சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.052   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருவாலங்காடு (பழையனூர்) - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு வண்டார்குழலியம்மை உடனுறை அருள்மிகு ஊர்த்துவதாண்டவேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=mb5NfyLtknA   Add audio link Add Audio

முத்தா! முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை பங்கா!
சித்தா! சித்தித் திறம் காட்டும் சிவனே! தேவர் சிங்கமே!
பத்தா! பத்தர் பலர் போற்றும் பரமா! பழையனூர் மேய
அத்தா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

1
இயல்பாகவே கட்டில்லாதவனே , கட்டுற்ற உயிர்கட் கெல்லாம் வீடளிக்கவல்ல , அரும்புகின்ற மெல்லிய தனங்களை யுடையாளாகிய உமையவளது பாகத்தையுடையவனே , சித்திகளை எல்லாம் உடையவனே , அச்சித்திகளை அடையும் வழியைக் காட்டுகின்ற சிவபெருமானே , தேவர்களாகிய விலங்குகட்குச் சிங்கம் போல்பவனே , அடியார்களுக்குப் பற்றாய் உள்ளவனே , அன்புடையார் பலரும் போற்றும் கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

பொய்யே செய்து புறம் புறமே திரிவேன் தன்னைப் போகாமே,
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா! மெய்யர் மெய்ப்பொருளே!
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா! பழையனூர் மேய
ஐயா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

2
மனத்தொடு பொருந்தாத செயல்களையே செய்து , அதனால் உனக்கு மிகவும் சேய்மையிலே திரிவேனாகிய என்னை , அங்ஙனம் அகன்றொழியாதவாறு தடுத்து இவ்வுலகில் நேரே வந்து என்னை ஆட்கொண்ட மெய்ம்மையுடையவனே , மெய்ம்மை யுடையவர்க்கு மெய்ப்பொருளாய் உள்ளவனே , படம் எடுத்து ஆடுகின்ற பாம்பை அரையிற் கட்டிய கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

தூண்டா விளக்கின் நற்சோதீ! தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய்!
பூண்டாய், எலும்பை! புரம் மூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே!
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய
ஆண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

3
தூண்ட வேண்டாது ஒளிரும் விளக்குப் போலச் சிறந்த ஒளிவடிவினனே , வணங்குவாரது துன்பத்தை நீக்குபவனே , எலும்பையே அணியாகப் பூண்டவனே , முப்புரங்களையும் சாம்பலாகுமாறு அழித்த அறவுருவினனே , முன்பு செய்யப்பட்ட , அழுந்துதற்கு இடமான வினைகளாகிய அவற்றை நீக்கியருளுகின்ற கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளி யிருப்பவனே , அடியேன் , உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு, மதி மயங்கி,
அறிவே அழிந்தேன், ஐயா, நான்! மை ஆர் கண்டம் உடையானே!
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய
அறிவே! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

4
தலைவனே , கருமைபொருந்திய கண்டத்தை யுடையவனே , தீர்க்க இயலாத வினைகளையெல்லாம் தீர்த்தருளுகின்ற கடவுளே , பழையனூரை விரும்புகின்ற அறிவு வடிவானவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளி யிருப்பவனே , அடியேன் , மான்போலும் ஒளிபொருந்திய கண்களையுடைய , இளைய , அழகிய மாதர் ஆசையாகிய வலையில் அகப்பட்டு , அறிய வேண்டுவனவற்றை அறியாது , அறிவு அடியோடே கெட்டேன் ; அவ்வாறே இனியுங் கெட்டொழியாது , உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

வேல் அங்கு ஆடு தடங்கண்ணார் வளையுள் பட்டு, உன் நெறி மறந்து,
மால் அங்கு ஆடி, மறந்தொழிந்தேன்; மணியே! முத்தே! மரகதமே!
பால் அங்கு ஆடீ! நெய் ஆடீ! படர் புன்சடையாய்! பழையனூர்
ஆலங்காடா! உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே.

5
மாணிக்கம் போல்பவனே , முத்துப் போல்பவனே , மரகதம் போல்பவனே , பால் முழுக்கு ஆடுபவனே , நெய் முழுக்கு ஆடுபவனே , விரிந்த புல்லிய சடையை யுடையவனே , பழையனூரைச் சார்ந்த திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் வேல்போலும் , பெரிய கண்களையுடைய மாதராசையாகிய வலையில் அகப்பட்டு , உன்னாற் சொல்லப்பட்ட நெறியை மறந்து , மயக்கம் மிகுந்து என்னையே மறந்தொழிந்தேன் ; இனி அவ்வாறு இராது , என்றும் உன் அடியார்க்கு அடியனாகியே வாழ்வேன் .
Go to top

