வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை, வீரட்டத்தானை, வெள் ஏற்றினானை, பொறி அரவினானை, புள் ஊர்தியானை, பொன்நிறத்தினானை, புகழ் தக்கானை, அறிதற்கு அரிய சீர் அம்மான் தன்னை, அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை, எறி கெடிலத்தானை, இறைவன் தன்னை, - ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
|
1
|
அலைகள் வீசும் கெடில நதிக்கரையிலுள்ள எம் பெருமான் நறுமணம் கமழும் வில்வ மாலை அணிந்தவன் . அதிகை வீரட்டத்தில் உகந்தருளியிருப்பவன் . இடபவாகனன் . ஆதிசேடனாகவும் , கருடவாகனத் திருமாலாகவும் பொன் நிறமுடைய பிரமனாகவும் அவருள் உடனாய் இருந்து அவரைச் செயற்படுப்பவன் . பொருள்சேர் புகழுக்குத் தக்கவன் . உணர்ந்தார்க்கும் உணர்வரிய சிறப்பினை உடைய தலைவன் . அதியரைய மங்கை என்ற திருத்தலத்தை உகந்தருளியிருப்பவன் . அத்தகைய பெருமானை அறிவிலியாகிய யான் என் வாழ்க்கையின் முற்பகுதியில் வழிபடாது பழித்துக் கூறிய செயல் இரங்கத்தக்கது . | |
வெள்ளிக்குன்று அன்ன விடையான் தன்னை, வில்வலான் வில்வட்டம் காய்ந்தான் தன்னை, புள்ளிவரிநாகம் பூண்டான் தன்னை, பொன் பிதிர்ந்தன்ன சடையான் தன்னை, வள்ளி வளைத் தோள் முதல்வன் தன்னை, வாரா உலகு அருள வல்லான் தன்னை, எள்க இடு பிச்சை ஏற்பான்தன்னை, - ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
|
2
|
மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய நிலையில்லாத வீட்டுலகை அருளவல்ல எம்பெருமான் வெள்ளி மலை போன்ற காளையை வாகனமாக உடையவன் . வில்லைப் பயன் கோடலில் வல்ல மன்மதனுடைய வில்லைக் கையாண்ட செயலைக் கோபித்தவன் . படப்புள்ளிகளையும் கோடுகளையும் உடைய நாகத்தை அணிகலனாக அணிபவன் . பொன் துகள் போல ஒளிவீசும் செஞ்சடையினன் . சந்திரனைப் போல ஒளிவீசும் தோள்வளை அணிந்த முதல்வன் . பிறர் தன்னை இகழுமாறு பல வீட்டிலுள்ளவர்களும் வழங்கும் பிச்சையை ஏற்பவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்த திறம் இரங்கத்தக்கது . | |
முந்தி உலகம் படைத்தான் தன்னை, மூவா முதல் ஆய மூர்த்தி தன்னை, சந்த வெண்திங்கள் அணிந்தான் தன்னை, தவநெறிகள் சாதிக்க வல்லான்தன்னை, சிந்தையில்-தீர்வினையை, தேனை, பாலை, செழுங் கெடில வீரட்டம் மேவினானை, எந்தை பெருமானை, ஈசன் தன்னை, -ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
|
3
|
செழிப்புடைய கெடிலநதி பாயும் அதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் எந்தையாய்ப் பெருமானாய் , எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள எம்பெருமான் தான் , என்றைக்கும் கெடுதலில்லாத முதற்பொருள் . அவனே முற்பட்ட காலத்தில் உலகங்களைப் படைத்தவன் . அழகிய வெள்ளியபிறை சூடி அடியார்களின் தவமாகிய நெறியை முற்றுவிப்பவன் . சித்தம் முதலிய கருவிகளால் செய்யப்படும் செயல்களின் பயனாய்த் தேனும் பாலும் போன்று இனியவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தது இரங்கத்தக்கது . | |
மந்திரமும், மறைப் பொருளும், ஆனான்தன்னை; மதியமும், ஞாயிறும், காற்றும், தீயும், அந்தரமும், அலைகடலும், ஆனான் தன்னை; அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை; கந்தருவம் செய்து, இருவர், கழல் கைகூப்பி, கடிமலர்கள் பல தூவி, காலைமாலை. இந்திரனும் வானவரும் தொழ, செல்வானை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
|
4
|
ஆகா , ஊகூ என்ற கந்தருவர் இருவரும் பாடித் திருவடிகளில் நறுமலர்களைத் தூவிக் கைகளைக் குவித்துக் காலையும் மாலையும் இந்திரனும் மற்ற தேவர்களும் வழிபடுமாறு எளிமையில் காட்சி வழங்கும் சிவபெருமான் வேதமந்திரமும் அவற்றின் பொருளும் ஆயவன் . மதியம் , வெங்கதிர் , காற்று , தீ , வான் , அலைகளை உடைய கடல் ஆகியவற்றின் உடனாய் நின்று அவற்றைச் செயற்படுப்பவன் . அதியரையமங்கை என்ற திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தது இரங்கத்தக்கது . | |
