சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.033   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருமறைக்காடு (வேதாரண்யம்) - திருநேரிசை அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Rzf-t3crn3o   Add audio link Add Audio

இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரம் ஆனார் போலும்; துதிக்கல் ஆம் சோதிபோலும்;
சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து
மந்திரம் ஆனார்போலும்- மா மறைக்காடனாரே.

1
மேம்பட்ட மறைக்காட்டுப் பெருமானார் இந்திரனோடு தேவர்களும் முனிவர்களும் புகழுகின்ற அழகராய், எல்லோரும் போற்றும் ஞானஒளியினராய்ச் சந்திரன் கங்கை பாம்பு என்பனவற்றைச் சடையில் வைத்தவராய், தம்மைத் தியானிப்பவரைக் காப்பவராய் உள்ளார்.

தேயன நாடர் ஆகித் தேவர்கள்தேவர் போலும்;
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள், பணிய வம்மின்!
காயன நாடு கண்டம் கதன் உளார்; காளகண்டர்
மாயன நாடர் போலும்-மா மறைக்காடனாரே.

2
தெய்வத் தன்மையே வடிவான அத்தகைய வீட்டுலகத்தை உடைய தேவர்கள் தலைவரான மாமறைக்காடரைப் பலவாகப் பரவியுள்ள உலகப்பற்றுக்களைத் துறக்கும் பக்தர்களே! வழிபட வாருங்கள். நாடுகளையும் கண்டங்களையும் கோபிப்பனவாய பலகூறுகளாகப் பரவிவந்த ஆலகால விடத்தின் கோபத்தை மனத்துள் கொண்டு அதனை விழுங்கிய நீலகண்டராம் பெருமானார், திருமாலால் தேடப் படுபவராவார்.

அறுமை இவ் உலகு தன்னை ஆம் எனக் கருதி நின்று,
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே;
சிறுமதி, அரவு, கொன்றை திகழ் தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை ஆவார்-மா மறைக்காடனாரே.

3
மாமறைக் காடனார் அழியும் இயல்பினை உடைய இவ்வுலகை நிலைபெற்றது என்று நினைத்துக் கொண்டு உலக வாழ்க்கை வழி நின்று வீணாக இல்வாழ்க்கை நடத்தி இரு வினைகளால் துன்புறுத்தப்படாத வகையில், பிறை பாம்பு கொன்றை இவற்றைச் சடையுள் வைத்த பெருமானாய், தம் அடியவர்களுக்கு மறுமை இன்பமும் இம்மை இன்பமும் வழங்குபவராவார்.

கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து
தோல் மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்
ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,
மால் கொடுத்து, ஆவி வைத்தார்-மா மறைக்காடனாரே.

4
மாமறைக் காடனார் கால்களைக் கொடுத்து கைகளை ஏற்றி எலும்புக் கழிகளை நிரைத்து மேலே புலாலை வேய்ந்து குருதிநீரைக் கலந்து தோலை தட்டிச் சுவரை வைத்து இரண்டு வாயில்களையும் ஏழு சன்னல்களையும் அமைத்து உயிர்க்கு ஒரு வீடுகட்டி அதனுக்கு மால் என்ற பெயர் குறிக்கும் மயக்கம், காற்று, வேட்கை என்பனவற்றைச் செல்வங்களாகக் கொடுத்து குடியேற்றி வைத்துள்ளார்.

விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் விரும்பி ஓதப்
பண்ணினார்; கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆடக்
கண்ணினார்; கண்ணினுள்ளே சோதி ஆய் நின்ற எந்தை-
மண்ணினார் வலம் கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே.

5
நிலவுலக மக்கள் நகரையே வலம் வந்து போற்றும் மகிமையுள்ள திருமறைக்காட்டுப் பெருமான் விண்ணுலகில் உளரேனும் விண்ணினும் மேம்பட்டவர். உலகம் வேதத்தை விரும்பி ஓதப்பண்ணியவர். பத்தர்கள் இசைப்பாடல்களைப் பாடியாடத் திருவுளம் பற்றியவர். அகக்கண்ணினுள்ளே ஞானவொளியை எய்தி திகழும் எம் தலைவரும் அவராவார்.
Go to top

அங்கையுள் அனலும் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார்
தம் கையில் வீணை வைத்தார்; தம் அடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.

6
மாமறைக் காடனார் பார்வதி பாகராய், உள்ளங்கையில் தீயையும், ஒரு கையில், வீணையையும் வைத்தார். அறுவகைச் சமயங்களைப் படைத்து அடியவர்கள் தம் திருவடிகளை வழிபடுமாறு செய்தவராவார். விளங்குகிற சடையில் சந்திரனைக் கங்கையோடும் வைத்தவர் ஆவார்.

கீதராய், கீதம் கேட்டுக் கின்னரம் தன்னை வைத்தார்
வேதராய், வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய், நட்டம் ஆடி, இட்டம் ஆய்க் கங்கையோடு
மாதை ஓர்பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.

7
மாமறைக் காடனார் பார்வதி பாகராய், கங்கை யிடம் விருப்பம் உடையவராய், இசைவடிவினராய்ப் பாடலைக் கேட்டு மகிழும் இசை உணர்வை உலகுக்கு வழங்கியவராய், வேத வடிவினராய், வேதம் ஓதுதலால் ஏற்படும் ஞான ஒளியை வழங்குபவ ராய், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஆதிகாரணராய்க் கூத்து நிகழ்த்துபவ ராய் உள்ளார்.

கனத்தின் ஆர் வலி உடைய கடிமதில் அரணம் மூன்றும்
சினத்தினுள் சினம் ஆய் நின்று தீ எழச் செற்றார் போலும்;
தனத்தினைத் தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார்-மா மறைக்காடனாரே.

8
மாமறைக் காடனார் செருக்குற்ற அசுரர்களுடைய மும்மதில்களையும் கோபத்தின் கோபமாய்க் காட்சி வழங்கித் தீக்கு இரையாகுமாறு அழித்தவர்! உலகச் செல்வத்தின் பற்றுக்களை விடுத்துத் தம் திருவடிகளை முன்நின்று போற்றும் அடியார்களின் மனத்திலுள்ள களங்கங்களை எல்லாம் போக்குபவர்.

தேசனை, தேசன் தன்னை, தேவர்கள் போற்று இசைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்!
காசினை, கனலை, என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு
மாசினைத் தீர்ப்பர்போலும்-மா மறைக்காடனாரே.

9
மாமறைக் காடனார் ஒளி வடிவினராய், எல்லா உலகங்களையும் உடையவராய் உள்ளார். அவரை நறுமணப் பொருள்களைக் கொண்டு வழிபடும் அடியார்களே! நாள்தோறும் வணங்குங்கள். பொன்போல ஒளி வீசுபவராய்க் கனல் போல மாசுகளை எரித்து ஒழிப்பவராய் உள்ள அப்பெருமானாரை என்றும் தியானிப்பவருடைய மாசுகளை அவர் அடியோடு போக்குபவராவார்.

பிணி உடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில்,
பணி உடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே;
துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும், தோகை அஞ்ச,
மணி முடிப்பத்து இறுத்தார்-மா மறைக்காடனாரே.

10
கயிலையைப் பெயர்த்து அப்புறப்படுத்தலாம் என்ற துணிவினை உடைய இராவணன் விரைந்து சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச, அவன் தலைகள் பத்தனையும் நசுக்கியவர் மாமறைக் காடனார், பலபற்றுக் களையும் உடைய இவ்வுடல் தொடர்புக்கேதுவான பிறவிப் பிணியைப் போக்கி ஒழிக்கக் கருதினால், தம் பணிவைப் புலப் படுத்தலுக்கு உரிய இறை தொண்டினை மேற்கொண்டு அடியவர்கள் விருப்பத்தோடு மாமறைக்காடனாரை வழிபடுங்கள்.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமறைக்காடு (வேதாரண்யம்)
1.022   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சிலை தனை நடு இடை
Tune - நட்டபாடை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுரர் யாழைப்பழித்தமொழியம்மை)
2.037   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்
Tune - இந்தளம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
2.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கோளறு பதிகம், வேய் உறு தோளி பங்கன்,
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) )
2.091   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்
Tune - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
3.076   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கல் பொலி சுரத்தின் எரி
Tune - சாதாரி   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
4.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்
Tune - திருநேரிசை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
4.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்
Tune - திருநேரிசை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
5.009   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதம் மால் கடல் பரவி
Tune - திருக்குறுந்தொகை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
5.010   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
Tune - திருக்குறுந்தொகை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
6.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   தூண்டு சுடர் அனைய சோதி
Tune - திருத்தாண்டகம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
7.071   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   யாழைப் பழித் தன்ன மொழி
Tune - காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுவரர் யாழைப்பழித்தநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000