நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல் பூண்டார்;நூல் மேல் ஓர் ஆமை பூண்டார்; பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி;பிறை சூடும் சடைமேல் ஓர் புனலும் சூடி; ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார்;அனல் கொண்டார்;அந்திவாய் வண்ணம் கொண்டார்; பாதம் கம் நீறு ஏற்றார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
|
1
|
பந்தணைநல்லூர்ப் பெருமான் வருந்துவதாகிய மாயை உடம்பு உடையர் அல்லாதாராய்ப் பாம்புகளையும் , மார்பில் பூணூலையும் அதன்மேல் ஆமை ஓட்டினையும் அணிந்தவர் . அவர் வளர்கின்ற கருங்குழலியாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு , பிறையைச் சூடிய சடையில் கங்கையையும் கொண்டு அந்தி வானத்தின் செந்நிறமேனியில் அடிமுதல் முடி வரை திருநீறணிந்து , கையில் தீயினைக் கொண்டு , பேய்கள் தங்கும் பரந்த சுடுகாட்டில் கூத்தாடிப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து வந்து பிச்சை ஏற்றவர் . | |
காடு அலால் கருதாதார்;கடல்நஞ்சு உண்டார்;களிற்று உரிவை மெய் போர்த்தார்;கலன் அது ஆக; ஓடு அலால் கருதாதார்;ஒற்றியூரார்;உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக் கண்ணால் பீடு உலாம் தனை செய்வார்;பிடவம், மொந்தை, குடமுழவம், கொடுகொட்டி, குழலும், ஓங்கப் பாடலார்;ஆடலார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
|
2
|
பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை நுகர்ந்து , களிற்றுத் தோலால் மெய்யினைப் போர்த்து , மண்டையோட்டினையே உண்கலனாகக் கொண்டு , ஒற்றியூரை உகந்து , அடியார்களுடைய உடற்பிணிகளையும் உட்பகைகளையும் தம் ஒரே பார்வையாலே வலிமைகெடச் செய்து , பிடவம் , மொந்தை , குடமுழா , கொடுகொட்டி , குழல் என்ற வாச்சியங்கள் ஒலிக்கச் சுடுகாட்டினைத் தவிர வேற்று இடங்களை விரும்பாது , அங்குப் பாடியும் ஆடியும் செயற்பட்டுப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து பிச்சை ஏற்றவர் . | |
பூதப்படை உடையார்;பொங்கு நூலார்; புலித்தோல் உடையினார்;போர் ஏற்றி(ன்)னார்; வேதத்தொழிலார் விரும்ப நின்றார்; விரிசடைமேல் வெண்திங்கள் கண்ணி சூடி, ஓதத்து ஒலி கடல்வாய் நஞ்சம் உண்டார்; உம்பரோடு அம்பொன்னுலகம் ஆண்டு பாதத்தொடு கழலார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
|
3
|
தேவர்களை அடிமையாகக் கொண்டு அவர்களுடைய பொன்னுலகை உடைமையாகக் கொண்டு சுற்றிக் கட்டப் பட்ட கழலைத் திருவடிகளில் அணிந்த பந்தணைநல்லூர்ப் பெருமான் வெள்ளம் ஒலிக்கும் கடலில் தோன்றிய விடத்தை உண்டவர் . விரிந்த சடைமேல் வெள்ளிய பிறையினை முடிமாலையாகச் சூடியவர் . வேதங்கள் ஓதி வேள்விகள் செய்யும் அந்தணர்கள் தம்மைப் பரம்பொருளாக விரும்ப இருப்பவர் . திருமாலாகிய போரிடும் காளையை உடைய அப்பெருமான் பூதப்படை உடையவர் . அவர் பூணூல் அணிந்து புலித்தோலை இடையில் அணிந்து பசிய கண்களை உடைய காளை மீது அமர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார் . | |
நீர் உலாம் சடைமுடிமேல்-திங்கள் ஏற்றார்; நெருப்பு ஏற்றார், அங்கையில் நிறையும் ஏற்றார்; ஊர் எலாம் பலி ஏற்றார்;அரவம் ஏற்றார்; ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்; வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார்; மழு ஏற்றார்;மான்மறி ஓர் கையில் ஏற்றார்; பார் உலாம் புகழ் ஏற்றார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
