சந்திரனை மா கங்கைத் திரையால் மோதச் சடாமகுடத்து இருத்துமே; சாமவேத- கந்தருவம் விரும்புமே; கபாலம் ஏந்து கையனே: மெய்யனே; கனகமேனிப் பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே; பசு ஏறுமே; பரமயோகி ஆமே; ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகை வீரட்டன் ஆமே.
|
1
|
சந்திரனைப் பெரிய கங்கை தன் அலைகளால் மோதுமாறு சடை முடியில் வைத்துள்ளான் . சாமவேதமாகிய இசையை விரும்புபவன் . மண்டையோட்டை ஏந்திய கையினன் . பொன்னார் மேனியில் , மெல்லிய விரலில் பந்தினை ஏந்திய பார்வதி பாகன் . காளையை வாகனமாக உடையவன் . மேம்பட்டயோகி . ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவன் ஆகிய இத்தகைய செயல்களையும் பண்புகளையும் உடைய பெருமான் திருவதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருப்பவனே . | |
ஏறு ஏறி ஏழ் உலகம் உழிதர்வானே; இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே; பாறு ஏறு படுதலையில் பலி கொள்வானே; பட அரவம் தடமார்பில் பயில்வித்தானே; நீறு ஏறு செழும் பவளக்குன்று ஒப்பானே; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே; ஆறு ஏறு சடைமுடி மேல் பிறை வைத்தானே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
|
2
|
காளை மீது ஏறி ஏழுலகமும் சுற்றி வருபவன் . தேவர்கள் தொழுது துதிக்குமாறு இருக்கின்றவன் . பருந்துகள் படியும் , மண்டையோட்டில் பிச்சை எடுப்பவன் . தன் பெரிய மார்பில் படமெடுக்கும் பாம்பு ஊரப்பெற்றவன் . நீறு படிந்த செழுமையான பவள மலையை ஒத்த வடிவினன் . நெற்றியில் அமைந்த கண் ஒன்று உடையவன் . கங்கை தங்கிய சடைமுடிமேல் பிறையைச் சூடியவன் . இத்தகைய பெருமான் அதிகை வீரட்டனாவான் . | |
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே; முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே; கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே; கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே; பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே; பெரு நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆகி அண்டத்துக்கு அப்பால் ஆய் இப் பாலானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
|
3
|
இறந்த பிரமர்களின் தலைமாலையால் பொலிவு பெற்று விளங்கும் திருமேனியினன் . உலகில்தோற்றம் நிலை இறுதிகளைச் செய்பவன் . கழுத்தில் மகா வராகத்தின் கொம்பினை அணிகலனாக அணிந்தவன் . கோபத்தை உடைய பாம்பினைக் கையில் கொண்டு கூத்தாடிக் காட்சி வழங்குபவன் . இவ்வுடம்பின் காரணங்களாய் உள்ள தத்துவங்களுக்குச் சார்பாய் உள்ளவன் . ஐம்பெரும் பூதங்களாய் அண்டங்களின் புறமும் உள்ளும் இருப்பவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனாவான் . | |
செய்யனே; கரியனே, கண்டம்; பைங்கண் வெள் எயிற்று ஆடு அரவனே; வினைகள் போக வெய்யனே; தண் கொன்றை மிலைத்த சென்னிச் சடையனே; விளங்கு மழுச் சூலம் ஏந்தும் கையனே; காலங்கள் மூன்று ஆனானே; கருப்பு வில் தனிக் கொடும் பூண் காமற் காய்ந்த ஐயனே; பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
|
4
|
நிறத்தால் செய்யவன் . கண்டம் கறுத்தவன் . பசிய கண்களையும் வெளிய பற்களையும் உடையவாய்ப் படமெடுத்தாடும் பாம்புகளை அணிந்தவன் . அடியார்களுடைய வினைகள் நீங்குமாறு அவற்றிற்குப் பகைவனாக உள்ளவன் . குளிர்ந்த கொன்றை சூடிய சடையினன் . சூலத்தைத் தாங்கும் கையினன் . முக்காலங்களாகவும் உள்ளவன் . கரும்பு வில்லினை ஒப்பற்ற வளைந்த அணிகலன் போலக் கைக்கொண்ட மன்மதனைக் கோபித்த தலைவன் . உயரமும் பருமையும் உடைய காளைவாகனன் . இத்தகைய சிறப்பினை உடையவன் அதிகை வீரட்டானத்துப் பெருமானே . | |
