சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.021   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருஆக்கூர் - திருத்தாண்டகம் அருள்தரு கட்கநேத்திராம்பிகை உடனுறை அருள்மிகு சுயம்புநாதவீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=-laIR4Oo2Sg   Add audio link Add Audio

முடித் தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூ உலகும் தாம் ஆகி நின்றார் போலும்;
கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்; கல்லலகு பாணி பயின்றார் போலும்;
கொடித் தாமரைக்காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்;
அடித்தாமரை மலர் மேல் வைத்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

1
முடியில் தாமரை மலரை அணிந்த மூர்த்தியாய் மூவுலகும் பரந்தவராய் , தாமரைக் கண்ணராய் , கல்லலகு என்ற வாச்சியத்தை ஒலிக்கப் பழகியவராய் , தம்மை அருச்சிப்பதற்குத் தாமரைக் கூட்டத்தை நாடும் அடியவர்கள் செய்யும் குற்றேவலை மகிழ்ந்த இளையராய் , தம் திருவடித் தாமரைகளை அடியவர்களின் உள்ளத்தாமரையில் வைத்தவராய் , ஆக்கூரிலே ( தாமாகவே இலிங்க வடிவில் எழுந்தருளியவர் ) தான்தோன்றியப்பர் உள்ளார் .

ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும்; உணரப்படாதது ஒன்று இல்லை போலும்;
காதில் குழை இலங்கப் பெய்தார் போலும்; கவலை, பிறப்பு, இடும்பை, காப்பார் போலும்;
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும்; விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்;
ஆதிக்கு அளவு ஆகி நின்றார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

2
ஒரு நூலையும் ஆசிரியர்பால் கல்லாது எல்லா நூல்களையும் அறிந்தவராய் எல்லாச் செய்திகளையும் உணர்ந்தவராய்க் காதில் ஒளி வீசுமாறு குழையை அணிந்தவராய்க் கவலைக்கு இடமாகிய பிறவித்துன்பம் அடியவருக்கு வாராமல் தடுப்பவராய் , வேதங்களும் ஆறு அங்கங்களும் ஓதியவராய் , விடத்தால் சூழப் பட்டுக் கறுத்த கழுத்தினராய்த் தாமே எல்லாவற்றிற்கும் ஆதியாய்த் தமக்கு ஓர் ஆதியின்றி ஆக்கூரில் தான் தோன்றியப்பர் உகந்தருளி யுள்ளார் .

மை ஆர் மலர்க் கண்ணாள் பாகர் போலும்; மணி   நீலகண்டம் உடையார் போலும்;
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும்; நீறு   ஏறு தோள் எட்டு உடையார் போலும்;
வை ஆர் மழுவாள் படையார் போலும்; வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்;
ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

3
மைபூசிய மலர்போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய் , நீலகண்டராய் , நெய்அணிந்த முத்தலைச்சூலக் கையராய் . திருநீறுபூசிய எண் தோளராய் , கூரிய மழுப்படையினராய் , காலைச் சூரியன் போன்ற செந்நிற ஒளியினராய் , ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுகக் கட்டியவராய்த் தான் தோன்றியப்பர் அடியவர் அகக்கண்களுக்குக் காட்சி வழங்குகின்றார் .

வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும்; வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் போலும்;
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும்; பூங் கங்கை தோய்ந்த சடையார் போலும்;
கடி விளங்கு கொன்றை அம்தரார் போலும்; கட்டங்கம் ஏந்திய கையார் போலும்;
அடி விளங்கு செம் பொன்கழலார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

4
கூர்மை விளங்கும் வெள்ளிய மழுப்படையைக் கையாளுதலில் வல்லவராய்க் கடலில் தோன்றிய வஞ்சனை உடைய கரிய நஞ்சினை உண்டவராய்த் திருநீற்றோடு பூணூலை அணிந்த மார்பினராய் , அழகிய கங்கை தோய்ந்த சடையினராய் , மணம்நாறும் கொன்றை மாலையினராய்க் கட்டங்கம் என்ற படையை ஏந்திய கையராய்த் திருவடியில் பொற்கழல் அணிந்தவராய்த் தான்தோன்றி யப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ, இடு வெண்தலை கலனா ஏந்தி, நாளும்
மேகாசம் கட்டழித்த வெள்ளிமாலை புனல் ஆர் சடைமுடிமேல் புனைந்தார் போலும்;
மா காசம் ஆய வெண்நீரும், தீயும், மதியும், மதி பிறந்த விண்ணும், மண்ணும்,
ஆகாசம், என்று இவையும் ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

5
புலித்தோலை இடையில் உடுத்துப் பாம்பு மேலாடையாக உடல் மேல் தொங்க மண்டையோட்டினையே பிச்சை வாங்கும் பாத்திரமாக ஏந்தி மின்னலை வென்று ஒளிவீசும் கங்கை தங்கும் சடைமுடிமேல் வெண்பூமாலைகளைச் சூடி மிக்க ஒளியை உடைய வெள்ளிய நீரும் தீயும் சந்திரனும் சந்திரன் உலவும் விண்ணும் மண்ணுலகும் வானுலகும் ஆகிய எங்கும் பரந்திருப்பவராகிய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .
Go to top

