சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.041   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருக்கச்சூர் ஆலக்கோயில் - கொல்லிக்கௌவாணம் அருள்தரு கன்னியுமையம்மை உடனுறை அருள்மிகு தினம்விருந்திட்டநாதர் திருவடிகள் போற்றி
தொண்டைநாட்டுத் தலங்களை வழிபட விரும்பிய சுந்தரர், திருநாவலூரினின்றும் புறப்பட்டுத் திருக்கழுக்குன்றத்தை அடைந்து வணங்கித் திருக்கச்சூர் ஆலக்கோயிலைப் பணிந்து போற்றிக் கோயிற் புறத்தே வந்தார். அப்பொழுது வெயில் வெம்மை மிக்க நண்பகற் பொழுதாகியும் அவருக்கு அமுது சமைத்தளிக்கும் பரிசனங்கள் அங்கு வந்து சேரவில்லை. அடியார் பசித்திருக்கப் பொறாத இறைவன், மறையவர் வடிவுடன் வந்து, வன்றொண்டரை நோக்கி, நீர் பசியால் மிகவும் வாட்டமடைந்துள்ளீர். யான் சிறிது நேரத்தில் இங்குள்ள வீடுகளில் இரந்து உணவு கொண்டுவருமளவும் இங்கேயே இருப்பீராக என்று கூறிச்சென்று, அருகில் உள்ள வீடுகளில் கறியும் சோறும் இரந்து பெற்று வந்து, நம்பியாரூரர்க்கு வழங்கி, இதனை உண்டு பசிதீரும் என்று உபசரித்தார். சுந்தரர், அந்தணர் தந்த அமுதை அடியார்களோடு உண்டு மகிழ்ந்தார். மறையவர் விரைவில் மறைந்தார். அந்நிலையில் வன்றொண்டர் தமக்கு உணவு இரந்து பெற்று உண்பித்தவர் இறைவனே யெனத் துணிந்து, இறைவன் பெருங்கருணையை வியந்து ஆலக்கோயில் பெருமானை, முதுவாயோரி என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=GAXwrWFKRSE   Add audio link Add Audio

முது வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே!
மது வார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள் தன் மணவாளா!
கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே?
அதுவே ஆம் ஆறு இதுவோ? கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.

1
பெரிய வாயை உடைய நரிகள் கூப்பிடப் புறங் காட்டில் தீயை ஏந்தி ஆடுதலைச் செய்பவனே , கொன்றையினது தேன் ஒழுகுகின்ற புதிய பூவைச் சூடுகின்ற , மலையான் மகள் மணவாளனே , திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , நீ சென்று , முரிந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் உன் அடியவர் கவலைகொள்ளாரோ ?

கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து, கழலும் சிலம்பும் கலிக்க, பலிக்கு என்று
உச்சம் போதா ஊர் ஊர் திரியக் கண்டால் அடியார் உருகாரே?
இச்சை அறியோம்; எங்கள் பெருமான்! ஏழ் ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய்!
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே!.

2
எங்கள் பெருமானே , இருவகை ஏழ் பிறப்புக் களிலும் என்னை ஆளாகக் கொண்டு ஆள்பவனே , திருக்கச்சூரின் வட பகுதிக்கண் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற அச்சம் இல்லாத பெருமானே , நீ , அழகிய பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி , கழலும் சிலம்பும் காலில் நின்று ஒலிக்க , பிச்சைக் கென்று , ஞாயிறு உச்சம் ஆகவும் ஊர்தோறும் திரிதலைக் கண்டால் , உன் அடியவர் மனம் உருகமாட்டாரோ ! உன் விருப்பம் இன்னது என்பதனை யாம் அறிய மாட்டோம் .

சாலக் கோயில் உள நின் கோயில்; அவை என் தலை மேல் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன்; வினையும் துரந்தேன்-வானோர் அறியா நெறியானே!
கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர் பூங் கச்சூர் வடபாலை
ஆலக்கோயில், கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே!.