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார்; உயர்கதிக்கு வழி தேடிப் போகமாட்டார்; வரு பிறப்பு ஒன்று உணராது, மாசு பூசி, வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி, அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகை ஊரன் அம்மான் தன் அடி இணையே அணைந்து வாழாது, இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
|
5
|
பிறவாயாக்கைப் பெரியோன் திருவடிகளை நினைத்துப் பார்ப்பது கூடச் செய்யாராய் உயர்கதியை அடைவதற்குரிய வழியைத்தேடி அவ்வழியே வாழ்க்கையை நடத்தாதவராய் , இடையறாது வருகின்ற பிறப்பின் காரணத்தை உணராராய் , உடம்பில் அழுக்கினைத் தாமே பூசிக்கொண்டு அகக்கண் குருடராய சமண முனிவருடைய மனம்போல் நடப்பேனாகி , இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படாத செயல்களைச் செய்யும் அவர்களுடைய சொற்களை உபதேசமாகக் கொண்டு , கொடிய பிறவியை அடியோடு போக்குவிக்கும் அதிகை வீரட்டானத்து எம்பெருமான் திருவடிகளைச் சரண் புக்கு வாழாமல் ஏழையேன் பண்டு அப்பெருமானை இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது . | |
| Go to top |
ஆறு ஏற்க வல்ல சடையான் தன்னை; அஞ்சனம் போலும் மிடற்றான் தன்னை; கூறு ஏற்க, கூறு அமர, வல்லான் தன்னை; கோல் வளைக்கை மாதராள் பாகன்தன்னை; நீறு ஏற்கப் பூசும் அகலத்தானை; நின்மலன் தன்னை; நிமலன் தன்னை; ஏறு ஏற்க ஏறுமா வல்லான் தன்னை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
|
6
|
கங்கையைத் தன்னுள் அடங்குமாறு ஏற்றுக் கொள்ள வல்ல சடையான் , மைபோலக் கரிய முன் கழுத்தினன் . எல்லாப் பொருள்களின் நுண்ணிலையையும் ஏற்று அவற்றுக்குப் பற்றுக் கோடாக நிற்கவும் பருநிலையில் அவற்றுக்கு உள்ளும் புறம்பும் அறிவாய் நிறைந்து நிற்கவும் வல்லவன் . திரண்ட வளையல்களைக் கையில் அணிந்த பார்வதி பாகன் . நீறு , தன்னையே சார்பாக ஏற்க அதனைப் பூசிய மார்பினன் . தானும் களங்கம் இல்லாதவனாய்ப் பிறர் களங்கத்தையும் போக்குவிப்பவன் . காளை வாகனத்தில் தக்கபடி ஏறி அதனைச் செலுத்துவதில் வல்லவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது . | |
குண்டு ஆக்கனாய் உழன்று, கையில் உண்டு, குவிமுலையார்தம் முன்னே நாணம் இன்றி, உண்டி உகந்து, அமணே நின்றார் சொல் கேட்டு, உடன் ஆகி, உழி தந்தேன், உணர்வு ஒன்று இன்றி; வண்டு உலவு கொன்றை அம்கண்ணியானை, வானவர்கள் ஏத்தப்படுவான் தன்னை, எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னை- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
|
7
|
மூர்க்கர்களாய் தடுமாறி இளைய பெண்கள் முன்னிலையில் நாணமின்றி உடையில்லாமல் நின்று உணவைக் கையில் பெற்று நின்றவாறே உண்ணும் சமணத்துறவியரின் சொற்களை மனங்கொண்டு அவர்கள் இனத்தவனாகி நல்லுணர்வில்லாமல் திரிந்த நான் , வண்டுகள் சூழ்ந்து திரியும் கொன்றைப் பூ மாலையை அணிந்து வானவர்களால் புகழப்பட்டு , எண்திசையிலுள்ளார்க்கும் தலைவனாய் நிலைபெற்ற எம்பெருமானை ஏழையேனாகிய யான் பண்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது . | |
உறி முடித்த குண்டிகை தம் கையில்-தூக்கி, ஊத்தைவாய்ச் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்க(ன்)னாய், கறி விரவு நெய் சோறு கையில் உண்டு, கண்டார்க்குப் பொல்லாத காட்சி ஆனேன்; மறிதிரை நீர்ப்பவ்வம் நஞ்சு உண்டான் தன்னை, மறித்து ஒரு கால் வல்வினையேன், நினைக்க மாட்டேன்; எறிகெடில நாடர் பெருமான் தன்னை-ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.
