நம்மால் விரும்பப்படுபவனாய் , நான்கு வேதங்களையும் கரை கண்டவனாய் , ஞானப் பெருங்கடலாய் , நன்மையாய் , ஏகம்பனாய் , கல்லாலின் கீழ் இருந்தானாய் , கற்பகமாய் , அடியார் களுக்கு அருள் செய்வானாய் , செம்பொன் , பவளம் , முத்துத்திரள் திங்கள் , ஞாயிறு , தீ இவற்றை ஒப்பானாய் , நீராய் , செல்வமாய் உள்ள , ஆவடுதுறையிலுள்ள சிவபெருமான் திருவடிகளை அடியேன் அடைந்து தீவினையிலிருந்து பிழைத்தேன் .
மின்னானை, மின் இடைச் சேர் உருமினானை, வெண்முகில ஆய் எழுந்து மழை பொழிவான் தன்னை, தன்னானை, தன் ஒப்பார் இல்லாதானை, தாய் ஆகிப் பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி என்னானை, எந்தை பெருமான் தன்னை, இரு நிலமும் அண்டமும் ஆய்ச் செக்கர்வானே அன்னானை, ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!
மின்னாய் , மின்னிடையே சேரும் இடியாய் , வெண்முகிலாய் , மழைபெய்யும் கார்முகிலாய்ச் சுதந்திரனாய் , தன்னை ஒப்பார் பிறர் இல்லாதவனாய்ப் பல்லுயிர்க்கும் தாயாய்த் தந்தையாய் எனக்கு உரிய எந்தையாய்ப் பெரிய உலகங்களும் உலகங்களின் தொகுப்பாகிய அண்டங்களுமாய்ச் செவ்வான் போன்ற நிறத்தினனாய் , ஆவடுதுறையுள்மேய அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேனே .
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை, பவளக்கொழுந்தினை, மாணிக்கத்தின் தொத்தினை, தூ நெறி ஆய் நின்றான் தன்னை, சொல்லுவார் சொல் பொருளின் தோற்றம் ஆகி வித்தினை, முளைக் கிளையை, வேரை, சீரை, வினை வயத்தின் தன்சார்பை, வெய்ய தீர்க்கும் அத்தனை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
அடியார் உள்ளத்தே பரவினவனாய்ப் பவளக் கொழுந்தாய் , மாணிக்கக் கொத்தாய்த் தன்னை அடைவதற்குத்தானே பற்றுக்கோடாகிய வழியாய்ச் சொற்பொருளின் உணர்வாய் , வித்தாய் , முளையாய் , முளைகளின் கிளையாய் , வேராய்ப் பயனாய் , ஊழ்வினை வயத்தால் வந்த அதன் கொடிய தொடர்பான துயரங்களைத் தீர்க்கும் தலைவனாய் , ஆவடுதுறை மேய அத்தனாய் உள்ள அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை, பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும் ஏணியை, இடர்க் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அக் கரைக்கே ஏற வாங்கும் தோணியை, தொண்டனேன் தூய சோதிச் சுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின் ஆணியை, ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
பிறைதவழ் செஞ்சடையனாய்த் தன்பால் பெரும் பற்றுக் கொண்ட அடியவரை வீட்டுலகத்திற்கு ஏற்றும் ஏணியாய்த் துயர்க் கடல் சுழியில் அகப்பட்டு வருந்தும் அடியேனை ஏறி அக்கரை அடைய உதவிச்சேர்க்கும் தோணியாய் , தூய ஒளி வீசும் வெள்ளிய காதணி அணிந்தவனாய் , ஒளிவீசும் பொற்காசின் மாற்றினை அளக்கும் உரையாணியாய் ஆவடுதுறையில் மேவிய அரனடியே தொண்டனாகிய அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .
ஒரு மணியை, உலகுக்கு ஓர் உறுதிதன்னை, உதயத்தின் உச்சியை, உரும் ஆனானை, பருமணியை, பாலோடு அஞ்சு ஆடினானை, பவித்திரனை, பசுபதியை, பவளக்குன்றை, திருமணியை, தித்திப்பை, தேன் அது ஆகி, தீம்கரும்பின் இன்சுவையை, திகழும் சோதி அருமணியை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
காளை வாகனனாய் , எண்தோளனாய் , இரவில் கூத்து நிகழ்த்துபவனாய் , அழித்தற் கடவுளாய்க் கூற்றுவனை உதைத்தவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சுண்ட நீலகண்டனாய்த் திருநீறு அணிந்தவனாய் , நீண்ட பாம்பு ஒன்றனை இடையில் இறுகக் கட்டியவனாய் , நீண்ட சடையில் கங்கை சூடியாய் , ஆவடுதுறை மேய அரனடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .
கைம் மான மதகளிற்றை உரித்தான் தன்னை, கடல் வரை வான் ஆகாசம் ஆனான் தன்னை, செம் மானப் பவளத்தை, திகழும் முத்தை, திங்களை, ஞாயிற்றை, தீ ஆனானை, எம்மானை, என் மனமே கோயில் ஆக இருந்தானை, என்பு உருகும் அடியார் தங்கள் அம்மானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
துதிக்கையை உடைய தோலாத மத யானைத் தோலை உரித்தவனாய்க் கடல் , மலை , மேகம் , ஆகாயம் இவையாவும் ஆனவனாய்ச் செம்பவளமும் வெண்முத்தும் போன்றவனாய்த் திங்கள் சூரியன் தீ என்ற முச்சுடராய் , எம் தலைவனாய் , என் மனத்தையே இருப்பிடமாகக் கொண்டிருப்பது போல எலும்பும் உருகும் அடியவர்களுக்கும் தலைவனாய் , ஆவடுதுறையுள் மேய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .
மெய்யானை, பொய்யரொடு விரவாதானை, வெள்ளடையை, தண்நிழலை, வெந்தீ ஏந்தும் கையானை, காமன் உடல் வேவக் காய்ந்த கண்ணானை, கண்மூன்று உடையான் தன்னை, பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை, பாய் புலித்தோல் உடையான் தன்னை, ஐயானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
தரித்தானை, தண்கடல் நஞ்சு, உண்டான் தன்னை; தக்கன் தன் பெரு வேள்வி தகர்த்தான் தன்னை; பிரித்தானை; பிறை தவழ் செஞ்சடையினானை; பெரு வலியால் மலை எடுத்த அரக்கன் தன்னை நெரித்தானை; நேரிழையாள் பாகத்தானை; நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர அரித்தானை; ஆவடு தண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
கடலில் தோன்றிய விடத்தை உண்டு அதனைக் கழுத்தில் தரித்தவனாய்த் தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்த வனாய் , அவனுடைய செருக்கைப் போக்கியவனாய்ச் சடையில் பிறை சூடியாய்ப் பெரிய வலிமையால் கயிலையைப் பெயர்த்த இராவணனை நெரித்தவனாய்ப் பார்வதி பாகனாய்க் கீழ் மகனான அடியேனுடைய உடலில் ஏற்பட்ட நோயை நீக்கிய ஆவடுதுறை மேவிய அரன் அடியே அடிநாயேன் அடைந்து உய்ந்தேன் .