியே; காழி அரன் அடி மா வசியே.
|
10
|
இலங்கை அரக்கர்கட்கு அரசனான இராவணன் கயிலையைப் பெயர்த்து எடுக்க , இறைவன் திருப்பாத விரலை ஊன்றக் கயிலையின் கீழ் நடுக்குண்டு , இந்திரியங்கள் மயங்கச் சோர்ந்து தான் பிழைக்கும் வண்ணம் இறையருளை வேண்டி உடனே பாடினன் . பழைய செருக்கு நீங்கி , பொறிகள் பக்தி நிலையில் செல்ல அவனுடைய பாடலுக்கு இறைவன் உடன்பட்டு அருளினன் . இரவு போன்ற கரிய நிறத்தை உடைய அவன் கயிலைமலையின் கீழ் நடுக்குண்டு அழுததனால் உண்டான பெயரே இராவணன் என்பதாம் . இறைவனின் அருளில் கலந்து அவன் பெற்றது சிறந்த வாளாயுதம் . சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடி சிறந்த வசீகரத்தை உடையதாகும் . | |
| Go to top |
கண் நிகழ் புண்டரிகத்தினனே, கலந்து இரி புண் தரி கத்தினனே,
மண் நிகழும் பரிசு ஏனம் அதே, வானகம் ஏய் வகை சேனம் அதே,
நண்ணி அடிமுடி எய்தலரே; நளிர் மலி சோலையில் எய்து அலரே
பண் இயல் கொச்சை பசுபதியே, பசு மிக ஊர்வர்,
பசுபதியே.
|
11
|
தாமரை போன்ற கண்களையுடைய திருமாலும் , அவனோடு சேர்ந்து திரிந்த உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும் , பூமியைத் தோண்டும் பன்றியாகவும் , வானத்தில் பறக்கும் பருந்தாகவும் அடி , முடி தேட முயன்று அடையாதவர் ஆயினர் . குளிர்ச்சி மிக்க சோலைகளில் உள்ள மலர்கள் சிவபூசை பண்ணப் பயன்படத் திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் , உயிர்கட்கெல்லாம் தலைவரான பசுபதி எனப்படும் சிவபெருமான் . அவர் ஆனேற்றில் ஏறுவதால் பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவார் . | |
பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது
இலை அவை எதிரே
வரு நதி இடை மிசை வரு கரனே! வசையொடும் அலர்
கெட அருகு அரனே!
கருதல் இல் இசை முரல்தரும் மருளே, கழுமலம் அமர்
இறை தரும் அருகே
மருவிய தமிழ்விரகன மொழியே வல்லவர்தம் இடர், திடம், ஒழியே.
|
12
|
பெரிய மதில்களையுடைய மதுரை நகரின்கண் அரசனது அவைமுன்னர்த் , திருப்பதிகத்தை ஓலையில் எழுதி வைகை நதியின் மீது செலுத்த அதனை எதிர் நோக்கிச் செல்லுமாறு செய்த கரத்தையுடையவர் சிவபெருமான் . அவர் சைவர்கட்கு வந்த பழியும் , பழிதூற்றலும் கெடுமாறு சமணர்களை அழித்தவர் . நினைக்கவும் முடியாதபடி சைவர்களின் புகழ் உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த வியப்பான செயல் . திருக்கழுமலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனின் அருளே . அவ்வருளைப் பெற்ற முத்தமிழ் விரகரது பாடல்களை ஓதவல்லவர்கள் இடர் ஒழிதல் நிச்சயம் . | |
Other song(s) from this location: திருப்பிரமபுரம் (சீர்காழி)
1.001
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தோடு உடைய செவியன், விடை
Tune - நட்டபாடை
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி
)
|
1.063
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரி ஆர் மழு ஒன்று
Tune - தக்கேசி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.090
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இருக்குக்குறள் பதிகம், அரனை உள்குவீர்! பிரமன் ஊருள்
Tune - குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மொழிமாற்று பதிகம், காடு அது, அணிகலம் கார்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.127
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஏகபாதம் பதிகம், பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
1.128
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஓர் உரு ஆயினை; மான்
Tune - வியாழக்குறிஞ்சி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) )
|
2.040
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
Tune - சீகாமரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கறை அணி வேல் இலர்போலும்;
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.073
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
2.074
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
Tune - காந்தாரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.037
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.056
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.067
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வழிமொழி பதிகம், சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.110
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஈரடி பதிகம், வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.113
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.117
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாலை மாற்று பதிகம், யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம்
(திருப்பிரமபுரம் (சீர்காழி) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|