சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.023   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருக்கழிப்பாலை - நட்டராகம் நடபைரவி பந்துவாராளி கனகவசந்தம் ராகத்தில் திருமுறை அருள்தரு பொற்பதவேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=nBSva8qM1vg   Add audio link Add Audio

செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
அடியான்; ஆவா! எனாது ஒழிதல் தகவு ஆமே?
முடிமேல் மா மதியும் அரவும் உடன் துயிலும்
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே .

1
திருமுடியின் மேல் , பெருமை பொருந்திய பிறையும் , பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர் , குணம் இல்லாதவனாகிய யான் தீவினையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும் , ` அந்தோ ! இவன் நம் அடியவன் !` என்று இரங்காது தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக் கழிப்பாலையில் , வாளா இருத்தல் தகுதியாகுமோ !

எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்,
அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி,
இங்கே என் வினையை அறுத்திட்டு, எனை ஆளும்
கங்கா நாயகனே! கழிப்பாலை மேயானே! .

2
திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருக் கின்றவனே , நீயே உன் அடியவனாகிய யான் இப்பூமியிலே எங்காயினும் இருந்து உன்னை நினைத்தால் , அங்கே வந்து என்னோடு கூடி நின்று , என் வினையை நீக்கி என்னை ஆண்டருள்கின்ற கங்கைக்கு நாயகன் .

ஒறுத்தாய், நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய், எத்தனையும் நாயேனைப் பொருள் படுத்துச்
செறுத்தாய்; வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே!.

3
குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , உனது கருணையினாலே ஒரு பிழைக்காக முன்பு என்னை ஒறுத்தாய் ; பின்பு அடியேன் செய்த பிழைகள் எத்தனையாயினும் அவை அனைத்தையும் , நாய்போலும் என்னை ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய் ; தேவர்கள் இறவாதிருத்தற் பொருட்டுக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் நிறுத்தினாய் ; அதனால் , அவ்விடம் கரிதாயினாய் ; இவை உன் அருட்செயல்கள் .

சுரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி, தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்;
விரும்பேன், உன்னை அல்லால், ஒரு தெய்வம் என் மனத்தால்;
கரும்பு ஆரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .

4
கரும்புகள் நிறைந்த கழனிகளையுடைய திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , வண்டுகள் ஒலிக் கின்ற , அப்பொழுது மலரும் மலர்களைத் தூவி , பாய்தற்குரிய கண்ணீர் அரும்புகின்றமைக்குக் காரணமான மனத்தையுடைய அடியார்களோடு கூடி அடியேன் உனக்கு அன்புசெய்வேன் ; உன்னையன்றி வேறொரு தெய்வத்தை என் மனத்தாலும் விரும்பேன் ; இஃது என் உணர்விருந்தவாறு .

ஒழிப்பாய், என் வினையை; உகப்பாய்; முனிந்து அருளித்
தெழிப்பாய்; மோதுவிப்பாய்; விலை ஆவணம் உடையாய்
கழிப்பால் கண்டல் தங்கச் சுழி ஏந்து மா மறுகின்
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே! .

5
நீர்ச் சுழிகளை , அவை கழியிடத்தையடைந்து அடங்குமாறு தாங்கி நிற்கின்ற தெருக்களையுடைய திருக்கழிப் பாலையில் எழுந்தருளியிருக்கின்ற தீயேந்திய கையினையுடையவனே , நீ என்னை உனக்கு உரியவனாக்கிக்கொண்ட விலைப் பத்திரத்தை உடையையாகலின் . என்னை விரும்பி என்னோடு அளவளாவினும் அளவளாவுவாய் ; பின் அது காரணமாக , என் வினையை நீக்கி என்னை இன்புறச் செய்யினும் செய்வாய் ; அன்றி என்னை வெகுண்டு உரத்த கடுஞ்சொற்களால் இகழினும் இகழ்வாய் ; பின் அது காரணமாக , என்னைத் தண்டிக்கச் செய்யினும் செய்வாய் ; உன்னை ` இவ்வாறு செய்க ` எனக் கட்டளையிடுவார் யார் ?
Go to top

ஆர்த்தாய், ஆடுஅரவை அரை ஆர் புலி அதள்மேல்;
போர்த்தாய், ஆனையின் தோல் உரிவை புலால் நாற;
காத்தாய், தொண்டு செய்வார் வினைகள் அவை போக,
பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே .

6
அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல் , ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே , யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக்கொண்டவனே , உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே , உனக்கு இடமாவது , புகழையுடைய திருக்கழிப்பாலையே .

பருத் தாள் வன் பகட்டைப் படம் ஆக முன் பற்றி, அதள்-
உரித்தாய், ஆனையின் தோல்; உலகம் தொழும் உத்தமனே!
எரித்தாய், முப்புரமும்; இமையோர்கள் இடர் கடியும்
கருத்தா! தண்கழனிக் கழிப்பாலை மேயானே! .

7
உலகமெல்லாம் வணங்குகின்ற மேலானவனே , தேவர்களது துன்பத்தை நீக்கியருளுகின்ற தலைவனே . குளிர்ந்த கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பியெழுந்தருளி யிருப்பவனே , நீ முன்புயானையின் தோலைப் போர்வையாக விரும்பி , பருத்த கால்களையுடைய வலிய யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தாய் ; முப்புரங்களையும் எரித்தாய் ; இவை உனது வீரச் செயல்கள் .

படைத்தாய், ஞாலம் எலாம்; படர்புன்சடை எம் பரமா!
உடைத்தாய், வேள்விதனை; உமையாளை ஓர்கூறு உடையாய்;
அடர்த்தாய், வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய;
கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .

8
விரிந்த புல்லிய சடையினை யுடைய எங்கள் இறைவனே , உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே , கடலைச் சார்ந்த , கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே , நீ , உலகம் எல்லாவற்றையும் படைத்தாய் ; தக்கனது வேள்வியை அழித்தாய் ; வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும்படி நெருக்கினாய் ; இவை உன் வல்லமைகள் !

பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்,
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான்,
மை ஆர் கண்ணியொடு மகிழ்வான், கழிப்பாலை அதே .

9
பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும் , செம்மை நிறமுடைய பிரமனும் , கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக் கழிப்பாலையையே விரும்பி , மைபொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான் .

பழி சேர் இல் புகழான், பரமன், பரமேட்டி,
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை,
தொழுவான் நாவலர்கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே .

10
பழி பொருந்துதல் இல்லாத புகழையுடையவனும் , யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை , அவனையே தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள் , தேவர் உலகத்தை ஆள்பவராவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கழிப்பாலை
2.021   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   புனல் ஆடிய புன்சடையாய்! அரணம் அனல்
Tune - இந்தளம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
3.044   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று
Tune - கௌசிகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.006   திருநாவுக்கரசர்   தேவாரம்   வன பவளவாய் திறந்து, வானவர்க்கும்
Tune - காந்தாரம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை
Tune - திருநேரிசை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
4.106   திருநாவுக்கரசர்   தேவாரம்   நெய்தல் குருகு தன் பிள்ளை
Tune - திருவிருத்தம்   (திருக்கழிப்பாலை அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
5.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
6.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஊன் உடுத்தி, ஒன்பது வாசல்
Tune - திருத்தாண்டகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் வேதநாயகியம்மை)
7.023   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
Tune - நட்டராகம்   (திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் பொற்பதவேதநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000