சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.057   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கோளிலி (திருக்குவளை) - திருக்குறுந்தொகை அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு கோளிலியப்பர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=UkE2WK1Vh6M   Add audio link Add Audio

முன்னமே நினையா தொழிந்தேன், உனை;
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்,
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோளிலி
மன்னனே, அடியேனை மறவலே!

1
செந்நெல் பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள மன்னனே ! ( தியாகராசனே !) உன்னை அடியேன் முன்பே நினையாதொழிந்தேன் ; இன்னமும் நான் உன் சேவடிகளை நன்கு ஏத்தவில்லை ; ஆயினும் அடியேனை மறவாதே ; என்னை நினைந்தருள்வாயாக ! அவனை நாம் நினைக்கில் அவனும் நம்மை நினைப்பான் என்றபடி .

விண் உளார் தொழுது ஏத்தும் விளக்கினை,
மண் உளார் வினை தீர்க்கும் மருந்தினை,-
பண் உளார் பயிலும் திருக்கோளிலி
அண்ணலார்-அடியே தொழுது உய்ம்மினே!

2
விண்ணிலுள்ள தேவர்கள் தொழுது வணங்கும் விளக்கும் , மண்ணுலகிலுள்ளவர் வினைகள் தீர்க்கும் மருந்தும் ஆகிய பண்ணுள்ளவர்கள் பயில்கின்ற திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள அண்ணலார் அடிகளையே தொழுது உய்வீர்களாக !

நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்;
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு-எட்டும்;
ஏழைமைப்பட்டு இருந்து, நீர், நையாதே,
கோளிலி(ய்) அரன் பாதமே கூறுமே!

3
நம்முடைய வாழ்நாள்களின் வரையறையை நாளும் அறியும் ஆற்றல் இல்லை ; நம்மை ஆளும் நோய்களோ தொண்ணூற்றெட்டுக்கு மேலாகும் . அறிவின்மையின்கண் பொருந்தியிருந்து நீர் வருந்தாமல் கோளிலிச் சிவபெருமான் பாதமே கூறுவீராக .

விழவின் ஓசை ஒலி அறாத் தண்பொழில்,
பழகினார் வினை தீர்க்கும், பழம் பதி-
அழல் கையான் அமரும்-திருக்கோளிலிக்
குழகனார் திருப்பாதமே கூறுமே!

4
விழாக்களின் ஓசையும் ஒலியும் விட்டு நீங்காத குளிர் பொழில்களை உடையதும் , தன்னிடம் பழகி வாழ்வார்களது வினைகளைத் தீர்க்கும் தொல்பதியும் , அழலைக் கையில் ஏந்திய பெருமான் அமர்ந்திருப்பதும் ஆகிய திருக்கோளிலியில் குழகன் திருப்பாதத்தையே கூறுவீராக .

மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை,
காலன் ஆகிய காலற்கும் காலனை,-
கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலிச்
சூலபாணிதன் பாதம் தொழுமினே!

5
மும்மூர்த்திகளுக்கும் மூலமூர்த்தியும் , காலகாலனும் , அழகுமிக்க பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள சூலத்தைக் கையிலே உடையானுமாகிய பெருமானின் பாதங்களைத் தொழுவீராக .
Go to top

காற்றனை, கடல்நஞ்சு அமுது உண்ட வெண்-
நீற்றனை, நிமிர்புன்சடை அண்ணலை,
ஆற்றனை,-அமரும் திருக்கோளிலி
ஏற்றனார் - அடியே தொழுது ஏத்துமே!

6
காற்று வடிவாயவனும் , கடல் விடம் உண்டவனும் , வெண்ணீறணிந்தவனும் , நிமிர்ந்த புன்சடை உடைய அண்ணலும் , சடையிற் கங்கையாற்றினை உடையவனும் ஆகிய திருக்கோளிலியில் அமரும் இடபத்தை உடையானை , அவன்றன் திருவடிகளையே தொழுது ஏத்துவீராக .

வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை,
ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை,-
கோதி வண்டு அறையும் திருக்கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே!

7
வைதிகத் தேரின் உறுப்புக்களாய் நின்ற விண்ணோர்களுக்குத் தலைவனும் , நிலைபெற்ற உயிர்கள் ஓதி ஏத்தும் ஒப்பற்றவனும் , வண்டுகள் கோதி ஒலிக்கும் மலர்களின் வளமுடைய திருக்கோளிலியில் வேதநாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக .

நீதியால் - தொழுவார்கள் தலைவனை,
வாதை ஆன விடுக்கும் மணியினை,-
கோதி வண்டு அறையும் திருக்கோளிலி
வேதநாயகன் பாதம் விரும்புமே!

8
முறையாகத் தொழுவார்களது தலைவனும் , துன்பங்களாயினவற்றை நீக்கும் செம்மணி போல்வானும் , வண்டுகள் கிண்டியொலிக்கும் மலர் வனம் உடைய திருக்கோளிலியில் வேத நாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக .

மாலும் நான்முகனாலும் அறிவு ஒணாப்
பாலின் மென்மொழியாள் ஒருபங்கனை,
கோலம் ஆம் பொழில் சூழ் திருக்கோளிலி
நீலகண்டனை, நித்தல் நினைமினே!

9
மாலும் பிரமனும் அறியவியலாத , பாலனைய மென்மொழியுடைய உமையொரு கூறனாகிய அழகுடைய பொழில் சூழும் திருக்கோளிலியில் உள்ள நீலகண்டனை நாள் தோறும் நினைந்து தொழுவீராக .

அரக்கன் ஆய இலங்கையர் மன்னனை
நெருக்கி அம் முடிபத்து இறுத்தான், அவற்கு
இரக்கம் ஆகியவன், திருக்கோளிலி
அருத்தி ஆய் அடியே தொழுது உய்ம்மினே!

10
அரக்கனாகிய இலங்கையர் மன்னன் இராவணனை நெருக்கி , அம்முடிகள் பத்தினையும் இறுத்தவனும் , பின் அவனுக்கு இரங்கியவனும் ஆகிய பெருமான் உறையும் திருக் கோளிலிக்கு விருப்பமாகி , அவன் அடிகளே தொழுது உய்வீராக .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கோளிலி (திருக்குவளை)
1.062   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நாள் ஆய போகாமே, நஞ்சு
Tune - பழந்தக்கராகம்   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
5.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   மைக் கொள் கண் உமை
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
5.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   முன்னமே நினையா தொழிந்தேன், உனை;
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலியப்பர் வண்டமர்பூங்குழலம்மை)
7.020   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நீள நினைந்து அடியேன் உமை
Tune - நட்டராகம்   (திருக்கோளிலி (திருக்குவளை) கோளிலிநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000