கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர், தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார், தொல்லைஊழியர், சோற்றுத்துறையர்க்கே வல்லை ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!
|
1
|
அறியாமையை உடைய நெஞ்சமே! முல்லை நிலத்துக்குரிய விடையேற்றினை உடையவரும், கொள்ளும் அரவத்தினை உடையவரும், தில்லைத் திருநகரில் சிற்றம்பலத்தே உறையும் அருட்செல்வரும், பழைய ஊழிக்காலத்தவரும் ஆகிய சோற்றுத் துறையர்க்கு வல்லமை உடையையாய்ப் பணிசெய்வாயாக. | |
முத்தி ஆக ஒரு தவம் செய்திலை; அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை; தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே பத்திஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!
|
2
|
அறியாமையை உடைய நெஞ்சமே! முத்திப் பேறெய்தற்பொருட்டு ஒரு தவமும் செய்திலை; அடியார்களுக்கு விருப்பத்தோடு ஒன்றையும் அளித்தாயில்லை; பூங்கொத்துகள் நின்று மலர்கின்ற சோற்றுத்துறையர்க்கு இனியாகிலும் பத்தியோடு பணி செய்வாயாக. | |
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை கட்டி நின்ற கழிந்து அவை போய் அற, தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே பட்டிஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!
|
3
|
அறியாமையை உடைய நெஞ்சமே! உடலை ஒட்டி நின்ற மிகுந்த நோய்களையும், பிணித்து நிற்கும் வினைகளையும் கழிந்து அறும்படியாகச் சோற்றுத்துறையர் திருவடிகளைத் தொட்டு நின்று பட்டியாகப் பணிசெய்வாயாக. | |
ஆதியான், அண்டவாணர்க்கு அருள் நல்கும் நீதியான் என்றும், நின்மலனே என்றும், சோதியான் என்றும், சோற்றுத்துறையர்க்கே வாதி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!
|
4
|
அறியாமையை உடைய நெஞ்சமே! முதல்வனும் தேவர்களுக்கு அருள்நல்கும் நீதியனும், நின்மலனும், சோதியனும் ஆகிய சோற்றுத்துறைப் பெருமானுக்கு வேறொன்றும் வாளா வாதித்துக் காலம் போக்காது, பணிசெய்வாயாக. | |
ஆட்டினாய், அடியேன் வினை ஆயின ஓட்டினாய்; ஒரு காதில் இலங்கு வெண் தோட்டினாய் என்று சோற்றுத்துறையர்க்கே நீட்டி நீ பணி செய், மட நெஞ்சமே!
|
5
|
அறியாமையை உடைய நெஞ்சமே! அடியவனை ஆட்டுவிப்பானே என்றும், வினைகளாயினவற்றை ஓட்டியவனே என்றும், திருச்செவியில் விளங்குகின்ற சங்கவெண் தோட்டினை யணிந்தவனே என்றும் சோற்றுத்துறையனார்க்கு நீள நினைந்து நீ பணிசெய்வாயாக. | |
| Go to top |
பொங்கி நின்று எழுந்த(க்) கடல் நஞ்சினைப் பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ? சொலாய்! தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்குத் தங்கி நீ பணி செய், மட நெஞ்சமே!
|
6
|
அறியாமையை உடைய நெஞ்சமே! பொங்கி நின்று எழுந்த கடலினின்றும் விளைந்த ஆலகாலவிடத்தை விழுங்கி உண்ட ஒரு தெய்வம் இத்தெய்வத்தையன்றி வேறு உண்டோ சொல்வாயாக! அச்சோற்றுத்துறையர்க்கு மனம் தாழ்ந்து என்றும்தங்கி நீ பணி செய்வாயாக. | |
ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்; ஏணி போல் இழிந்து ஏறியும், ஏங்கியும், தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே பூணி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!
|
7
|
அறியாமையை உடைய நெஞ்சமே! ஆணி போல நீ மிகவும் வலி உடையையாயினும், ஏணியைப் போல் இழிந்தும் ஏறியும் இறங்கியும் வாடுகின்றனை; பிறவிப் பெருங்கடற்குத் தோணியாகிய சோற்றுத்துறையர்க்குப் பூணியாக நின்று பணி செய்வாயாக. | |
பெற்றம் ஏறில் என்? பேய் படை ஆகில் என்? புற்றில் ஆடு அரவே அது பூணில் என்? சுற்றி நீ, என்றும் சோற்றுத்துறையர்க்கே பற்றி, நீ பணி செய், மட நெஞ்சமே!
|
8
|
அறியாமையை உடைய நெஞ்சமே! ஏற்றினை ஏறினாலென்ன, பேய்கள் படைகளாகிலென்ன, புற்றினைப் பொருந்திய அரவை அணியாகப் பூண்டாலென்ன, நீ என்றும் சோற்றுத் துறையர்க்கே சுற்றியும் பற்றியும் பணிசெய்வாயாக. | |
அல்லியான், அரவுஐந்தலை நாக(அ)அணைப்- பள்ளியான், அறியாத பரிசு எலாம் சொல்லி, நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே புல்லி, நீ பணி செய், மட நெஞ்சமே!
|
9
|
அறியாமையை உடைய நெஞ்சமே! தாமரையின் அகவிதழில் வீற்றிருக்கும் பிரமனும், ஆதிசேடனாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும் அறிய முயன்றும் அறிய இயலாத தன்மையெல்லாம் சொல்லி, சோற்றுத்துறையர்க்கே நீ என்றும் பொருந்திப் பணிசெய்வாயாக. | |
மிண்டரோடு விரவியும் வீறு இலாக் குண்டர் தம்மைக் கழிந்து உய்யப் போந்து, நீ தொண்டு செய்து, என்றும் சோற்றுத்துறையர்க்கே உண்டு, நீ பணி செய், மட நெஞ்சமே!
|
10
|
அறியாமையை உடைய நெஞ்சமே! அமண் முண்டர்களோடு கலந்தும், பெருமையில்லாத குண்டர்களோடு பொருந்தியும் நின்ற நிலைமையினின்று நீங்கி உய்யப் போந்து நீ, சோற்றுத்துறையர்க்கே தொண்டுசெய்து என்றும் உண்டு பணி செய்வாயாக. | |
| Go to top |
வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்தனை ஆழ்ந்து போய் அலற(வ்) விரல் ஊன்றினான், சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே தாழ்ந்து நீ பணி செய், மட நெஞ்சமே!
|
11
|
அறியாமையை உடைய நெஞ்சமே! ஆற்றலோடு வாழ்ந்தவனாகிய இராவணன் ஆழ்ந்துபோய் அலறுமாறு விரலால் ஊன்றினவனாகிய பூதப்படை சூழ்ந்த சோற்றுத்துறைப் பெருமானுக்கு மனமொழிமெய்களாற்றாழ்ந்து பணிசெய்வாயாக. | |