திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) - கொல்லிக்கௌவாணம்அருள்தரு நீலாயதாட்சியம்மை உடனுறை அருள்மிகு காயாரோகணேசுவரர் திருவடிகள் போற்றி சுந்தரர் திருவாரூரினின்றும் புறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துக்குச் சென்று இறைவனை இறைஞ்சி விலையுயர்ந்த அணிகலன்களும் பிறவும் வேண்டுமென்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார் (கந்தம் முதல் ஆடை ஆபரணம் பண்டாரத்தே , காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் ; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும்) . இறைவன் அவருக்குப் பொன்னும் நவமணிகளும் நறு மணப் பொருள்களும் பட்டாடைகளும் விரைந்து செல்லும் குதிரை களும் பரிசாக வழங்கியருளினார். அப்பொருள்களைப் பெற்று மகிழ்ந்த சுந்தரர் நாகையினின்றும் புறப்பட்டுத் திருவாரூரை அடைந்தார். நகைகள், முத்து மாலை, வைர நகைகள், பட்டாடைகள், வாசனைத் திரவியங்கள்,விருந்து உணவு கிடைக்க; அனைத்து சுக போகங்களும் கிடைக்க
பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, | பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்; செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; | செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்; முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-|அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும் கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , பலவூர்களிற் சென்று , பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர் ; அங்ஙனம் இரக்குங்கால் , பிச்சைஇட வருகின்ற , பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர் ; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு , எருதின்மேல் ஏறித்திரிவீர் ; இவைகளைப் போலவே , உள்ள பொருளை மறைத்துவைத்து , என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது , ஏதும் இல்லை என்பீர் ; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா ; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும் , மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து , உடம்பிற் பூசிக் கொள்வதற்கு , இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும் , அத்தகையதான சந்தனமும் நீர் , தவிராது அளித்தருளல் வேண்டும் ,
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனைத் தீற்றி, | விருத்தி நான் உமை வேண்ட, துருத்தி புக்கு அங்கு இருந்தீர்; பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டிப் | பகட்ட நான் ஒட்டுவனோ? பல காலும் உழன்றேன்; சேம்பினோடு செங்கழு நீர் தண் கிடங்கில்-திகழும் |திரு ஆரூர் புக்கு இருந்த தீவண்ணர் நீரே; காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , என்னை , கைப்புடைய வேம்பினையும் , தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து , நான் , இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க , நீர் என்முன் நில்லாது , திருத்துருத்தியில் புகுந்து , அங்கே இருந்துவிட்டீர் ; இப்பொழுது உம்மைக் கண்டேன் ; நீர் பாம்பும் , விரிந்த சடைகளுமாகிய இவைகளைக் காட்டி என்னை வெருட்டிப் பெருமை அடைந்து விட நினைத்தால் நான் அதற்கு ஒட்டுவேனோ ! ஒட்டேன் ; ஏனெனில் , உம்பின் நான் பலகாலும் திரிந்துவிட்டேன் ; நீர்ச்சேம்பும் , செங் கழுநீரும் , குளிர்ந்த அகழியில் விளங்குகின்ற திருவாரூரில் குடி புகுந் திருக்கும் தீவண்ணராகிய நீர் , இப்பொழுது எனக்கு ` காம்பு ` என்றும் , ` நேத்திரம் ` என்றும் பெயர் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்தருளல் வேண்டும் .
பூண்பது ஓர் இள ஆமை; பொருவிடை ஒன்று ஏறி,| பொல்லாத வேடம் கொண்டு, எல்லாரும் காணப் பாண் பேசி, படுதலையில் பலி கொள்கை தவிரீர்;| பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர்; வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால்,| வெற்பு அரையன் மடப்பாவை பொறுக்குமோ? சொல்லீர் காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடுவீதிக் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
விரிந்த சடையின்மேல் பாம்பையும் , சந்திரனையும் வைத்த பெருமையுடையவரே , காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களையுடைய , கடற்கரைக் கண் உள்ள திரு நாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி , விரும்புதல் இல்லாத வேடத்தைப் பூண்டு எல்லாருங் காண , இசைபாடி , இறந்தோரது தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர் ; அங்ஙனம் பிச்சை ஏற்குங்கால் பிச்சையைக் கொண்டொழி யாது , வீண் சொற்களைப் பேசி , பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளைகளைக்கவர்வீராயின் , மலையரையன் மகளாகிய உம் தேவி மனம் பொறுப்பாளோ ? சொல்லீர் .
