காலபாசம் பிடித்து எழு தூதுவர், பாலகர், விருத்தர், பழையார் எனார்; ஆலநீழல் அமர்ந்த வாட்போக்கியார் சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே.
|
1
|
காலபாசத்தைப் பிடித்தெழும் யமதூதுவர்கள் இவர் பாலகர் , இவர் விருத்தர் , இவர் பழையவர் என்று கூறிவிட்டுச் செல்லார் ; கல்லால் நிழற்கீழ் அமர்ந்த வாட்போக்கியாரது சீலம் நிறைந்தவரே செம்மையுள் நின்று சிவகதிபெறுவர் . | |
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப் படுத்தபோது பயன் இலை-பாவிகாள்! அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை எடுத்தும், ஏத்தியும், இன்புறுமின்களே!
|
2
|
பாவிகளே ! எமன் விடுத்த தூதுவர்கள் வந்து வினைக்குழியிலே படுவித்தபோது கதறிப் புலம்பிப் பயன் இல்லை ; அடுத்த கின்னர இசை கேட்கும் வாட்போக்கியை எடுத்தேத்தி இன்புறுவீர்களாக . | |
வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர் உந்தி, ஓடி, நரகத்து இடாமுனம்,- அந்தியின்(ன்) ஒளி தங்கும் வாட்போக்கியார்- சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே.
|
3
|
வந்து இவ்வாறு வளைத்தெழுகின்ற எமதூதுவர்கள் மனம் உந்துதலால் ஓடி நரகத்து இடுவதன் முன்னம் அந்தியின் செவ்வொளி தாங்கிய மேனியராகிய வாட்போக்கியிறைவர் தம்மைச் சிந்தித்து எழுவார்களின் வினை தீர்ப்பர் . | |
கூற்றம் வந்து குமைத்திடும் போதினால் தேற்றம் வந்து, தெளிவு உறல் ஆகுமே? ஆற்றவும் அருள் செய்யும் வாட்போக்கிபால் ஏற்றுமின், விளக்கை, இருள் நீங்கவே!
|
4
|
எமன் வந்து அழித்திடும்போதில் முடிவு வந்து தெளிவுறல் ஆகாதன்றோ ? மிகவும் அருள்செய்யும் வாட்போக்கி இறைவர்பால் விளக்கை இருள் நீங்க ஏற்றுவீராக . | |
மாறு கொண்டு வளைத்து எழு தூதுவர் வேறு வேறு படுப்பதன் முன்னமே, ஆறு செஞ்சடை வைத்த வாட்போக்கியார்க்கு ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.
|
5
|
மாறுபாடுகொண்டு வளைத்தெழும் எமதூதுவர் உடல் வேறு உயிர் வேறு படுப்பதன்முன்பே , கங்கையைச் சிவந்த சடையில் வைத்த வாட்போக்கி இறைவர்க்கு என் உள்ளம் ஊறி ஊறி உருகும் . | |
| Go to top |
கானம் ஓடிக் கடிது எழு தூதுவர் தானமோடு தலை பிடியாமுனம், ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார், ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே.
|
6
|
இடுகாட்டிற்கு ஓடி , விரைந்து எழுந்த எம தூதுவர் இடத்தோடு தலையைப்பிடிப்பதற்கு முன்பே , பஞ்சகவ்வியம் ஆடுதலை உகந்த வாட்போக்கி இறைவர் , குற்றமற்றவர்க்கு உண்மையில் முன்னின்றருள்வர் . | |
பார்த்துப் பாசம் பிடித்து எழு தூதுவர் கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே, ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார் கீர்த்திமைகள் கிளர்ந்து உரைமின்களே!
|
7
|
பார்த்துப் பாசம் பிடித்தெழுந்த எமதூதுவர் கூரிய வேலாற்குத்தி வருத்துவதன் முன்பே , ஆரவாரித்த கங்கையைச் சடையில் அடக்கும் வாட்போக்கி இறைவர் புகழ்த்தன்மைகளை உள்ளம் கிளர்ந்து உரைப்பீராக . | |
நாடி வந்து, நமன் தமர் நல் இருள் கூடி வந்து, குமைப்பதன் முன்னமே, ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை வாடி ஏத்த, நம் வாட்டம் தவிருமே.
|
8
|
எமனைச் சார்ந்தோராகிய தூதுவர் நாடிவந்து , நள்ளிருளில் தாம் பலராய்க் கூடிவந்து வருத்துவதன் முன்பே , ஆடல் பாடல் உகந்த வாட்போக்கி இறைவரை வாடி வழிபட நம்வாட்டம் தீரும் . | |
கட்டு அறுத்துக் கடிது எழு தூதுவர் பொட்ட நூக்கிப் புறப்படா முன்னமே, அட்டமா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு இட்டம் ஆகி, இணை அடி ஏத்துமே!
|
9
|
கட்டுக்களை அறுத்து விரைந்து எழுந்த எம தூதுவர்கள் புறப்படுவதற்கு முன்பே , எட்டுப் பூக்களைச் சூடும் வாட் போக்கி இறைவர்க்கு விருப்பம் உடையவராகித் திருவடி ஏத்துவீராக . | |
இரக்கம் முன் அறியாது எழு தூதுவர் பரக்கழித்து, அவர் பற்றுதல் முன்னமே, அரக்கனுக்கு அருள் செய்த வாட்போக்கியார் கரப்பதும் கரப்பார், அவர் தங்கட்கே.
|
10
|
இரக்கமென்பதை முன்னும் அறியாது எழுந்த எமதூதுவர்கள் பரவிவந்து அழித்துப் பற்றிக்கொள்வதற்கு முன்பே , இராவணனுக்கு அருள்செய்த வாட்போக்கி இறைவர் அவர்கட்கு அகப்படாமல் தம்மடியாரை ஒளிக்கவும் ஒளிப்பர் . | |
| Go to top |