சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்
பண் - இந்தளம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=GnIaawrtBF4
3.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று
பண் - கௌசிகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=JAw1peLxdJo
4.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்
பண் - காந்தாரம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=3IFBeKSX1B0
4.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை
பண் - திருநேரிசை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=akD7R8jYKyg
4.106   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெய்தல் குருகு தன் பிள்ளை
பண் - திருவிருத்தம்   (திருக்கழிப்பாலை அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pMp7aCaeAm8
5.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
பண் - திருக்குறுந்தொகை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=87fBc0v92JQ
6.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்
பண் - திருத்தாண்டகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=yyZzVNrCw50
7.023   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
பண் - நட்டராகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் பொற்பதவேதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nBSva8qM1vg

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.021   புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருக்கழிப்பாலை ; (திருத்தலம் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி )
புனல் ஆடிய புன்சடையாய்! அரணம்
அனல் ஆக விழித்தவனே! அழகு ஆர்
கனல் ஆடலினாய்! கழிப்பாலை உளாய்!
உன வார் கழல் கைதொழுது உள்குதுமே.

[1]
துணைஆக ஒர் தூ வள மாதினையும்
இணைஆக உகந்தவனே! இறைவா!
கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய்!
இணை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.

[2]
நெடியாய்! குறியாய்! நிமிர்புன்சடையின்
முடியாய்! சுடுவெண்பொடி முற்று அணிவாய்!
கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்!
அடியார்க்கு அடையா, அவலம் அவையே.

[3]
எளியாய்! அரியாய்! நிலம், நீரொடு, தீ,
வளி, காயம், என வெளி மன்னிய தூ
ஒளியாய்! உனையே தொழுது உன்னுமவர்க்கு
அளியாய்! கழிப்பாலை அமர்ந்தவனே!

[4]
நடம் நண்ணி, ஒர் நாகம் அசைத்தவனே!
விடம் நண்ணிய தூ மிடறா! விகிர்தா!
கடல் நண்ணு கழிப்பதி காவலனே!
உடல் நண்ணி வணங்குவன், உன் அடியே.

[5]
பிறை ஆர் சடையாய்! பெரியாய்! பெரிய(ம்)
மறை ஆர்தரு வாய்மையினாய்! உலகில்
கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்!
இறை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.

[6]
முதிரும் சடையின்முடிமேல் விளங்கும்
கதிர் வெண்பிறையாய்! கழிப்பாலை உளாய்!
எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு
அதிரும் வினைஆயின ஆசு அறுமே.

[7]
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே!
விரி ஆர்தரு வீழ்சடையாய்! இரவில்
கரி காடலினாய்! கழிப்பாலை உளாய்!
உரிதுஆகி வணங்குவன், உன் அடியே.

[8]
நல நாரணன், நான்முகன், நண்ணல் உற,
கனல் ஆனவனே! கழிப்பாலை உளாய்!
உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு
இலதுஆம், வினைதான்; எயில் எயதவனே!

[9]
தவர் கொண்ட தொழில் சமண்வேடரொடும்,
துவர் கொண்டன நுண்துகில் ஆடையரும்,
அவர் கொண்டன விட்டு, அடிகள் உறையும்
உவர் கொண்ட கழிப்பதி உள்குதுமே.

[10]
கழி ஆர் பதி காவலனைப் புகலிப்
பழியா மறை ஞானசம்பந்தன சொல்
வழிபாடு இவை கொண்டு, அடி வாழ்த்த வல்லார்,
கெழியார், இமையோரொடு; கேடு இலரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.044   வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று  
பண் - கௌசிகம்   (திருத்தலம் திருக்கழிப்பாலை ; (திருத்தலம் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி )
வெந்த குங்கிலியப்புகை விம்மவே
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
அந்தமும்(ம்) அளவும்(ம்) அறியாதது ஓர்
சந்தமால், அவர் மேவிய சந்தமே.