மாது ஊரும் வாள் நெடுங்கண், செவ்வாய், மென்தோள், மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும்;
மூதூர், முதுதிரைகள், ஆனார் போலும்; முதலும் இறுதியும் இல்லார் போலும்;
தீது ஊரா நல்வினை ஆய் நின்றார் போலும்; திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும்;
ஆதிரைநாள் ஆய் அமர்ந்தார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

6
காதல் மிகுகின்ற ஒளியை உடைய நெடிய கண்கள் , சிவந்த வாய் , மெல்லிய தோள்கள் இவற்றை உடைய பார்வதியை மார்பில் அணைத்துப்பின் பாகமாகக் கொண்டு நிலமும் கடலுமாய் , ஆதியந்தம் அற்றவராய்த் தீங்குகளை வெல்லும் நல் வினை வடிவினராய் , எண்திசைகளும் தமக்கே உடைமையாக உடைய செல்வராய் , ஆதிரை நட்சத்திரத்தை விரும்பிக் கொள்பவராய்த் தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகின்றார் .

மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்; மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்;
கோலானைக் கோ அழலால் காய்ந்தார் போலும்; குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்;
காலனைக் காலால் கடந்தார் போலும்; கயிலாயம் தம் இடமாக் கொண்டார் போலும்;
ஆல், ஆன் ஐந்து ஆடல், உகப்பார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

7
பெரிய யானையின் தலையைப் பிளந்தவராய் மான்தோலை உடையாக விரும்பி ஏற்று , அம்பினை உடைய மன்மதனைத் தம் கண்நெருப்பினால் கோபித்துச் சாம்பலாக்கி இளம்பிறையைச் சடைமேல் சூடிக் காலனைக் காலால் ஒறுத்துக் கயிலாயத்தைத் தம் இருப்பிடமாக ஏற்றுப் பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் செய்யப் படுவதனை உகந்த தான்தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்;
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும்; ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்;
எண்ணாயிரம் கோடி பேரார் போலும்; ஏறு   ஏறிச் செல்லும் இறைவர் போலும்;
அண்ணாவும், ஆரூரும், மேயார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

8
நெற்றிக் கண்ணராய்க் காமனை அக்கண்ணின் தீயினால் எரித்தவராய்ப் பிறர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவராய் , ஊழித் தீப்போன்ற ஒளியினை உடையவராய்ப் பல கோடிப் பேர்களுக்கு உரியவராய் , காளையை இவர்ந்து செல்லும் தலைவராய் , அண்ணாமலையையும் , ஆரூரையும் உகந்தருளியிருப்பவராய்த் தான் தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

கடி ஆர் தளிர் கலந்த கொன்றைமாலை, கதிர்   போது, தாது அணிந்த கண்ணி போலும்;
நெடியானும் சது முகனும் நேட நின்ற, நீல நல் கண்டத்து, இறையார் போலும்;
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன்மேனி மணிவண்ணம், தம் வண்ணம் ஆவார் போலும்;
அடியார் புகல் இடம் அது ஆனார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

9
புதுமை நிறைந்த தளிர்கள் கலந்த கொன்றைப் பூ மாலை , விடு பூக்கள் மகரந்தம் நிரம்பிய முடிமாலை இவற்றைச் சூடியவராய்த் திருமாலும் பிரமனும் தேடுமாறு ஒளிப்பிழம்பாய் நின்ற நீலகண்ட இறைவராய்த் தீவண்ணமும் பொன் வண்ணமும் தம் கூற்றிலும் நீல மணிவண்ணம் தேவியின் கூற்றிலும் அமைந்த திருமேனியராய் அடியவர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக உள்ள தான்தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .

திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து, அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர் ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்;
கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ அன்ன கனலார் போலும்;
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

10
பாற்கடற்பரமனும் , செந்தாமரைமேல் உறையும் பிரமனும் ஆராய்ந்து தேடியும் காண முடியாது நாணுமாறு செய்த மேம்பட்டவராய் , போரிடும் காளையை இவர்ந்து செல்பவராய் , நெகிழ்ச்சியில்லாத மலையையே வில்லாகவும் பாம்பையே நாணாகவும் கொண்டு ஊழித்தீயை ஒத்த கோலத்தை உடையவராய்ப் பகைவர்களின் மும்மதில்களையும் அழித்த செயலுடைய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஆக்கூர்
2.042   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அக்கு இருந்த ஆரமும், ஆடு
Tune - சீகாமரம்   (திருஆக்கூர் சுயம்புநாதேசுவரர் கட்கநேத்திரவம்மை)
6.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   முடித் தாமரை அணிந்த மூர்த்தி
Tune - திருத்தாண்டகம்   (திருஆக்கூர் சுயம்புநாதவீசுவரர் கட்கநேத்திராம்பிகை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000