கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை; கரவார்பால்
விரவாடும் பெருமானை; விடை ஏறும் வித்தகனை;
அரவு ஆட, சடை தாழ, அங்கையினில் அனல் ஏந்தி,
இரவு ஆடும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!
|
1
|
பெருமானை மறைத்தலும் மறத்தலும் செய்து உலகப் பொருள்களில் திளைக்கும் வலிய நெஞ்சினை உடையவர்கள் உணர்தற்கு அரியவனாய் , வஞ்சனையில்லாத அடியவர் உள்ளத்தில் கலந்து கூத்து நிகழ்த்தும் பெருமானாய் , காளையை இவரும் திறனுடையவனாய் , பாம்புகள் படமெடுத்து ஆடவும் சடை தொங்கவும் , உள்ளங்கையில் தீயினை ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் . | |
தேன் நோக்கும் கிளிமழலை உமை கேள்வன், செழும் பவளம்
தான் நோக்கும் திருமேனி தழல் உரு ஆம் சங்கரனை;
வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை; வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!
|
2
|
தேனை ஒத்து இனிமையதாய்க் கிளி மழலை போன்ற மழலையை உடைய உமாதேவியின் கணவனாய் , செழும் பவளம் போன்ற செந்நிறமேனியனாய்த் தழல் உருவனாய் , எல்லோருக்கும் நன்மை செய்பவனாய் , சிவந்த வானத்தை ஒத்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய்த் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாகிய பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக்கொண்டேன் . | |
கைப் போது மலர் தூவி, காதலித்து, வானோர்கள்
முப்போதும் முடி சாய்த்து, தொழ நின்ற முதல்வனை;
அப்போடு மலர் தூவி, ஐம்புலனும் அகத்து அடக்கி,
எப்போதும் இனியானை:-என் மனத்தே வைத்தேனே!
|
3
|
கைகளால் , அலரும் பருவத்து மொட்டுக்களையும் பூக்களையும் அர்ப்பணித்து விருப்போடு தேவர்கள் காலை நண்பகல் மாலை என்ற மூன்று வேளைகளிலும் தலையால் வணங்கித் தொழுமாறு நிலைபெற்ற முழுமுதற் கடவுளாய் எனக்கு எப்பொழுதும் இனியனாக உள்ள பெருமானை ஐம்புலன்களையும் உள்ளத்தால் அடக்கி , அபிடேக நீரையும் மலர்களையும் அர்ப்பணித்து என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் . | |
அண்டம் ஆய், ஆதி ஆய், அருமறையோடு ஐம்பூதப்
பிண்டம் ஆய், உலகுக்கு ஒர் பெய் பொருள் ஆம் பிஞ்ஞகனை;
தொண்டர் தாம் மலர் தூவிச் சொல் மாலை புனைகின்ற
இண்டை சேர் சடையானை;-என் மனத்தே வைத்தேனே!
|
4
|
உலகங்களாய் , உலகங்களுக்குக் காரணனாய் அரிய வேதங்களாய் , ஐம்பெரும் பூதங்களின் பிண்டமாகவும் உலகத்தார்க்குக் கருத்துப் பொருளாகவும் உள்ளவனும் , தலைக் கோலத்தை உடையவனாய் , அடியவர்கள் மலர்களை அர்ப்பணித்துச் சொல்லால் ஆகிய பாமாலை புனைந்து அணிவிக்கின்ற , தலைமாலை அணிந்த சடையை உடைய பெருமானுமாயவனை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் . | |
ஆறு ஏறு சடையானை, ஆயிரம் பேர் அம்மானை,
பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை,
நீறு ஏறு திருமேனி நின்மலனை, நெடுந் தூவி
ஏறு ஏறும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே!
|
5
|
கங்கை தங்கிய சடையினனாய் , ஆயிரம் திருநாமங்களை உடைய தலைவனாய் , பருந்துகள் படிகின்ற இறந்து பட்ட மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் மேம்பட்ட இறைவனாய் , திருநீறு அணிந்த திருமேனியை உடைய தூயோனாய் நீண்ட வாலினை உடைய காளையை இவரும் பெருமானை என்மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் . | |
| Go to top |
தேசனை; தேசங்கள் தொழ நின்ற திருமாலால்
பூசனை; சனைகள் உகப்பானை; பூவின் கண்
வாசனை; மலை, நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆம்
ஈசனை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!
