முற்றிலா முலையாள் இவள் ஆகிலும், அற்றம் தீர்க்கும் அறிவு இலள் ஆகிலும், கற்றைச் செஞ்சடையன், கடம்பந்துறைப் பெற்றம் ஊர்தி என்றாள்-எங்கள் பேதையே.
|
1
|
எங்கள் பேதையாகிய இவள் முற்றாத இளமுலை உடையாள் ஆயினும் , அற்றந் தீர்க்கும் அறிவில்லாதவள் ஆயினும் , கற்றைச் செஞ்சடையானாகிய கடம்பந்துறைப் பெருமான் இவர்ந்து வரும் ஊர்தி இடபம் என்று கூறுகின்றாள் . ( செவிலி கூற்று ) | |
தனகு இருந்தது ஓர் தன்மையர் ஆகிலும், முனகு தீரத் தொழுது எழுமின்களோ! கனகப்புன் சடையான் கடம்பந்துறை நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே.
|
2
|
நீங்கள் உள்ளக்களிப்பு மிக்கு உடையீராயினும் . நுமது இழிவு நீங்குதற்கு முதல்வனைத் தொழுமின்கள் ; கனகப் பொன்சடையான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நினையும் வல்லமை பெற்றவர் விசும்பு ஆள்வர் ஆதலால் . | |
ஆரியம் தமிழோடு இசை ஆனவன், கூரிய(க்) குணத்தார் குறி நின்றவன், காரிகை உடையான், கடம்பந்துறை, சீர் இயல் பத்தர், சென்று அடைமின்களே!
|
3
|
பெருமை மிக்க நல்லியல்புகள் பொருந்திய அன்பர்களே ! ஆரியமும் , தமிழும் , இசையும் ஆனவனும் மிக்க குணத்தார் குறியாக நின்றவனும் ஒருபாற் பார்வதிதேவியாரை உடையவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறை சென்றடைவீர்களாக . | |
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை- வண்ண நல் மலரான், பல தேவரும், கண்ணனும்(ம்), அறியான் கடம்பந்துறை நண்ண, நம் வினை ஆயின நாசமே.
|
4
|
பண்ணின் இன்மொழி கேட்கும் விருப்புடைய பரமனும் , நான்முகனும் , தேவர்களும் , திருமாலும் , அறியப்படாதவனுமாகிய பெருமான் வீற்றிருக்கும் கடம்பந்துறையை நண்ணினால் , நம்வினைகளாயவை நாசமாம் . | |
மறை கொண்ட(ம்) மனத்தானை மனத்துளே நிறை கொண்ட(ந்) நெஞ்சின் உள் உற வைம்மினோ! கறைகண்டன்(ன்) உறையும் கடம்பந்துறை சிறைகொண்ட(வ்) வினை தீரத் தொழுமினே!
|
5
|
உபதேசப் பொருளைக் கொண்ட மனத்தே விளங்கித் தோன்றும் முதல்வனை ஒரு நெறிப்பட்ட நெஞ்சின் உள்ளூற வைப்பீர்களாக ; திருநீலகண்டன் உறையும் கடம்பந்துறையை நுமது அறிவைக் கட்டுப்படுத்தும் இருவினை தீரத் தொழுவீர்களாக . | |
| Go to top |
நங்கை பாகம் வைத்த(ந்) நறுஞ்சோதியைப் பங்கம் இன்றிப் பணிந்து எழுமின்களோ! கங்கைச் செஞ்சடையான் கடம்பந்துறை, அங்கம் ஓதி அரன் உறைகின்றதே.
|
6
|
கங்கையைச் செஞ்சடையில் வைத்த பெருமானும் ஆறங்கங்களை ஓதியோரும் ஆகிய இறைவர் உறைகின்றது கடம்பந் துறையாதலால் நங்கையை ஒருபாகம் வைத்த அந்த ஒளியுருவை அவ்விடத்துக் கேடின்றிப் பணிந்தெழுவீர்களாக . | |
அரிய நால்மறை ஆறு அங்கம் ஆய், ஐந்து புரியன்; தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்; கரிய கண்டத்தினான்; கடம்பந்துறை உரிய ஆறு நினை, மட நெஞ்சமே!
|
7
|
அறியாமை உடைய நெஞ்சமே ! அரிய நான் மறைகளாய் உள்ளவனும் , அன்னமயகோசம் முதலிய ஐங்கோசங்களாகப் பேசப்பட்டவனும் , தேவர்கள் வேண்ட நஞ்சுண்டவனும் , அதனாற்கறுத்த கண்டத்தினானுமாகிய பெருமான் உறைகின்ற கடம்பந்துறையை விதிமுறைப்படி நினைப்பாயாக . | |
பூ மென்கோதை உமை ஒருபாகனை ஓமம் செய்தும் உணர்மின்கள், உள்ளத்தால்! காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை நாமம் ஏத்த, நம் தீவினை நாசமே.
|
8
|
பூவணிந்த மென்கோதை உடையவளாகிய உமையை ஒருபாகத்தில் உடையவனை வேள்விகள் செய்தும் , உள்ளத்தால் உணர்வீர்களாக ! மன்மதனைச் சினந்த பெருமான் உறையும் கடம்பந்துறையில் அத்திருநாமம் ஏத்த நம் தீவினைகள் நாசமாம் . | |
பார் அணங்கி வணங்கிப் பணி செய நாரணன் பிரமன்(ன்) அறியாதது ஓர் காரணன் கடம்பந்துறை மேவிய ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே
|
9
|
திருமாலும் பிரமனும் உலகில் விரும்பி வணங்கிப் பணிசெய்ய அறியாது தேடி இளைத்தற்குக் காரணனாக இருந்தவன் கடம்பந்துறை மேவியவனும் , ஆரணங்கை ஒருபால் உடையவனுமாகிய புலன்களைந்தும் வென்ற பெரு வீரனாகிய இறைவனே . | |
நூலால் நன்றா நினைமின்கள், நோய் கெட! பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்; காலால் ஊன்று உகந்தான்; கடம்பந்துறை மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே.
|
10
|
பாலோடு கூடிய ஆனைந்தும் ஆடும் பரமனும் , அரக்கனைக் காலால் ஊன்றி உகந்த பெருமானும் ஆகிய இறைவனைக் கடம்பந்துறையிற் சென்று வழிபட்டால் , நாம் செய்த மேலைவல் வினைகள் கெடும் . ஆதலால் , துன்பங்கெடும் படியாக நூல் அறிவால் நன்றாக நினைத்து வழிபடுவீர்களாக . ( நூல் அறிவு - சிவாகம உணர்வு .) | |
| Go to top |