பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே; பாவை தன் உருமேல் ஒரு பாகனே;
தூய வானவர் வேதத் துவனியே; சோதி மால் எரி வேதத்து வ(ன்)னியே;
ஆயும் நன்பொருள் நுண்பொருள் ஆதியே; ஆலநீழல்
அரும்பொருள் ஆதியே;
காய, வில் மதன் பட்டது கம்பமே; கண் நுதல் பரமற்கு
இடம் கம்பமே.
|
1
|
இறைவர் பாய்ந்து செல்லும் பெருமையுடைய இடபத்தைச் செலுத்துபவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர் . தேவர்கள் போற்றுகின்ற வேதத்தின் தொனியானவர் . சுடர்விட்டு எரியும் வெம்மையுடைய வேள்வித்தீ ஆனவர் . ஆராயத்தக்க நல்ல கருத்துக்கள் எல்லாவற்றிலும் நுட்பமான கருத்தாக விளங்குபவர் . ஆலநிழலின் கீழ்த் தட்சிணாமூர்த்தியாய் விளங்கிச் சனகாதி முனிவர்கட்கு அரும்பொருள் உரைத்த முதல்வர் . போர்புரிய வந்த வில்லையுடைய மன்மதன் முதற்கண் அடைந்தது நடுக்கமேயாம் . நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளும் இடம் திருக்சச்சியேகம்பமே . | |
சடை அணிந்ததும் வெண்டு அலைமாலையே; தம் உடம்பிலும்
வெண்தலைமாலையே;
படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே; பரந்து
இலங்கு ஐயில் சூலம் அது என்பதே;
புடை பரப்பன, பூதகணங்களே; போற்று இசைப்பன, பூதகணங்களே
கடைகள்தோறும் இரப்பதும் மிச்சையே; கம்பம் மேவி
இருப்பதும் இச்சையே.
|
2
|
சிவபெருமான் சடையில் அணிந்திருப்பது வெண்டலை மாலை ஆகும் . உடம்பிலும் தலைமாலை அணிந்துள்ளார் . அழகிய கையில் சூலப்படை ஏந்தி உள்ளவர் . பரந்து விளங்கும் கையைப் படை போன்று கொண்டு தோண்டிய அழகு செய்வதாகிய அணிகலன் திருமாலின் கண் ஆகும் . பக்கத்தில் சூழ்ந்து விளங்குவனவும் , போற்றிசைப்பனவும் பூதகணங்களே . அப் பெருமான் வாயில்கள் தோறும் சென்று இரப்பது உணவே . அவர் திருக்கச்சியேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் . | |
வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே; ஏறு முன் செலத்
தும்பை மிலைச்சியே!
அள்ளி நீறு அது பூசுவ தாகமே; ஆன மாசுணம் மூசுவது ஆகமே;
புள்ளி ஆடை உடுப்பது கத்துமே; போன, ஊழி, உடுப்பது உகத்துமே;
கள் உலாம் மலர்க் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர்க்
கம்பம் இருப்பு அதே.
|
3
|
சிவபெருமான் வெள்ளெருக்கமும் , தும்பையும் சூடியுள்ளவர் . தும்புக் கயிற்றைக் கொண்டு இடபத்தைக் கட்டியுள்ளவர் . திருநீற்றினை உடம்பிலே பூசியுள்ளவர் . உடம்பைப் பாம்புகளால் மூடியுள்ளவர் . புள்ளிகளையுடைய புலித்தோல் , மான்தோல் ஆடைகளை விரும்பி அணிபவர் . ஊழிக்காலத்தில் உயிர்கள் இளைப்பாறும் பொருட்டுத் தம்முள் ஒடுக்கிக் கொள்வார் , ஒவ்வொரு யுகத்திலும் , தேன் பொருந்திய மலர்களை அணிந்துள்ள , உலகைத் தாங்கும் தூண் போன்ற சிவபெருமான் காஞ்சி மாநகரிலுள்ள திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து அருளு கின்றார் . | |
முற்றல் ஆமை அணிந்த முதல்வரே; மூரி ஆமை அணிந்த முதல்வரே;
பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே; பாலும் நெய் உகந்து
ஆட்டும் பரிசரே;
வற்றல் ஓடு கலம், பலி தேர்வதே; வானினோடு கலம், பலி, தேர்வதே,
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே; காஞ்சி மா நகர்க் கம்பம் இருப்பதே.