|
6
|
ஒளிவடிவினனாய் , உலகங்கள் வழிபடுமாறு உள்ள திருமாலால் வழிபடப்படுபவனாய் , அடியார்கள் செய்யும் வழிபாட்டை உகப்பவனாய் , பூவின்கண் நறுமணம் போல எங்கும் பரந்திருப்பவனாய் , மலைகளாகவும் ஐம் பூதங்களாகவும் விளங்குகின்றவனாய் , எல்லோரையும் அடக்கி ஆள்பவனாய் , எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் . | |
நல்லானை, நல் ஆன நால்மறையோடு ஆறு அங்கம்
வல்லானை, வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை,
சொல்லானை, சொல் ஆர்ந்த பொருளானை, துகள் ஏதும்
இல்லானை, எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!
|
7
|
பெரியவனாய் , மேம்பட்ட நான்மறைகளும் ஆறு அங்கங்களும் வல்லவனாய் , தன்னை உள்ளவாறு உணரவல்லார்களுடைய உள்ளத்தில் தங்கும் வலியவனாய் , வேத வடிவினனாய் , வேதத்தில் நிறைந்திருக்கும் பரம்பொருளாய் , இயல்பாகவே களங்கம் ஏதும் இல்லாதவனாய் , எங்கள் தலைவனாய் உள்ள பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் . | |
விரித்தானை, நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானை, பதம் சந்தி; பொருள் உரு ஆம் புண்ணியனை;
தரித்தானை, கங்கை நீர், தாழ் சடை மேல்; மதில் மூன்றும்
எரித்தானை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே!
|
8
|
சனகர் முதலிய நால்வருக்கு வேதப் பொருள்களை வெவ்வேறு விதங்களில் விரித்து உரைத்தவனாய் , வேதங்களால் பரம் பொருளாக விரும்பப்பட்டவனாய் , சொற்களும் , சந்தியால் ஆகிய தொடர்களும் அவற்றின் பொருளுமாக உள்ள நல்வினை வடிவினனாய் , தாழ்ந்த சடைமுடி மீது கங்கை நீரை ஏற்றவனாய் , மும்மதில்களையும் எரித்தவனாய் உள்ள எம் பெருமானை என் மனத்தே வைத்தேனே . | |
ஆகம் பத்து அரவு அணையான், அயன், அறிதற்கு அரியானை;
பாகம் பெண் ஆண் பாகம் ஆய் நின்ற பசு பதியை;
மா கம்பம் மறை ஓதும் இறையானை; மதில் கச்சி
ஏகம்பம் மேயானை;-என் மனத்தே வைத்தேனே!
|
9
|
பத்து அவதாரங்கள் எடுத்த , பாம்புப் படுக்கை உடைய திருமாலால் அறிய இயலாதவனாய் , ஒருபாகம் பெண்பாகமாகவும் மறுபாகம் ஆண்பாகமாகவும் , நிலைபெற்ற ஆன்மாக்கள் தலைவனாய் , பெரிய தூண்போல அசைக்கமுடியாத , ( என்றும் நிலைபெற்ற ) வேதங்களை ஓதும் தலைவனாய் , மதில்களை உடைய காஞ்சி நகரில் ஒற்றை மாமர நிழலில் உறையும் பெருமானை என் மனத்து வைத்தேனே . | |
அடுத்த ஆனை உரித்தானை; அருச்சுனற்குப் பாசுபதம்
கொடுத்தானை; குலவரையே சிலை ஆகக் கூர் அம்பு
தொடுத்தானை, புரம் எரிய; சுனை மல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை;-என் மனத்தே வைத்தேனே!
|
10
|
தன்னை எதிர்க்க நெருங்கி வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவனும் , அருச்சுனனுக்குப் பாசுபதப் படை நல்கியவனும் , மேருமலையையே வில்லாகக் கொண்டு கூரிய அம்பினை மும்மதில்களும் எரியுமாறு செலுத்தியவனாய் , சுனைகள் நிறைந்த கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனை நசுக்கி செயற்பட முடியாதவாறு தடுத்தவனுமான பெருமானை என் மனத்தே வைத்தேனே . | |
| Go to top |