சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.115   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஆலவாய் (மதுரை) - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=LgBOlCK1tXU   Add audio link Add Audio

ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன பாடல் உகந்தது இருக்கையே;
பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே; பாதம் ஓதலர் சேர் புர பங்கனே;
கோலம் நீறு அணி மே தகு பூதனே; கோது இலார் மனம் மேவிய பூதனே;
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை
அண்டர்கள் அத்தனே.

1
சிவபெருமான் கல்லால நிழலை விரும்பி இருப்பிடமாகக் கொண்டவர் . அவருக்கு விருப்பமான பாடல் இருக்கு வேதமாகும் . அவர் பால் போன்று இனிய மொழி பேசும் உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் . தம் திருவடிகளைப் போற்றாத அசுரர்களின் முப்புரங்களை அழித்தவர் . அழகிய திருநீற்றைப் பூசிய சிறந்த பூதகணங்களைப் படையாக உடையவர் . குற்றமற்றவர்களின் உள்ளத்தில் தங்கிய உயிர்க்கு உயிரானவர் . ஆலகால விடமுண்ட கண்டத்தையுடையவர் . தேவர்கட்கெல்லாம் தலைவரான அவர் திருவாலவாய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

பாதி ஆய் உடன் கொண்டது மாலையே; பம்பு தார் மலர்க்
கொன்றை நல்மாலையே;
கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே; கொண்ட நன்
கையில் மான் இடம் ஆகனே;
நாதன் நாள்தொறும் ஆடுவது ஆன் ஐயே; நாடி அன்று
உரிசெய்ததும் ஆனையே;
வேத நூல் பயில்கின்றது வாயிலே; விகிர்தன் ஊர் திரு ஆல நல்வாயிலே.

2
சிவபெருமான் தம் உடம்பில் பாதியாகக் கொண்டது திருமாலை . பாம்பும் , கொன்றை மலரும் அவருக்கு நன்மாலைகளாகும் . குற்றமற்ற திருநீறு பூசிய மார்பை உடையவர் . இடத் திருக்கரத்தில் மானை ஏந்தியுள்ளவர் . அவர் நாள்தோறும் அபிடேகம் கொள்வது பஞ்ச கவ்வியத்தால் . அவர் உரித்தது யானையை . வேத நூல்களை அருளுவது அவரது திருவாய் . விகிர்தரான அவர் விரும்பி வீற்றிருந்தருளுவது திரு ஆலவாய் .

காடு நீடது உறப் பல கத்தனே; காதலால் நினைவார்தம் அகத்தனே;
பாடு பேயோடு பூதம் மசிக்கவே, பல்பிணத் தசை நாடி அசிக்கவே;
நீடும் மாநடம் ஆட விருப்பனே; நின் அடித் தொழ நாளும் இருப்பனே;
ஆடல் நீள்சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே.

3
இறைவர் , பெரிய சுடுகாட்டில் எல்லாவற்றிற்கும் கர்த்தாவாயிருப்பவர் . தம்மைப் பத்தியால் நினைவார்தம் உள்ளத்தில் இருப்பவர் . பாடுகின்ற பேய் , மற்றும் பூதகணங்களுடன் குழைந்திருப்பவர் . அக்கணங்கள் பிணத்தசைகளை விரும்பியுண்ண நடனம் ஆடுபவர் . திருவடிகளைத் தொழுபவர்கட்கு நாளும் அருள்புரிபவர் . அசைகின்ற சடைமீது கங்கையைத் தாங்கியுள்ளவர் . திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தந்தை அவரே .

பண்டு அயன்தலை ஒன்றும் அறுத்தியே; பாதம் ஓதினர்
பாவம் மறுத்தியே;
துண்ட வெண்பிறை சென்னி இருத்தியே; தூய வெள் எருது ஏறி இருத்தியே;
கண்டு காமனை வேவ விழித்தியே; காதல் இல்லவர் தம்மை இழித்தியே
அண்ட நாயகனே! மிகு கண்டனே! ஆலவாயினில்
மேவிய(அ) கண்டனே!

4
முற்காலத்தில் நீர் பிரமனின் தலை ஒன்றை அறுத்தீர் . உம் திருவடிகளை வணங்கும் அன்பர்களின் பாவங்களை அறுப்பீர் . பிறைச்சந்திரனைச் சடையில் அணிந்துள்ளீர் . தூய வெண்ணிற இடபத்தின் மீது ஏறி இருப்பீர் . மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்தீர் . அன்பில்லாதவரை இகழ்வீர் . தேவர்கட்குத் தலைவரே ! குற்றங்களை நீக்குபவரே . திருஆலவாயின்கண் வீற்றிருந்தருளும் அளவிடமுடியாத பரம்பொருளே .

சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி, அன்பு
செகுத்தனன்பால் ஐயே
வென்றி சேர் மழுக்கொண்டு, முன்காலையே, வீட வெட்டிடக்
கண்டு, முன் காலையே,
நின்ற மாணியை, ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து, அனகம் கையால்,
அன்று, நின் உரு ஆகத் தடவியே! ஆலவாய், அரன்
நாகத்து அடவியே.

5
தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசைக்குரிய பாலைக் கவிழ்த்துவிட , புதல்வராகிய விசாரசருமர் சினந்து அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச அது மழுவாக மாறித் தந்தையின் முன்காலை வெட்டிற்று . ஆங்குச் சிவபூசை ஆற்றிய பிரமசாரியான அவ்விசார சருமருக்குக் கங்கை முதலானவற்றை அணிந்த திருக்கோலத்தோடு தோன்றிக் காட்சி நல்கியவர் சிவபெருமான் . அப்பெருமான் , தந்தையாகிய எச்சதத்தனை வீழ்த்திய அடியவரின் பாவத்தைப் போக்கித் தம் திருக்கையால் வருடிச் சிவசாரூபம் பெறத்தடவிச் சண்டீச பதம் தந்து அருளினர் . அப்பெருமான் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரன் ஆவார் .
Go to top

நக்கம் ஏகுவர், நாடும் ஓர் ஊருமே; நாதன் மேனியில்
மாசுணம் ஊருமே;
தக்க பூ, மனைச் சுற்ற, கருளொடே, தாரம், உய்த்தது,
பாணற்கு, அருளொடே;
மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய
தொண்டர்க்கு அணியையே;
அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே; ஆலவாய், அரனார்
உமையோடுமே.

6
சிவபெருமான் நாடுகளிலும் , ஊர்தோறும் ஆடையில்லாக் கோலத்தோடு பிச்சைக்குச் செல்வார் . அவர் திரு மேனியில் பாம்பு ஊர்ந்து கொண்டிருக்கும் . திருநீலகண்ட யாழ்ப் பாணரை அழைத்து வரும்படி அடியார்களுக்குக் கனவில் ஏவ , அவ்வாறே வந்து அப்பாணர் பாடும்போது பொற்பலகை அருளி அமரச் செய்தார் . தென்னவன் தேவியாகிய மங்கையர்க்கரசியாருக்கு மங்கலியம் முதலான மங்களகரமான அணிகளை அருளியவர் . திருத் தொண்டர்க்கு அண்மையாய் விளங்குபவர் . எலும்புமாலை அணிந்துள்ளவர் . மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டவர் . அப்பெருமான் திருஆலவாயில் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் .

வெய்யவன் பல் உகுத்தது குட்டியே; வெங்கண் மாசுணம், கையது, குட்டியே;
ஐயனே! அனல் ஆடிய மெய்யனே! அன்பினால்
நினைவார்க்கு அருள் மெய்யனே!
வையம் உய்ய அன்று உண்டது காளமே; வள்ளல் கையது
மேவு கங்காளமே;
ஐயம் ஏற்பது உரைப்பது வீண், ஐயே! ஆலவாய் அரன்
கையது வீணையே.

7
சிவபெருமான் சூரியனுடைய பல்லை உதிர்த்தது கையால் குட்டி . அவர் கையிலிருப்பது கொடிய கண்களையுடைய பாம்புக்குட்டி . அவரே தலைவர் . அனலில் ஆடும் திருமேனி யுடையவர் . அன்பால் நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அருள் வழங்கும் மெய்யர் . உலகமுய்ய அன்று அவர் உண்டது விடமே . வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும் வள்ளலான அவர் கையில் விளங்குவது எலும்புக்கூடே . அவர் பிச்சை ஏற்பதாக உலகோர் உரைப்பது வீண் ஆகும் . திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனார் கையிலுள்ளது வீணையே .

தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே, தொக்க தேவர்
செருக்கை மயக்கியே,
வாள் அரக்கன் நிலத்துக் களித்துமே, வந்து அ(ம்)மால்வரை கண்டு உகளித்துமே,
நீள்பொருப்பை எடுத்த உன்மத்தனே, நின் விரல்-தலையால் மதம் மத்தனே!
ஆளும் ஆதி முறித்தது மெய்கொலோ? ஆலவாய் அரன்
உய்த்ததும் மெய்கொலோ?

8
வாளைக் கையிலேந்திய இராவணன் தன் இருபது தோள்களின் வலிமையையும் சேர்த்துக் கொண்டு திக்குவிசயம் செய்து , தன்னை எதிர்க்க வந்த தேவர்களின் வலிமையை மயங்கச் செய்து , இப்பூவுலகில் களித்து நிற்க , தன் தேரைத் தடுத்த கயிலை மலையைக் கண்டு வெகுண்டு பாய்ந்து சென்று அதனைப் பெயர்த்து எடுத்து உன்மத்தன் ஆயினன் . அந்நிலையில் இறைவர் தம் திருப்பாத விரலை ஊன்ற , இராவணனின் தலை நெரிய , அவன் செருக்கு அழிந்தவன் ஆயினான் . உலகனைத்தும் ஆளுகின்ற முதல்வராகிய தாம் அவ்வரக்கனின் உடலை முறியச் செய்தது மெய்கொல் ? திரு ஆலவாயில் வீற்றிருந்தருளும் அரனே ! பின்னர் அவனது பாடலைக் கேட்டு அருள்செய்ததும் உண்மையான வரலாறு தானோ ?

பங்கயத்து உள நான்முகன், மாலொடே, பாதம் நீள் முடி
நேடிட, மாலொடே,
துங்க நல்-தழலின் உருஆயுமே; தூய பாடல் பயின்றது, வாயுமே;
செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு,
உரைசெய்வது பிச்சு ஐயே!
அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே; ஆலவாய், அரனாரது
இடக் கையே.

9
செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் திருமாலோடு இறைவனின் அடியையும் , முடியையும் தேட , அவர்கள் மயங்க , உயர்ந்த நல்ல அக்கினி உருவாய் நின்றான் . பின்னர்த் தங்கள் பிழைகளை மன்னித்து அருளுமாறு தூய பாடல்களைப் பாடின , அவர்கள் வாய் . சிவந்த கயல்மீன்கள் போன்ற கண்களையுடைய முனிபத்தினிகள் இறைவருக்கு இட்டது பிச்சையே . அதனை ஏற்று அவர் உரைசெய்தது அவர்கட்குப் பித்து உண்டாகும் வண்ணமே . அவர் நெருப்பேந்தியுள்ளது இடத் திருக்கரத்திலே . திருஆலவாய் சிவபெருமான் திடமாக வீற்றிருந்தருளும் இடம் ஆகும் .

தேரரோடு அமணர்க்கு நல்கானையே; தேவர் நாள்தொறும்
சேர்வது கானையே;
கோரம் அட்டது புண்டரிகத்தையே; கொண்ட, நீள் கழல் புண்டரிகத்தையே;
நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே; நீள்சடைத்
திகழ்கின்றது நாகமே;
ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே; ஆலவாய், அரனார்
இடம் என்பதே.

10
சிவபெருமான் தம்மைப் போற்றாத புத்தர்கட்கும் , சமணர்கட்கும் அருள்புரியாதவர் . தேவர்கள் நாள்தோறும் சென்று வணங்குவது அவர் எழுந்தருளியிருக்கும் கடம்பவனத்தை . அவர் வெற்றிகொண்டு வீழ்த்தியது புலியையே . திருமால் இறைவனைப் பூசித்துத் திருவடியில் சேர்த்தது தாமரை மலர் போன்ற கண்ணையே . பகைமை கொண்ட மூன்று புரங்களை அழித்தது மேருமலை வில்லே . பெருமானின் நீண்ட சடைமுடியில் விளங்குவது நாகமே . இறைவன் மாலையாக விரும்பி அணிவது எலும்பே . அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருஆலவாய் என்பதே .
Go to top

ஈன ஞானிகள் தம்மொடு விரகனே! ஏறு பல்பொருள்
முத்தமிழ் விரகனே,
ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே!
ஆன வானவர் வாயின் உளத்தனே! அன்பர் ஆனவர்
வாயினுள் அத்தனே!
நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு, இவை
நற்று அமிழ் பத்துமே.

11
தேவர்களால் துதிக்கப்படும் தலைவரே . அடியவர்களின் இனிய உள்ளத்தில் இருப்பவரே ! நல்லறிவு அற்றவர்கள்பால் பொருந்தாத கொள்கையுடையவரே . பல பொருள்களை அடக்கிய , முத்தமிழ் விரகரான சீகாழியுள் அவதரித்த ஞான சம்பந்தர் , திருஆலவாய் இறைவரிடம் உரிமையுடையவராய் அவரைப் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் ஓதவல்லவர்கட்கு எல்லா நன்மைகளும் உண்டாகும் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
2.066   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
2.070   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) )
3.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.047   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.052   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) )
3.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி   (திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
3.108   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.115   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.120   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
4.062   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
6.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000