|
4
|
கச்சணிந்த முலைகளையுடைய உமாதேவியாரை இடப்பாகமாக ஏற்ற பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் ஏற்றுக் கங்கை உலாவும் சடைமுடி மேல் திங்கள் சூடியவர் . மான்குட்டியை ஒருகையில் ஏற்ற அப் பெருமான் அழகிய கை ஒன்றில் நெருப்பை ஏற்று , ஊர்களெல்லாம் பிச்சை ஏற்று , பிச்சையிட வந்த மகளிரின் நிறை என்ற பண்பினைக் கவர்ந்தவர் . அவர் மழு ஏந்தி , உலகில் பரவிய புகழுக்கு உரியவராய்ப் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் . | |
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார்; துளங்கா மணி முடியார்; தூய நீற்றார்; இண்டைச் சடை முடியார்; ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார், ஏமம் தோறும்; அண்டத்துக்கு அப் புறத்தார்; ஆதி ஆனார்; அருக்கனாய், ஆர் அழல் ஆய், அடியார்மேலைப் பண்டை வினை அறுப்பார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
|
5
|
அண்டங்களையும் கடந்து எங்கும் பரவியிருப்பவராய் , எல்லோருக்கும் முற்பட்டவராய்ச் சூரியனாகவும் அக்கினியாகவும் இருந்து , அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் உள்ள பந்தணை நல்லூர்ப் பெருமான் அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமான ஞானஒளியை உடையவர் . நடுங்காத அழகிய தலையை உடையவர் . தூய நீறணிந்தவர் . சடையில் முடிமாலை சூடியவர் . இடுகாட்டைச் சூழ்ந்திருக்கும் சுடு காட்டில் இரவு தோறும் கூத்து நிகழ்த்துபவர் . அவர் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார் . | |
| Go to top |
கடம் மன்னு களியானை உரிவை போர்த்தார்; கானப்பேர் காதலார்; காதல்செய்து மடம் மன்னும் அடியார் தம் மனத்தின் உள்ளார்; மான் உரி தோல் மிசைத்தோளார்; மங்கை காண நடம் மன்னி ஆடுவார்; நாகம் பூண்டார்; நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்; படம் மன்னு திருமுடியார்; பைங்கண்ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
|
6
|
கானப்பேர் என்ற திருத்தலத்தை விரும்புபவரும் , உமாதேவி காண இடையறாது நடம் ஆடுபவரும் ஆகிய பந்தணை நல்லூர்ப் பெருமான் , மத யானைத் தோலைப் போர்த்தவர் . எம் பெருமான் அருளியவாறன்றித் தாமாக ஒன்றும் அறியாராகிய அடியவர் உள்ளத்தில் உகந்து நிலையாக இருப்பவர் . மான் தோலைத் தோளில் அணிந்து , நாகத்தைத் திருமேனியிற் பூண்டு , முடியிலும் பாம்பினைச் சூடி , நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓது கின்ற நாவினை உடையவர் . அவர் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றவராவர் . | |
முற்றா மதிச் சடையார்; மூவர் ஆனார்; மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்; கற்றார்பரவும்கழலார்;திங்கள்,கங்கையாள்,காதலார்; காம்புஏய்தோளி பற்று ஆகும் பாகத்தார்; பால் வெண் நீற்றார்; பான்மையால் ஊழி, உலகம், ஆனார்; பற்றார் மதில் எரித்தார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
|
7
|
