புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண், போர் விடையின் பாகன் காண், புவனம் ஏழும் விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண், விரைக் கொன்றைக் கண்ணியன் காண், வேதம் நான்கும் தெரிந்து முதல் படைத்தோனைச் சிரம் கொண்டோன் காண், தீர்த்தன் காண், திருமால் ஓர் பங்கத்தான் காண் திருந்து வயல் புடை தழுவு திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
|
1
|
தேவர்கள் விரும்பித் துதித்து வணங்கும் புகழுக்கு உரியவனும் , போர்த்தொழில் வல்ல இடப ஊர்திக்குத் தலைவனும் , உலகங்கள் ஏழுமாகிப் பல உயிரும் ஆகி விளங்கியவனும் , மணமிக்க கொன்றைக் கண்ணியை உடையவனும் , வேதம் நான்கையும் உணர்ந்து முற்படப் படைப்புத் தொழிலை மேற்கொண்ட பிரமனது சிரத்தைக் கொய்தவனும் , குற்றமற்றவனும் , திருமாலை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிப் பண்படுத்தப் பட்ட வயல்கள் நாற்புறமுஞ் சூழ விளங்கும் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழுஞ் சிவபெருமான் என்சிந்தையில் என்றும் நீங்காமல் நிற்பவன் ஆவான் . | |
வார் ஆரும் முலை மங்கை பங்கத்தான் காண்; மாமறைகள் ஆயவன் காண்; மண்ணும், விண்ணும், கூர் ஆர் வெந்தழலவனும், காற்றும், நீரும், குலவரையும், ஆயவன் காண்; கொடு நஞ்சு உண்ட கார் ஆரும் கண்டன் காண்; எண்தோளன் காண், கயிலை மலைப்-பொருப்பன் காண் விருப்போடு என்றும் தேர் ஆரும் நெடுவீதித் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
|
2
|
கச்சணிந்த முலையினையுடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் பெரிய வேதங்கள் ஆனவனும் , நிலமும் விண்ணும் , வெம்மைமிகு தழலும் காற்றும் நீரும் உயர்மலையும் ஆயவனும் , கொடிய நஞ்சையுண்டு கறுத்த கண்டத்தவனும் , எண்டோளினனும் , கயிலைமலையாகிய பொருப்பைத் தன் வாழிடமாகக் கொண்டவனும் ஆகித் தேரோடும் நெடுவீதிகளையுடைய திருப்புத்தூர்த் திருத்தளியில் என்றும் விருப்போடு விளங்கும் சிவ பெருமான் என் சிந்தையிலே என்றும் நீங்காமல் நிலைப்பவன் ஆவான் . | |
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண், பொருப்பு வலிச் சிலைக் கையோன் காண், நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நல் கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண் பொன் காட்டக் கடிக்கொன்றை, மருங்கே நின்ற புனக் காந்தள் கை காட்ட, கண்டு வண்டு தென் காட்டும் செழும் புறவின்திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
|
3
|
மின்னலும் கொடியும் போன்ற இடையினை யுடைய உமையம்மையால் என்றும் விரும்பப்படும் கேள்வனும் , மலையாகிய வலிமை மிக்க வில்லை வளைத்த கையினனும் , நல்ல பாட்டுக்களை யாக்க வல்ல புலவனாய்ச் சங்கம் போந்து நல்ல பொற்கிழியைத் தருமிக்கு அருளியவனும் ஆகி , மணமிக்க கொன்றை மலர் பொன்னின் வனப்பைக் காட்ட , அருகே நின்ற மேட்டு நிலக் காந்தள் கைகளின் வடிவினைக் காட்ட , இவற்றைக் கண்டு வண்டு இசைபாடும் முல்லையும் குறிஞ்சியும் மயங்கிய வளமிக்க திருப் புத்தூர்த் திருத்தளியில் விளங்கும் சிவபெருமான் என் சிந்தையில் என்றும் நீங்காமல் நிலைப்பவன் ஆவான் . | |
ஏடு ஏறு மலர்க்கமலத்து அயனும், மாலும், இந்திரனும், பணிந்து ஏத்த இருக்கின்றான் காண்; தோடு ஏறும் மலர்க்கடுக்கை, வன்னி, மத்தம், துன்னிய செஞ்சடையான் காண்; துகள் தீர் சங்கம் மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு - மாமணி காண் வளம் கொள் மேதி சேடு ஏறி மடுப் படியும் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