எண்ணார் தங்கள் எயில் எய்த எந்தாய்! எந்தை பெருமானே!
கண் ஆய் உலகம் காக்கின்ற கருத்தா! திருத்தல் ஆகாதாய்!
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

6
உன்னை மதியாதவரது மதில்களை அழித்த என் தந்தையே , என் தந்தைக்கும் பெருமானே , உலகத்திற்குக் கண்ணாய் நின்று அதனைக் காக்கின்ற முதல்வனே , குற்றமில்லாதவனே , பண் பொருந்திய இசைகளைக் கொண்டு பலரும் துதிக்கின்ற பழையனூர்த் தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

வண்டு ஆர் குழலி உமை நங்கை பங்கா! கங்கை மணவாளா!
விண்டார் புரங்கள் எரி செய்த விடையாய்! வேத நெறியானே!
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா! பழையனூர் மேய
அண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

7
வண்டுகள் நிறைந்த கூந்தலையுடையவளாகிய ` உமை ` என்னும் நங்கைதன் பாகத்தையுடையவனே , கங்கைக்குக் கணவனே , பகைத்தவரது ஊர்களை எரித்த இடப வாகனனே , வேத நெறியை உடையவனே , முன்பு செய்யப்பட்ட , அழுந்துதற்கு இடமான வினைகள் பலவற்றையும் தீர்க்கின்ற கடவுளே , பழையனூரை விரும்புகின்ற தேவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

பேழ்வாய் அரவின் அணையானும், பெரிய மலர் மேல் உறைவானும்
தாழாது, உன் தன் சரண் பணிய, தழல் ஆய் நின்ற தத்துவனே!
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் தன்னை
ஆள்வாய்! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

8
பெரிய வாயையுடைய பாம்பாகிய படுக்கையை உடையவனாகிய திருமாலும் , பெரிதாகிய தாமரை மலர்மேல் இருப்பவனாகிய பிரமனும் விரைவில் உனது முதன்மையை உணர்ந்து உன் திருவடிகளை வணங்குமாறு , தீப்பிழம்பாய் நின்ற மெய்ப் பொருளானவனே , உயிர் , பயனின்றிக் கெடுதற்கு ஏதுவான வினைகளை நீக்கு கின்ற கடவுளே , பழையனூரை ஆள்கின்றவனே , திரு வாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

எம்மான்! எந்தை! மூத்த(அ)ப்பன்! ஏழ் ஏழ் படிகால் எமை ஆண்ட
பெம்மான்! ஈமப் புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே!
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

9
என் தந்தை , என் தந்தைக்கு முன்னோனாகிய தந்தை முதலாக இருவகை ஏழ் தலைமுறைகளில் எங்களை அடிமை கொண்டுள்ள பெருமானே , சுடுகாடாகிய புறங்காட்டில் பேய்களோடு ஆடல் செய்பவனே , பல சிறந்த மலர்களைக்கொண்டு பலரும் வணங்குகின்ற , பழையனூர்க்குத் தலைவனே , திருவாலங்காட்டில் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , என்றும் உன் அடியார்க்கு அடியேனாகியே வாழ்வேன் .

பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன், பழையனூர் மேய
அத்தன், ஆலங்காடன் தன் அடிமைத் திறமே அன்பு ஆகிச்
சித்தர் சித்தம் வைத்த புகழ்ச் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள்-
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே.

10
அடியார் பலரும் , சித்தர் பலரும் துதிக்கின்ற கடவுளும் , பழையனூரை விரும்பிய தலைவனும் , ஆகிய திருவாலங்காட்டு இறைவனது அடிமைத் திறத்தின் கண்ணே அன்புடையவராய் , சித்தர்களும் தங்கள் சித்தத்திலே மறவாது வைத்துள்ள புகழையுடைய அடியானாகிய நம்பியாரூரனது இம் மெய்யுணர்வுத் தமிழ்ப் பாடல்களாகிய பத்தினையும் பாடி ஆடுவோர் , சிவபெருமானது திருவடியையே எஞ்ஞான்றும் வணங்கி வாழ்பவராவர் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாலங்காடு (பழையனூர்)
1.045   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப்
Tune - தக்கராகம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுரர் வண்டார்குழலியம்மை)
4.068   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ள நீர்ச் சடையர் போலும்;
Tune - திருநேரிசை   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
6.078   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒன்றா உலகு அனைத்தும் ஆனார்
Tune - திருத்தாண்டகம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்ததாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
7.052   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   முத்தா! முத்தி தர வல்ல
Tune - பழம்பஞ்சுரம்   (திருவாலங்காடு (பழையனூர்) ஊர்த்துவதாண்டவேசுவரர் வண்டார்குழலியம்மை)
11.002   காரைக்கால் அம்மையார்    திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1   திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்
Tune -   (திருவாலங்காடு (பழையனூர்) )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000