சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.011   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருமீயச்சூர் - திருக்குறுந்தொகை அருள்தரு சுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு முயற்சிநாதேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=IjwwKbqNYI4   Add audio link Add Audio

தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர்,
கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு
ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே.

1
இந்நாள்வரை தோன்றிய கோயில்களும் , இனித் தோன்றும் கோயில்களும் , வேற்றுக்கோயில்களும் பலவுளவேனும் , கூற்றுவனைத்தடிந்த குளிர்ந்த புன்சடை உடைய அரனுக்கு மீயச்சூர் இளங்கோயிலே ஏற்றம் உடைய கோயிலாகும் ; காண்பீராக .

வந்தனை அடைக்கும்(ம்) அடித்தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்,
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே.

2
திருவடிக்கு வழிபாடு செய்தலையே உள்ளத் தடைக்கும் தொண்டர்கள் தம்நெஞ்சைக் கட்டுப்படுத்திப் பாவிக்க நின்றவனும் , எம்மை அடிமையாக உடையானும் விளங்கியருளும் திருமீயச்சூர் இளங்கோயில் வழிபடுவார் சிந்தனையைத் திருத்தவல்லது ஆகும் .

பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்,
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்,-
நெஞ்சம்! வாழி நினைந்து இரு-மீயச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே!

3
நெஞ்சமே ! ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும் , ஆனை அஞ்சுமாறு உரித்தவனும் , அனல் ஆடு வானும் , திருமீயச்சூர் இளங்கோயிலில் எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு ; அந்நினைப்பால் வாழ்வாய் .

நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறு வேறு விரித்த சடை இடை
ஆறு கொண்டு உகந்தான், திரு மீயச்சூர்,
ஏறுகொண்டு உகந்தார், இளங்கோயிலே.

4
மணம் வீசும் மல்லிகை , கூவிளம் , செண்பகம் முதலிய மலர்களை வேறுவேறாக விரித்த சடையிடை ஆற்றோடு கொண்டுகந்தான் திருமீயச்சூரின் இளங்கோயிலில் விடைமேற் கொண்டு உகந்த பெருமானே ! ( அடியார் சாத்தும் மல்லிகை முதலியவற்றை முடியில் ஏற்று மகிழ்ந்து அருள்புரிவன் என்பது கருத்து )

வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல் விரித்து ஆடுவர்,
செவ்வவண்ணம் திகழ் திரு மீயச்சூர்,
எவ்வ வண்ணம், பிரான் இளங்கோயிலே?

5
வெம்மையான வண்ணத்தையுடைய நாகம் அஞ்சும்படியாக எப்பொருளையும் கவ்விக்கொள்ளும் வண்ணத்தையுடைய கனல் விரித்தாடுவார் , திருமீயச்சூர் இளங்கோயில் செவ் வண்ணந்திகழ் மேனியுள்ள பிரானது வண்ணங்கள் எப்படிப்பட்டவை !
Go to top

பொன் அம் கொன்றையும், பூ அணி மாலையும்,
பின்னும் செஞ்சடைமேல் பிறை சூடிற்று;
மின்னும் மேகலையாளொடு, மீயச்சூர்,
இன்ன நாள் அகலார், இளங்கோயிலே.

6
திருமீயச்சூர் இளங்கோயிலில் ஒளிவிடும் மேகலை அணிந்த உமையம்மையோடு இது போன்ற நாளினும் அகலாது உள்ள பெருமான் பின்னிக்கொண்டுள்ள சடைமேல் பிறையுடன் சூடியது , பொன்போன்ற கொன்றைக்கண்ணியும் சூடியார் ( கொடுக்கும் ) மலர்களால் அணிபெறத் தொகுக்கப்பெற்ற மாலையும் ஆம் .

படை கொள் பூதத்தன், பைங்கொன்றைத்தாரினன்,
சடை கொள் வெள்ளத்தன், சாந்தவெண் நீற்றினன்,
விடை கொள் ஊர்தியினான், திரு மீயச்சூர்,
இடை கொண்டு ஏத்த நின்றார், இளங்கோயிலே.

7
பூதங்களைப் படையாகக் கொண்டவனும் , கொன்றைமாலையனும் , சடையில் வெள்ளம் உடையவனும் , சாந்த வெண்ணீற்றனும் , விடையூர்தியானும் , திருமீயச்சூர் இளங்கோயிலின் கண் செவ்வி தெரிந்து ஏத்துமாறு நின்ற இறைவனேயாவன் .

ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர்
வேறுகொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும்,
கூறு கொண்டு உகந்தாளொடு, மீயச்சூர்,
ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே.

8
சடையினில் ஓர் ஆறு கொண்ட இயல்பினரும் , வேறுவேறுகொண்ட வேடத்தராமியல்பினரும் . கூறு கொண்டுகந்த அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலின்கண் ஏறுகொண்டு உகந்தாரேயாவர் .

வேதத்தான் என்பர், வேள்வி உளான் என்பர்,
பூதத்தான் என்பர், புண்ணியன் தன்னையே;
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர்,
ஏதம் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

9
புண்ணியனாகிய இறைவனை வேதத்தான் என்றும் , வேள்வியுளான் என்றும் , பூதத்தான் என்றும் கூறுவர் ; கீதம் கிளரும் திருமீயச்சூரில் , இளங்கோயிலின்கண் அடியவர் ஏதந்தீர்க்க நின்ற இறைவரேயாவர் .

கடுக்கண்டன் கயிலாய மலைதனை
எடுக்கல் உற்ற இராவணன் ஈடு அற,
விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர்,
இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

10
விடமுண்டகண்டனும் , கயிலாயமலையினை எடுக்கலுற்ற இராவணன் ஈடற விடுதற்கேற்ற இடமில்லையாம்படி வெகுண்டவன் மீயச்சூரில் இளங்கோயிலின்கண் இடுக்கண் தீர்க்க நின்ற இறைவனேயாவன் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமீயச்சூர்
2.062   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காயச் செவ்விக் காமற் காய்ந்து,
Tune - காந்தாரம்   (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
5.011   திருநாவுக்கரசர்   தேவாரம்   தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
Tune - திருக்குறுந்தொகை   (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000