|
4
|
சிவபெருமான் ஆமையோட்டை அணிந்த முதல்வர் . வலிய ஆனேற்றை அழகு செய்து ஏறிய முதல்வர் . ஒளி பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் தன்மையர் . பாலாலும் , நெய்யாலும் திருமுழுக்காட்டப்படும் பெருமையுடையவர் . வற்றிய மண்டையோட்டைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்றுத் திரிபவர் . தேவர்களாலும் , ஏனைய உலகிலுள்ள அடியவர்களாலும் போற்றிப் பூசை செய்யப்படுபவர் . அவரைப் போற்றாதவர்கள் மனம் இரும்புத்தூண் போன்றது . அப்பெருமான் திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் . | |
வேடன் ஆகி விசையற்கு அருளியே; வேலை நஞ்சம்
மிசையல் கருளியே;
ஆடுபாம்பு அரை ஆர்த்தது உடை அதே; அஞ்சு பூதமும்
ஆர்த்தது உடையதே;
கோடு வான்மதிக்கண்ணி அழகிதே; குற்றம் இல் மதிக் கண்ணி அழகிதே;
காடு வாழ் பதி ஆவதும் உ(ம்)மது; ஏகம்பம் மா பதி
ஆவதும் உ(ம்)மதே.
|
5
|
சிவபெருமான் வேட்டுவ வடிவம் தாங்கி அர்ச்சுனனுக்கு அருள்புரிந்தவர் . கடலில் தோன்றிய நஞ்சை உண்டு கண்டம் கறுத்தவர் . ஆடும் பாம்பை அரையில் கச்சாகக் கட்டி அதன்மேல் ஆடை அணிந்தவர் , பிரளயகாலத்தில் ஐம்பூதங்களால் ஆகிய உலகம் அவரால் அழிக்கப்பட்டது . வளைந்த ஆகாயத்தில் விளங்கும் பிறையைத் தலைமாலையாக அழகுற அணிந்தவர் . களங்கமில்லாத மெய்யடியார்களின் பக்தியாகிய வலை உணர்தற்கு இனிமையானது . சுடுகாடே அவர் வாழும் இருப்பிடம் , திருக்கச்சியேகம்பத்தையும் தாம் விரும்பும் திருத்தலமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் . | |
| Go to top |
இரும் புகைக்கொடி தங்கு அழல் கையதே; இமயமாமகள், தம் கழல், கையதே;
அரும்பு மொய்த்த மலர்ப் பொறை தாங்கியே; ஆழியான்
தன் மலர்ப் பொறை தாங்கியே;
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே, பேதைமார் மனம் வாடுதல் செய்துமே,
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே, காஞ்சி மா
நகர்க் கம்பம் இருப்பு அதே.
|
6
|
இறைவர் கொடிபோன்று பெரிய புகையுடன் எழும் நெருப்பைக் கையிலேந்தியவர் . இமயமலையரசனின் மகளான உமாதேவியின் கைகளால் அவருடைய திருவடிகள் வருடப்படுவன . அடியவர்களால் பூசிக்கப்படும் அரும்புகளையும் , மலர்களையும் பாரமாகத் தாங்குபவர் . சக்கரப் படையுடைய திருமாலின் பெரிய உடலெலும்பாகிய கங்காளத்தைச் சுமப்பவர் . பகலில் திருநடனம் செய்பவர் . தாருகாவனத்து முனிபத்தினிகளின் மனம் வாடச் செய்பவர் . கருப்பங்கழிகள் நிறைந்து கம்பம் போலப் பருத்துக் காணப்படும் திருக் கச்சியேகம்பம் என்ற திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் . | |
முதிரம் மங்கை தவம் செய்த காலமே, முன்பும், அம்
கைதவம் செய்த காலமே,
வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே, வேழம் ஓடகில்
சந்தம் உருட்டியே,
அதிர ஆறு வரத்து அழுவத்தொடே, ஆன் ஐ ஆடுவரத் தழுவத்தொடே,
கதிர் கொள் பூண் முலைக் கம்பம் இருப்பதே; காஞ்சி மா
நகர்க் கம்பம் இருப்பதே.
|
7
|
மேகம் போலும் நிறத்தையுடைய அம்பிகை முற்காலத்தில் இமயமலையில் சிவபெருமானைக் கணவராக அடையத் தவம் செய்தாள் . பின் அம்பிகை கம்பையாற்றில் தவம் செய்யும் இக்காலத்திலும் மூங்கில் , அகில் , சந்தனம் , மற்றும் ஏனைய முருட்டு மரங்களையும் , யானை முதலிய மிருகங்களையும் ஓட முடியாதவாறு ஆரவாரத்தோடு கம்பையாறு அடித்துக் கொண்டு வர , பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படும் சிவபெருமானைத் தழுவுவதால் முலைத்தழும்பு தம்பம்போல் உறுதியான அவர் மார்பில் விளங்குகின்றது . அப்பெருமான் காஞ்சிமாநகரிலுள்ள திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . | |
பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல்
நெடுத்த (அ)பலத்தையே
கொண்டு, அரக்கியதும் கால்விரலையே; கோள் அரக்கியதும் கால்வு இரலையே;
உண்டு உழன்றதும் முண்டத் தலையிலே; உடுபதிக்கு இடம்
உண்டு, அத் தலையிலே;
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே; கடவுள் நீ இடம்
கொண்டது கம்பமே.
