வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மதமத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி, திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று, திசை சேர நடம் ஆடி, சிவலோக(ன்)னார் உண்டார் நஞ்சு, உலகுக்கு ஓர் உறுதி வேண்டி; ஒற்றியூர் மேய ஒளி வண்ண(ன்)னார்; கண்டேன், நான் கனவு அகத்தில்; கண்டேற்கு என் தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்ட(வ்)வே.
|
1
|
சிவலோகநாதராய ஒற்றியூரில் விரும்பி உறையும் சோதிவடிவினர் , வண்டுகள் மொய்க்கும் செந்தாமரை , கழுநீர் , ஊமத்தை இவற்றை அணிந்த சடை மீது பிறை சூடி , ஆயிரம் தோள்களையும் எட்டுத் திசைகளின் எல்லைகளையும் அவை அடையுமாறு வீசிக்கொண்டு , கூத்தாடி , உலகுக்கு நலன் பயப்பதற்காக விடத்தை உண்டவர் . அவரை அடியேன் கனவில் கண்டேனாக , அவ்வளவில் என் கடிய நோயும் அவை செய்த செயல்களும் நீங்கி விட்டன . | |
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து, வெள் ஏறு ஏறி, அணி கங்கை செஞ்சடை மேல் ஆர்க்கச் சூடி, பாகத்து ஓர் பெண் உடையார்; ஆணும் ஆவார்; பசு ஏறி உழி தரும் எம் பரமயோகி; காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக் கனலா எரி விழித்த கண் மூன்றி(ன்)னார் ஓமத்தால் நால் மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே.
|
2
|
மார்பில் பாம்பு சூடி , வெண்ணிறக் காளையை இவர்ந்து , கங்கையைச் சடையில் ஆரவாரிக்குமாறு சூடிப் பார்வதி பாகராய் , ஆண்மைத் தொழிலராய் , அக்காளையை இவர்ந்தே உலகங்களைச் சுற்றி உலவும் மேம்பட்ட யோகியாய் , காமவேட்கையில் பழகுகின்ற ஐந்து மலரம்புகளை உடைய மன்மதன் சாம்பலாகி விழுமாறு வெகுண்டு மூன்றாம் கண்ணைத் தீப் புறப்பட விழித்த பெருமான் , வேள்விகளோடு நான்கு வேதம் ஓதுதலும் நீங்காத ஞான ஒளி விளங்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கின்றார் . | |
வெள்ளத்தைச் செஞ்சடை மேல் விரும்பி வைத்தீர்! வெண்மதியும் பாம்பும் உடனே வைத்தீர்! கள்ளத்தை மனத்து அகத்தே கரந்து வைத்தீர்! கண்டார்க்குப் பொல்லாது கண்டீர்! எல்லே கொள்ளத்தான் இசை பாடிப் பலியும் கொள்ளீர்! கோள் அரவும், குளிர்மதியும், கொடியும், காட்டி உள்ளத்தை நீர் கொண்டீர் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உடைய கோவே!.
|
3
|
வேதம் ஓதுதல் நீங்காத ஞான ஒளி திகழும் ஒற்றியூரை உடைய தலைவரே , நீர் விரும்பிக் கங்கையைச் சடையில் சூடி , அதன்கண் பிறையையும் பாம்பையும் உடன் வைத்து , காதல் உணர்வாகிய வஞ்சனையை மனத்தில் மறைத்து வைத்திருப்பது காண்பவர்களுக்குப் பெரியதொரு தீங்காய்த் தோன்றுவதாகும் . பகற்பொழுதில் பிச்சை வாங்கவருபவரைப் போல இசையைப் பாடிக் கொண்டு வந்து , பிச்சையையும் ஏலாது , உம்முடைய பாம்பு , பிறை , காளை எழுதிய கொடி இவற்றைக் காணச் செய்து , எம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டீர் . இதனைச் சற்று நினைத்துப் பார்ப்பீராக . | |
நரை ஆர்ந்த விடை ஏறி, நீறு பூசி, நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து, ஓர் தலை கை ஏந்தி, உரையா வந்து, இல் புகுந்து, பலி தான் வேண்ட, எம் அடிகள்! உம் ஊர்தான் ஏதோ? என்ன, விரையாதே கேட்டியேல், வேல்கண் நல்லாய்! விடும் கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றும், திரை மோதக் கரை ஏறிச் சங்கம் ஊரும், திரு ஒற்றியூர் என்றார்; தீய ஆறே!.
