சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.022   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருப்பழமண்ணிப்படிக்கரை - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு வடிக்கண்ணமுதகரநாயகியம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=1nr1Tdgfwpc   Add audio link Add Audio

முன்னவன், எங்கள் பிரான், முதல் காண்பு அரிது ஆய பிரான்,
சென்னியில் எங்கள் பிரான், திரு நீல மிடற்று எம்பிரான்,
மன்னிய எங்கள் பிரான், மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்ப்
பன்னிய எங்கள் பிரான்-பழமண்ணிப் படிக் கரையே .

1
எல்லார்க்கும் முன்னே உள்ளவனும் , தனக்கு முன்னுள்ள பொருள் இல்லாதவனும் , யாவரினும் தலையாயவனும் , அழகிய நீலகண்டத்தை உடையவனும் , என்றும் அழியாது நிலைபெற்றிருப்பவனும் , நான்கு வேதங்களையும் கல்லால மர நிழலிலிருந்து சொல்லியவனுமாய் , எங்கள் தலைவனுமாய் உள்ள இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .

அண்ட கபாலம் சென்னி(ய்) அடிமேல் அலர் இட்டு நல்ல
தொண்டு அங்கு அடி பரவி, தொழுது ஏத்தி, நின்று ஆடும் இடம்;
வெண் திங்கள் வெண்மழுவன், விரை ஆர் கதிர் மூவிலைய
பண்டங்கன், மேய இடம் பழமண்ணிப் படிக் கரையே .

2
திரண்ட தலையை அணிந்த முடியினையுடைய சிவபிரானது திருவடிகளில் நல்ல அடியார்கள் மலர்களை இட்டு அவ் வடிகளை வணங்கி , முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து ஆடுகின்றதும் , வெண்மையான பிறையை அணிந்தவனும் , வெள்ளிய மழுவை ஏந்தியவனும் , பகைவர்மேல் விரைதல் பொருந்திய , ஒளியை யுடைய மூவிலை வேலை ( சூலத்தை ) உடைய , ` பண்டரங்கம் ` என்னும் கூத்தினை உடையவனும் ஆகிய அப்பெருமான் விரும்பி எழுந் தருளியிருக்கின்றதும் ஆகிய இடம் ` திருப்பழமண்ணிப் படிக்கரை ` என்னும் தலமே .

ஆடுமின், அன்பு உடையீர்! அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு
சூடுமின், தொண்டர் உள்ளீர்! உமரோடு எமர் சூழ வந்து,
வாடும் இவ் வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச் சென்று,
பாடுமின், பத்தர் உள்ளீர், பழமண்ணிப் படிக் கரையே .

3
அன்புடையவர்களே , அன்புக் கூத்தினை ஆடுங் கள் ; தொண்டராய் உள்ளவர்களே , சிவபெருமானது திருவடிக்கு ஆட்பட்டவர்களது அடியில் உள்ள பொடியை எடுத்துத் தலைமேல் சூடிக்கொள்ளுங்கள் ; பத்தராய் உள்ளவர்களே , உம்மவரோடு எம் மவரும் சூழ ஒன்று கூடி , மனம் மெலிதற்குக் காரணமான இல் வாழ்க்கையில் கிடந்து வருந்தாமல் நன்கு சென்று , திருப்பழமண்ணிப் படிக்கரையைப் பாடுங்கள் .

அடுதலையே புரிந்தான், நவை; அந்தர மூ எயிலும்
கெடுதலையே புரிந்தான்; கிளரும் சிலை நாணியில் கோல்
நடுதலையே புரிந்தான்; நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்-
படுதலையே புரிந்தான்-பழமண்ணிப் படிக் கரையே .

4
உலகத் தொகுதியை அழித்தலை விரும்பினவனும் , வானத்தில் திரிந்த மூன்று மதில்கள் கெட்டொழிதலை விரும்பி வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும் , நரி உமிழ்ந்த எச்சிலாகிய , வெண்மையான , அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம் , ` திருப்பழமண்ணிப் படிக்கரை ` என்னும் தலமே .

உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்!
மங்கை ஒர் கூறு உடையான், வானோர் முதல் ஆய பிரான்,
அம் கையில் வெண் மழுவன்(ன்), அலை ஆர் கதிர் மூவிலைய
பங்கய பாதன், இடம் பழமண்ணிப் படிக் கரையே .

5
தொண்டர்களே , உமையை ஒரு கூறில் உடையவனும் , தேவர்களுக்கு முதற்பொருளாய தலைவனும் , அகங்கையில் வெள்ளிய மழுவை உடையவனும் , கொல்லுதல் பொருந்திய ஒளியை யுடைய முத்தலை வேலை ( சூலத்தை ) ஏந்திய , தாமரை மலர்போலும் பாதங்களையுடையவனும் ஆகிய இறைவனது இடமாகிய திருப்பழ மண்ணிப்படிக்கரையை விரும்பித் துதித்து உங்கள் கைகளால் கூப்பித் தொழுங்கள் .
Go to top

செடி படத் தீ விளைத்தான், சிலை ஆர் மதில்; செம் புனம் சேர்
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏறக் கொண்டான்;
கடியவன் காலன் தன்னைக் கறுத்தான்; கழல் செம்பவளப்-
படியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே .

6
கற்கள் பொருந்திய கோட்டைகளில் தீமை உண்டாகத் தீயை எழுவித்தவனும் , நல்ல புனங்களில் மேய்வதாகிய , தனது கொடியிற் பொருந்திய வலிய எருதாகிய ஆனேற்றை ஏறுதற்கு ஊர்தியாகவும் கொண்டவனும் , பாதத்தால் கொடிய வலிய காலனைக் காய்ந்தவனும் , செவ்விய பவளம் போலும் திருமேனியை உடையவனும் , பாசுபத வேடத்தனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப் பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .

கடுத்தவன்-தேர் கொண்டு ஓடிக் கயிலாய நல் மாமலையை
எடுத்தவன், ஈர்-ஐந்துவாய் அரக்கன்-முடிபத்து அலற,
விடுத்து, அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடல் உறப்
படுத்தவன்; பால் வெண் நீற்றன்-பழமண்ணிப் படிக் கரையே.

7
அரக்கனும் , தேரைச் செலுத்திக்கொண்டு சென்று , அதனைத் தடுத்தலால் சினங்கொண்டவனாய்க் கயிலாயமாகிய நல்ல பெரிய மலையை எடுத்தவனும் ஆகிய இராவணனது பத்து வாய்களும் பத்துத் தலைகளில் பொருந்தியிருந்து அலறும்படி ஆக்கியவனும் , பின்பு அவன் கை நரம்பாகிய வீணையால் வேதத்தொடு கூடிய இசைகளைப் பாட , அவனை நலத்திற் பொருந்தச் செய்தவனும் , பால் போலும் வெள்ளிய திருநீற்றை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .

திரிவன மும்மதிலும்(ம்) எரித்தான்; இமையோர் பெருமான்;
அரியவன்; அட்ட புட்பம்(ம்) அவை கொண்டு அடி போற்றி, நல்ல
கரியவன் நான்முகனும்(ம்), அடியும் முடி காண்பு அரிய
பரியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே .

8
இடம் பெயர்ந்து திரிவனவாகிய மூன்று மதில்களை எரித்தவனும் , தேவர்கட்குத் தலைவனும் , அடைதற்கு அன்புடைய திருமாலும் பிரமனும் அட்ட புட்பங்களால் திருவடியில் அருச்சித்தும் அடியும் முடியும் காணமாட்டாத அளவிறந்தவனும் , பாசுபத வேடத்தை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .

வெற்று அரைக் கற்ற(அ)மணும், விரையாது வெண் தாலம் உண்ணும்
துற்றரை, துற்று அறுப்பான் துன்ன ஆடைத் தொழில் உடையீர்!
பெற்றரைப் பித்தர் என்று(க்) கருதேன்மின்! படிக்கரையுள்
பற்றரைப் பற்றி நின்று(ப்) பழி பாவங்கள் தீர்மின்களே! .

9
மிகுந்த பற்றுக்களை அறுத்தற் பொருட்டு உடையில்லாத அரையினை உடையராதலைக் கற்ற சமணர் வேடத்திலே மனம் விரையாது நீங்கி , கீளொடு பிணைத்தலை உடைய கோவண ஆடையை அணிந்த தொண்டர்களே , நஞ்சினை உண்ணும் உணவுடையவரும் , எருதாகிய ஊர்தியை உடையவருமாகிய சிவபெருமானாரை அதுபோல்வனவற்றை நோக்கிப் பித்தரென்று இகழ்ச்சியாக நினையாதீர்கள் ; திருப்பழமண்ணிப்படிக்கரையுள் கோயில் கொண்டிருக்கும் அவரையே துணையாகப் பற்றிநின்று , பழிபாவங்களிலிருந்து நீங்குங்கள் .

பல் உயிர் வாழும் தெண் நீர்ப் பழமண்ணிப் படிக் கரையை
அல்லி அம் தாமரைத்தார் ஆரூரன் உரைத்த தமிழ்
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும், தமர்க்கும், கிளைக்கும்,
எல்லியும் நன்பகலும்(ம்) இடர் கூருதல் இல்லை அன்றே! .

10
பல உயிர்கள் வாழ்கின்ற தெளிந்த நீரையுடைய , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலத்தை , அக இதழ்களை யுடைய தாமரை மாலையை அணிந்த நம்பியாரூரன் புகழ்ந்து சொன்ன இத்தமிழ்ப் பாடலை இரவிலும் , நல்ல பகலிலும் சொல்லுதலும் கேட்டலும் வல்லராகின்ற அத்தன்மையார்க்கும் , அவரைச் சார்ந்து உற்றார்க்கும் , அவ்வுற்றாரைப் பற்றி வரும் சுற்றத்தார்க்கும் துன்பம் மிகுதல் இல்லை .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பழமண்ணிப்படிக்கரை
7.022   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முன்னவன், எங்கள் பிரான், முதல்
Tune - நட்டராகம்   (திருப்பழமண்ணிப்படிக்கரை நீலகண்டேசுவரர் வடிக்கண்ணமுதகரநாயகியம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org