|
4
|
இதழ்கள் நிறைந்த தாமரை மலரில் விளங்கும் நான்முகனும் , திருமாலும் இந்திரனும் , பணிந்து துதிக்கும் வண்ணம் இருப்பவனும் , இதழ்களையுடைய கொன்றை , வன்னி , ஊமத்தை ஆகிய மலர்கள் செறிந்த செஞ்சடையினனும் , குற்றமற்ற சங்கம் பக்கத்தே ஏறி முத்தை ஈனும் கடற்கரையை எல்லையாக உடைய மறைக்காட்டில் வாழ் மணியும் ஆகி , வளவிய பயிர்களை மேயும் எருமை கரை மீது ஏறி நீர் நிலையில் படியும் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் . | |
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண், கா மரு பூங் கச்சி ஏகம்பத்தான் காண், பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத் தண்புலியூர் மன்று ஆடீ காண், தரு மருவு கொடைத் தடக்கை அளகைக்கோன் தன் சங்காத்தி, ஆரூரில்-தனி யானை காண் திரு மருவு பொழில் புடை சூழ் திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
|
5
|
பிறப்பைப் பொருந்துவதற்கு ஏதுவாகிய வலிய வினை நோயை நீக்கியவனும் , விருப்பம் வருதற்குரிய பொலிவுடன் விளங்கும் கச்சி ஏகம்பனும் , நிலையாமைப் பெருமை மேவும் பெரிய நிலவுலகில் பொருந்தும் பிணிகளைத் தீர்க்கும் குளிர்ச்சிமிக்க பெரும் பற்றப் புலியூர் மன்றாடியும் , கற்பகத்தருப் போலக் கொடுக்கும் பெருமை மிக்க கையினையுடைய அளகைக் கோன் ஆகிய குபேரனுக்கு மிக்க நண்பனும் , ஆரூரில் அமர்ந்த ஒப்பற்ற யானையும் ஆகித் திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் . | |
| Go to top |
காம்பு ஆடு தோள் உமையாள் காண, நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண்; கையில் வெய்ய பாம்பு ஆட, படுதலையில் பலி கொள்வோன் காண்; பவளத்தின் பருவரை போல் படி மத்தான் காண்; தாம்பு ஆடு சின விடையே பகடாக் கொண்ட சங்கரன் காண்; பொங்கு அரவக்கச்சையோன் காண் சேம்பு ஆடு வயல் புடை சூழ் திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
|
6
|
மூங்கில் போன்ற தோளுடைய உமையம்மை காணுமாறு பல கூத்து விகற்பங்களையும் கலந்து ஆடியவனும் , சீற்றம்மிக்க பாம்பு கையிற் கங்கணமாய்ப் பொருந்தி ஆடத் தலைஓட்டில் பிச்சை ஏற்பவனும் , பவளத்தால் ஆன பெரிய மலை போன்ற வடிவினனும் , கயிற்றால் பிணித்தற்குரிய சினமிக்க இடபத்தையே யானை என மதிக்கத்தக்க ஊர்தியாகக் கொண்ட சங்கரனும் , பொங்கும் சினப் பாம்பையே அரைப்பட்டிகையாகப் புனைந்தவனும் ஆகி நீர்ச் சேம்புகள் நிறைந்த வயல்கள் நாற்புறமும் சூழ்ந்த திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் . | |
வெறி விரவு மலர்க்கொன்றை, விளங்கு திங்கள், வன்னியொடு, விரிசடை மேல் மிலைச்சினான் காண்; பொறி விரவு கதம் நாகம், அக்கினோடு பூண்டவன் காண்; பொரு புலித்தோல் ஆடையான் காண்; அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண்; ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல் செறி பொழில் சூழ் மணி மாடத் திருப் புத்ரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
|
7
|
மணம்நாறும் கொன்றை மலரையும் விளக்க முடைய திங்களையும் வன்னியையும் விரிந்த சடைமேல் சூடியவனும் , புள்ளிகள் பொருந்திய கோபிக்கும் நாகத்தையும் , எலும்பினையும் அணியாகப் பூண்டவனும் , போர்க்குணமுடைய புலியினது தோலை ஆடையாகக் கொண்டவனும் , அறிதற்கரிய நுண்பொருள்களாய் ஆனவனும் , ஆயிரம் பேர் உடையவனும் ஆகி , அழகியதும் , குளிர்ந்ததும் ஆகிய கடற்கரையிடத்தே நெருங்கி விளங்கும் பொழில்கள் சூழ்ந்ததும் , வரிசையாயமைந்த மாடங்களை உடையதுமாகிய திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் . | |