[1]
வான் இலங்க விளங்கும் இளம்பிறை-
தான் அலங்கல் உகந்த தலைவனார்
கான் இலங்க வரும் கழிப்பாலையார்
மான் நலம் மடநோக்கு உடையாளொடே.

[2]
கொடி கொள் ஏற்றினர்; கூற்றை உதைத்தனர்
பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்;
கடி கொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே?

[3]
பண் நலம் பட வண்டு அறை கொன்றையின்
தண் அலங்கல் உகந்த தலைவனார்
கண் நலம் கவரும் கழிப்பாலையுள
அண்ணல்; எம் கடவுள்(ள்) அவன் அல்லனே?

[4]
ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும்,
காரின் ஆர் பொழில் சூழ், கழிப்பாலை எம்
சீரினார் கழலே சிந்தை செய்(ம்)மினே!

[5]
துள்ளும் மான்மறி அம் கையில் ஏந்தி, ஊர்
கொள்வனார், இடு வெண்தலையில் பலி;
கள்வனார்; உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினை ஆயின ஓயுமே.

[6]
மண்ணின் ஆர் மலி செல்வமும், வானமும்,
எண்ணி, நீர் இனிது ஏத்துமின்-பாகமும்
பெண்ணினார், பிறை நெற்றியொடு உற்ற முக்
கண்ணினார், உறையும் கழிப்பாலையே!

[7]
இலங்கை மன்னனை ஈர்-ஐந்து இரட்டிதோள
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
கலங்கள் வந்து உலவும், கழிப்பாலையை
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

[8]
ஆட்சியால் அலரானொடு மாலும் ஆய்த்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்;
காட்சியால் அறியான் கழிப்பாலையை
மாட்சியால்-தொழுவார் வினை மாயுமே.

[9]
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலாக்
கையர் கேண்மை எனோ? கழிப்பாலை எம்
ஐயன் சேவடியே அடைந்து உய்(ம்)மினே!

[10]
அம் தண் காழி அருமறை ஞானசம்-
பந்தன், பாய் புனல் சூழ் கழிப்பாலையைச்
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வான் உலகு ஆடல் முறைமையே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.006   வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருக்கழிப்பாலை ; (திருத்தலம் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி )
வன பவளவாய் திறந்து, வானவர்க்கும் தானவனே! என்கின்றாளால்;
சின பவளத்திண் தோள்மேல் சேர்ந்து இலங்கும் வெண் நீற்றன் என்கின்றாளால்;
அன பவள மேகலை யோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால்-
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள்-கொல்லோ!

[1]
வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே! என்கின்றாளால்;
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால்;
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப் பட்டு உடையன் என்கின்றாளால்-
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

[2]
பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடிமேலது என்கின்றாளால்;
நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால்;-
மறம் கிளர் வேல் கண்ணாள்,- மணி சேர் மிடற்றவனே! என்கின்றாளால்-
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

[3]
இரும்பு ஆர்ந்த சூலத்தன், ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால்-
சுரும்பு ஆர்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண் நீற்றவனே! என்கின்றாளால்;
பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞகவேடத்தன் என்கின்றாளால்-
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

[4]
பழி இலான், புகழ் உடையன், பால் நீற்றன், ஆன் ஏற்றன் என்கின்றாளால்;
விழி உலாம் பெருந் தடங்கண் இரண்டு அல்ல, மூன்று உளவே! என்கின்றாளால்;
சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே! என்கின்றாளால்-
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

[5]
பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே! என்கின்றாளால்;
எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே! என்கின்றாளால்;
பண் ஆர் முழவு அதிர, பாடலொடு ஆடலனே! என்கின்றாளால்-
கண் ஆர் பூஞ்சோலைக் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

[6]
முதிரும் சடை முடி மேல் மூழ்கும், இள நாகம் என்கின்றாளால்;
அது கண்டு, அதன் அருகே தோன்றும், இளமதியம் என்கின்றாளால்;
சதுர் வெண் பளிக்குக் குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால்-
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