|
8
|
உறியில் சுருக்கிட்டு வைத்த கஞ்சிக்கரகத்தைக் கையில் தொங்கவிட்டுக்கொண்டு ஊத்தை வாயினை உடைய சமணர்களிடையே யானும் ஒரு மூர்க்கனாகி , கறியோடு நெய் ஊட்டப் பட்ட சோற்றினைக் கையில் வாங்கி உண்டு காண்பவருக்கு வெறுக்கத் தக்க காட்சிப் பொருளாக இருந்த யான் , அலைமோதும் கெடில நதி பாயும் நாட்டிற்குத் தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட பெருமானைத் தீவினை உடையேனாய் , பரம்பரையாக வழிபட்டுவரும் குடும்பப் பழக்கம் பற்றியும் நினைக்க இயலாதேனாய் ஏழையேனாய்ப் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது . | |
நிறை ஆர்ந்த நீர்மை ஆய் நின்றான்தன்னை, நெற்றிமேல் கண் ஒன்று உடையான் தன்னை, மறையானை, மாசு ஒன்று இலாதான் தன்னை, வானவர்மேல் மலர் அடியை வைத்தான் தன்னை, கறையானை, காது ஆர் குழையான் தன்னை, கட்டங்கம் ஏந்திய கையான் தன்னை, இறையானை, எந்தைபெருமான் தன்னை;- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.
|
9
|
எல்லார் உள்ளத்திலும் தங்கியிருப்பவனாகிய எந்தை பெருமான் குறைவிலா நிறைவினனாய் நிலைபெற்றவன் . நெற்றிக்கண்ணன் . வேத வடிவினன் . களங்கம் ஏதும் இல்லாதான் . தேவர்கள் தலையில் தன் திருவடிகளை வைத்து அருளியவன் . கழுத்தில் விடக்கறை உடையவன் . குழைக்காதன் . கையில் கட்டங்கம் என்ற படைக்கலன் ஏந்தியவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது . | |
தொல்லை வான் சூழ் வினைகள் சூழப் போந்து தூற்றியேன்; ஆற்றியேன்; சுடர் ஆய் நின்று வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட, வானவர்க்கும் தானவர்க்கும், பெருமான் தன்னை கொல்லைவாய்க் குருந்து ஒசித்துக் குழலும் ஊதும் கோவலனும், நான்முகனும், கூடி எங்கும் எல்லை காண்பு அரியானை; எம்மான் தன்னை;- ஏழையேன்நான் பண்டு இகழ்ந்த ஆறே!.
|
10
|
முல்லை நிலத்திலிருந்த குருந்த மரத்தை , அதன் கண் பிணைத்திருந்த இடைக்குலச் சிறுமியர் ஆடைகளை அவர்கள் மீண்டும் எடுத்துக் கொள்வதற்காக வளைத்துக் கொடுத்து , வேய்ங் குழல் ஊதி அவர்களை வசப்படுத்திய இடையனாய் அவதரித்த திருமாலும் , பிரமனும் ஆகிய இருவரும் முயன்றும் அடிமுடிகளின் எல்லையைக் காண இயலாதவாறு அனற்பிழம்பாய் நின்றவனாய்த் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தலைவனாய் , எனக்கும் தலைவனாய் , பண்டைத் தீவினைகள் என்னைச் சூழ்ந்தமையாலே அவற்றின் வழியே சென்று அவனைப் பலவாறு இழித்துப் பேசியும் பின் ஒருவாறு தெளிந்தும் நின்ற அடியேனுடைய அறிவுக்கு அறிவாய் நின்று விரைவில் என் சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்ட பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது . | |
| Go to top |
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால், நம் தெய்வம் என்று தீண்டி, தலை பறிக்கும் தன்மையர்கள் ஆகி நின்று, தவமே என்று அவம் செய்து, தக்கது ஓரார்; மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதன் அழியச் செற்ற சேவடியினானை, இலை மறித்த கொன்றை அம்தாரான் தன்னை,- ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!.
|
11
|
மாசுதீரப்புனல் ஆடும் வழக்கத்தை விடுத்து அற்றம் மறைத்தலுக்கு உடைமாத்திரம் அணிந்த சமணசமயப் பெண் துறவியர் தங்கள் தெய்வம் என்று பெரிதும் மதித்துத் தம் கைகளால் தலைமயிரைப் பறிக்கும் பண்புடையவர்களாகித் தங்கள் கொள்கைகளிலேயே நிலைநின்று தக்க செயல் இன்னது என்று ஆராய்ந்தறிய இயலாதவர்களாகித் தவம் என்ற பெயரால் பொருத்த மற்ற செயல்களைச் செய்பவர் சமணத் துறவியர் . அவர் வழி நின்றேனாகிய யான் . புட்பகவிமானம் சென்ற வழியைக் கயிலை மலை தடுத்ததனால் அதனைப் பெயர்க்கச் சென்ற இராவணனுடைய வலிமை கெடத்துன்புறுத்திய சிவந்த திருவடிகளை உடையவனாய் இலைகளுக்கு இடையே தோன்றிய கொன்றைப் பூவாலாகிய மாலையை அணிந்த எம்பெருமானைப் பண்டு அறியாமை உடையேனாய் இகழ்ந்த திறம் இரங்கத்தக்கது . | |