சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.019   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருஆலவாய் (மதுரை) - திருத்தாண்டகம் அருள்தரு மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=XBV0vMkPOq4   Add audio link Add Audio

முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி; முதிரும் சடைமுடி மேல் முகிழ்வெண்திங்கள்
வளைத்தானை; வல் அசுரர் புரங்கள் மூன்றும், வரை சிலையா வாசுகி மா நாணாக் கோத்துத்
துளைத்தானை, சுடு சரத்தால் துவள நீறா; தூ  முத்த வெண் முறுவல் உமையோடு ஆடித்
திளைத்தானை;-தென் கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

1
எல்லாப் பொருள்களின் தோற்றத்திற்கும் தான் முன்னே நிற்பவனாய் , செறிந்த சடைமுடிமேல் பிறையை வளைவாகச் சூடியவனாய் , அசுரர்களுடைய மும்மதில்களையும் மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் கொண்டு கொடிய அம்பினாலே அழிந்து சாம்பலாகும்படி அழித்தவனாய் , தூய முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியோடு விளையாடி மகிழ்ந்தவனாய் அழகிய மதுரை மாநகரத்து ஆலவாய் ஆகிய திருக்கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருவடிகளையே தியானிக்கும் வாய்ப்பினை யான் பெற்றுள்ளேனே என்று தாம் பெற்ற பேற்றின் அருமையை உணர்ந்து கூறியவாறாம் .

விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை, மேல் ஆடு புரம் மூன்றும் பொடி செய்தானை,
பண் நிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானை, பசும் பொன்னின் நிறத்தானை, பால் நீற்றானை,
உள்-நிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான் தன்னை,-
தெள்-நிலவு தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

2
தேவருலகிலுள்ள மேலாருக்கும் மேலாயவனாய் , வானத்தில் உலவிய முப்புரங்களையும் அழித்தவனாய் , வண்டுகளின் பண்ணோசை நிலைபெற்ற பசிய பொழில்களை உடைய பழன நகரில் உள்ளானாய் , பசும் பொன்நிறத்தனாய் , வெண்ணீறு அணிந்தவனாய் , சடைக்கற்றைக்குள் அடங்கிய கங்கையை உடையவனாய் , உமையோடு வெளிப்படையாக உடனாகியும் அவளைத் தன் உருவில் மறைத்தும் இருப்பவனாய்த் தெளிந்த ஞானம் உடையார் பலரும் தங்கியிருக்கும் தென் கூடல் ஆலவாயில் உள்ள சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

நீர்த்திரளை நீள் சடைமேல் நிறைவித்தானை, நிலம் மருவி நீர் ஓடக் கண்டான் தன்னை,
பால்-திரளைப் பயின்று ஆட வல்லான் தன்னை,
பகைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்தான் தன்னை,
கால்-திரள் ஆய் மேகத்தினுள்ளே நின்று கடுங் குரல் ஆய் இடிப்பானை, கண் ஓர் நெற்றித்
தீத்திரளை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

3
கங்கையை நீண்ட சடையில் தங்கச் செய்தவனாய் , பின் பகீரதன் பொருட்டாக அதன் ஒரு பகுதியை நிலத்தின்கண் பெருகி ஓடவிட்டவனாய் , பால் , தயிர் , நெய் என்பவற்றின் அபிடேகத்தைப் பலகாலும் உடையவனாய் , பகை கொண்டு வந்த கொடிய கூற்றுவனைத் தண்டித்தவனாய் , காற்றின் திரட்சியாய் மேகத்தின் உள்ளே இருந்து கொடிய இடியாக ஓசை எழுப்புபவனாய் , நெற்றியின் கண் தீத்திரட்சி போன்ற கண்ணை உடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

வானம், இது, எல்லாம் உடையான் தன்னை; வரி அரவக் கச்சானை; வன்பேய் சூழக்
கானம் அதில் நடம் ஆட வல்லான் தன்னை, கடைக் கண்ணால் மங்கையையும் நோக்கா; என்மேல்
ஊனம் அது எல்லாம் ஒழித்தான் தன்னை; உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற
தேன் அமுதை;-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

