சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம் கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவக் கண்டானை; கருப்பறியலூர், கொய்ம் மாவின் மலர்ச் சோலைக் குயில் பாட மயில் ஆடும், கொகுடிக் கோயில் எம்மானை; மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .
|
1
|
யானைத் தோலைப் போர்த்துநின்ற காலத்தில் உமையவள் அஞ்ச , அதனைக் கண்டு நின்றவனும் , திருக்கருப்பறியலூரில் உள்ள , தளிர் கிள்ளுதற்குரிய மாமரங்களில் இருந்து குயில்கள் பாட , கீழே மயில்கள் ஆடுகின்ற சோலைகளையுடைய கொகுடிக் கோயிலில்கண் எழுந்தருளியுள்ள எம்பெருமானும் ஆகிய இறைவனை , நாம் உடலை நேரே நிறுத்திக் கண்களைச் சிறிது மூடியிருந்து உள்ளத்தில் அன்போடு நிலை பெயராது இருத்தி , இவ்வாறு மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது . | |
நீற்(ற்)று ஆரும் மேனியராய் நினைவார் தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானை, தீயானை, கதிரானை, மதியானை, கருப்பறியலூர் கூற்றானை, கூற்று உதைத்துக் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில் ஏற்றானை, மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .
|
2
|
திருநீற்றால் நிறைந்த மேனியை உடையவராய் நினைக்கின்றவரது உள்ளத்தில் நிறைந்து தோன்றுபவனும் , ` காற்று ` தீ , ஞாயிறு , திங்கள் ` என்னும் பொருள்களாய் நிற்பவனும் , அழித்தல் தொழிலையுடையவனும் , கூற்றுவனை உதைத்தவனும் , வரிசையாகப் பொருந்திய வளைகளையுடைய உமாதேவியோடும் திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலைத் தனக்கு உரிய இடமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்த போது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது . | |
முட்டாமே நாள்தோறும் நீர் மூழ்கி, பூப் பறித்து, மூன்று போதும் கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு, அடிச் சேர்த்தும் அந்தணர் தம் கருப்பறியலூர் கொட்டு ஆட்டுப் பாட்டு ஆகி நின்றானை, குழகனை,கொகுடிக் கோயில் எட்டு ஆன மூர்த்தியை, நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .
|
3
|
நாள்தோறும் , ` காலை , நண்பகல் , மாலை ` என்னும் மூன்று பொழுதுகளிலும் , தப்பாமல் நீரின்கண் மூழ்கிப் பூக்களைப் பறித்து , அவைகளை , கட்டுதல் பொருந்திய இண்டை மாலையாகச் செய்துகொண்டு , மனத்தைத் தனது திருவடிக்கண் சேர்த்துகின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் , முழவம் முதலியவற்றின் கொட்டும் , அவற்றிற்கேற்ற கூத்தும் , பாட்டும் ஆகியவற்றை விரும்பி இருக்கின்ற அழகனும் , எட்டுருவாயவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது . | |
விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி, வினை போக, வேலிதோறும் கருந் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் குருந்து ஆய முள் எயிற்றுக் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில் இருந்தானை மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.
|
4
|
கல்வியில் வல்ல அடியார்கள் புதியனவாகிய பல சொல்மாலைகளைக் கொண்டு புகழ்ந்து வினை நீங்கப் பெறுமாறு , வேலிகள் தோறும் , பசிய அடியினையுடைய செவ்வாழைகளின்மேல் செவ்விய பழங்கள் சாற்றைச் சொரிந்து நிற்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் இளையவாகிய கூரிய பற்களையும் , வரிசையான வளைகளையும் உடையவளாகிய உமாதேவியோடும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நாம் மனத்தினால் நினைந்த போது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது . | |
பொடி ஏறு திருமேனிப் பெருமானை, பொங்கு அரவக் கச்சையானை, கடி நாறும் பூம் பொய்கைக் கயல் வாளை குதி கொள்ளும் கருப்பறியலூர் கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண் செய்யும் கொகுடிக் கோயில் அடி ஏறு கழலானை, நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.
|
5
|
நீறு மிகுந்திருக்கின்ற திருமேனியையுடைய பெருமானும் , சீற்றம் மிக்க பாம்பாகிய அரைக்கச்சையை உடையவனும் , நறுமணம் வீசுகின்ற பூப் பொய்கைகளில் கயல் மீனும் , வாளை மீனும் குதிகொள்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள , கொடிப் பூக்களில் , ` வண்டு ` என்றும் , ` தேன் ` என்றும் சொல்லப்படுகின்ற அவற்றது கூட்டங்கள் மொய்த்து இசைபாடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும் , திருவடியிற் பொருந்திய கழலையுடையவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது . | |
| Go to top |
பொய்யாத வாய்மையால், பொடி பூசிப் போற்று இசைத்து, பூசை செய்து, கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர் தம் கருப்பறியலூர் கொய் உலாம் மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக் கோயில் ஐயனை என் மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.