|
8
|
சிவபெருமான் , இராவணன் கைலைமலையை எடுத்த வலிமையை , மேற்சென்று சிதறுவித்தலால் , அவன் வலிமையற்றவன் என்பதை உணர்த்தும் வகையில் தம் திருப்பாத விரலை ஊன்றியவர் . தாருகவனத்து முனிவரேவலால் கொலை செய்ய வந்த மானை ஏந்தியுள்ளவர் . அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது தலை மண்டையோட்டிலே . சந்திரனுக்கு இடம் கொடுத்தது அவர் தலையிலே . நஞ்சைக் கண்டத்தில் அடக்கிய , உலகைத் தாங்கும் தூண் போன்றவன் சிவபெருமானே . கடவுளாகிய அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே . | |
தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தம் ஆன சுடர்விடு சோதியே;
பேணி ஓடு பிரமப் பறவையே பித்தன் ஆன பிரமப் பறவையே,
சேணினோடு, கீழ், ஊழி திரிந்துமே, சித்தமோடு கீழ், ஊழி திரிந்துமே,
காண நின்றனர் உற்றது கம்பமே; கடவுள் நீ இடம் உற்றது கம்பமே.
|
9
|
அம்பறாத் தூணியாகிய நெற்றிக்கண்ணிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பொறிகளை உடையவரே . அவற்றிலிருந்து தோன்றியவரே இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சுடர்விடு ஞானமயமான முருகக் கடவுளாவார் . தம் வலிமையைப் பாராட்டி முடி காண்பான் சென்ற பிரமன் அன்னப்பறவை வடிவு தாங்கி ஆகாயத்திலும் , திருமால் பன்றி உருவில் பாதாளத்திலும் செருக்கோடும் , கீழ்மைத்தன்மையோடும் இறைவனைக் காண முயன்று ஊழிக்காலம் வரை திரிந்தும் அவர்கள் கண்டது அக்கினித் தம்பமாகிய உமது வடிவத்தையே . பரம்பொருளாகிய நீ விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே ஆகும் . | |
ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே, உன் பொருள்-திறம் ஈர் உரு ஆகவே,
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே; ஆற்ற எய்தற்கு அரிது, பெரிதுமே;
தேரரும் அறியாது திகைப்பரே; சித்தமும் மறியா, துதி கைப்பரே;
கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே; கடவுள் நீ இடம்
கொண்டது கம்பமே.
|
10
|
இறைவரே ! யானையின் உடம்பினை உரித்ததாகிய தோலை உடம்பில் போர்வையாக அணிந்துள்ளீர் . உம்முடைய உண்மைத்தன்மை சக்தி , சிவம் என இரண்டு திறத்தது . உமது பாகத்திலுள்ள அம்பிகையின் கரிய நிறம் ஒளிவாய்ந்தது . உயிர்கள் ஆன்ம முயற்சியினால் உம் திருவடிகளை அடைதல் அரிது . புத்தர்களும் உம்மை அறியாது திகைப்பர் . அவர்கள் அறிவும் தம் நிலைமை மாறமாட்டாதாதலால் உம்மைத் துதிப்பதை வெறுப்பர் . கருநிறமுடைய சமணர்கள் உம்மைக் கண்டு நடுங்குவர் . பரம்பொருளாகிய நீர் விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே . | |
| Go to top |
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர்
தீர்த்திடு உகு அம்பமே;
புந்தி செய்வது விரும்பிப் புகலியே பூசுரன் தன் விரும்பிப் புகலியே
அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே, அண்ணலின்
பொருள் ஆயின கொண்டுமே,
பந்தன் இன் இயல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின,
பத்துமே.
|
11
|
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்து விளங்குவது திருவேகம்பம் என்னும் திருத்தலம் . அதனை விரும்பி வழிபடுபவர்கள் பழவினையால் வரும் துன்பங்கட்கு வருந்திச் சொரியும் துன்பக் கண்ணீரைத் தீர்த்திடும் . எல்லாம் சிவன் செயல் என்பதை நிச்சயித்து , புகலியில் அவதரித்த பூசுரனான திருஞான சம்பந்தன் , அந்தமில் பொருளாந்தன்மையை உட்கொண்டு , சிவபெருமானின் புகழையே பொருளாகக் கொண்டு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பக்தியில் மேம்பட்டு எல்லாம் கைகூடப்பெறுவர் . | |