[7]
ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்;
நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே! என்கின்றாளால்;
பார் ஓத மேனிப் பவளம் அவன் நிறமே என்கின்றாளால்
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

[8]
வான் உலாம் திங்கள் வளர்புன் சடையானே! என்கின்றாளால்;
ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர் ஊர் பலி திரிவான் என்கின்றாளால்;
தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்-
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

[9]
அடர்ப்பு அரிய இராவணனை அரு வரைக் கீழ் அடர்த்தவனே! என்கின்றாளால்;
சுடர்ப் பெரிய திருமேனிச் சுண்ணவெண் நீற்றவனே! என்கின்றாளால்;
மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு, அன்று, உரைத்தான் என்கின்றாளால்-
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.030   நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருக்கழிப்பாலை ; (திருத்தலம் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி )
நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார்; ஆனையின் உரிவை வைத்தார்
தம் கையின் யாழும் வைத்தார்; தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[1]
விண்ணினை விரும்ப வைத்தார்; வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார்; பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[2]
வாமனை வணங்க வைத்தார்; வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடை மேல் வைத்தார்; சோதியுள் சோதி வைத்தார்
ஆ மன் நெய் ஆட வைத்தார்; அன்பு எனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[3]
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழலுண்ண வைத்தார்
பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார்
கரியது ஓர் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[4]
கூர் இருள் கிழிய நின்ற கொடு மழுக் கையில் வைத்தார்
பேர் இருள் கழிய மல்கு பிறை, புனல், சடையுள் வைத்தார்
ஆர் இருள் அண்டம் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார்
கார் இருள் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[5]
உள்-தங்கு சிந்தை வைத்தார்; உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்
விண்-தங்கு வேள்வி வைத்தார்; வெந்துயர் தீரவைத்தார்
நள்- தங்கு நடமும் வைத்தார்; ஞானமும் நாவில் வைத்தார்
கட்டங்கம் தோள் மேல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[6]
ஊனப் பேர் ஒழிய வைத்தார்; ஓதியே உணர வைத்தார்
ஞானப் பேர் நவில வைத்தார்; ஞானமும் நடுவும் வைத்தார்
வானப்பேர் ஆறும் வைத்தார்; வைகுந்தற்கு ஆழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[7]
கொங்கினும் அரும்பு வைத்தார்; கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார்; சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார்; ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[8]
சதுர் முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு(வ்)
எதிர் முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார்
பிதிர் முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிர வைத்தார்
கதிர் முகம் சடையில் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[9]
மாலினாள் நங்கை அஞ்ச, மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும், வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு, நொடிப்பது ஓர் அளவில் வீழ,
காலினால் ஊன்றியிட்டார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.106   நெய்தல் குருகு தன் பிள்ளை  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருக்கழிப்பாலை ; (திருத்தலம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி )
நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்று,
கைதைமடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்!
பைதல் பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம்;
எய்தப் பெறின் இரங்காதுகண்டாய்-நம் இறையவனே!

[1]
பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை
பொரு மால் கரைமேல்-திரை கொணர்ந்து ஏற்றப் பொலிந்து இலங்கும்
கரு மா மிடறு உடைக் கண்டன், எம்மான் கழிப்பாலை எந்தை,
பெருமான் அவன்,என்னை ஆள் உடையான், இப் பெரு நிலத்தே.

[2]
நாள்பட்டு இருந்து இன்பம் எய்தல் உற்று, இங்கு நமன்தமரால்
கோட்பட்டு ஒழிவதன் முந்து உறவே, குளிர் ஆர் தடத்துத்
தாள் பட்ட தாமரைப் பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு
ஆட் பட்டொழிந்தம் அன்றே, வல்லம் ஆய் இவ் அகலிடத்தே!

[3]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.040   வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருக்கழிப்பாலை ; (திருத்தலம் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி )
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்;
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
அண்ணலே அறிவான், இவள் தன்மையே!