4
வான் உலகினையும் நிலவுலகினையும் தன் உடைமையாக உடையவனாய்ப் பாம்பினைக் கச்சாக அணிந்தவனாய் வலிய பேய்கள் சூழச்சுடுகாட்டில் கூத்தாட வல்லவனாய் , தன் கடைக்கண்களால் உமாதேவியை நோக்கி அவள் பரிந்துரைத்த குறிப்பினையும் பெற்று என்பால் உள்ள குறைகளை எல்லாம் நீக்கினவனாய் , அடியேன் உள்ளத்துள்ளே ஞானவடிவினனாய் நின்று தேன் போலவும் அமுது போலவும் இனியனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

ஊரானை, உலகு ஏழ் ஆய் நின்றான் தன்னை,
ஒற்றை வெண் பிறையானை, உமையோடு என்றும்
பேரானை, பிறர்க்கு என்றும் அரியான் தன்னை, பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும்
ஆரானை, அமரர்களுக்கு அமுது ஈந்தானை, அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்
சீரானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

5
கயிலை மலையை இருப்பிடமாக உடையவனாய் , ஏழுலகமும் பரந்து இருப்பவனாய் , ஒற்றைப்பிறையை அணிந்தவனாய் , உமாதேவியை விடுத்து என்றும் நீங்காதவனாய் , அடியார் அல்லாதார் நினைத்தற்கு அரியனாய் , பேயோடு எந்நாளும் சுடுகாட்டில் கூத்தாடுதலில் தெவிட்டாதவனாய் , தான் விடத்தை உண்டு அமரர்களுக்கு அமுதம் ஈந்தவனாய் , வேதமந்திரங்களைக் கூறிப் பிரமனும் திருமாலும் துதிக்கும் புகழுடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .
Go to top

மூவனை, மூர்த்தியை, மூவா மேனி உடையானை, மூ உலகும் தானே எங்கும்
பாவனை, பாவம் அறுப்பான் தன்னை, படி எழுதல் ஆகாத மங்கையோடும்
மேவனை, விண்ணோர் நடுங்கக் கண்டு விரிகடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த
தேவனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

6
யாவரினும் முற்பட்டவனாய் , அடியார்கள் விரும்பிய வடிவில் காட்சி வழங்குபவனாய் , என்றும் மூத்தலில்லாத திருமேனியை உடையவனாய் , தானே மூவுலகம் முழுதும் பரவியிருப்பவனாய் , அடியவர்களின் தீவினையைப் போக்குபவனாய் , ஓவியத்து எழுதவொண்ணா அழகிய உமையோடு விரும்பி யிருப்பவனாய் , தேவர்கள் நடுங்குதலைக் கண்டு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அமுதத்தை ஈந்த தேவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே .

துறந்தார்க்குத் தூ நெறி ஆய் நின்றான் தன்னை, துன்பம் துடைத்து ஆள வல்லான் தன்னை,
இறந்தார்கள் என்பே அணிந்தான் தன்னை, எல்லி நடம் ஆட வல்லான் தன்னை;
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான் தன்னை, மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும்
சிறந்தானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

7
பற்றறுத்த சான்றோருக்குப் பற்றுக்கோடாகும் வழியாய் இருப்பவனாய் , அடியார்களுடைய துன்பத்தைப் போக்கி அவர்களை ஆட்கொள்ளவல்லவனாய் , இறந்தவர்களுடைய எலும்பையே அணிந்தவனாய் , இரவில் கூத்தாடவல்லவனாய்த் தன்னை மறந்த அசுரர்களின் மும்மதில்களையும் அழித்தவனாய் , வேறுபற்றில்லாத அடியார்களுக்கு என்றும் மேம்பட்டு அருளுபவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற
கருத்தானை, கருத்து அறிந்து முடிப்பான் தன்னை,
தூயானை, தூ வெள்ளை ஏற்றான் தன்னை,
சுடர்த் திங்கள் சடையானை, தொடர்ந்து நின்ற என்
தாயானை, தவம் ஆய தன்மையானை, தலை ஆய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

