சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.006   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கழிப்பாலை - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=3IFBeKSX1B0   Add audio link Add Audio

வன பவளவாய் திறந்து, வானவர்க்கும் தானவனே! என்கின்றாளால்;
சின பவளத்திண் தோள்மேல் சேர்ந்து இலங்கும் வெண் நீற்றன் என்கின்றாளால்;
அன பவள மேகலை யோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால்-
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள்-கொல்லோ!

1
அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து தேவர்களுக்கும் அருள் வழங்குகின்றவனே என்கின்றாள் . சிவந்த பவளம் போன்ற திண்ணிய தோள்களின்மேல் சேர்ந்து விளங்கும் வெள்ளிய திருநீறு அணிந்தவனே என்கின்றாள் . அன்னம் போன்ற நடையினளாய்ப் பவளத்தாலாகிய மேகலையை அணிந்த பார்வதியோடு சுத்தாவத்தைகளுள் துரியத்துக்கு அப்பாற்பட்ட துரியாதீதத்தில் உள்ளவன் என்கின்றாள் . பெரிய பவளங்களைக் கடல் கரையில் சேர்க்கும் திருக்கழிப்பாலையில் உள்ள எம்பெருமானை என்மகள் தரிசித்தாளோ ?

வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே! என்கின்றாளால்;
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால்;
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப் பட்டு உடையன் என்கின்றாளால்-
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

2
வண்டுகள் உலவும் கொன்றைப் பூக்கள் தங்கிய செந்நிறச் சடையனே ! இதழ் விரிந்து நறுமணம் கமழும் புதிய வெள்ளெருக்க மலரும் அச்சடையில் உள்ளது . பக்கத்தில் காட்சி வழங்கும் மேலாடையாகப் பட்டினை அவன் அணிந்திருத்தலும் உண்டு என்று கூறுகின்ற என் பெண் கழிமுள்ளி கடற்கரையருகே வளருகின்ற கழிப்பாலைப் பெருமானைக் கண்டாளோ ?

பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடிமேலது என்கின்றாளால்;
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால்;-
மறம் கிளர் வேல் கண்ணாள்,- மணி சேர் மிடற்றவனே! என்கின்றாளால்-
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

3
இளையபிறைச்சந்திரன் எம்பெருமான் முடிமேல் உள்ளது . அவன் திருமேனியின் நிறம் ஒளிவீசும் குங்குமத்தின் நிறமே . வீரத்தை வெளிப்படுத்தும் வேல் போன்ற கண்களையுடைய பார்வதிதேவியின் கண்மணிபோன்ற நீலகண்டன் என்று கூறுகின்ற என் பெண் ஒலிக்கின்ற கடல் வெள்ளம் மிகுகின்ற கழிப்பாலையை உகந்தருளியிருக்கும் பெருமானைத் தரிசித்தாளோ ?

இரும்பு ஆர்ந்த சூலத்தன், ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால்-
சுரும்பு ஆர்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண் நீற்றவனே! என்கின்றாளால்;
பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞகவேடத்தன் என்கின்றாளால்-
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

4
இரும்பினாலாய சூலமும் மழுப்படையும் ஏந்தியவன் , வண்டுகள் பொருந்திய கொன்றை மலரைச் சூடித் திருநீற்றை அணிந்தவன் . பெரிய இடப்பகுதியைப் பார்வதி பாகமாகக் கொண்டு அப்பகுதியில் விளங்கும் தலைக்கோலத்தை உடையவன் என்று கூறுகின்ற என்பெண் கருங்குவளை மலர்கள் பூக்கும் கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?

பழி இலான், புகழ் உடையன், பால் நீற்றன், ஆன் ஏற்றன் என்கின்றாளால்;
விழி உலாம் பெருந் தடங்கண் இரண்டு அல்ல, மூன்று உளவே! என்கின்றாளால்;
சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே! என்கின்றாளால்-
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

5
எம்பெருமான் பழியில்லாதவன் , புகழுடையவன் , பால்போன்ற நீறு அணிந்தவன் , காளை வாகனத்தை உடையவன் , அவனுக்கு விழிகளாக அமைந்தவை இரண்டல்ல , மூன்று . அவன் நீர்ச் சுழிகளோடு பரவும் கங்கை வந்து தங்கிய சடைமுடியை உடையவன் என்று கூறுகின்ற என்பெண் , எங்கும் பரவி ஓடுகின்ற உப்பங்கழிகளால் சூழப்பட்ட திருக்கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?
Go to top

பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே! என்கின்றாளால்;
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே! என்கின்றாளால்;
பண் ஆர் முழவு அதிர, பாடலொடு ஆடலனே! என்கின்றாளால்-
கண் ஆர் பூஞ்சோலைக் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

6
பண்கள் நிறைந்து ஒலித்தற்கு இடமான கருவியாகிய வீணையை ஒலியெழுப்பும் விரல்களை உடையவனே ! பகைவருடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய எம் தந்தையாகிய பெருமானே ! பண்களுக்கு ஏற்ப முழவு என்ற தோற்கருவி ஒலிக்கப் பாடிக் கொண்டு கூத்து நிகழ்த்துபவனே ! என்று கூறுகின்ற என் பெண் கண்ணுக்கு நிறைவைத் தரும் பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய திருக்கழிப்பாலை இறைவனைத் தரிசித்தாளோ ?

