திரு உடையார், திருமால் அயனாலும் உரு உடையார், உமையாளை ஒர்பாகம் பரிவு உடையார், அடைவார் வினை தீர்க்கும் புரிவு உடையார், உறை பூவணம் ஈதோ! .
|
1
|
திருமால், பிரமன் ஆகிய காரணக் கடவுளரிலும் மேலான செல்வத்தை யுடையவரும், தமது திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாக உடையவரும், அன்புடையவராய்த் தம்மை அடைவாரது வினைகளைத் தீர்க்கும் விருப்பம் உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, `திருப்பூவணம்` என்னும் தலம் இதுதானோ? | |
எண்ணி இருந்தும், கிடந்தும், நடந்தும், அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார்; பண் இசை ஆர் மொழியார் பலர் பாடப் புண்ணியனார்; உறை பூவணம் ஈதோ! .
|
2
|
இருப்பினும், கிடப்பினும், நடப்பினும், தம்மையே முதல்வராக ஓர்ந்து நினைவாரது வினைகளை நீக்குபவரும், அறவடிவினருமாகிய இறைவர், பண்ணாகிய இசைபோலப் பொருந்திய மொழியினையுடைய மகளிர் பலர் இனிய பாடல்களைப்பாட எழுந்தருளியிருக்கின்ற, `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ? | |
தெள்ளிய பேய்பல தம் அவற்றொடு நள் இருள் நட்டம் அது ஆடல் நவின்றோர், புள்ளுவர் ஆகுமவர்க்கு அவர் தாமும் புள்ளுவனார், உறை பூவணம் ஈதோ! .
|
3
|
தெளிவையுடைய பல பேய்பூதங்களுடன், செறிந்த இருளில் நடனத்தைப் புரிகின்றவரும், வஞ்சகராகின்றவருக்குத் தாமும் வஞ்சகராவோரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ? | |
நிலன் உடை மான்மறி கையது; தெய்வக் கனல் உடை மா மழு ஏந்தி, ஓர் கையில் அனல் உடையார்; அழகு ஆர்தரு சென்னிப் புனல் உடையார்; உறை பூவணம் ஈதோ!.
|
4
|
நிலத்தை வாழும் இடமாக உடைய மான் கன்று கையிடத்ததாக, தெய்வத் தீயாம் தன்மையையுடைய பெரிய மழுவை ஒரு கையிற் பிடித்து, அதனோடே மற்றொரு கையில் நெருப்பை யுடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ? | |
நடை உடை நல் எருது ஏறுவர்; நல்லார் கடை கடைதோறு, இடுமின், பலி! என்பார்; துடி இடை நல் மடவாளொடு மார்பில் பொடி அணிவார்; உறை பூவணம் ஈதோ! .
|
5
|
பெருமித நடையையுடைய நல்ல ஆனேற்றின் மீது ஏறுபவரும், மகளிரது வாயில் தோறும் சென்று, `பிச்சை இடுமின்` என்று இரப்பவரும், உடுக்கை போலும் இடையினையுடைய தேவியின் அழகிய மேனியின் பொலிவோடு, சாம்பலைப் பூசிக்கொள் வோரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ? | |
| Go to top |
மின் அனையாள் திருமேனி விளங்க ஒர் தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன், முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய பொன் அனையான், உறை பூவணம் ஈதோ! .
|
6
|
மின்னல்போலும் மாதராள் திருமேனி தனது திருமேனியின் ஒரு பாகத்தில் விளங்க விரும்பிவைத்த `சங்கரன்` என்னும் பெயரையுடையவனும், தன்னை நினையாதவரது அரண்களை முன்பு தீக்கு இரையாக்கிய, பொன் போலும் நிறத்தை யுடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ? | |
மிக்கு இறை ஏயவன் துன் மதியாய் விட, நக்கு இறையே விரலால் இற ஊன்றி; நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம் புக்கு உறைவான்; உறை பூவணம் ஈதோ! .
|
7
|
தனது தலைமையை எல்லை கடந்து மதித்தவனாகிய இராவணனது தீய எண்ணங் காரணமாக, வெகுளி நகை செய்து, தனது இடமாகிய கயிலையை, அவன் நெரியுமாறு, விரலால் சிறிதே ஊன்றி, தன்னையே உருகி நினைவாரது ஒப்பற்ற நெஞ்சிலே குடிபுகுந்து, ஒருஞான்றும் நீங்காது உறையும் இறைவன் எழுந்தருளியுள்ள, `திருப்பூவணம்` என்னும் திருத்தலம் இதுதானோ? | |
சீரின் மிகப் பொலியும் திருப்பூவணம் ஆர இருப்பு இடமா உறைவான் தனை ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே .
|
8
|