|
4
|
வெள்ளை நிறக் காளையை இவர்ந்து , நீறுபூசி , இடுப்பில் பாம்பைக் கச்சாக உடுத்தி , மண்டைஓட்டைக் கையில் ஏந்தி , ஏதும் பேசாது , எம் இல்லத்தினுள் வந்து பிச்சை வேண்ட , ` எம் வணக்கத்திற்கு உரியவரே ! உம் ஊர் யாது ?` என்று யான் வினவ ` வேல் போன்ற கண்களை உடைய பெண்ணே ! அவசரப் படாமல் கேள் . கடலில் மரக்கலங்கள் காணப்படுவதும் , திரைகள் தள்ளுவதனால் சங்குகள் கரையை அடைந்து தவழ்வதுமாகிய திருஒற்றியூர் ` என்றார் . ஒற்றியூரே ஒழியச் சொந்த ஊர் ஒன்று இல்லாமையால் அவரை எங்குச் சென்று மீண்டும் காணஇயலும் ! என்ற எண்ணத்தால் அவருக்கு என ஒரு சொந்த ஊர் இல்லாதது என் தீவினையே என்றாள் . | |
மத்தமாகளியானை உரிவை போர்த்து, வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று, பித்தர் தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி, பேதையரை அச்சுறுத்தி, பெயரக் கண்டு, பத்தர்கள் தாம் பலர் உடனே கூடிப் பாடி, பயின்று இருக்கும் ஊர் ஏதோ? பணியீர்! என்ன, ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே.
|
5
|
மதயானைத் தோலைப் போர்த்தித் தேவருலகில் இருக்க வேண்டிய அவர் , எம் வீட்டிற்குள் வந்து பைத்தியம் பிடித்தவரைப் போலத் தாமே தம் பெருமையைப் பேசிக்கொண்டு , பெண்களைப் பயமுறுத்திவிட்டு வெளியே வரக் கண்டு , பத்தர்கள் பலரும் அவரை அணுகி ` நீங்கள் பாடிக்கொண்டே தங்கியிருக்கும் ஊர் யாது ?` என்று வினவப் பங்குனி உத்திரத்தில் தீர்த்தவிழாக் கொண்டாடும் ஒளி திகழும் ஒற்றியூர் என்றார் . | |
| Go to top |
கடிய விடை ஏறி, காளகண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி, இடிய பலி கொள்ளார்; போவார் அல்லர்; எல்லாம் தான் இவ் அடிகள் யார்? என்பாரே; வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம்; மயிலாப்புள்ளே செடி படு வெண்தலை ஒன்று ஏந்தி வந்து, திரு ஒற்றியூர் புக்கார், தீய ஆறே!.
|
6
|
நீலகண்டர் கைகளில் மானையும் மழுவையும் ஏந்தி , விரைந்து செல்லும் காளையை இவர்ந்து , இடவந்த உணவையும் பிச்சையாகக் கொள்ளாராய் , இடத்தை விட்டு நீங்காதவராயும் உள்ள இப்பெரியவர் யார் என்று எல்லோரும் மருண்டனர் . முன்பு இவர் வடிவுடையமங்கையும் தாமுமாய் மயிலாப்பூரில் வந்த காட்சியைக் கண்டுள்ளோம் . பின் ஒரு நாள் புலால் நாற்றம் வீசும் மண்டை ஓட்டை ஏந்தி இங்கு உலவியவராய்த் திருவொற்றியூரில் புகுந்து விட்டார் . இவர் எவ்வூரார் என்பதனைக் கூட அறிய முடியாமல் இருப்பது நம் தீவினையாகும் . | |
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார், வாழ்த்துவார், வந்து நிற்பார், எல்லை எம்பெருமானைக் காணோம் என்ன, எவ் ஆற்றால் எவ்வகையால் காணமாட்டார்; நல்லார்கள் நால் மறையோர் கூடி நேடி, நாம் இருக்கும் ஊர் பணியீர், அடிகேள்! என்ன, ஒல்லை தான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே.