பாடுமே, ஒழியாமே நால்வேத(ம்)மும்; படர்சடைமேல் ஒளி திகழப் பனி வெண்திங்கள் சூடுமே; அரை திகழத் தோலும் பாம்பும் சுற்றுமே; தொண்டைவாய் உமை ஓர் பாகம் கூடுமே; குடமுழவம், வீணை, தாளம், குறுநடைய சிறு பூதம் முழக்க, மாக்கூத்து ஆடுமே; அம் தடக்கை அனல் ஏந்து(ம்)மே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
|
5
|
இடைவிடாமல் நால்வேதமும் பாடும் இயல்பினன் . பரவிய உடையின் மீது ஒளி சிறக்குமாறு குளிர்ந்த வெள்ளிய பிறையைச் சூடியவன் . தன் இடையில் விளங்குமாறு புலித்தோலையும் பாம்பினையும் சுற்றியிருப்பவன் . கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . குறுக அடியிடும் நடையினை உடைய பூதங்கள் குடமுழா , வீணை , தாளம் இவற்றை ஒலிக்குமாறு , ஐந்தொழில்களையும் செய்யும் மேம்பட்ட கூத்தினை ஆடுபவன் . அழகிய நீண்ட கையொன்றில் தீயை ஏந்துபவன் . அத்தகைய பெருமான் திருவதிகை வீரட்டனே . | |
| Go to top |
ஒழித்திடுமே, உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும்; ஒற்றைக்கண்ணால் விழித்திடுமே, காமனையும் பொடி ஆய் வீழ; வெள்ளப் புனல் கங்கை செஞ்சடைமேல் இழித்திடுமே; ஏழ் உலகும் தான் ஆகு(ம்)மே; இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பி(ன்)னால் அழித்திடுமே; ஆதி மா தவத்து உளானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
|
6
|
தன்னையே தியானிப்பவருடைய உள்ளத்தில் மிக்க நோயையும் அவர்களைத் தாக்கும் உட்பகைகளாகிய காமம் முதலிய ஆறனையும் அடியோடு நீக்குபவன் . தனித்திருக்கும் நெற்றிக் கண்ணால் மன்மதன் சாம்பலாகி விழுமாறு நோக்கியவன் . நீர் வெண்மையாகிய கங்கையைத் தன் செந்நிறச் சடையில் இறங்கித் தங்குமாறு செய்தவன் . ஏழுலக இயக்கத்திற்கும் தானே காரணமாகியவன் . வானில் உலாவிய முப்புரங்களையும் ஓர் அம்பினால் அழித்தவன் . பண்டு தொட்டு மேம்பட்ட தவத்தைச் செய்பவனாய்த் தன் அடியவர்களுக்குத் தவம் செய்ய வழிகாட்டி ஆகியவன் அத்தகைய பெருமான் அதிகை வீரட்டத்தானே . | |
குழலோடு, கொக்கரை, கைத்தாளம், மொந்தை, குறள்பூதம் முன் பாடத் தான் ஆடு(ம்)மே; கழல் ஆடு திருவிரலால் கரணம்செய்து, கனவின் கண் திரு உருவம் தான் காட்டு(ம்)மே; எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடு(ம்)மே;- ஈமப் புறங்காட்டில் ஏமம்தோறும் அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
|
7
|
குழல் , கொக்கரை , மொந்தை முதலிய இயங்களை இயக்கிக் கைத்தாளமிட்டுக் குட்டையான பூதங்கள் பாட அப் பாடலுக்கு ஏற்பத் தான் ஆடுபவன் . திருவடிகளிலே அசைகின்ற திரு விரல்களால் உயிர்களின் நுண்ணுடம்புகளை அசைத்துச் செயற்படுத்தி , அடியார்களுடைய கனவிலே தன் திருவுருவை அவர்களுக்குக் காட்டுபவன் . அழகு நிரம்பிய தோள்களை விரைவாக அசைத்துக் கூத்தாடுபவன் . ஊருக்குப் புறத்தே உள்ள சுடுகாட்டில் இரவு தோறும் நெருப்பின்கண் நின்று ஆடுபவன் . எட்டு உரு உடையவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே . | |
மால் ஆகி மதம் மிக்க களிறுதன்னை வதைசெய்து, மற்று அதனின் உரிவை கொண்டு, மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம், வெம் புலால் கை கலக்க, மெய் போர்த்தானே; கோலாலம் பட வரை நட்டு, அரவு சுற்றி, குரைகடலைத் திரை அலற, கடைந்து கொண்ட ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே;-அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
|
8