[1]
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து
இருந்தவன், கழிப்பாலையுள் எம்பிரான்,
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து, இவள்,
பரிந்து உரைக்கிலும், என் சொல் பழிக்குமே.

[2]
மழலைதான் வரச் சொல்-தெரிகின்றிலள்;
குழலின் நேர் மொழி கூறிய கேண்மினோ:
அழகனே! கழிப்பாலை எம் அண்ணலே!
இகழ்வதோ, எனை? ஏன்றுகொள்! என்னுமே.

[3]
செய்ய மேனி வெண் நீறு அணிவான் தனை
மையல் ஆகி, மதிக்கிலள், ஆரையும்;
கை கொள் வெண் மழுவன், கழிப்பாலை எம்
ஐயனே அறிவான், இவள் தன்மையே.

[4]
கருத்தனை, கழிப்பாலையுள் மேவிய
ஒருத்தனை, உமையாள் ஒருபங்கனை,
அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே.

[5]
கங்கையைச் சடை வைத்து மலைமகள்-
நங்கையை உடனே வைத்த நாதனார்,
திங்கள் சூடி, திருக்கழிப்பாலையான்,
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே.

[6]
ஐயனே! அழகே! அனல் ஏந்திய
கையனே! கறை சேர்தரு கண்டனே!
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
ஐயனே, விதியே, அருள்! என்னுமே.

[7]
பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை,
முத்தனை, முடிவு ஒன்று இலா மூர்த்தியை,
அத்தனை, அணி ஆர் கழிப்பாலை எம்
சித்தனை, சென்று சேருமா செப்புமே!

[8]
பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை-
அஞ்சும் நான்கும் ஒன்று(ம்) இறுத்தான் அவன்
என் செயான்? கழிப்பாலையுள் எம்பிரான்
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே.

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.012   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருக்கழிப்பாலை ; (திருத்தலம் அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி )
ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்), ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து,
தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம் பல படைத்தார், தா(ம்)மரையினார்,
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும்
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[1]
முறை ஆர்ந்த மும்மதிலும் பொடியாச் செற்று,
முன்னும் ஆய், பின்னும் ஆய், முக்கண் எந்தை;
பிறை ஆர்ந்த சடைமுடிமேல் பாம்பு, கங்கை,
பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார்; பெரிய நஞ்சுக்
கறை ஆர்ந்த மிடற்று அடங்கக் கண்ட எந்தை- கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்;
மறை ஆர்ந்த வாய்மொழியால், மாய, யாக்கை,
வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[2]
நெளிவு உண்டாக் கருதாதே, நிமலன் தன்னை நினைமின்கள், நித்தலும்! நேரிழையாள் ஆய
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள் தன்னை ஒருபாகத்து அமர்ந்து, அடியார் உள்கி ஏத்த,
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்;
வளி உண்டு ஆர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.