|
7
|
தேவர்கள் எல்லோரும் கூடி வணங்கி வாழ்த்தி நிற்கும் பெருமான் எல்லாச் செயல்கள் செய்வதிலும் வல்லாராகவே , பகற் காலத்தில் எந்த வழியினாலும் எந்த வடிவினாலும் தேவர்கள் தம்மைக் காணமாட்டாதவராய் , இவ்வுலகில் எழுந்தருளப் பெண்களும் நான்மறைவல்லோர்களும் ஒன்று கூடி அவரைத் தேடிக் கண்டு ` சான்றீரே ! தாங்கள் இருக்கும் ஊர் யாது ` என்று வினவ , விரைவில் கடல் அலைகள் கரையில் மோதி மீளும் ஒற்றியூர் என்கின்றார் . | |
நிலைப்பாடே நான் கண்டது; ஏடீ, கேளாய்! நெருநலை நன்பகல இங்கு ஓர் அடிகள் வந்து, கலைப்பாடும் கண்மலரும் கலக்க, நோக்கி, கலந்து பலி இடுவேன்; எங்கும் காணேன்; சலப்பாடே; இனி ஒரு நாள் காண்பேன் ஆகில், தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம், உலைப்பாடே படத் தழுவி, போகல் ஒட்டேன்-ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே.
|
8
|
தோழி ! நான் என் பண்டை நிலையை அடைவதற்கு முடிவு செய்த வழியைக் கூறுகின்றேன் கேளாய் . நேற்று நடுப்பகலில் இங்குப் பெரியவர் ஒருவர் வந்து என் உடையினது பெருமையும் கண்களும் அவர் உள்ளத்திலும் கண்களிலும் பொருந்துமாறு என்னைக் கூர்ந்து நோக்கி என்னை உள்ளத்தால் கலந்தாராக , அவருக்கு உணவு கொண்டு வரச்சென்ற நான் திரும்பி வர எங்கும் காணேனாய் , வஞ்சனையாக மறைந்து விட்டார் . இனி ஒருநாள் அவரைக் காண்பேனானால் அவர் மார்பிலே என் மார்பு அழுந்தும் வண்ணம் என் முலைச்சுவடு அவர் மார்பில் படும்படியாகத் தழுவிக்கொண்டு , ஒற்றியூரில் தங்கி இங்கு உலவும் அவரை , என்னை விடுத்து ஒற்றியூருக்குப் போக விடமாட்டேன் . | |
மண் அல்லை; விண் அல்லை; வலயம் அல்லை; மலை அல்லை; கடல் அல்லை; வாயு அல்லை; எண் அல்லை; எழுத்து அல்லை; எரியும் அல்லை; இரவு அல்லை; பகல் அல்லை; யாவும் அல்லை; பெண் அல்லை; ஆண் அல்லை; பேடும் அல்லை; பிறிது அல்லை; ஆனாயும், பெரியாய்! நீயே; உள்-நல்லை, நல்லார்க்கு, தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே!.
|
9
|
எங்கள் உள்ளத்தால் உணரமுடியாத ஒற்றியூர்த் தலைவனே . நீ - மண் , விண் , ஞாயிறு முதலிய மண்டலங்கள் , மலை , கடல் , காற்று , எரி , எண் , எழுத்து , இரவு , பகல் , பெண் , ஆண் , பேடு , முதலிய அல்லையாயும் இவற்றுள் கரந்து எங்கும் பரந்துள்ள பெரியையாயும் பெண்களுக்குத் தீமை செய்யாத நல்ல உள்ளத்தை யாயும் உள்ளாய் . | |
மரு உற்ற மலர்க் குழலி மடவாள் அஞ்ச, மலை துளங்கத் திசை நடுங்கச் செறுத்து நோக்கி, செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள, திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி, உரு ஒற்றி அங்கு இருவர் ஓடிக் காண ஓங்கின அவ் ஒள் அழலார் இங்கே வந்து, திரு ஒற்றியூர், நம் ஊர் என்று போனார்; செறி வளைகள் ஒன்று ஒன்றாய்ச் சென்ற ஆறே!.
|
10
|
எம்பெருமான் , தன்னைப் பொருந்திய மலர் சூடிய கூந்தலை உடைய பார்வதி அஞ்சுமாறு , இராவணன் செய்த செயலால் கயிலை மலை அசைய , எண்திசைகளும் நடுங்க , அவனை வெகுண்டு நோக்கி , அவன் பலம் முழுதும் அழியுமாறு திருவடிவிரல் ஒன்றினால் அவன் அலறுமாறு அழுத்தி , தன் உருவத்தைத் தேடிப் பிரமனும் திருமாலும் முயன்று காணுமாறு தீப்பிழம்பாய் உயர்ந்த பெருமானார் இங்கே ( என்னிடத்தில் ) வந்து தம்முடைய ஊர் திருவொற்றியூர் என்று கூறிச் சென்றார் . அவர் நினைவால் என்னுடைய செறிந்த வளையல்கள் ஒன்று ஒன்றாய் கழன்று விட்டன . | |
| Go to top |