சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.055   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருப்புன்கூர் - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி ராகத்தில் திருமுறை அருள்தரு சொக்கநாயகியம்மை உடனுறை அருள்மிகு சிவலோகநாதர் திருவடிகள் போற்றி
ஒருமுறை சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்திற்கு வருகை புரிந்தனர். அச்சமயம் திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம் பன்னிரண்டு வேலி நிலம் ஆலயத்திற்குக் கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற அரசனும் சம்மதித்தான். அதன்படி சுந்தரர் பதிகம் பாட மழை பெய்தது. கூறியபடி மன்னனும் பன்னிரண்டு வேலி நிலத்தை ஆலயத்துக்கு அளித்தான். ஆனால், பெய்த மழை பெய்ததுதான். நில்லாமல் மழை பெய்து கொண்டிருந்தது. இடைவெளிவிட்டுக்கூட நிற்கவில்லை. பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த மேலும் பன்னிரண்டு வேலி நிலம் ஆலயத்துக்கு அளித்தால், பதிகம் பாடி மழையை நிறுத்தலாம் என்று மன்னனிடம் கூற….மன்னனும் ஒப்புக் கொள்ள… பதிகம் பாடி மழை நிற்க, அடுத்து பன்னிரண்டு வேலி நிலத்தை மன்னனிடமிருந்து பெறப்பட்டு இந்த திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார் சுந்தரர். இந்த வரலாற்றை சுந்தரர் அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த என்று தொடங்கும் தனது பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீர்இலை மாநிலம் தருவோம் உய்யக் கொள்கமற் றெங்களை என்ன ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே
மழை வேண்டல் பதிகம்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=iosMgigd7YU   Add audio link Add Audio

அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணம் ஆக,
வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு    அடியேன்,
எந்தை! நீ எனை நமன் தமர் நலியின், இவன் மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .

1
வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , முனிவன் ஒருவன் உன்னை அடைக் கலமாக அடைய , அவனைக் காத்தல் நிமித்தமாக , அவன் மேல் வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்த உனக்கு அடியேனாகிய யான் , உனது அவ்வாற்றலையறிந்து , என்னையும் இயமன் தூதர்கள் வந்து துன்புறுத்துவார்களாயின் , என்தந்தையாகிய நீ , ` இவன் என் அடியான் ; இவனைத் துன்புறுத்தாதீர் ` என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

வையகம் முற்றும் மா மழை மறந்து, வயலில் நீர் இலை; மா நிலம் தருகோம்;
உய்யக் கொள்க, மற்று எங்களை! என்ன, ஒலி கொள் வெண்முகில் ஆய்ப் பரந்து எங்கும்
பெய்யும் மா மழைப் பெரு வெள்ளம் தவிர்த்து, பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும்
செய்கை கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .

2
வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , இவ்வூரிலுள்ளவர் , ` உலகமுழுதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று ; மிக்க நிலங்களை உனக்குத் தருவோம் ; எங்களை உய்யக்கொள்க ` என்று வேண்ட , ஒளியைக் கொண்ட வெண்முகிலாய்ப் பரந்திருந்தவை , அந் நிலைமாறி , எங்கும் பெய்த பெருமழையால் உண்டாகிய பெரு வெள்ளத்தை நீக்கி , அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேலி நிலத்தைப் பெற்றருளிய செயலையறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

ஏதம் நன் நிலம் ஈர்-அறுவேலி ஏயர்கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து,
கோதனங்களின் பால் கறந்து ஆட்டக் கோல வெண்மணல் சிவன் தன்மேல் சென்ற
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடைமிசை மலர் அருள் செயக் கண்டு,
பூத ஆளி! நின் பொன் அடி அடைந்தேன்-பூம்பொழில்-திருப் புன்கூர் உளானே! .

3
பூதகணங்கட்குத் தலைவனே , அழகிய சோலை களையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நீ , நல்ல நிலங்கள் பன்னிருவேலி கொடுத்த ஏயர்கோன் அடைந்த , துன்பத்தைச் செய்யும் பெரிய நோயை இப்பொழுது தீர்த்ததனையும் , முன்பு பசுக்களது மடியில் நிறைந்திருந்த பாலைக் கறந்து ஆட்ட அதனைப் பொறாது அங்ஙனம் ஆட்டப்பட்ட அழகிய வெண் மணலாலாகிய பெருமான்மேற் சென்ற தந்தையது பாதங்கள் துணி பட்டு விழுமாறு வெட்டிய சண்டேசுர நாயனாருக்கு உனது முடியின் மேற் சூடியுள்ள கொன்றைமாலையை எடுத்துச் சூட்டியருளியதையும் அறிந்து வந்து , அடியேன் , உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

நல்-தமிழ் வல்ல ஞானசம்பந்தன், நாவினுக்கு அரையன், நாளைப் போவானும்,
கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணம் புல்லன், என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு, நின் குரை கழல் அடைந்தேன்-
பொன்திரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திருப் புன்கூர் உளானே! .