8
அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி , அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவனாய் , மாசற்றவனாய் , கலப்பற்ற வெள்ளை நிறக் காளையை உடையவனாய் , பிறையைச் சடையில் சூடியவனாய் , தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவுபவனாய்த் தவத்தின் பயனாக உள்ளவனாய் , மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்களுக்கு என்றும் சேய்மையிலுள்ளவனாய் இருக்கும் தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

பகைச் சுடர் ஆய்ப் பாவம் அறுப்பான் தன்னை, பழி இலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை,
வகைச் சுடர் ஆய் வல் அசுரர் புரம் அட்டானை,
வளைவு இலியாய் எல்லார்க்கும் அருள் செய்வானை,
மிகைச் சுடரை, விண்ணவர்கள், மேல் அப்பாலை,   மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும்
திகைச் சுடரை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

9
தீவினையாகிய இருளைப் போக்கும் ஞானச் சுடராய் , அடியார்களின் பாவங்களைப் போக்குபவனாய்ப் பழி ஏதும் இல்லாதவனாய் நஞ்சினை உண்டு தேவர்க்கு அமுதம் ஈந்தவனாய்க் கிளைத்தெழுந்த தீயாகி அசுரருடைய மும்மதில்களையும் அழித்தவனாய் , நடுவுநிலை தவறாதவனாய் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவனாய் , மேலான ஒளிவடிவினனாய் , விண்ணவர்களுக்கு மேலும் உயர்வுதரும் அப்பக்தியாய் உள்ளவனாய் , மேம்பட்ட தேவர்களுக்கும் ஒளிகாட்டும் கலங்கரை விளக்காக உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

மலையானை, மா மேரு மன்னினானை, வளர்புன்   சடையானை, வானோர் தங்கள்
தலையானை, என் தலையின் உச்சி என்றும்   தாபித்து இருந்தானை, தானே எங்கும்
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை, தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த
சிலையானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

10
கயிலை மலையை உடையவனாய் , மேரு மலையில் தங்கியிருப்பவனாய் , வளர்ந்த செஞ்சடையினனாய் , வானோருள் மேம்பட்டவனாய் , என் தலையின் உச்சியில் என்றும் நிலைபெற்றிருப்பவனாய் , எங்கும் தனக்கு நிகராவார் இல்லாதவனாய்த் தன்னை அணுகாது பகையைப்பூண்ட அசுரர் மதில்கள் மூன்றும் அழியுமாறு பயன்படுத்திய வில்லை உடையவனாய் இருக்கும் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .
Go to top

தூர்த்தனைத் தோள் முடிபத்து இறுத்தான் தன்னை, தொல்-நரம்பின் இன் இசை கேட்டு அருள் செய்தானை,
பார்த்தனைப் பணி கண்டு பரிந்தான் தன்னை, பரிந்து அவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை,
ஆத்தனை, அடியேனுக்கு அன்பன் தன்னை, அளவு இலாப் பல் ஊழி கண்டு நின்ற
தீர்த்தனை,-தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

11
பிறன் மனைவியை விரும்பிய இராவணனுடைய தோள்களையும் பத்துத்தலைகளையும் நசுக்கியவனாய் , பின் அவன் எழுப்பிய வீணை இசைகேட்டு அருள் செய்தவனாய் அருச்சுனனுடைய தொண்டினைக் கண்டு அவனுக்கு இரங்கிப் பாசுபதாத்திரம் ஈந்தவனாய் , நம்பத்தகுந்தவனாய் , அடியேன் மாட்டு அன்பு உடையவனாய் , அளவற்ற பல ஊழிக்காலங்களையும் கண்டும் தன் நிலைபேற்றில் மாறுபடாது இருக்கும் பரிசுத்தனாகிய தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
2.066   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
2.070   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்   (திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) )
3.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.047   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.052   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்   (திருஆலவாய் (மதுரை) )
3.087   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி   (திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
3.108   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.115   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
3.120   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
4.062   திருநாவுக்கரசர்   தேவாரம்   வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
6.019   திருநாவுக்கரசர்   தேவாரம்   முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்   (திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000