விட்டது ஓர் சடை தாழ, வீணை விடங்கு ஆக,| வீதி விடை ஏறுவீர்; வீண் அடிமை உகந்தீர்; துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடிச்| சுந்தரராய்த் தூ மதியம் சூடுவது சுவண்டே? வட்டவார் குழல் மடவார் தம்மை மயல் செய்தல் | மா தவமோ? மாதிமையோ? வாட்டம் எலாம் தீரக் கட்டி எமக்கு ஈவது தான் எப்போது? சொல்லீர்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
அழகரே , கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் பண்ணாது . வன்கண்மை கொண்டு திரிந்தும் , வெறுக்கப்படும் செய்கைகளையே செய்தும் , காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் , உம் மனம் வேண்டியவாறே திரிவீர் ; உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும் ! ஏனெனில் , முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ ! ` கண்டோம் ` என்பார்க்கும் , அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே . நீண்டு நின்றீரல்லிரோ ? அதனால் , நும் இயல்பையெல்லாம் விடுத்து , உமது கருவூலத்திலிருந்து நறுமணம் , ஆடை , ஆபரணம் முதலியவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும் .
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி, பூதம் | இசை பாட, இடு பிச்சைக்கு எச்சு உச்சம் போது,
பல அகம் புக்கு, உழிதர்வீர்; பட்டோடு சாந்தம்| பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ?
உலவு திரைக் கடல் நஞ்சை, அன்று, அமரர் வேண்ட | உண்டு அருளிச் செய்தது, உமக்கு இருக்க ஒண்ணாது இடவே;
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வக்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
தோகையையுடைய மயில்போலுஞ் சாயலை யுடைய மகளிர் நடனம் புரிகின்ற , செல்வத்தையுடைய கடற்கரைக்கண் உள்ள திருநாகைக்காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , இலவம்பூப்போலும் இதழ் பொருந்திய வாயை யுடைய உமையவளோடு எருதின்மேல் ஏறிக்கொண்டு , பூதங்கள் இசையைப் பாட , பலரும் இடுகின்ற பிச்சைக்கு , வேள்வியை உடைய உச்சிப் பொழுதில் பல இல்லங்களில் புகுந்து திரிவீர் ; ஆயினும் , நீர் அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள்செய்தது , அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்க வொண்ணாது கருணை மேலிட்டமையாலே ; அங்ஙனமாக , இப்பொழுது எனக்குப் பட்டும் , சாந்தும் பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ !
தூசு உடைய அகல் அல்குல்-தூமொழியாள் ஊடல்| தொலையாத காலத்து ஓர் சொல்பாடு ஆய் வந்து, தேசு உடைய இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்து,| திப்பிய கீதம் பாட, தேரொடு வாள் கொடுத்தீர்; நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த,| நிறை மறையோர் உறை வீழிமிழலை தனில் நித்தல் காசு அருளிச் செய்தீர்; இன்று எனக்கு அருள வேண்டும் | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நல்லாடையை உடுத்த அகன்ற அல் குலையும் , தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில் , நீர் சொல்ல வந்தவன் போல , ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க , அவனை முன்னர் ஒறுத்து , அவன் சிறந்த இசையைப் பாட , அவனுக்குத் தேரும் , வாளும் கொடுத்தீர் ; அதுவன்றி , வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு , மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர் ; அதுபோல , இன்று எனக்கு அருளல்வேண்டும் .
மாற்றம் மேல் ஒன்று உரையீர்; வாளா நீர் இருந்தீர்;| வாழ்விப்பன் என ஆண்டீர்; வழி அடியேன், உமக்கு; ஆற்றவேல்-திரு உடையீர்; நல்கூர்ந்தீர் அல்லீர்;| அணி ஆரூர் புகப் பெய்த அரு நிதியம் அதனில்- தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும்;| தாரீரேல், ஒரு பொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன்; காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும்| கடல் நாகைக்காரோணம் மேவிஇருந்தீரே! .