[3]
பொடி நாறு மேனியர்; பூதிப் பையர்; புலித்தோலர்; பொங்கு அரவர்; பூணநூலர்;
அடி நாறு கமலத்தர்; ஆரூர் ஆதி; ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார் தாம்-
கடி நாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
மடி நாறு மேனி இம் மாயம் நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[4]
விண் ஆனாய்! விண்ணவர்கள் விரும்பி வந்து,   வேதத்தாய்! கீதத்தாய்! விரவி எங்கும்
எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! கடல் ஏழ்
ஆனாய்! இறை ஆனாய் எம் இறையே! என்று நிற்கும்
கண் ஆனாய்! கார் ஆனாய்! பாரும் ஆனாய்! கழிப்பாலையுள் உறையும் கபால (அ)ப்பனார்,
மண் ஆன மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[5]
விண்ணப்ப விச்சாதரர்கள் ஏத்த, விரி கதிரோன்,   எரி சுடரான், விண்ணும் ஆகி,
பண் அப்பன்; பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி; பாசுபதன்; தேசமூர்த்தி;
கண்ணப்பன் கண் அப்பக் கண்டு உகந்தார்- கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
வண்ணப் பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[6]
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப் பேதப்படுகின்ற பேதை மீர்காள்!
நிணம் புல்கு சூலத்தர்; நீலகண்டர்; எண் தோளர்;   எண் நிறைந்த குணத்தினாலே
கணம் புல்லன் கருத்து உகந்தார்; காஞ்சி உள்ளார்-கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
மணம் புல்கு மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[7]
இயல்பு ஆய ஈசனை, எந்தைதந்தை, என் சிந்தை மேவி உறைகின்றானை,
முயல்வானை, மூர்த்தியை, தீர்த்தம் ஆன தியம்பகன், திரிசூலத்து அனல் நகையன்
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலிக் கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
மயல் ஆய மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[8]
செற்றது ஓர் மனம் ஒழிந்து, சிந்தைசெய்து, சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால்
உற்றது ஓர் நோய் களைந்து இவ் உலகம்
எல்லாம் காட்டுவான்; உத்தமன் தான்; ஓதாது எல்லாம்
கற்றது ஓர் நூலினன்; களிறு செற்றான்கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
மற்று இது ஓர் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[9]
பொருது அலங்கல் நீள் முடியான்போர் அரக்கன் புட்பகம் தான் பொருப்பின் மீது ஓடாது ஆக,
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும்,
ஏந்திழையாள் தான் வெருவ, இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடி ஆறு-அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்,
வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.023   செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருக்கழிப்பாலை ; (திருத்தலம் அருள்தரு பொற்பதவேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி )
செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
அடியான்; ஆவா! எனாது ஒழிதல் தகவு ஆமே?
முடிமேல் மா மதியும் அரவும் உடன் துயிலும்
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே .

[1]
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்,
அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி,
இங்கே என் வினையை அறுத்திட்டு, எனை ஆளும்
கங்கா நாயகனே! கழிப்பாலை மேயானே! .

[2]
ஒறுத்தாய், நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய், எத்தனையும் நாயேனைப் பொருள் படுத்துச்
செறுத்தாய்; வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே!.

[3]
சுரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி, தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்;
விரும்பேன், உன்னை அல்லால், ஒரு தெய்வம் என் மனத்தால்;
கரும்பு ஆரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .

[4]
ஒழிப்பாய், என் வினையை; உகப்பாய்; முனிந்து அருளித்
தெழிப்பாய்; மோதுவிப்பாய்; விலை ஆவணம் உடையாய்
கழிப்பால் கண்டல் தங்கச் சுழி ஏந்து மா மறுகின்
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே! .

[5]
ஆர்த்தாய், ஆடுஅரவை அரை ஆர் புலி அதள்மேல்;
போர்த்தாய், ஆனையின் தோல் உரிவை புலால் நாற;
காத்தாய், தொண்டு செய்வார் வினைகள் அவை போக,
பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே .

[6]
பருத் தாள் வன் பகட்டைப் படம் ஆக முன் பற்றி, அதள்-
உரித்தாய், ஆனையின் தோல்; உலகம் தொழும் உத்தமனே!
எரித்தாய், முப்புரமும்; இமையோர்கள் இடர் கடியும்
கருத்தா! தண்கழனிக் கழிப்பாலை மேயானே! .

[7]
படைத்தாய், ஞாலம் எலாம்; படர்புன்சடை எம் பரமா!
உடைத்தாய், வேள்விதனை; உமையாளை ஓர்கூறு உடையாய்;
அடர்த்தாய், வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய;
கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .

[8]
பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்,
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான்,
மை ஆர் கண்ணியொடு மகிழ்வான், கழிப்பாலை அதே .

[9]
பழி சேர் இல் புகழான், பரமன், பரமேட்டி,
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை,
தொழுவான் நாவலர்கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே .

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list