3
தேவரும் அறிய ஒண்ணாத நிலையையுடையவனே , அழகுடையதும் , குறைவில்லாததும் ஆகிய , குளிர்ந்த அழகிய திருக்கச்சூர் வடபால் ஆலக்கோயிலில் எழுந்தருளி யிருக்கின்ற , கல்லால் நிழற்கீழ் நால்வர் முனிவர்க்கு அறங்களை உரைத்த பெருமானே , உனது கோயிலாகப் பல கோயில்கள் இம் மண்ணில் உள்ளன ; அவற்றை யெல்லாம் என்தலைமேல் வைத்துப் புகழ்ந்து , மயக்கமுந் தீர்ந்தேன் ; வினையையும் ஓட்டினேன் ; இங்குள்ள கோயிலைப் புகழ்ந்து , நீ இரந்து சோறிடப்பெற்றேன் .

விடையும் கொடியும் சடையும் உடையாய்! மின் நேர் உருவத்து ஒளியானே!
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னி மாடம் கலந்து, எங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவி, பூமேல்-திருமாமகள் புல்கி,
அடையும் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.

4
இடப வாகனத்தையும் , இடபக்கொடியையும் , சடை முடியையும் உடையவனே , திருமேனியினது மின்னல்போலும் ஒளியையுடையவனே , எங்கும் , அழகியவாயில்களையும் , நிறைந்த மணிமண்டபங்களையும் , அழிவில்லாத மாடங்களையும் கொண்டு , சூழ உள்ள இடங்களிலும் சோலைகளையும் , நீர் நிலைகளையும் பெற்று விளங்குதலால் , தாமரைமேல் இருக்கும் பெருமை வாய்ந்த திருமகள் நீங்காது பற்றி உறைகின்ற , வயல்களையுடைய பண்ணை சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள , ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெரு மானே , இஃது உன்கருணை இருந்தவாறேயோ !

மேலை விதியே! வினையின் பயனே! விரவார் புரம் மூன்று எரி செய்தாய்!
காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய்! கறைக் கண்டா!
மாலை மதியே! மலை மேல் மருந்தே! மறவேன், அடியேன்; வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.

5
மேம்பட்டதாகிய அறநெறியாயும் , அதன் பயனாயும் உள்ளவனே , பகைவரது திரிபுரங்களை எரித்தவனே , காலையில் எழுந்து உன்னை வணங்குவாரது மனக்கவலையை அடியோடு நீக்குபவனே , நீலகண்டத்தை யுடையவனே , மாலைக் காலத்தில் தோன்றும் சந்திரன்போல்பவனே , மலைமேல் இருக்கின்ற மருந்து போல்பவனே , வயல்கள் நிறைந்த , கரும்பாலையை உடைய இடங்களைக் கொண்ட பண்ணையை உடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , அடியேன் உன்னை மறவேன் .
Go to top

பிறவாய்; இறவாய்; பேணாய், மூவாய்; பெற்றம் ஏறிப் பேய் சூழ்தல்
துறவாய்; மறவாய், சுடுகாடு என்றும் இடமாக் கொண்டு நடம் ஆடி;
ஒறுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் உருகாரே?
அறவே ஒழியாய் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே! .

6
பிறவாதவனே , இறவாதவனே , யாதொன்றையும் விரும்பாதவனே , மூப்படையாதவனே , இடபத்தை ஏறிப் பேயாற் சூழப்படுதலை விடாதவனே , மறதி இல்லாதவனே , என்றும் சுடு காட்டையே இடமாகக்கொண்டு நடனம் ஆடுபவனே , திருக்கச்சூரில் வடபால் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , நீ , உடைந்த வாயையுடைய ஓட்டில் பிச்சை ஏற்றலைக் கண்டால் , உன் அடியவர் மனம் வருந்தமாட்டாரோ ? இதனை அறவே ஒழி .

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வோனே!
மெய்யே! எங்கள் பெருமான்! உன்னை நினைவார் அவரை நினை கண்டாய்!
மை ஆர் தடங்கண் மங்கை பங்கா! கங்கு ஆர் மதியம் சடை வைத்த
ஐயா! செய்யாய்! வெளியாய்! கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! .