|
6
|
பொய்கூறாத வாய்மையான உள்ளத்தோடு திரு நீற்றை அணிந்து , ` போற்றி ` எனச் சொல்லிப் பல வகை வழிபாடு களையும் செய்து தங்கள் கையாலே தீயை எரிவித்து வேத ஒழுக்கத்தை வளர்க்கின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள , கொய்தல் பொருந்திய பூஞ்சோலைகளில் குயில்கள் கூவ , அவற்றோடு மயில்கள் ஆடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனாகிய இறைவனை யான் என் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது . | |
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழியச் சிந்தை செய்மின்! கடி கொள் பூந் தடம் மண்டிக் கருமேதி கண் படுக்கும் கருப்பறியலூர் கொடி கொள் பூ நுண் இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில் அடிகளை என் மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே! .
|
7
|
நறுமணத்தைக் கொண்ட பூக்களையுடைய பொய்கையின் கரைகளில் கரிய எருமைகள் மிக்கு உறங்குகின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் கொடிபோலும் அழகிய நுண்ணிய இடையினையும் , வரிசையான வளைகளையும் உடைய உமையம்மையுடன் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை என் மனத்தினால் நினைந்தபோது அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது ; ஆதலின் , துன்பந் தருவனவாய் உள்ள நோய்களும் , தீவினைகளும் ஒருதலையாக நீங்குதற் பொருட்டு அவனை நினையுங்கள் . | |
பறையாத வல்வினைகள் பறைந்தொழிய, பல்-நாளும் பாடி ஆடி கறை ஆர்ந்த கண்டத்தன், எண்தோளன், முக்கண்ணன், கருப்பறியலூர், குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத, கொகுடிக் கோயில் உறைவானை, மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே!.
|
8
|
கருமை நிறம் பொருந்திய கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடையவனும் , திருக்கருப் பறியலூரில் உள்ள குறைவுபடாத வேதத்தை உடைய நாவினராகிய அந்தணர்கள் தம் சிறு பணிவிடைகளை நீங்காது செய்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய இறைவனை , நாம் , நீங்குதற்கரிய வலிய வினைகள் நீங்குமாறு பல நாளும் பாடியும் , ஆடியும் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது . | |
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணாக் கங்கு ஆர்ந்த வார்சடைகள் உடையானை, விடையானை, கருப்பறியலூர் கொங்கு ஆர்ந்த பொழில்-சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக் கோயில் எம் கோனை, மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.
|
9
|
சங்கினை ஏந்துகின்ற கையினை யுடையவனாகிய திருமாலும் , தாமரைமலர்மேல் இருப்பவனாகிய பிரமனும்காண இயலாத , கங்கை பொருந்திய நீண்ட சடைகளையுடையவனும் , இடபத்தை ஊர்பவனும் , திருக்கருப்பறியலூரில் உள்ள , தேன் நிறைந்த பொழிலாகிய சோலைகள் , சுற்றிலும் கனிகள் பலவற்றை உதிர்க்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது . | |
பண் தாழ் இன் இசை முரலப் பல்-நாளும் பாவித்துப் பாடி ஆடிக் கண்டார் தம் கண் குளிரும் களிக் கமுகம் பூஞ்சோலைக் கருப்பறியலூர் குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம் கூறும் கொகுடிக் கோயில் எண் தோள் எம்பெருமானை நினைந்த போது அவர் நமக்கு இனிய ஆறே!.
|
10
|
கண்டவரது கண்கள் குளிர்தற்கு வழியாகிய கமுகஞ் சோலைகளையும் , களிப்பைத் தருகின்ற பூஞ்சோலைகளையும் உடைய திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , கீழ்மைத் தொழில்களைப் பயில்கின்ற சமணராலும் , புத்தராலும் புறங்கூறப்படுகின்ற , எட்டுத் தோள்களையுடைய எம்பெருமானை , நாம் , பல நாள்களும் உள்ளத்திற் கருதி , பண்பொருந்துதற்கு அடிநிலையாகிய இனிய சுருதியை , கூட்டுவார் கூட்டப் பல இசைப் பாடல்களைப் பாடியும் , ஆடியும் மனத்தினால் நினைந்த போது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது . | |
| Go to top |
கலை மலிந்த தென்புலவர் கற்றோர் தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் குலை மலிந்த கோள்-தெங்கு மட்டு ஒழுகும் பூஞ்சோலை கொகுடிக் கோயில் இலை மலிந்த மழுவானை, மனத்தினால் அன்பு செய்து, இன்பம் எய்தி, மலை மலிந்த தோள் ஊரன்-வனப் பகை அப்பன்-உரைத்த வண் தமிழ்களே!.
|
11
|
திருக்கருப்பறியலூரில் உள்ள , குலைகள் நிறைந்த வலிய தென்னை மரங்களையும் , தேன் ஒழுகுகின்ற பூஞ்சோலைகளையும் உடைய கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , இலைத் தன்மை மிகுந்த மழுப்படையை உடைய இறைவனை , ` வனப் பகை ` என்பவளுக்குத் தந்தையாகிய மலைபோலும் தோள்களையுடைய நம்பியாரூரன் மனத்தினால் நினைத்தலாகிய அன்புச் செயலைச் செய்து , அதனானே இன்பமுற்றுப் பாடிய வளப்பமான இத்தமிழ்ப் பாமாலையே , தன்னைக் கற்றவர்களாகிய கல்வி மிக்க தமிழ்ப் புலவர்களது துன்பத்தினைக் களையும் . | |