சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.060   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) - திருத்தாண்டகம் அருள்தரு அஞ்சனாட்சியம்மை உடனுறை அருள்மிகு முத்தீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=R34xLCd86Cg   Add audio link Add Audio

மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனை;  திரு அரையில் மூக்கப் பாம்பு ஒன்று
ஆத்தவனை; அக்கு, அரவம், ஆரம் ஆக
அணிந்தவனை; பணிந்து அடியார் அடைந்த அன்போடு
ஏத்தவனை; இறுவரையில்-தேனை, ஏனோர்க்கு; இன் அமுதம் அளித்தவனை; இடரை எல்லாம்
காத்தவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை;   கண் ஆரக் கண்டேன், நானே.

1
தேவர்களுக்கு எல்லாம் மூத்தவனாய், மூப்படையாத திருமேனியை உடைய முதல்வனாய், இடுப்பில் கொடிய பாம்பைச் சுற்றியவனாய், எலும்புகளையும், பாம்புகளையும் மாலையாக அணிந்தவனாய், அடியவர்களால் பணிந்து அன்போடு தோத்திரிக்கப்படுபவனாய், பெரிய மலையில் உள்ள தேன் போன்றவனாய், தேவர்களுக்கு இனிய அமுதம் வழங்கியவனாய், துயரங்களில் இருந்து எல்லோரையும் காத்தவனாய், கற்பகம் போன்றவனாய்க் கற்குடியில் மேம்பட்டவனாய் உள்ள பெருமானை அடியேன் கண்ணாரக் கண்டேன்.

செய்யானை, வெளியானை, கரியான் தன்னை, திசைமுகனை, திசை எட்டும் செறிந்தான் தன்னை,
ஐயானை, நொய்யானை, சீரியானை, அணியானை,   சேயானை, ஆன் அஞ்சு ஆடும்
மெய்யானை, பொய்யாதும் இல்லான் தன்னை, விடையானை, சடையானை, வெறித்த மான் கொள்
கையானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

2
செம்மை, வெண்மை, கருமை என்ற நிறங்களை உடையவனாய், பிரமனாய், பெருந்திசையும் பரவியவனாய், அழகியவனாய், நன்மையனாய், புகழுடையவனாய், அண்மையில் உள்ளவனாய்த் தீயவர்களுக்குத் தொலைவில் இருப்பவனாய், பஞ்ச கவ்வியத்தில் நீராடும் திருமேனியனாய், பொய்யேதும் இல்லாதவனாய், காளை வாகனனாய், சடைமுடியுடையவனாய், மருண்ட மானைக் கையில் ஏந்தியவனாய், கற்பகமாய்க் கற்குடியில் உறையும் சிறப்புடையவனை நான் கண்ணாரக் கண்டேன்.

மண் அதனில் ஐந்தை; மா நீரில் நான்கை; வயங்கு எரியில் மூன்றை; மாருதத்து இரண்டை;
விண் அதனில் ஒன்றை; விரிகதிரை; தண்மதியை, தாரகைகள் தம்மில்; மிக்க
எண் அதனில் எழுத்தை; ஏழ் இசையை; காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றிக்-
கண்ணவனை; கற்குடியில் விழுமியானை; கற்பகத்தை;-கண் ஆரக் கண்டேன், நானே.

3
மண்ணில் ஐந்து, நீரில் நான்கு, தீயில் மூன்று, காற்றில் இரண்டு, விண்ணில் ஒன்று என்ற பண்புகளுக்குக் காரணனாய், சூரியனாய், சந்திரனாய், விண்மீன்களாய், அவைகளிலும் எண்ணிறந்தனவாய் உள்ள பொருள்கள் மேல் நிகழும் சொற்களாய், ஏழிசையாய், மன்மதனுடைய அழகிய உடல் அழியுமாறு தீயை வெளிப்படுத்திய அதற்குமுன், திறக்கப்படாத நெற்றிக்கண்ணனாய், கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

நல்-தவனை, புற்று அரவம் நாணினானை, நாணாது நகுதலை ஊண் நயந்தான் தன்னை,
முற்றவனை, மூவாத மேனியானை, முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான் தன்னை,
பற்றவனை, பற்றார்தம் பதிகள் செற்ற படையானை, அடைவார் தம் பாவம் போக்கக்
கற்றவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

4
மேம்பட்ட தவத்தினனாய்ப் பாம்பை வில் நாணாகக் கொண்டவனாய் வெட்கப்படாமல் மண்டையோட்டில் இடப்படும் பிச்சையை விரும்பியவனாய், நிறைவுடையவனாய், மூப்படையாத உடம்பினனாய், கடல் நஞ்சை விரும்பி உண்டவனாய், எப்பொருட்கும் பற்றுக்கோடாய் உள்ளவனாய், பகைவருடைய மும்மதில்களையும் அழித்த படையை உடையவனாய், தன்னை அடைந்த அடியவருடைய பாவத்தைப் போக்கக் கற்றவனாய், கற்பகமாய் கற்குடியில் உள்ள விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

சங்கை தனைத் தவிர்த்து ஆண்ட தலைவன் தன்னை, சங்கரனை, தழல் உறு தாள் மழுவாள் தாங்கும்
அம் கையனை, அங்கம் அணி ஆகத்தானை, ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த
மங்கையனை, மதியொடு மாசுணமும் தம்மில் மருவ   விரிசடை முடி மேல் வைத்த வான்நீர்க்-
கங்கையனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

5
ஐயத்தைப் போக்கி அடிமை கொண்ட தலைவனாய், நன்மை செய்பவனாய், கைப்பிடியை உடைய நெருப்பைப் போன்ற கொடிய மழுப்படையைத் தாங்கும் கையனாய், எலும்பை அணிந்த மார்பினனாய், பார்வதி பாகனாய், பிறையும் பாம்பும் நட்புடன் பழகும் தன் சடைமுடிமேல் ஆகாய கங்கையை வைத்தவனாய், கற்பகமாய், உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.
Go to top

