மரு ஆர் கொன்றை மதி சூடி, மாணிக்கத்தின் மலை போல வருவார், விடை மேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழ; திருமால், பிரமன், இந்திரற்கும், தேவர், நாகர், தானவர்க்கும், பெருமான்-கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
|
1
|
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், நறுமணம் நிறைந்த கொன்றைமலர் மாலையையும், பிறையையும் திருமுடியிற் சூடிக் கொண்டு, உமாதேவியோடு, பூதப்படைகள் களிப்புற்றுச் சூழ, வெள்ளி மலையின்மேல் ஒரு மாணிக்கமலை வருவதுபோல விடையின்மேல் வருவார்; `திருமால், பிரமன், இந்திரன்` என்ற பெருந்தேவர்கட்கும், `மற்றைய தேவர், நாகலோகத்தார், அசுரர்` என்பவர்கட்கும் அவரே தலைவர். | |
விண்ணோர் தலைவர்; வெண் புரிநூல் மார்பர்; வேதகீதத்தர்; கண் ஆர் நுதலர்; நகுதலையர்; காலகாலர்; கடவூரர்; எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர்; உமை ஓர் ஒருபாகம், பெண் ஆண் ஆவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
|
2
|
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேவர்கட்குத் தலைவரும், வெள்ளிய முப்புரிநூலை அணிந்த மார்பினை உடைய வரும், வேதத்தை உடைய இசையைப் பாடுகின்றவரும், கண் பொருந்திய நெற்றியையுடையவரும், சிரிப்பதுபோலத் தோன்றும் தலைஓட்டினை ஏந்தியவரும், காலனுக்குக் காலரும் திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவரும், தம்மை மதியாதவரது ஊர்கள் மூன்றை எரித்த இறைவரும், உமை ஒருபாகமும் தாம் ஒருபாகமுமாய்ப் பெண்ணும் ஆணுமாய் நிற்கும் உருவத்தை உடையவரும் ஆவர். | |
காயும் புலியின் அதள் உடையர்; கண்டர்; எண்தோள் கடவூரர்; தாயும் தந்தை, பல் உயிர்க்கும், தாமே ஆன தலைவனார்; பாயும் விடை ஒன்று அது ஏறிப் பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
|
3
|
பேய்கள் வாழ்கின்ற திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், சினங்கொள்கின்ற புலியின் தோலாகிய உடையை உடையவர்; நீல கண்டத்தை உடையவர்; எட்டுத் தோள்களை யுடையவர்; திருக்கடவூரைத் தம் ஊராகக் கொண்டவர்; எல்லா உயிர்கட்கும் தாமே தாயும், தந்தையும், தலைவருமானவர்; பாய்ந்து செல்லுகின்ற ஒற்றை எருதின்மேல் ஏறிப் பிச்சை கிடைக்கும் இடங்களை நாடிச் சென்று ஏற்று உண்பவர்; ஆயினும் யாவர்க்கும் மேலான இடத்தில் இருப்பவர். | |
நறை சேர் மலர் ஐங்கணை யானை நயனத் தீயால் பொடி செய்த இறையார் ஆவர்; எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்; பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப் பிறை ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
|
4
|
ஒலிக்கின்ற மத்தளம், பிற பறை இவைகளைப் பாட்டுக்களோடு பயில்கின்ற அடியார்கள் நிறைந்த திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தேன் பொருந்திய ஐந்துவகை மலர்களாகிய அம்பு களையுடைய மன்மதனை, கண்ணில் உண்டாகிய நெருப்பாற் சாம் பலாக்கிய இறைவராவர்; `இல்லை` என்று சொல்லாமல் யாவர்க்கும் அவரவர் விரும்பியவற்றை ஈபவர்; பிறை பொருந்திய சடையை யுடையவர். | |
கொத்து ஆர் கொன்றை மதி சூடி, கோள் நாகங்கள் பூண் ஆக, மத்த யானை உரி போர்த்து, மருப்பும் ஆமைத் தாலியார்; பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலி கொள்ளும் பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
|
5
|
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கொத்தாகப் பொருந்திய கொன்றை மாலையையும், பிறையையும் திருமுடியிற்சூடி, கொல்லுந் தன்மையுடைய பாம்புகள் அணிகலங்களாய் இருக்க, மதத்தையுடைய யானைத் தோலைப்போர்த்து, பன்றியின் கொம்பை யும், ஆமையின் ஓட்டையும் உடைய தாலியையுடையவராய், பூத கணங்கள் அன்புசெய்து பாடியும், ஆடியும் சூழப் பிச்சை ஏற்கின்ற பித்தர் கோலத்தவராவர். | |
| Go to top |
