வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, திரு அண்ணாமலையனை, இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும் அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ?
|
1
|
கந்தையுடை அணிந்தானும் , மதிசூடியும் , வானவர்க்கு உயர்ந்தானும் , திருவண்ணாமலை வடிவினனும் , விருப்பம் உடையானும் , இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் அட்டானும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ . | |
வானனை(ம்), மதி சூடிய மைந்தனை, தேனனை, திரு அண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ?
|
2
|
வானத்துள்ளவனும் , பிறைசூடிய பேராற்றல் உடையவனும் , தேனென இனிப்பவனும் , திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும் , பன்றிக்கொம்பை அணிந்தவனும் , இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் எய்த விடையேறுடையவனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ . | |
மத்தனை(ம்), மதயானை உரித்த எம் சித்தனை, திரு அண்ணாமலையனை, முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?
|
3
|
ஊமத்தமலர் அணிந்தவனும் , யானைத் தோலை உரித்துப் போர்த்து எம் சித்தத்துறைபவனும் , திருஅண்ணாமலைத் தலத்துக்குடையவனும் , முத்தனும் , முனிந்தார் புரங்கள் மூன்றையும் எரியுண்ணச்செய்த அத்தனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ . | |
காற்றனை, கலக்கும் வினை போய் அறத் தேற்றனை, திரு அண்ணாமலையனை, கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ?
|
4
|
காற்றாகியுள்ளவனும் , கலக்குகின்ற வினைகள் விட்டு நீங்கத் தோற்றம்புரிபவனும் , திருவண்ணாமலைத் தலத்துக் குடையவனும் , உலகினை நன்றுந் தீதுமாய்க் கூறுசெய்து வகுத்தவனும் , கொடியவர் புரங்கள் மூன்றையும் எய்த வீரநெறி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ . | |
மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட தென்னனை, திரு அண்ணாமலையனை, என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ?
|
5
|
மின் ஒளியுருவாயவனும் , வினைகளைப் போக்கி என்னை ஆட்கொண்ட அழகியவனும் , திருவண்ணாமலைத் தலத்துக்குடையவனும் , என்னை உடையவனும் , இகழ்ந்தவர் புரங்கள் மூன்றையும் எய்த அத்தன்மையனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ . | |
| Go to top |
மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல் சென்றனை, திரு அண்ணாமலையனை, வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும் கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ?
|
6
|
ஐந்துவகை மன்றங்களில் ( சபைகளில் ) எழுந்தருளியிருப்பவனும் , மதியாத தக்கன் வேள்வியின்மேல் உருத்துச் சென்றவனும் , திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும் , புலனைந்தும் வென்ற வென்றி உடையவனும் , சினந்தார் புரங்கள் மூன்றையும் கொன்றவனும் ஆகிய பெருமானைக் கொடியவனாகிய அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ . | |
வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்- தீரனை, திரு அண்ணாமலையனை, ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ?
|
7
|
வீரச்செயல்களைப் புரிந்தவனும் , விடம் உண்டவனும் , விண்ணவர்க்கு அச்சம் நீக்குபவனும் , திருவண்ணா மலை வடிவினனும் , மருத நிலத்தை இடங்கொண்டவனும் , உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , ஆத்திமாலை சூடியவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ . | |
கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம் திருவினை, திரு அண்ணாமலையனை, உருவினை, உணரார் புரம் மூன்று எய்த அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ?
|
8
|
கருவாயிருந்து காப்பவனும் , கடலெழு நஞ்சு உண்ட எம்திருவாகியவனும் , திருவண்ணாமலை வடிவினனும் , உருவத்திருமேனி உடையவனும் உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , அருவத்திருமேனி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ . | |
அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத் திருத்தனை, திரு அண்ணாமலையனை, கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ?
|
9
|
பொருள் வடிவாயுள்ளவனும் , ஐந்தலையுடைய நாகத்தைத் திருந்த அணிந்தவனும் , திருவண்ணாமலை வடிவினனும் , தலைவனானவனும் , தீக்குணங்களைக் கடியாதார் புரங்கள் மூன்றையும் எய்தவனும் , உயிர்களுக்கு வினைப்பயனைப் பிறழாது நுகர்விப் போனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ . | |
அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய திருத்தனை, திரு அண்ணாமலையனை, இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத் துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ?
|
10
|
இராவணன் அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றிய திருத்தமானவனும் , திருவண்ணாமலை வடிவினனும் , இரக்கம் கொண்டு என் உடலில் உற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலுங் கூடுமே? . | |
| Go to top |