பெண் அவனை, ஆண் அவனை, பேடு ஆனானை, பிறப்பு இலியை, இறப்பு இலியை, பேரா வாணி
விண்ணவனை, விண்ணவர்க்கும் மேல் ஆனானை, வேதியனை, வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனை, பண்ணில் வரு பயன் ஆனானை, பார் அவனை, பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம்
கண் அவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

6
பெண்ணாய், ஆணாய், அலியாய்ப் பிறப்பு இறப்பு அற்றவனாய், ஓசை நீங்காத விண்ணாய், விண்ணவர்க்கு மேம்பட்டவனாய், வேதியனாய், வேத கீதம் பாடும் பண்ணாய்ப் பண்ணில் வரும் பயனாய் அமைபவனாய், நில உலகமாய், அவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் பற்றுக்கோடாய், கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பண்டானை, பரந்தானை, குவிந்தான் தன்னை, பாரானை, விண் ஆய் இவ் உலகம் எல்லாம்
உண்டானை, உமிழ்ந்தானை, உடையான் தன்னை, ஒருவரும் தன் பெருமைதனை அறிய ஒண்ணா
விண்டானை, விண்டார் தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழக்
கண்டானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,   கண் ஆரக் கண்டேன், நானே.

7
பண்டையனாய், உலகத்தோற்றத்தில் பரந்து நிற்பவனாய், உலக ஒழுக்கத்தில் குவிந்து இருப்பவனாய், இவ்வுலகாய், தேவருலகாய், இவ்வுலகமெல்லாம் உண்டவனாய்ப் பின் வெளிப்படுத்தியவனாய், அவற்றிற்கு உரிமையாளனாய், ஒருவரும் தன் பெருமையை அறிய முடியாதபடி சேயனாய், பகைவர் முப்புரமும் தீயில் வெந்து பொடியாகி விழச் செய்தவனாய், கற்பகமாய், உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

வானவனை, வானவர்க்கு மேல் ஆனானை, வணங்கும் அடியார் மனத்துள் மருவிப் புக்க
தேன் அவனை, தேவர் தொழு கழலான் தன்னை, செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றிக்
கோன் அவனை, கொல்லை விடை ஏற்றினானை, குழல் முழவம் இயம்பக் கூத்து ஆட வல்ல
கானவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

8
வானவனாய், தேவர்களுக்கு மேம்பட்டவனாய், தன்னை வணங்கும் அடியவர் மனத்துள் விரும்பிப்புகுந்த தேன் போன்றவனாய், தேவர்கள் தொழும் திருவடிகளை உடையவனாய், பலவாகி நின்ற தன் செயல்கள் யாவினும் வெற்றி காணும் தலைவனாய், முல்லை நிலத்தெய்வமாம் திருமாலாகிய காளையை உடையவனாய், குழலும் முழவும் ஒலிக்கச் சுடுகாட்டில் கூத்தாடவல்ல, கற்பகம் போன்ற கற்குடியில் விழுமி யானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

கொலை யானை உரி போர்த்த கொள்கையானை, கோள் அரியை, கூர் அம்பா வரை மேல் கோத்த
சிலையானை, செம்மை தரு பொருளான் தன்னை, திரி புரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானை, தத்துவங்கள் ஆனான் தன்னை, தையல் ஓர்பங்கினனை, தன் கை ஏந்து
கலையானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

9
தன்னால் கொல்லப்பட்ட யானையின் தோலைப் போர்த்த செயலினனாய், மலையாகிய வில்லில் திருமாலைக் கூரிய அம்பாகக் கோத்தவனாய், எல்லோருக்கும் நன்மை செய்பவனாய், திரிபுர அசுரருள் சுதர்மன், சுசீலன், சுமாலி என்ற மூவருக்கு நலன் செய்த மேம்பட்டவனாய், மெய்ப்பொருள்கள் ஆகியவனாய், பார்வதி பாகனாய், கையில் மானை ஏந்தியவனாய், கற்பகமாய், கற்குடியில் உள்ள விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பொழிலானை, பொழில் ஆரும் புன்கூரானை, புறம் பயனை, அறம் புரிந்த புகலூரானை,
எழிலானை, இடை மருதின் இடம் கொண்டானை, ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன் தன்னை,
அழல் ஆடு மேனியனை, அன்று சென்று அக் குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும்
கழலானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

10
உலகமாக உள்ளவனாய், சோலைகள் நிறைந்த புன்கூர், புறம்பயம், அறத்தை விரும்பிச் செய்கின்ற புகலூர், இடை மருது, ஈங்கோய் இவற்றில் அழகாக இடங்கொண்டு நீங்காது தங்கும் தலைவனாய், தீயில் கூத்தாடும் திருமேனியை உடையவனாய், ஒரு காலத்தில் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தோள்கள் நெரியுமாறு ஊன்றிய திருவடியை உடையவனாய்க் கற்பகமாய் உள்ள கற்குடியில் விழுமியானைக் கண்ணாரக் கண்டேன் நானே.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை)
1.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வடம் திகழ் மென் முலையாளைப்
Tune - தக்கராகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
6.060   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி
Tune - திருத்தாண்டகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) முத்தீசர் அஞ்சனாட்சியம்மை)
7.027   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   விடை ஆரும் கொடியாய்! வெறி
Tune - நட்டராகம்   (திருகற்குடி (உய்யக்கொண்டான்மலை) உச்சிவரதநாயகர் அஞ்சனாட்சியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000