உரித்தவன் காண், உரக் களிற்றை உமையாள் ஒல்க; ஓங்காரத்து ஒருவன் காண்; உணர் மெய்ஞ்ஞானம் விரித்தவன் காண்; விரித்த நால் வேதத்தான் காண்; வியன் உலகில் பல் உயிரை விதியினாலே தெரித்தவன் காண்; சில் உரு ஆய்த் தோன்றி எங்கும் திரண்டவன் காண்; திரிபுரத்தை வேவ வில்லால் எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
|
1
|
பார்வதி கண்டு அச்சத்தால் தளருமாறு , வலிய யானையின் தோலை உரித்தவனாய் , ஓங்காரத்தால் உணர்த்தப்படுகின்ற பரம் பொருளாய் மெய்ஞ்ஞானத்தை விரித்தவனாய் , நான்கு வேதங்களையும் ஓதுபவனாய் , உலகில் பல உயிர்களையும் ஊழ் வினைப்படி படைத்தவனாய் , எங்கும் சிறுதெய்வங்களாகவும் தோன்றிப் பரந்திருப்பவனாய் , முப்புரங்களும் சாம்பலாகுமாறு வில்லால் எரித்தவனாய் , அழகு நிறைந்த சோலைகள் நிரம்பிய கச்சி ஏகம்பன் என் எண்ணத்தில் உள்ளான் . | |
நேசன் காண், நேசர்க்கு; நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக் கூசன் காண்; கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண்; அழகு ஆர் கொன்றை- வாசன் காண்; மலை மங்கை பங்கன் தான் காண்; வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும் ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
|
2
|
அடியார்க்கு அன்பனாய் , தன்னிடம் அன்பு இல்லாத கீழ்மக்களை நினைத்துக் கூசி அகல்பவனாய் , தன்னை வணங்குதற்கு நாணாதவர் மனத்தின் கண் எளிமையாய்த் தங்கும் இளையவனாய் , அழகிய மணம் கமழும் கொன்றையை அணிந்தவனாய் , பார்வதி பாகனாய் , தேவர்கள் எப்பொழுதும் வணங்கித் துதிக்கும் எழிலாரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே . | |
பொறையவன் காண்; பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண்; நண்ணிய புண்டரீகப் போதில் மறையவன் காண்; மறையவனைப் பயந்தோன் தான் காண்; வார்சடை மாசுணம் அணிந்து, வளரும் பிள்ளைப்- பிறையவன் காண்; பிறை திகழும் எயிற்றுப் பேழ்வாய்ப் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும் இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
|
3
|
பூமி முதலிய எழு உலகங்களையும் தாங்கி , மேம்படும் பாரத்தைச் சுமப்பவனாய் , புண்ணியனாய் , தாமரையில் உறையும் வேதா எனப்படும் பிரமனாய் , அவனைப்படைத்த திருமாலாய் , நீண்ட சடையில் பாம்போடு பிறையைச் சூடியவனாய் , பிறையைப் போன்ற பற்களையும் பிளந்த வாயையும் உடைய பேய்களோடு சுடுகாட்டில் இரவில் கூத்து நிகழ்த்தும் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே . | |
பார் அவன் காண், விசும்பு அவன் காண், பவ்வம் தான் காண், பனி வரைகள் இரவினொடு பகல் ஆய் நின்ற சீரவன் காண், திசையவன் காண், திசைகள் எட்டும் செறிந்தவன் காண், சிறந்த(அ)டியார் சிந்தை செய்யும் பேரவன் காண், பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண், அரியவன் காண், பெற்றம் ஊர்ந்த ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண், அவன் என் எண்ணத்தானே.
|
4
|
பூமியாய் , வானமாய் , வெள்ளத்தை உடைய கடலாய் , பனி உறையும் மலைகளாய் , இரவாய்ப் பகலாய் உள்ள சிறப்பை உடையவனாய் , திசைகளாய் , திசைகள் எட்டின் கண்ணும் செறிந்தவனாய் , அடியவர்கள் சிறப்பாகத் தியானிக்கும் பெயர்களை உடையவனாய் , ஆயிரம் பெயர்களால் போற்றப்படும் பெரியவனாய் , அடியார் அல்லார்க்குக் கிட்டுதற்கு அரியவனாய் , காளையை இவரும் அழகினை உடையவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே . | |
பெருந் தவத்து எம் பிஞ்ஞகன் காண், பிறை சூடீ காண், பேதையேன் வாதை உறு பிணியைத் தீர்க்கும் மருந்து அவன் காண், மந்திரங்கள் ஆயினான் காண், வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண், அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண், அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
|
5
|
பெரிய தவக்கோலத்தையும் , தலைக்கோலத்தையும் உடையவனாய்ப் பிறையைச் சூடியவனாய் , அடியேனுடைய துன்புறுத்தும் நோயைத் தீர்க்கும் மருந்தாய் , மந்திரங்களாய் , தேவர்கள் வணங்கும் பெருந்தேவனாய் , மிக்க தவத்தை உடைய பார்வதி பாகனாய் , தேவர்கள் அர்ச்சனை செய்து துதிக்குமாறு இருப்பவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே . | |
| Go to top |
ஆய்ந்தவன் காண், அருமறையோடு அங்கம் ஆறும்; அணிந்தவன் காண், ஆடு அரவோடு என்பும் ஆமை; காய்ந்தவன் காண், கண் அழலால் காமன் ஆகம்; கனன்று எழுந்த காலன் உடல் பொடி ஆய் வீழப் பாய்ந்தவன் காண்; பண்டு பலசருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்குப் பார் ஆள் செல்வம் ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
