மட்டு இட்ட(க்) குழலார் சுழலில் வலைப் பட்டிட்டு(ம்) மயங்கிப் பரியாது, நீர், கட்டிட்ட(வ்) வினை போகக் கருவிலிக் கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே!
|
1
|
தேனையுடைய மலர்களைவைத்துச் சூடிய கூந்தலை உடைய பெண்களாகிய சுழலின் வலைப்பட்டு மனம் மயங்கிப் பின் இரங்காமல் , நீர் உம்மைக் கட்டிய வினைகள் போக . கருவிலிக்கொட்டிட்டை உறையும் பெருமான் திருவடிகளைக் கூடுவீராக . | |
ஞாலம் மல்கு மனிதர்காள்! நாள்தொறும் ஏல மா மலரோடு இலை கொண்டு, நீர், காலனார் வருதல் முன், கருவிலி, கோல வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!
|
2
|
உலகில் நிறைந்த மனிதர்களே ! நாள்தோறும் சிறந்த மலர்களோடு பச்சிலைகளையும் பொருந்துமாறு கொண்டு , நீர் உமக்குக் கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக . | |
பங்கம் ஆயின பேசப் பறைந்து, நீர், மங்குமா நினையாதே, மலர்கொடு, கங்கை சேர் சடையான்தன் கருவிலி, கொங்கு வார் பொழில், கொட்டிட்டை சேர்மினே!
|
3
|
குற்றமுடையவற்றைப் பேசுதலால் , நீர் மங்கு மாற்றை நினையாமல் மலர்களைக்கொண்டு , கங்கை சேர்ந்த சடை யானுக்குரிய மணம் மிக்க நெடிய பொழில்களை உடைய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக . | |
வாடி நீர் வருந்தாதே,- மனிதர்காள்!- வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்- காடனார் உறைகின்ற கருவிலி, கோடு நீள் பொழில், கொட்டிட்டை சேர்மினே!
|
4
|
மனிதர்களே ! நீர் துன்பங்களால் வாடிவருந்தாமல் அருச்சுனனுக்கு வேடனாய்வந்து அருள்செய்த திருவெண்காடனார் உறைகின்ற கிளைகள் நீண்ட பொழிலை உடைய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக . | |
உய்யும் ஆறு இது கேண்மின்: உலகத்தீர்! பை கொள் பாம்பு அரையான், படை ஆர் மழுக் கையினான், உறைகின்ற கருவிலி, கொய்கொள் பூம்பொழில், கொட்டிட்டை சேர்மினே!
|
5
|
உலகத்தில் உள்ளவர்களே ! இதுவே உய்யும்வழி ; கேட்பீராக ; படம்கொண்ட பாம்பை அரையின்கண் அணிந்தவனும் , மழுப்படை பொருந்திய கையை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற , கொய்து கொள்ளத்தக்க பூக்களை உடைய பொழில் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக . | |
| Go to top |
ஆற்றவும்(ம்) அவலத்து அழுந்தாது, நீர், தோற்றும் தீயொடு, நீர், நிலம், தூ வெளி, காற்றும், ஆகி நின்றான் தன் கருவிலி, கூற்றம் காய்ந்தவன், கொட்டிட்டை சேர்மினே!
|
6
|
நீர் , மிகவும் துன்பத்தில் அழுந்தாமல் , தோற்றுகின்ற தீ , நீர் , நிலம் , விசும்பு , காற்று ஆகி நின்றவனும் , கூற்றுவனைக் காய்ந்தவனும் ஆகிய பெருமானுக்குரிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக . | |
நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா ஆறு செயப் புரியாது, நீர், கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி, கொல் ஏறு ஊர்பவன், கொட்டிட்டை சேர்மினே!
|
7
|
நில்லாத வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா நெறியின்கண் வினைகளைச்செய விரும்பாது , நீர் , கல்லால் நிறைந்த மதில் சூழ்ந்து தண்ணியதும் கொல்லேறாகிய இடபத்தினை ஊர்வானுக்குரியதும் ஆகிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக . | |
பிணித்த நோய்ப்பிறவிப் பிரிவு எய்தும் ஆறு உணர்த்தல் ஆம்; இது கேண்மின்; உருத்திர- கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி, குணத்தினான் உறை, கொட்டிட்டை சேர்மினே!
|
8
|
உம்மைப் பிணித்துள்ள துன்பம் நிறைந்த பிறவிப் பிரிவெய்தும் நெறியை உணர்த்தலாகின்ற இதனைக் கேட்பீராக ! உருத்திரகணத்தினார் தொழுதேத்துவதும் , எண்குணத்தினான் உறைவதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக . | |
நம்புவீர்; இது கேண்மின்கள்: நாள்தொறும் எம்பிரான்! என்று இமையவர் ஏத்தும் ஏ- கம்பனார் உறைகின்ற கருவிலி, கொம்பு அனார் பயில், கொட்டிட்டை சேர்மினே!
|
9
|
மனிதர்களே ! நான் சொல்லும் இதனை நம்பிக் கேட்பீராக ; நாள்தோறும் தேவர்கள் ` எம்பெருமான் !` என்று ஏத்தும் ஏகம்பத்து இறைவனார் உறைகின்றதும் , பூங்கொம்பு போன்ற பெண்கள் பயில்வதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக . | |
பார் உளீர்! இது கேண்மின்: பருவரை பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன், கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி, கூர் கொள் வேலினன், கொட்டிட்டை சேர்மினே!
|
10
|
உலகிலுள்ளவர்களே ! இது கேட்பீராக ! பெரிய திருக்கயிலாய மலையைப் பேருமாறு எடுக்கலுற்ற இராவணனை அடர்த்தவனும் கூர்மைகொண்ட வேலை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கருமையைக் கொண்ட நீர் நிறைந்த வயல் சூழ்ந்த குளிர்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக . | |
| Go to top |