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , யான் உமக்கு வழிவழியாக அடியேன் ; அதுவன்றி , நீர் வலிந்து , என்னை , ` வாழ்விப்பேன் ` என்று சொல்லி அடிமை கொண்டீர் ; மிக்க செல்வம் உடையீர் ; வறுமை யுடையீரும் அல்லீர் ; ஆயினும் , மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய் வாளாதிருக்கின்றீர் ; அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள மிக்க பொருட் குவியலில் , எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்குத் தோன்றுகின்ற முக்கூற்றில் ஒருகூறு எனக்கு அளித்தருளல் வேண்டும் ; அதனோடு ஏறிப் போவதற்கு , காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை வேண்டும் ; இவைகளை அளியாதொழியின் , உம்மை ஒருபொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க ஒட்டாது , உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன் .
மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி;| மலை அரையன் பொன் பாவை, சிறுவனையும், தேறேன்; எண்ணிலி உண் பெரு வயிறன் கணபதி ஒன்று அறியான்;| எம்பெருமான்! இது தகவோ? இயம்பி அருள் செய்வீர்! திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில்,| திருமேனி வருந்தவே வளைக்கின்றேன்; நாளை, கண்ணறையன், கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா | கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , எம்பெருமானே , மண்ணுலகிலும் , விண்ணுலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது . ஆதலின் , நான் உம்மையுந் தெளிய மாட்டேன் ; உம் தேவியாகிய மலையரையன் மகளையும் , சிறுவனாகிய முருகனையும் தெளியமாட்டேன் ; அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி , தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின் , அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன் ? உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ ? சொல்லி யருளீர் ; இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில் , உம் திருமேனி வருந்தும்படி கட்டிப் பிடித்துக் கொள்வேன் ; பின்பு , ` இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவன் ; கொடுமையுடையவன் ` என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா .
மறி ஏறு கரதலத்தீர்; மாதிமையேல் உடையீர்;| மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்; கிறி பேசி, கீழ்வேளூர் புக்கு, இருந்தீர்; அடிகேள்!| கிறி உம்மால் படுவேனோ? திரு ஆணை உண்டேல், பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர்| பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருள வேண்டும்; கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும்| கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
மான் கன்று பொருந்திய கையை உடையவரே . தலைவரே , கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , நீர் , பெருமையோ மிக உடையீர் ; ` மிக்க பொருட்குவையைத் தருவேன் ` என்று சொல்லி , வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர் ; ஆனால் , இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி , திருக்கீழ்வேளூரிற் போய்த் தங்கியிருக்கின்றீர் ; உமது உறுதிமொழி எனக்கு உள்ளது என்றால் , நான் உம்மால் வஞ்சிக்கப்படுவேனோ ! படேன் , இலச்சினை பொருந்திய , நல்ல அழகினைக் கொண்ட பொன்னாலாகிய உடை வாளும் , தலையில் சூடிக்கொள்ளும் பொற்றாமரைப் பூவும் , பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும் . அன்றியும் , மூன்று பொழுதிலும் , கறியும் , சோறும் , அவை இரண்டோடும் கலக்கின்ற நெய்யும் ஆகிய இவைகளும் வேண்டும் .
பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் | பற்று ஆய பெருமானே! மற்று ஆரை உடையேன்? உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்க வேண்டும்;| ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும், கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும், வேண்டும் |கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர்! என்று அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன | அருந்தமிழ்கள் இவை வல்லார் அமருலகு ஆள்பவரே .
அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் , திருநாகைக் காரோணத்துப் பெருமானாரை அடுத்துநின்ற தன்மை யால் , அவரை , ` கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே , இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களையுடைய ` பரவை சங்கிலி ` என்னும் இருவருக்கும் , எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே , யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன் ? உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையையுடையேனாகிய என்குறையை நீக்கியருளல் வேண்டும் ; ஒளியையுடைய முத்துக்களால் ஆக்கி அணிகின்ற மாலையும் , ஒள்ளிய பட்டாடையும் , பூவும் , கண் நோக்கு நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற , சந்தனமும் வேண்டும் ` என்று வேண்டிப் பாடிய , அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள் , அமரர் உலகத்தை ஆள்வார்கள் .
7.046
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பத்து ஊர் புக்கு, இரந்து,
Tune - கொல்லிக்கௌவாணம்
(திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) காயாரோகணேசுவரர் நீலாயதாட்சியம்மை)
7.101
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பொன் ஆம் இதழி விரை
Tune -
(திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) )
This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org