|
6
|
அரிய வேதங்களையும் , ஆறு அங்கங்களையும் ஆராய்பவனாய் , படம் எடுத்து ஆடும் பாம்பு , எலும்பு , ஆமை இவற்றை அணிந்தவனாய் , கண்ணிலிருந்து புறப்பட்ட தீயினால் மன்மதனுடைய உடம்பை எரித்தவனாய் , வெகுண்டெழுந்த கூற்றுவனுடைய உடம்பு அழியுமாறு காலால் பாய்ந்தவனாய் , ஒரு காலத்தில் பல சருகுகளைத் தன் வாயிலிருந்து வெளிப்படும் நூலால் இணைத்துத் தனக்கு நிழல் தரும் பந்தலை அமைத்த சிலந்திக்கு நாட்டை ஆளும் செல்வத்தை ஈந்தவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே . | |
உமையவளை ஒரு பாகம் சேர்த்தினான் காண், உகந்து ஒலி நீர்க் கங்கை சடை ஒழுக்கினான் காண், இமய வட கயிலைச் செல்வன் தான் காண், இல் பலிக்குச் சென்று உழலும் நல் கூர்ந்தான் காண், சமயம் அவை ஆறினுக்கும் தலைவன் தான் காண், தத்துவன் காண், உத்தமன் காண், தானே ஆய இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
|
7
|
பார்வதி பாகனாய் , மகிழ்ந்து கங்கையைச் சடையில் ஒடுக்கியவனாய் , இமயமலையில் உள்ள வடகயிலை மலையில் உறையும் செல்வனாய் , வீடுகள் தோறும் பிச்சைக்கு அலையும் வறியவனாய் , ஆறுவகை வைதிகச் சமயங்களுக்கும் தலைவனாய் , மெய்ப்பொருளாய் , உயர்வற உயர்நலம் உடையவனாய்த் தனக்குத்தானே நிகராகும் தேவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே . | |
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான் தான் காண், தூ மலர்ச்சேவடி இணை எம் சோதியான் காண், உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண், ஒலிகடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண், வண்டு படு மலர்க் கொன்றை மாலையான் காண், வாள்மதி ஆய் நாள் மீனும் ஆயினான் காண் எண்திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
|
8
|
அடிமை செய்யும் அடியார் துயரங்களைத் தீர்ப்பவனாய் , தூய மலர்போன்ற திருவடிகளை உடைய , எம் சோதி வடிவினனாய் , உண்டவிடத்தைக் கழுத்தில் ஒடுக்கியவனாய் , கடலிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தைத் தேவர்களுக்கு உதவியவனாய் , வண்டுகள் பொருந்தும் கொன்றை மலர் மாலையனாய் , ஒளி பொருந்திய சந்திரனும் விண்மீன்களும் ஆயினவனாய் , எட்டுத் திசைகளிலும் அழகு நிறைந்த பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத் தானே . | |
முந்தை காண், மூவரினும் முதல் ஆனான் காண், மூ இலை வேல் மூர்த்தி காண், முருக வேட்குத் தந்தை காண், தண் கட மா முகத்தினாற்குத் தாதை காண், தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச் சிந்தைகாண், சிந்தாத சித்தத்தார்க்குச் சிவன் அவன் காண், செங்கண் மால் விடை ஒன்று ஏறும் எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
|
9
|
யாவரினும் முற்பட்டவனாய் , மும்மூர்த்திகளிலும் வேறுபட்டு , அவர்கள் தோற்றத்துக்குக் காரணனாய் , முத்தலைச் சூலம் ஏந்தியவனாய் , முருகனுக்கும் யானைமுகத்தானாகிய விநாயகனுக்கும் தந்தையாய் , பணிந்து தன் திருவடிகளை வணங்கும் அடியவர்களுக்கு அவர்கள் சிந்தையில் அகப்படுபவனாய் , புறப்பொருள்கள் மாட்டுச் செல்லாத உள்ளத்தாருக்கு இன்பவடிவினனாய் , செங்கண்ணனாகிய திருமாலைக் காளையாகக் கொண்டு இவரும் எம் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே . | |
பொன் இசையும் புரிசடை எம் புனிதன் தான் காண், பூதகண நாதன் காண், புலித்தோல் ஆடை தன் இசைய வைத்த எழில் அரவினான் காண், சங்க வெண்குழைக் காதின் சதுரன் தான் காண் மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க, அடி அடர்ப்ப, மீண்டு அவன் தன் வாயில் இன் இசை கேட்டு, இலங்கு ஒளி வாள் ஈந்தோன், கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
|
10
|
பொன்போன்ற ஒளிவீசும் முறுக்கேறிய சடையை உடைய எம் தூயோனாய் , பூதகணத் தலைவனாய் , புலித்தோலாகிய ஆடையின் மேல் இறுக்கிச் சுற்றிய அழகிய பாம்பினை உடையவனாய் , காதில் சங்கினாலாகிய குழையை அணிந்த திறமை உடையவனாய் , மின்னலைப் போல ஒளி வீசும் வெள்ளிய பற்களை உடைய இராவணன் , கோபம் கொண்டு கயிலை மலையை அசைக்கத் தன் திருவடி அவனை நசுக்க , பின்னர் அவன் வாயிலிருந்து வெளிப்பட்ட இனிய இசையைக் கேட்டு , அவனுக்குச் சந்திரகாசம் என்ற வாளினை வழங்கிய கச்சி ஏகம்பன் என் எண்ணத்திலுள்ளான் . | |
| Go to top |