சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.068   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - திருத்தாண்டகம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு பழமலைநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=uJX2Zs71xfY   Add audio link Add Audio

கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை, கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னை,
குருமணியை, கோள் அரவம் ஆட்டுவானை, கொல் வேங்கை அதளானை, கோவண(ன்)னை,
அருமணியை, அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை, ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
திருமணியை, திரு முதுகுன்று உடையான் தன்னை,   தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

1
கண்ணின் கருமணியைப் போன்று அருமையானவனாய், பொற்குன்று ஒப்பவனாய், தியானிக்கும் அடியவர்களுக்கு மிகவும் எளியவனாய், நல்ல நிறமுடைய மாணிக்கமாய், கொடிய பாம்பு ஒன்றினை ஆட்டுபவனாய், வேங்கைத்தோலை உடுத்தவனாய், கோவணம் அணிந்தவனாய், சிந்தாமணியாய், தன்னைச் சரணம் புகுந்தவர்களுக்கு அமுதம் போன்று இனியனாய், பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய், அடியேன் சரணடைந்த வீடுபேறாகிய செல்வத்தை நல்கும் மணியாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினையை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப்போனேனே.

கார் ஒளிய கண்டத்து எம் கடவுள் தன்னை,   காபாலி, கட்டங்கம் ஏந்தினானை,
பார் ஒளியை, விண் ஒளியை, பாதாள(ன்)னை, பால் மதியம் சூடி ஓர் பண்பன் தன்னை,
பேரொளியை, பெண் பாகம் வைத்தான் தன்னை, பேணுவார் தம் வினையைப் பேணி வாங்கும்
சீர் ஒளியை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

2
நீலகண்டனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய், கட்டங்கப்படையை ஏந்தியவனாய், நில உலகு விண் உலகு பாதாள உலகு இவற்றிற்கு ஒளி வழங்குபவனாய், வெள்ளிய பிறையைச் சூடியவனாய், நற்பண்புக்கு நிலைக்களனாய், தனக்கு நிகரில்லாத ஞான ஒளியை உடையவனாய், பார்வதி பாகனாய், தன்னை விரும்பும் அடியவர்களைத் தானும் விரும்பி, அவர்கள் வினைகளைப் போக்கும் சிறப்பான புகழ் ஒளியை உடையவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை, ஏறு ஊர்ந்த பெம்மானை, எம்மான்! என்று
பத்தனாய்ப் பணிந்த(அ)டியேன் தன்னைப் பல்-நாள் பாமாலை பாடப் பயில்வித்தானை,
முத்தினை, என் மணியை, மாணிக்கத்தை, முளைத்து   எழுந்த செம்பவளக் கொழுந்து ஒப்பானை,
சித்தனை, என் திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

3
எல்லாத் திசைகளிலும் தேவர்களால் தொழப்படுபவனாய், இடப வாகனனாய், அடியேன் என் தலைவன் என்று பக்தி யோடு பணியத் தன்னைப் பல நாளும் பாமாலை பாடப் பழகுவித்தவனாய், முத்து, மணி, மாணிக்கம், முளைத்தெழுந்த செம்பவளக் கொத்து என்பன போலக் கண்ணுக்கு இனியவனாய், எல்லாம் செய்ய வல்லவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

ஊன் கருவின் உள்-நின்ற சோதியானை, உத்தமனை, பத்தர் மனம் குடி கொண்டானை,
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை, கார்   மேகமிடற்றானை, கனலை, காற்றை,
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த
தீம் கரும்பை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

4
உடம்பில் கருவாகி நின்ற உயிருக்குள் ஒளி வடிவாய் உள்ளவனாய், உத்தமனாய், அடியார் மனத்தில் உறைபவனாய், காட்டில் வேடனாய்த் திரிந்து அருச்சுனன் பொருட்டுக் காண்டீபம் என்ற வில்லினை ஏந்தியவனாய், கார்மேகம் போன்ற நீலகண்டனாய், கனலாகவும், காற்றாகவும் உள்ளானாய், தானே ஆராய்ந்து அடியேனைத் தன் அடிமையாகக் கொண்டு தன்னுடைய திருவடிகளை என் தலைமேல் வைத்த கரும்பு போன்ற இனியனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி, தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி,
மிக்கது ஒரு தீவளி நீர் ஆகாசம்(ம்) ஆய், மேல் உலகுக்கு அப்பால் ஆய், இப்பாலானை;
அக்கினொடு முத்தினையும் அணிந்து,
தொண்டர்க்கு அங்கு அங்கே அறுசமயம் ஆகி நின்ற
திக்கினை; என் திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

5
தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்து, தாமரையில் உறையும் பிரமனும் தானேயாகி, ஐம்பூதங்களும், மேலுலகும், அதற்கு அப்பாலும் இப்பாலுமாய்ப் பரந்து, சங்கு மணியையும், முத்தையும் அணிந்து, அடியவர்களுக்கு அவர்களுடைய பக்குவ நிலைக்கு ஏற்ப ஆறு வைதிக சமயங்களாகிய வழியானவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
Go to top

புகழ் ஒளியை, புரம் எரித்த புனிதன் தன்னை, பொன் பொதிந்த மேனியனை, புராணன் தன்னை,
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான் தன்னை, வெண்காடு மேவிய விகிர்தன் தன்னை,
கழல் ஒலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்ப, கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும்
திகழ் ஒளியை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