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து, சுடலைப் பொடி அணிந்து, பணி மேல் இட்ட பாசுபதர்; பஞ்சவடி மார்பினர்; கடவூர்த் திணிவு ஆர் குழையார்; புரம் மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்; பிணி வார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
|
6
|
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், துணிபட்ட நீண்ட கீளும் கோவணமும் நெருங்கப்பட்டு, சுடலைச் சாம்பலைப் பூசி, பாம்புகளை மேலே அணிந்த பாசுபத வேடத்தையுடையவர்; பஞ்ச வடியை அணிந்த மார்பினையுடைய மாவிரத கோலத்தையுடையவர்; திண்ணிய நீண்ட குழையை அணிந்தவர்; புரங்கள் மூன்றையும் நெருப்பின் வாயிற்படுவித்த வீரத்தையுடையவர்; கட்டிய நீண்ட சடையையுடையவர். | |
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர்; கடவூர் உறை வாணர்; தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்; ஊர் தான் ஆவது, உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர், ஆரூர்; பேர் ஆயிரவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
|
7
|
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், கரிய, நிறைந்த கடலினின்றுந் தோன்றிய நஞ்சினையுண்ட கண்டத்தை யுடையவர்; திருக்கடவூரில் உறைகின்ற வாழ்க்கையையுடையவர்; தேர்மேற் பொருந்திய அரக்கனாகிய இராவணன், அதனை விட்டுக் கீழேபோய் வீழ்ந்து உடல் சிதையுமாறு கால்விரலால் தமது மலையை ஊன்றினவர்; ஏழுலகங்களையும் உடையவராகிய அவருக்கு ஊராவது, ஒற்றியாய் உள்ளது, அஃதொழிந்தால் யாருடைய ஊரோ! பெயர், ஆயிரம் உடையவர். | |
வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து, கானில் வேடுவனாய்க் கோடு ஆர் கேழல் பின் சென்று, குறுகி, விசயன் தவம் அழித்து, நாடா வண்ணம் செருச் செய்து, ஆவ நாழி நிலை அருள் செய் பீடு ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
|
8
|
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், தளராத தனங்களை யுடைய மங்கையொருத்தியோடு, வேடராய், கொம்பையுடைய பன்றியின்பின் சென்று, அருச்சுனனது தவத்தை அழித்து, அவன் தம்மை அறியாத நிலையில் நின்று போர்புரிந்து, பின்பு அவனுக்கு அம்பறாத் தூணியை நிலையாக வழங்கிய பெருமையைப் பொருந்திய, சடைமுடியை யுடையவர். | |
வேழம் உரிப்பர்; மழுவாளர்; வேள்வி அழிப்பர்; சிரம் அறுப்பர்; ஆழி அளிப்பர், அரிதனக்கு; ஆன் அஞ்சு உகப்பர்; அறம் உரைப்பர்; ஏழைத் தலைவர்; கடவூரில் இறைவர்; சிறு மான்மறிக் கையர்; பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
|
9
|
திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பெருமானடிகளாகிய சிவபெருமானார், யானையை உரிப்பர்; மழுப்படையை யுடையவர்; தக்கன் வேள்வியை அழிப்பர்; அவ் விடத்துப் பலரது தலைகளை அறுப்பர்; திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுப்பர்; என்றும் பசுவினிடத்து உளவாகின்ற ஐந்து பொருள்களை விரும்புவர்; நால்வர் முனிவர்கட்கு அறம் உரைப்பர்; மங்கை யொருத் திக்குத் தலைவராவர்; திருக்கடவூரில் தங்குவர்; சிறிய மான்கன்றைப் பிடித்த கையை உடையவர்; விரிந்த சடையை யுடையவர். | |
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து, பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர் நாடி, நாவல் ஆரூரன் நம்பி சொன்ன நல்-தமிழ்கள் பாடும் அடியார், கேட்பார் மேல், பாவம் ஆன பறையுமே.
|
10
|
மாடங்கள் நிறைந்த திருக்கடவூரில், அந்தணர்கள் துதிக்கின்ற மயானத்தில் எழுந்தருளியிருக்கின்ற, அடியவர்களுக்கு, அவர்களது துன்பம் நீங்குமாறு அருள் செய்கின்ற பெருமானடிகளது புகழை, திருநாவலூரில் தோன்றிய, `ஆரூரன்` என்னும் பெயரை யுடையவனாகிய நம்பி, ஆராய்ந்து பாடிய இந் நல்ல தமிழ்ப் பாடல் களைப் பாடுகின்ற அடியார், பாடக் கேட்கின்ற அடியார் இவர்கள்மேல் உள்ள பாவங்களெல்லாம் பறந்தொழிதல் திண்ணம். | |
| Go to top |