பந்தணைநல்லூர்ப் பெருமான் மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர் . அவர் பிறை சூடிய சடையினர் . மூவுலகும் துதிக்கும் முதல்வர் . சான்றோர் துதிக்கும் திருவடிகளை உடையவர் . பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர் . மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகர் . வெள்ளியநீறு அணிபவர் . தம் பண்பினால் உலகங்கள் ஆகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர் . பகைவர் மதில்களை எரித்த அப்பெருமானார் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றார் . | |
கண் அமரும் நெற்றியார்; காட்டார்; நாட்டார்; கன மழுவாள் கொண்டது ஓர் கையார்; சென்னிப் பெண் அமரும் சடைமுடியார்; பேர் ஒன்று இல்லார்; பிறப்பு இலார்; இறப்பு இலார்; பிணி ஒன்று இல்லார்; மண்ணவரும், வானவரும், மற்றையோரும், மறையவரும், வந்து எதிரே வணங்கி ஏத்தப் பண் அமரும் பாடலார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
|
8
|
தமக்கெனப் பெயர் ஒன்றும் இல்லாதவரும் , பிறப்பு இறப்பு பிணி என்பன அற்றவரும் , நில உலகத்தவரும் வானுலகத்தவரும் , பிரமன் உபபிரமர்களும் , உரகர் முதலிய மற்றவர்களும் எதிரே வந்து வணங்கித் துதித்துப் பண்ணோடு கூடிப் பாடுதலை உடையவரும் ஆகிய பந்தணைநல்லூர்ப் பெருமான் கங்கை தங்கும் சடையினர் . கண் பொருந்திய நெற்றியை உடையவர் . கையில் மழு ஏந்தியவர் . காட்டிலும் , நாட்டிலும் உகந்தருளியிருக்கும் அப் பெருமான் பைங்கண் விடை ஊர்ந்து பலி ஏற்றார் . | |
ஏறு ஏறி ஏழ் உலகும் ஏத்த நின்றார்; இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்; நீறு ஏறு மேனியார்; நீலம் உண்டார்; நெருப்பு உண்டார்; அங்கை அனலும் உண்டார்; ஆறு ஏறு சென்னியார்; ஆன் அஞ்சு ஆடி; அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்; பாறு ஏறு வெண்தலையார், பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
|
9
|
பந்தணை நல்லூர்ப் பெருமான் இடபத்தை இவர்ந்து ஏழுலகும் துதிக்குமாறு நிலையாக இருப்பவர் . தேவர்களால் எப்பொழுதும் வழிபடப்படுபவர் . நீறணிந்த மேனியர் . விடத்தை உண்டவர் . வேள்வித்தீயில் இடப்படும் அவியை நுகர்பவர் . உள்ளங்கையில் தீயைக் கொண்டு அதனால் அடியார் வினைகளை நீக்குபவர் . கங்கை தங்கு சடையினர் . ஆன்ஐந்தால் அபிடேகம் செய்யப்படுபவர் . தீப்போன்ற விடத்தைக் கக்கும் ஐந்தலை நாகத்தை இடையில் இறுகச்சுற்றியவர் . புலால் நாற்றம் கண்டு பருந்துகள் சுற்றி வட்டமிடும் மண்டையோட்டை ஏந்திப் பைங்கண் ஏறு இவர்ந்து பலியேற்றவர் ஆவர் . | |
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார்; காரோணம் காதலார்; காதல்செய்து நல்லூரார்; ஞானத்தார்; ஞானம் ஆனார்; நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்; மல் ஊர் மணி மலையின்மேல் இருந்து, வாள் அரக்கர்கோன் தலையை மாளச் செற்று, பல் ஊர் பலி திரிவார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
|
10
|
ஞானத்தை அடியார்க்கு வழங்குபவராய்த் தாமே ஞானவடிவாகி , நான்மறையும் ஆறு அங்கமும் எப்பொழுதும் ஓதும் நாவினை உடையவராய் , நாகை , குடந்தைக் காரோணங்களையும் நல்லூரையும் உகந்தருளியிருப்பவர் பந்தணைநல்லூர்ப் பெருமான் . அவர் கற்கள் நிறைந்த மதில்கள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவர் . வலிமை மிகுந்த அழகிய கயிலாய மலைமேலிருந்து கொடிய அரக்கர் மன்னனாகிய இராவணன் தலைகள் சிதறுமாறு கோபித்த அப் பெருமான் பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்தவர் . அவர் பைங்கண் ஏறு இவர்ந்து பணி ஏற்றவர் . | |
| Go to top |