முதிரும் சடை முடி மேல் மூழ்கும், இள நாகம் என்கின்றாளால்;
அது கண்டு, அதன் அருகே தோன்றும், இளமதியம் என்கின்றாளால்;
சதுர் வெண் பளிக்குக் குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால்-
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

7
நன்கு செறிந்து நிறைந்த சடைமுடிமேல் இளநாகம் மறைந்து கிடக்கிறது . அதனைக் கண்டு அஃது ஊறுதாராது என்ற கருத்தோடு அதன் அருகிலே பிறை காட்சி வழங்குகின்றது . வேலைப்பாடு அமைந்த வெண்ணிறத்ததாகிய பளிங்கினாலாகிய காதணி காதில் இருந்து கொண்டு ஒளி வீசுகின்றது என்று கூறுகின்ற என்பெண் ஒளி வீசுகின்ற முத்துக்களைக் கடல் அலை கரைக்கண் செலுத்தும் திருக்கழிப்பாலைப் பெருமானைத் தரிசித்தாளோ ?

ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்;
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே! என்கின்றாளால்;
பார் ஓத மேனிப் பவளம் அவன் நிறமே என்கின்றாளால்
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

8
ஓர்ந்து கொள்ளத்தக்க வேதங்களை ஓதிக்கொண்டு உலகம் முழுதும் பிச்சை ஏற்றுத் திரிகின்றவனே ! கங்கை நீர்வெள்ளம் உயர அதற்கேற்ப உயர்ந்து தோன்றும் செந்நிறச் சடையவனே உலகைச் சூழ்ந்த கடலில் உள்ள செந்நிறப் பவளம் எம்பெருமானுடைய திருமேனியின் நிறமே என்று கூறுகின்ற என்பெண் , கரிய கடல்வெள்ளம் மிகும் திருக்கழிப்பாலையின் பெருமானைத் தரிசித்தாளோ ?

வான் உலாம் திங்கள் வளர்புன் சடையானே! என்கின்றாளால்;
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர் ஊர் பலி திரிவான் என்கின்றாளால்;
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்-
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

9
வானத்தில் உலவ வேண்டிய பிறைதங்கிய செஞ் சடையனே ! புலால் நாற்றம் கமழும் வெண்ணிற மண்டையோட்டைக் கையில் கொண்டு ஊர்ஊராகப் பிச்சைக்குத் திரிகின்றவனே ! தேன் என்ற வண்டினங்கள் சுற்றும் கொன்றைப் பூக்கள் சிறந்து விளங்கும் திருமார்பினனே ! என்று எம்பெருமானைப் பற்றிக்கூறும் என்மகள் , எங்கும் பரவுகின்ற நறுமணம் சூழ்ந்த திருக்கழிப்பாலையிலுள்ள பெருமானைத் தரிசித்தாளோ ?

அடர்ப்பு அரிய இராவணனை அரு வரைக் கீழ் அடர்த்தவனே! என்கின்றாளால்;
சுடர்ப் பெரிய திருமேனிச் சுண்ணவெண் நீற்றவனே! என்கின்றாளால்;
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு, அன்று, உரைத்தான் என்கின்றாளால்-
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

10
துன்புறுத்தி வெல்லுவதற்கரிய இராவணனைக் கயிலைமலையின்கீழ் வருத்தியவனே ! ஒளிவீசும் பெருமையை உடைய திருமேனியில் நீறு பூசியவனே ! பெரிய இலைகளை உடைய கல்லால மரத்தின் கீழிருந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு ஒரு காலத்தில் அறத்தை உபதேசித்தவனே என்று கூறுகின்ற என்பெண் கடலின் தொகுதிகளாகிய உப்பங்கழிகள் சூழ்ந்த திருக்கழிப் பாலையின் பெருமானைத் தரிசித்தாளோ ?
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கழிப்பாலை
2.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்
Tune - இந்தளம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
3.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று
Tune - கௌசிகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்
Tune - காந்தாரம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை
Tune - திருநேரிசை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.106   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெய்தல் குருகு தன் பிள்ளை
Tune - திருவிருத்தம்   (திருக்கழிப்பாலை அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
5.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
6.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்
Tune - திருத்தாண்டகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
7.023   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
Tune - நட்டராகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் பொற்பதவேதநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000