7
மை பொருந்திய பெரிய கண்களையுடைய மங்கை பங்காளனே , கங்கையையும் , ஆத்திப் பூவையும் , சந்திரனையும் சடையில் வைத்துள்ள தலைவனே , செம்மைநிறம் உடையவனே , வெண்மைநிறம் உடையவனே , திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , உன்னைப் புகழ்கின்றவர்கள் பொய்யாகவே புகழ்ந்தாலும் , அதனையும் மெய்யாகவே கொண்டு அருள்செய்கின்றவனே , எங்கள் பெருமானாகிய உன்னை மெய்யாகவே நினைக்கின்ற அடியவரை நீ நினை .

ஊனைப் பெருக்கி, உன்னை நினையாதொழிந்தேன், செடியேன்; உணர்வு இல்லேன்-
கானக் கொன்றை கமழ மலரும் கடிநாறு உடையாய்! கச்சூராய்!
மானைப் புரையும் மட மென் நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட
ஆனைத்தோலாய்! ஞானக்கண்ணாய்! ஆலக்கோயில் அம்மானே! .

8
காட்டில் உள்ள கொன்றை மலர் , மணங் கமழ மலரும் புதுமணம் வீசுதலை உடையவனே , மானை நிகர்த்த இளைய மெல்லிய பார்வையை யுடையவளாகிய உமையவள் அஞ்சும்படி போர்த்துள்ள யானைத்தோலை உடையவனே , உயிர்களுக்கு ஞானக்கண்ணாய் விளங்குபவனே , திருக்கச்சூரில் உள்ளவனே , ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , கீழ்மையுடையேனும் , அறிவில்லாதேனும் ஆகிய யான் , உடம்பை வளர்க்கும் செயலில் நின்று , உன்னை நினையாது விட்டேன் .

காதல் செய்து, களித்து, பிதற்றி, கடிமாமலர் இட்டு உனை ஏத்தி,
ஆதல் செய்யும் அடியார் இருக்க, ஐயம் கொள்வது அழகிதே!
ஓதக் கண்டேன்; உன்னை மறவேன்; உமையாள் கணவா! எனை ஆள்வாய்!
ஆதல் பழனக் கழனிக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!.

9
உமையம்மைக்குக் கணவனே , உனது தன்மைகளைப் பெரியோர் சொல்ல அறிந்து உன்னை மறவாதேனாகிய என்னையும் அடியாருள் வைத்து ஆள்கின்றவனே , விளைதலை யுடைய கழனிகளையுடைய பண்ணையையுடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , உன் பால் பேரன்புகொண்டு , அதனால் இன்பம்மீதூரப்பெற்று , தம்மை யறியாது வரும் சொற்களைச் சொல்லி , மணம்பொருந்திய மலர்களைத் தூவி உன்னைப் போற்றி செய்து உயர்வடைகின்ற அடியவர்கள் உனக்கு வேண்டும் பணிகளைச் செய்ய அவாவியிருக்க , நீ சென்று பிச்சை ஏற்பது அழகிதாமோ ? ஆகாதன்றே ?

அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன்-ஆரூரன் பேர் முடி வைத்த
மன்னு புலவன், வயல் நாவலர் கோன், செஞ்சொல் நாவன், வன்தொண்டன்
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலைமேல் பயில்வாரே .

10
அன்னங்கள் நிலைத்து வாழும் வயல்கள் சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவனது கருணையையே நினைகின்ற மனத்தினால் , ` ஆரூரன் ` என்று , திருவாரூர் இறைவனது பெயரைத் தலையில் வைத்துள்ள மிக்க புலமையுடையவனும் , செவ்விய சொல்லால் அமைந்த பாடல்களைப் பாடவல்ல நாவன்மையுடையவனும் , வயல்களை உடைய திருநாவலூருக்குத் தலைவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய , தமிழ் இலக்கணம் அமைந்த இப்பாமாலையைப் பாட வல்லவர் , என் தலைமேல் எப்பொழுதும் இருத்தற்கு உரியராவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கச்சூர் ஆலக்கோயில்
7.041   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முது வாய் ஓரி கதற,
Tune - கொல்லிக்கௌவாணம்   (திருக்கச்சூர் ஆலக்கோயில் தினம்விருந்திட்டநாதர் கன்னியுமையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000