|
மதம் மிகுதலானே மயக்கம் கொண்ட ஆண் யானையைக் கொன்று அதன் தோலினைத் தனியே உரித்துத் தன் திருமேனியை முழுதுமாக அது மறைக்குமாறு உதிரப் பசுமை கெடாது உடம்பில் போர்த்தவன் . ஆரவாரம் ஏற்பட மந்தரமலையை மத்தாக நட்டு வாசுகியைக் கடைகயிறாகச் சுற்றி ஒலிக்கின்ற கடலை அதன் அலைகள் ஒலிக்குமாறு கடைந்ததனால் ஏற்பட்ட பெரிய விடத்தை உட்கொண்டு இருண்ட கழுத்தினன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே . | |
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செஞ்சடை எம்பெருமானே; தெய்வம் நாறும் வம்பின் நாள்மலர்க் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே; வலங்கை மழுவாள(ன்)னே: நம்பனே; நால்மறைகள் தொழ நின்றானே; நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்கச் செற்ற அம்பனே; அண்ட கோசத்து உளானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
|
9
|
செம்பொன்னாற் செய்து அதன் கண் அழகினை ஊட்டினாற்போல இயற்கையாக அமைத்த செஞ்சடைப்பெருமான் , இயற்கையான தெய்வ மணம் கமழும் தன்மையோடு மலர்களையும் அணியும் கூந்தலை உடைய உமாதேவியினுடைய காதலுக்கு இருப்பிடமான கணவன் . வலக்கையில் மழுப்படையை உடையவன் . நம்மால் விரும்பப்படுபவன் . நான்கு வேதங்களும் வழிபடுமாறு இருப்பவன் . அச்சமில்லாத அசுரர்களின் மும்மதில்களும் நடுங்குமாறு அவற்றை அழித்த அம்பினன் . எல்லா உலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்பவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே . | |
எழுந்த திரை நதித் துவலை நனைந்த திங்கள் இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே; கொழும் பவளச்செங்கனிவாய்க் காமக்கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட தழும்பு உளவே; வரைமார்பில் வெண்நூல் உண்டே; சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி அழுந்திய செந்திரு உருவில் வெண் நீற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
|
10
|
கங்கையிலிருந்து வெளிப்பட்ட அலைகளின் துளிகளால் நனைக்கப்பட்ட பிறைச் சந்திரன் மெல்லிய ஒளியோடு விளங்குகின்ற நீண்ட சடையினன் . கச்சியில் காமக்கோட்டத்திலுள்ள பவளம் போலச் சிவந்த , கனிபோன்று மென்மையை உடைய வாயினள் ஆகிய உமாதேவியின் இரு தனங்களும் எம்பெருமான் மார்பில் போரிட்டதனால் ஏற்பட்ட அழகிய தழும்புகள் தங்கிய மலைபோன்ற அவன் மார்பில் பூணூல் உள்ளது . சந்தனமும் , நறுமணக்கூட்டுக்களும் சேறுபோலப் பொருந்திய தன் செம்மேனியில் வெண்ணீறு அணிந் துள்ளான் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே . | |
| Go to top |
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே; நேர் ஒருவர் இல்லாதானே; கொடி ஏறு கோல மா மணிகண்ட(ன்)னே; கொல் வேங்கை அதளனே; கோவணவனே; பொடி ஏறு மேனியனே; ஐயம் வேண்டிப் புவலோகம் திரியுமே; புரிநூலானே; அடியாரை அமருலகம் ஆள்விக்கு(ம்)மே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.
|
11
|
தனக்கு ஒப்பார் பிறர் இல்லாத சிவபெருமான் திருமாலும் பிரமனும் தம்முயற்சியால் தேடியும் காண இயலாதவாறு நீண்ட வடிவு கொண்டவன் . தன் சிறப்புத் தோன்றக் கொடியை உயர்த்துமாறு அமைந்த நீலகண்டன் . கொலைத் தொழிலை உடைய வேங்கையின் தோலைக் கோவணத்தின் மீது ஆடையாக உடுத்தவன் . திருநீறு பூசிய திருமேனியினன் . பூணூலை அணிந்த அப்பெருமான் பிச்சை ஏற்றலைக் கருதி மேலுலகங்களிலும் திரிபவன் . தன் அடியவர்களைத் தேவர் உலகத்தை ஆளுமாறு செய்பவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே . | |