பற்று அற்றார் சேர்| பழம் பதியை,| பாசூர் நிலாய| பவளத்தை,
சிற்றம்பலத்து எம் |திகழ்கனியை,| தீண்டற்கு அரிய |திரு உருவை,
வெற்றியூரில்| விரிசுடரை,| விமலர்கோனை, |திரை சூழ்ந்த
ஒற்றியூர் எம் | உத்தமனை,| உள்ளத்துள்ளே | வைத்தேனே.
|
1
|
உலகப் பற்றற்றவர்கள் சேரும் பழைய திருத்தலங்களில் திகழ்பவன் , பாசூரில் உறையும் பவளம் , சிற்றம்பலத்தில் உள்ள கனி , தீண்டுதலுக்கு அரிய திருஉருவம் , வெற்றியூரில் விரிந்த ஒளி , தூயவர்கள் தலைவன் , கடல் ஒருபுறம் சூழ்ந்த ஒற்றியூர் உத்தமன் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தில் நிலையாக இருத்தினேன் . | |
ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானை,
கானப் பேரூர்க் கட்டியை, கானூர் முளைத்த கரும்பினை,
வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை,
மானக் கயிலை மழகளிற்றை, மதியை, சுடரை, மறவேனே.
|
2
|
ஆனைக்காவில் உள்ள தெய்வம் , ஆரூரில் உறையும் தலைவன் , கானப் பேரூரில் உள்ள கரும்பின் கட்டி , கானூரில் முளைத்த கரும்பு , வானத்தினின்றும் நீங்காதவராகிய தேவர் வந்து வழிபடும் திருவாய்மூரில் உறையும் வலம்புரிச் சங்குபோல்வான் . பெருமைமிக்க கயிலைமலையில் உறையும் இளைய களிறு , சந்திரனும் , சூரியனும் ஆகியவன் என்னும் பெருமானை அடியேன் மறக்க மாட்டேன் . | |
மதி அம் கண்ணி நாயிற்றை, மயக்கம் தீர்க்கும் மருந்தினை,
அதிகைமூதூர் அரசினை, ஐயாறு அமர்ந்த ஐயனை,
விதியை, புகழை, வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை,
நெதியை, ஞானக் கொழுந்தினை, நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே.
|
3
|
பிறையைக் குறுங்கண்ணியாக உடைய சூரியன் , உலகமயக்கத்தைப் போக்கும் மருந்து , திருவதிகையாகிய பழைய ஊரில் உறையும் அரசு , திருவையாற்றில் விரும்பி உறையும் தலைவன் , வேதவிதியாக உள்ளவன் , எல்லாப் புகழும் தன்பால் வந்து சேரும் மெய்ப்பொருள் , தேவர்கள் விரும்பித்தேடும் ஞானஒளி , பெருஞ்செல்வம் , ஞானக் கொழுந்து , ஆகிய பெருமானை விருப்புற்று நினைத்த அளவில் அடியேனுடைய உள்ளம் மகிழ்ச்சியில் நிறைவுற்றது . | |
புறம் பயத்து எம் முத்தினை, புகலூர் இலங்கு பொன்னினை,
உறந்தை ஓங்கு சிராப் பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை,
கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை,
அறம் சூழ் அதிகை வீரட்டத்து அரிமான் ஏற்றை, அடைந்தேனே.
|
4
|
புறம்பயத்தில் உறையும் எங்கள் முத்து , புகலூரில் விளங்கும் பொன் , உறையூரில் ஓங்கிக் காணப்படும் சிராப்பள்ளிக் குன்றிலுள்ள உலகுக்கு ஒளிதரும் சூரியன் , அருவிகள் ஒலிக்கும் கழுக்குன்றத்தில் தரிசிக்க வருபவர்களுக்குப் பற்றுக்கோடு , அறச்செயல்கள் யாண்டும் செய்யப்படுகின்ற அதிகை வீரட்டத்தில் உள்ள ஆண் சிங்கம் ஆகிய பெருமானை அடியேன் அடைந்தேன் . | |
கோலக் காவில் குருமணியை, குடமூக்கு உறையும் விடம் உணியை,
ஆலங்காட்டில் அம் தேனை, அமரர் சென்னி ஆய்மலரை,
பாலில்-திகழும் பைங்கனியை, பராய்த்துறை எம் பசும் பொன்னை,
சூலத்தானை, துணை இலியை, தோளைக் குளிரத் தொழுதேனே.
|
5
|
கோலக்காவில் உள்ள நல்ல நிறமுடைய மாணிக்கம் , குடமூக்கில் உறையும் விடமுண்டபெருமான் , ஆலங்காட்டில் உறையும் அழகிய தேன் , தேவர்கள் தலைகளுக்குச் சூட்டப்படும் அழகிய மலர் , பால்போல் இனிக்கும் புதுமை மாறாத பழம் , பராய்த்துறையில் உள்ள பசிய பொன் , சூலம் ஏந்தியவன் , ஒப்பற்றவன் ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பி வணங்கினேன் . | |
| Go to top |
மருகல் உறை மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின் மாலையை,
கருகாவூரில் கற்பகத்தை, காண்டற்கு அரிய கதிர் ஒளியை,
பெருவேளூர் எம் பிறப்பு இலியை, பேணுவார்கள் பிரிவு அரிய
திரு வாஞ்சியத்து எம் செல்வனை, சிந்தையுள்ளே வைத்தேனே.
|
6
|
மருகலில் தங்கும் மாணிக்கம் , வலஞ்சுழியில் உள்ள தமிழ்ப்பாமாலை , கருகாவூரில் உள்ள கற்பகம் , காண்பதற்கு எளிதில் இயலாத கதிரவன் ஒளி , பெருவேளூரில் உள்ள பிறவாயாக்கைப் பெரியோன் , விரும்பித் தொழுபவர்கள் பின் பிரிந்து செல்ல மனம் கொள்ளாதவகையில் உள்ள திருவாஞ்சியத்தில் உறையும் எம் செல்வன் ஆகிய பெருமானை அடியேன் மனத்தில் நிலையாக இருத்தினேன் . | |
எழில் ஆர் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை,
குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை,
நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை,
அழல் ஆர் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து வைத்தேனே.
|
7
|
அழகுமிக்க அரச சிங்கம் , இராமேச்சுரத்தில் உறையும் அழகிய காளை , குழல்வாய் மொழியம்மையைத் தன் மலை போன்ற மார்பில் கொண்ட குற்றாலத்தில் உறையும் எங்கள் கூத்தன் . நிழல் மிகுந்த சோலைகளையுடைய நெடுங்களத்தில் உறையும் நித்தியகலியாணன் , தீ நிறத்தலைவன் ஆகிய பெருமானை அடியேன் அன்பினால் அடியேனோடு இணைத்து வைத்துக்கொண்டேன் . | |
மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும் மணாளனை,
ஆலைக் கரும்பின் இன்சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலை,
சோலைத் துருத்தி நகர் மேய சுடரில்-திகழும் துளக்கு இலியை,
மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே.
|
8
|
மாலையில் தோன்றும் ஒளி வளரும் சந்திரன் , மறைக்காட்டுள் உறையும் தலைவன் , ஆலையில் பிழியப்படும் கரும்பின் இனிய சாறு , அண்ணாமலையிலுள்ள எம் தலைவன் , சோலைகளை உடைய துருத்திநகர்க் கோயிலில் விரும்பி உறையும் சூரியனைப் போல ஒளிவீசும் அசைவற நின்ற பேராற்றலன் , மேலே உள்ள தேவர்கள் தலைவன் ஆகிய பெருமானை அடியேன் விருப்பத்தோடு விழுங்கி விட்டேன் . | |
சோற்றுத்துறை எம் சோதியை, துருத்தி மேய தூமணியை,
ஆற்றில் பழனத்து அம்மானை, ஆலவாய் எம் அருமணியை,
நீரில் பொலிந்த நிமிர் திண்தோள் நெய்த்தானத்து எம் நிலாச்சுடரைத்
தோற்றக் கடலை, அடல் ஏற்றை, தோளைக் குளிரத் தொழுதேனே.
|
9
|
சோற்றுத்துறையில் உறையும் ஞானஒளி , துருத்தியில் விரும்பி உறையும் தூயமணி , ஆற்றின்வளம் மிக்க திருப்பழனத் தலைவன் . ஆலவாயிலுள்ள சிந்தாமணி , திருநீற்றால் விளங்கும் திண்ணிய தோள்களை உடைய , நெய்த்தானத்தில் உறையும் எம் நிலவொளி , பிறவிக்கடலை அழிக்கும் ஆற்றல் மிக்க காளை ஆகிய பெருமானை அடியேன் தோள்கள் குளிருமாறு கைகூப்பித் தொழுதேன் . | |
புத்தூர் உறையும் புனிதனை, பூவணத்து எம் போர் ஏற்றை,
வித்து ஆய் மிழலை முளைத்தானை, வேள்விக் குடி எம் வேதியனை,
பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை, பொதியில் மேய புராணனை,
வைத்தேன், என் தன் மனத்துள்ளே-மாத்தூர் மேய மருந்தையே.
|
10
|
புத்தூரில் உறையும் தூயோன் , பூவணத்தில் உள்ள எம் போரிடும் காளை , மிழலையில் விதையாகி முளைத்தவன் , வேள்விக்குடியில் உறையும் எம் வேதியன் , நெறிதவறிய அசுரர்களின் மும்மதில்களையும் எரித்தவன் , பொதிய மலையில் விரும்பி உறையும் பழையோன் , மாத்தூரில் விரும்பி உறையும் அமுதம் ஆகிய பெருமானை அடியேன் மனத்துள்ளே நிலையாக இருத்தினேன் . | |
| Go to top |
முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள் ஏறு ஊர்ந்தானை,
அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானை,
சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடிச் சேர்த்தி,
எந்தை பெம்மான், என் எம்மான் என்பார் பாவம் நாசமே.
|
11
|
ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டுத் தோன்றியவன் , மூத்த வெண்ணிறக் காளையை இவர்ந்தவன் . மாலைநேரச் செவ்வானின் நிறத்தினன் . இராவணன் ஆற்றலை அழித்தவன் ஆகிய பெருமானை உள்ளத்தில் தோன்றும் அன்பு என்னும் தீர்த்தத்தால் அபிடேகித்து , இனிய சொற்களாலாகிய பாமாலைகளை அவன் திருவடிகளில் சேர்ப்பித்து எந்தையே , இறைவனே , என் தலைவனே என்று பலகாலும் அவனை அழைத்து மகிழ்பவருடைய தீவினைகள் அழிந்துவிடும் . | |