முன்துணை ஆயினானை, மூவர்க்கும் முதல்வன் தன்னை,
சொல்-துணை ஆயினானை, சோதியை, ஆதரித்து(வ்)
உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு
நல்-துணை ஆவர்போலும், நனிபள்ளி அடிகளாரே.
|
1
|
நனிபள்ளிப் பெருமான் முதல் துணைவராய் , மூவர்க்கும் தலைவராய் , வேதத்துக்கு இணையானவராய்ச் சோதி வடிவமான தம்மை விரும்பி நன்கு உணர்ந்து உள்ளம் நெகிழ்ந்து உள்ளத்தில் பக்தி ஊறுதலால் நீராய் உருகிக் கண்ணீர் பெருக்கும் அடியவர்களுக்குப் பெரிய துணையாபவராய் உள்ளார் . | |
புலர்ந்தகால் பூவும் நீரும் கொண்டு அடி போற்ற மாட்டா,
வலம் செய்து வாயின் நூலால் வட்டணைப் பந்தர் செய்த,
சிலந்தியை அரையன் ஆக்கிச் சீர்மைகள் அருள வல்லார்
நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே.
|
2
|
அழகு விளங்கும் சோலைகளால் சூழப்பட்ட நனிபள்ளிப்பெருமான் , பொழுது விடிந்த அளவில் பூவும் அபிடேக தீர்த்தமும் கொண்டு திருவடியை வணங்க இயலாத பிறப்பினதாகையாலே , பெருமானைச் சுற்றி வலமாக வந்து தன் வாயிலிருந்து சுரக்கும் நூலினாலே வட்டமாகப் பந்தலை அமைத்து வழிபட்ட சிலந்தியை அரசனாக்கி , எல்லா நலன்களையும் அருளிய ஆற்றலுடையவராவர் . | |
எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னிக்
கண் பழக்கு ஒன்றும் இன்றிக் கலக்க நான் அலக்கழிந்தேன்
செண்பகம், திகழும் புன்னை, செழுந் திரள் குரவம், வேங்கை,
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே!
|
3
|
செண்பகம் , விளங்கும் புன்னை , செழித்து ஓங்கி வளர்ந்த குரவம் வேங்கை இவை கலந்து காணப்படும் சோலைகள் சூழ்ந்த நனிபள்ளிப் பெருமானே ! 96 தத்துவ தாத்துவிகங்களும் என் உடம்பினுள்ளே நிலையாக இருந்து சிறிதும் கண்ணோட்டமின்றி என்னைக் கலக்கவே அடியேன் துன்பத்தாற் சீர்குலைந்தேன் . | |
பண்ணின் ஆர் பாடல் ஆகி, பழத்தினில் இரதம் ஆகி,
கண்ணின் ஆர் பார்வை ஆகி, கருத்தொடு கற்பம் ஆகி,
எண்ணினார் எண்ணம் ஆகி, ஏழ் உலகு அனைத்தும் ஆகி,
நண்ணினார் வினைகள் தீர்ப்பார்-நனிபள்ளி அடிகளாரே.
|
4
|
நனிபள்ளிப்பெருமான் பண் அமைந்த பாடலாகவும் , பழத்தின் சுவையாகவும் , கண்ணிற் பொருந்திய பார்வையாகவும் , கருத்தில் அமைந்த காதல் நினைவாகவும் , எண்ணுகின்றவருடைய எண்ணமாகவும் ஏழுலகங்களாகவும் தம்மைச் சரணமாக அடைந்த அடியவர்களுடைய வினைகளைப் போக்குபவராகவும் உள்ளார் . | |
துஞ்சு இருள் காலை மாலை, தொடர்ச்சியை மறந்து இராதே
அஞ்சு எழுத்து ஓதில், நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும்;
வஞ்சனைப் பால்சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த
நஞ்சு அமுது ஆக்குவித்தார், நனிபள்ளி அடிகளாரே.
|
5
|
இருள் நீங்கும் காலையிலும் மாலையிலும் பெருமானுக்கும் தமக்கும் உள்ள உறவை மறக்காமல் திருவைந்தெழுத்தை ஓதினால், நாடோறும் சிவனடிக்கண் அன்பு பெருகி வளரும். அத்தகைய அன்பு வளருவதன் பேறாக, செய்யும் வஞ்சனையால் பாற்சோற்றை நஞ்சுடன் கலந்து சமைத்து, நல்ல வழக்கம் இல்லாத சமணர்கள் கொடுத்த அந்த நஞ்சை, அமுதமாக்கி அருளினார் திருநனிபள்ளியடிகள். | |
| Go to top |
செம்மலர்க் கமலத்தோனும் திருமுடி காணமாட்டான்;
அம் மலர்ப்பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்;
நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும்
நம் மலம் அறுப்பர் போலும், நனிபள்ளி அடிகளாரே.
|
6
|
செந்தாமரைப் பூவிலுள்ள பிரமன் திருமுடியைக் காணவும் , சக்கரத்தை ஏந்திய திருமால் அகழ்ந்தும் , தாமரை போன்ற பாதங்களைக் காணவும் , இயலாதாராய்த் தம்மைக் களங்கமற்றவர் என்று போற்றும் எண்ணத்தை அவர்களுக்கு வழங்கி நம்முடைய களங்கங்களையும் போக்குபவர் நனிபள்ளி அடிகளார் . | |
அரவத்தால் வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்டார்
விரவித் தம் அடியர் ஆகி வீடு இலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ ஒட்டார்-நனிபள்ளி அடிகளாரே.
|
7
|
மந்தரம் என்ற மத்திலே வாசுகி என்ற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றித் தேவரும் அசுரரும் பேரொலி செய்து கடைந்த போது தோன்றிய நஞ்சத்தை அமுதாக உண்டவராய் , தம் அடியவருடன் கலந்து என்றும் தம் அடிமையில் நீங்குதல் இல்லாத அவர்களை நரகத்தில் வீழாமல் காப்பவராய் உள்ளார் நனிபள்ளி அடிகளார் . | |
மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்;
புண்ணுளே புரை புரையன் புழுப் பொதி பொள்ளல் ஆக்கை
|
8
|
இவ்வுலகினில் சுற்றித் திரியும் போது பல குற்றங்கள் ஏற்படுகின்றன . புண்ணினுள்ளே பல துவாரங்களை உடையதாய்ப் புழுக்கள் உள்ளே மறைந்திருக்கும் பலதுளைகளை உடைய உடம்பு ... | |
பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க,
பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி,
பத்துவாய் கீதம் பாட, பரிந்து அவற்கு அருள் கொடுத்தார்
பத்தர் தாம் பரவி ஏத்தும் நனிபள்ளிப் பரமனாரே.
|
9
|
பக்தர்கள் முன் நின்று துதித்துப் புகழும் நனிபள்ளிப் பெருமான் இருபது தோள்களை உடைய இராவணன் தன் பெருமையைப் பரக்கச் சொல்லிக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட , இருபது தோள்களை உடைய அவன் உடல் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றிப் பின் அவன் தன் பத்து வாய்களாலும் இசைப் பாடல்களைப் பாட அவனுக்கு அருள் செய்தவர் ஆவர் . | |