6
புகழாகிய ஒளியை உடையவனாய், திரிபுரத்தை எரித்த தூயோனாய், பொன்னிறம் அமைந்த திருமேனியனாய், பழமையானவனாய், விண்ணின் பண்பாகிய ஒளியும் திருவிழாக்களில் கேட்கப்படும் ஒலியும் ஆகியவனாய், வெண்காட்டில் உறையும் விகிர்தனாய், கால்களில் அணிந்த கழல்களின் ஒலியும் கைவளைகளின் ஒலியும் சிறக்க வீடுகள் தோறும் பிச்சைக்கு என்று சஞ்சரிக்கும் மேம்பட்ட ஒளியை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

போர்த்து, ஆனையின் உரி-தோல் பொங்கப்பொங்க, புலி அதளே உடையாகத் திரிவான் தன்னை;
காத்தானை, ஐம்புலனும்; புரங்கள் மூன்றும், காலனையும், குரைகழலால் காய்ந்தான் தன்னை;
மாத்து ஆடிப் பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினைவேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகித்
தீர்த்தானை; திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

7
யானையை உரித்த தோலைப் போர்த்துத் திருமேனியின் ஒளி சிறக்குமாறு புலித்தோலை உடுத்துத் திரிவானாய், பொறிவாயில் ஐந்தவித்தானாய், முப்புரங்களையும் வெகுண்டவனாய், காலனைத் திருவடியால் உதைத்தவனாய், மேம்பட்ட கூத்தினை நிகழ்த்துபவனாய், பத்தர்களாய் வணங்கும் அடியார்களுடைய வலிய வினைகளும், அவற்றால் நிகழும் நோய்களும், நீங்குமாறு மருந்தாகி அவற்றைப் போக்கியவனாய், திருமுது குன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

துறவாதே யாக்கை துறந்தான் தன்னை, சோதி முழு முதல் ஆய் நின்றான் தன்னை,
பிறவாதே எவ் உயிர்க்கும் தானே ஆகிப் பெண்ணினோடு ஆண் உரு ஆய் நின்றான் தன்னை,
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர்   மனத்து அகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானை, திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

8
இயல்பாகவே உடம்பு இன்றி இருப்பவனாய், சோதி வடிவினனாய், தான் பிறப்பெடுக்காமல் பிறவி எடுக்கும் உயிர்களுக்கெல்லாம் தானே நலன் செய்பவனாய், பெண்ணுருவும், ஆண் உருவுமாக இருப்பவனாய், தன்னை மறவாமல், தன் பண்பு செயல்களையே வாழ்த்தும் அடியவர்களின் உள்ளத்தே எப்பொழுதும் நிலைபெற்றிருக்கும் பண்பினை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

பொன் தூணை, புலால் நாறு கபாலம் ஏந்திப் புவலோகம் எல்லாம் உழி தந்தானை,
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை, முழு முதல் ஆய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லாக்
கல்-தூணை, காளத்தி மலையான் தன்னை,   கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால்
செற்றானை, திரு முதுகுன்று உடையான்
தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

9
பொன்மயமான தூண்போல்பவனாய், புலால் நாற்றம் வீசும் மண்டையோட்டினை ஏந்தி மேல் உலகம் எல்லாம் திரிபவனாய், பிறையை முடிமாலையாக அணிந்தவனாய், முழுமுதற் கடவுளாய், எல்லா உலகங்களிலும் விரவி நின்று, தனக்கு இறுதி யில்லாது கற்றூண்போல அவற்றைத் தாங்குபவனாய்க் காளத்தி மலையில் உறைபவனாய், பகைவருடைய மும்மதில்களையும் எரியுமாறு வில்லால் அழித்தவனாய், திருமுதுகுன்றம் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி, எழுநரம்பின் இசை பாட இனிது கேட்டு,
புகழ்ந்தானை; பூந்துருத்தி மேயான் தன்னை; புண்ணியனை; விண்ணவர்கள் நிதியம் தன்னை;
மகிழ்ந்தானை, மலைமகள் ஓர்பாகம் வைத்து; வளர் மதியம் சடை வைத்து, மால் ஓர்பாகம்
திகழ்ந்தானை; திரு முதுகுன்று உடையான் தன்னை; தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.

10
தன்னை இகழ்ந்து, கயிலையை அசைத்த இராவணனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு விரலை ஊன்றி, அவன் ஏழுநரம்புகளைக் கொண்டு இசைபாட, அதனை இனிது கேட்டு, அவன் இசை ஞானத்தைப் புகழ்ந்தவனாய், பூந்துருத்தியில் உறையும் புண்ணியனாய், தேவர்களுக்குச் செல்வமாய், பார்வதி பாகனாய் மகிழ்ந்தவனாய், பிறையைச் சடையில் சூடித் திருமாலைத் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
1.012   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மத்தா வரை நிறுவி, கடல்
Tune - நட்டபாடை   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.053   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை
Tune - பழந்தக்கராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.093   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நின்று மலர் தூவி, இன்று
Tune - குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
1.131   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மெய்த்து ஆறுசுவையும், ஏழ் இசையும்,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
2.064   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
Tune - காந்தாரம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
3.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
3.099   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
6.068   திருநாவுக்கரசர்   தேவாரம்   கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை,
Tune - திருத்தாண்டகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
7.025   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை
Tune - நட்டராகம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
7.043   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   நஞ்சி, இடை இன்று நாளை
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் பெரியநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000