புக்கு அடைந்த வேதியற்கு ஆய்க் காலற் காய்ந்த புண்ணியன் காண்; வெண் நகை வெள்வளையாள் அஞ்ச, மிக்கு எதிர்ந்த கரி வெருவ, உரித்த கோன் காண்; வெண்மதியைக் கலை சேர்த்த திண்மையோன் காண்; அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல் திக்கு அணைந்து வரு மருங்கில்-திருப் புத்தூரில்- திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
|
8
|
தன்பால் அடைக்கலம் புக்க வேதியன் மார்க் கண்டேயனுக்காக இயமனைக் கோபித்துக் கொன்ற புண்ணியனும் , வெள்ளிய பற்களையும் வெள்ளிய வளையல்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறு சினம் மிக்கு எதிர்த்த யானை நடுங்க அதன் தோலை உரித்தவனும் , வெள்ளிய மதிப்பிறையைத் தலையில் தரித்து அருளியவனும் , மன்மதன் வில்லாகக் கொள்ளுதற்கு வாய்ப்புடைய அக்கரும்பும் , பெருமைமிக்க புன்னையும் நெருங்கிய சோலைமிக்க ஆரூர்க்கு அதிபதியும் ஆகி , மெல்லிதாய்க் குளிர்ந்த தென்றல் வடக்குத் திக்கினை அணையவரும் இடத்தில் உள்ள திருப்புத்தூர்த் திருத் தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் . | |
பற்றவன் காண், ஏனோர்க்கும் வானோருக்கும்; பராபரன் காண்; தக்கன் தன் வேள்வி செற்ற கொற்றவன் காண்; கொடுஞ்சினத்தை அடங்கச் செற்று, ஞானத்தை மேல் மிகுத்தல் கோளாக் கொண்ட பெற்றியன் காண்; பிறங்கு அருவிக் கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண்; பேர் எழில் ஆர் காமவேளைச் செற்றவன் காண் சீர் மருவு திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
|
9
|
அண்டினார்க்குத் துணையானவனும் , தேவர்க்கும் மற்றையவர்க்கும் அவரின் வேறுபட்டு மேலானவனும் , அவரோடு கலந்து நின்று அவரைப் போலக் கீழானவனும் , தக்கனது வேள்வியை அழித்த வெற்றியினனும் , கொடிய சினத்தை முற்றிலும் அழித்தவனும் , ஞானத்தை மேன்மேலும் வளரச் செய்தலைத் தன்கொள்கையாகக் கொண்டவனும் , அருவி விளங்கும் கழுக்குன்றில் யாம் வணங்கும் தலைக்கோலம் உடையவனும் , மிக்க எழில் படைத்த மன்மதனை விழித்து அழித்தவனும் , ஆகி , புகழ்மிக்க திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் . | |
உரம் மதித்த சலந்தரன் தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண், உலகு சூழும் வரம் மதித்த கதிரவனைப் பல் கொண்டான் காண், வானவர்கோன் புயம் நெரித்த வல்லாளன் காண், அர மதித்துச் செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண், அலைகடல் சூழ் இலங்கை வேந்தன் சிரம் நெரித்த சேவடி காண் திருப் புத்தூரில்-திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
|
10
|
தனது வலியைப் பெரிதாக மதித்த சலந்தரனின் உடலைப் பிளந்த ஒப்பற்ற ஆழியைப் படைத்தவனும் , உலகினைச் சூழவருவோனாய் எல்லாராலும் மேலாக மதிக்கப்பட்ட சூரியனுடைய பல்லைப் பறித்தவனும் , இந்திரனுடைய புயத்தை நெரித்த வன்மை யுடையவனும் , பாம்பினைச் செம்பொன் ஆரமாகவும் பூணாகவும் மதித்து அணிந்தவனும் , அலைகடல் சூழ் இலங்கைக்கு இறையாகிய இராவணனுடைய சிரங்களை நெரியச் செய்த சேவடியினனும் ஆகி , திருப்புத்தூர்த் திருத்தளியில் திகழும் சிவபெருமான் என்றும் என் சிந்தையில் நின்று நிலவுபவன் ஆவான் . | |
| Go to top |