பட்டி ஏறு உகந்து ஏறி, பல இலம் இட்டம் ஆக இரந்து உண்டு, உழிதரும் அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழக் கெட்டுப் போம், வினை; கேடு இல்லை; காண்மினே!
|
1
|
அடங்காத ஏற்றினை அடக்கி விடையாக் கொண்டு உகந்து ஏறிப் பல மனைகள் தோறும் விருப்பத்தோடு சென்று இரந்து உண்டு அலைந்து சுழலும் , அட்டமூர்த்தியின் திருவுருவாகிய திருஅண்ணாமலையைக் கைகளால் தொழ வினைகள் கெட்டு ஒழியும் ; என்றும் கேடு இல்லை ; காண்பீராக . | |
பெற்றம் ஏறுவர், பெய் பலிக்கு ஏன்று அவர்; சுற்றமா மிகு தொல் புகழாளொடும் அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ நல்-தவத்தொடு ஞானத்து இருப்பரே.
|
2
|
மனைகளிலிடும் பலிக்கெனப் பெற்றம் ஏறும் பெருமான் , தனக்குச் சுற்றமாமெனும் உமையம்மையோடும் வருவார் . துயர்தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைதொழுவார் . நல்ல தவத்தோடு ஞானநெறியில் பிறழாது இருக்கப்பெறுவர் . | |
பல் இல் ஓடு கை ஏந்திப் பல இலம் ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர், அல்லல் தீர்க்கும், அண்ணாமலை கைதொழ நல்லஆயின நம்மை அடையுமே.
|
3
|
பல்லில்லாத மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பல மனைகளுக்கும் விரைந்து சென்று பெண்டிர் இடும் உணங்கிய சோற்றை அவர்தம் உள்ளங்களோடு கவர்வாராகிய சிவபிரானுடைய அடியார் அல்லல்களைத் தீர்க்கும் திருவண்ணாமலையைக் கைகளாற்றொழ , நல்லவாயின யாவும் நம்மைத் தாமே வந்தடையும் . | |
பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர் ஓடிப் போயினர்; செய்வது ஒன்று என்கொலோ? ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப் போகும், நம் மேலை வினைகளே.
|
4
|
பாடிச்சென்று பலிக்கென்று நின்ற பெருமான் ஓடிப் போய்விட்டனராதலால் செய்வது இனி என்னை ? ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைகளாற்றொழ நம் மேலை ( பழைய ) வினைகள் ஓடிப்போகும் . (` ஓடிப் போயினர் செய்வதொன்றென் கொலோ ` எனப் பேசநின்ற பெருமானது திருவண்ணாமலை - என இசையெச்சம் கொண்டு முடிக்க ) | |
தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்! நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்; ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப் போம், நமது உள்ள வினைகளே.
|
5
|
தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏத்துவீராக ; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடிவந்து ஆட் கொள்வர் ; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ்வினைகள் ஓடிப்போகும் . | |
| Go to top |
கட்டி ஒக்கும், கரும்பின் இடை; துணி வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார், அட்டமூர்த்தி, அண்ணாமலை மேவிய நட்டம் ஆடியை, நண்ண நன்கு ஆகுமே.
|
6
|
கரும்பினிடைக் கட்டி ஒக்குமாறு துணித்தும் வெட்டியும் வீணை வகைகளோடு பாடும் விகிர்தனாகிய அட்ட மூர்த்தியும் திருவண்ணாமலை மேவிய நட்டமாடும் பெருமானுமாகிய இறைவனை நண்ணினால் நன்றே ஆகும் . | |
கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர், பாணி நட்டங்கள் ஆடும் பரமனார், ஆணிப் பொன்னின், அண்ணாமலை கைதொழப் பேணி நின்ற பெருவினை போகுமே.
|
7
|
சேர்த்துக் கட்டிய கொண்டையரும் , வேடம் முன் கொண்டவரும் தாளத்திற்கேற்ப நட்டங்கள் ஆடுபவரும் ஆணிப் பொன் போன்றவரும் ஆகிய பரமனார் திருவண்ணாமலையைக் கைகளால் தொழுதால் நம்மிடம் வருதற்குப் பேணி நின்ற பெரு வினைகள் போகும் . | |
கண்டம்தான் கறுத்தான், காலன் ஆர் உயிர் பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார், அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ விண்டு போகும், நம் மேலைவினைகளே.
|
8
|
திருநீலகண்டரும் , கூற்றுவன் உயிரைப் பண்டு கால் கொண்டு பாய்ந்த பரமனாரும் ஆகிய பெருமானுக்குரிய அண்டமுற ஓங்கி நிமிர்ந்த திருவண்ணாமலையைக் கைகளாற்றொழுதால் நம் மேலை ( பழைய ) வினைகள் நம்மைவிட்டு நீங்கும் . | |
முந்திச் சென்று முப்போதும் வணங்குமின், அந்திவாய் ஒளியான் தன் அண்ணாமலை! சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும், கந்தமாமலர் சூடும் கருத்தனே.
|
9
|
முந்துறச்சென்று , மாலைச்செவ்வானன்ன மேனி உடையானுடைய திருவண்ணாமலையை மூன்று பொழுதும் வணங்குவீர்களாக ; அத்திருவண்ணாமலையைச் சிந்தித்தபடி துயிலெழுவார் வினைகளை , நறுமணமுடைய மலர்களைச் சூடும் தலைவனாகிய பெருமான் தீர்ப்பான் . | |
மறையினானொடு மாலவன் காண்கிலா நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன் உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழப் பறையும், நாம் செய்த பாவங்கள் ஆனவே.
|
10
|
பிரமனும் திருமாலும் காண்கிலாதவனும் , எங்கும் நிறைகின்ற தன்மையுள் நின்று அருள் செய்தவனுமாகிய பெருமான் உறையும் மாண்பினை உடைய திருவண்ணாமலையைக் கைகளாற் றொழுதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் கெடும் . | |
| Go to top |