4
பொன்போலும் , திரளாகிய அழகிய தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளி யிருப்பவனே , ` நல்ல தமிழைப் பாட வல்ல ஞானசம்பந்தனும் , நாவுக் கரையனும் , நாளைப்போவானும் , சூதாடுதலை நன்கு கற்ற மூர்க் கனும் , நல்ல சாக்கியனும் , சிலந்தியும் , கண்ணப்பனும் , கணம் புல்லனும் ` என்ற இவர்கள் குற்றமான செயல்களைச் செய்யவும் , அவைகளைக் குணமான செயலாகவே கருதிய உனது திருவுள்ளத்தின் தன்மையை அறிந்து , வந்து , அடியேன் , உனது ஒலிக்கின்ற கழலை யணிந்த திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

கோலம் மால் வரை மத்து என நாட்டி, கோள் அர(வ்)வு சுற்றி, கடைந்து எழுந்த
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய, அமரர்கட்கு அருள் புரிவது கருதி,
நீலம் ஆர் கடல் விடம் தனை உண்டு, கண்டத்தே வைத்த பித்த! நீ செய்த
சீலம் கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

5
வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , தேவர்கள் , அழகிய பெரிய மலையை மத்தாக நாட்டி , கொடிய பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்து , அதில் அமுதந் தோன்றாது பெருவிடந் தோன்றியதைக் கண்டு அவர்கள் பெரிதும் ஓடிவந்து அடைய அவர்கட்கு உதவுதல் கருதி , கருமை நிறைந்த , அக் கடல் விடத்தை உண்டு , அஃது என்றும் நின்று விளங்குமாறு கண்டத்தே வைத்த பேரருளாளனே , நீ செய்த இந் நல்ல செய்கையையறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந் தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .
Go to top

இயக்கர், கின்னரர், யமனொடு, வருணர், இயங்கு தீ, வளி, ஞாயிறு, திங்கள்
மயக்கம் இல் புலி, வானரம், நாகம், வசுக்கள், வானவர், தானவர், எல்லாம்
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார்; பெறும் ஆர் அருள் கண்டு,
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .

6
வளவியசோலையையுடைய திருப்புன்கூரில் எழுந் தருளியிருப்பவனே , இயக்கரும் , கின்னரரும் , இயமனும் , வருணனும் . அக்கினியும் , இயங்குகின்ற வாயுவும் , சூரியனும் , சந்திரனும் , வசுக்களும் , ஏனைய தேவர்களும் , அசுரர்களும் , மற்றும் அறியாமை நீங்கின புலி , குரங்கு , பாம்பு முதலியனவும் உனது திருவடியை மறத்தல் சிறிதும் இன்றி வழிபட்டுப் பெற்ற அரிய திருவருளை யறிந்து அடியேனும் , தடுமாற்றம் சிறிதும் இன்றி உன் திருவடியை அடைந் தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப் பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து,
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய்; பண்டு பகீரதன் வேண்ட,
ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை-நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த
தீர்த்தனே! நின் தன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

7
தூயவனே , வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நற்பொருள்களை உள்ளடக்கிய பெரிய செவிகளையுடைய முனிவர்களுக்கு , அன்று சோலைகளைச் சூழக்கொண்ட ஆலமரத்தின் கீழிருந்து அறத்தைச் சொல்லியும் , அருச்சுனனுக்கு அன்று பாசுபதத்தைக் கொடுத்தும் பகீரதன் வேண்டிக்கொள்ள அவன்பொருட்டு , ஆரவாரித்து வீழ்ந்த நீர்வடிவாகிய கங்கையாளை முன்பு உனது சடையில் , அடக்கியும் அருள்செய்தாய் ; அவற்றை யெல்லாம் அறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

மூ எயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை, ஒருவன்-நீ கரிகாடு அரங்கு ஆக,
மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணி முழா முழக்க(வ்) அருள் செய்த
தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

8
தேவதேவனே , வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நீ , முப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை உனது திருக் கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு , மற்றொருவனை , நீ , கரிந்த காடே அரங்கமாக , உமையவளை நோக்கி ஒப்பற்ற பெரிய நடனத்தை மகிழ்ந்து செய்யும் பொழுது அழகிய மத்தளத்தை முழக்கும் படி அருள்செய்ததை யறிந்து வந்து . அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்றுகொண்டருள் .

அறிவினால் மிக்க அறுவகைச் சமயம் அவ் அவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து,
எறியும் மா கடல் இலங்கையர் கோனைத் துலங்க மால் வரைக்கீழ் அடர்த்திட்டு,
குறி கொள் பாடலின் இன் இசை கேட்டு, கோல வாளொடு நாள் அது கொடுத்த
செறிவு கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே!.

9
வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே , நூலறிவினால் மிக்க ஆறுவகைப் பட்ட சமயங்களில் உள்ள அவரவர்க்கும் அச்சமயத்திற்றானே , அரிய திரு வருளைச் செய்தும் , அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை , அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து , பின்பு அவன் பாடிய , உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசையைக்கேட்டு , அழகிய வாளோடு , மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து , அடியேன் உன் திருவடியை அடைந்தேன் ; என்னை ஏன்று கொண்டருள் .

கம்பம் மால் களிற்றின்(ன்) உரியானை, காமற் காய்ந்தது ஓர் கண் உடையானை,
செம்பொனே ஒக்கும் திரு உருவானை, செழும் பொழில்-திருப் புன்கூர் உளானை,
உம்பர் ஆளியை, உமையவள் கோனை, ஊரன்-வன்தொண்டன்-உள்ளத்தால் உகந்து
அன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு-ஐந்தும் வல்லவர் அருவினை இலரே.

10
அசைதலையுடைய பெரிய யானையினது தோலை உடையவனும் , காமனை எரித்த ஒரு கண்ணை உடையவனும் , செம் பொன்னே போல்வதாகிய அழகிய மேனியை உடையவனும் , தேவர் களை ஆள்பவனும் , உமையவளுக்குத் தலைவனும் ஆகிய , வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , வன்றொண்டனாகிய நம்பியாரூரன் மனத்தால் விரும்பி , அங்ஙனம் விரும்பிய அவ்வன்பானே சொல்லிய அரிய இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர் , நீங்குதற்கரிய வினைகளை இல்லாதவராவர் ; இது திண்ணம் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புன்கூர்
1.027   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முந்தி நின்ற வினைகள் அவை
Tune - தக்கராகம்   (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)
7.055   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,
Tune - தக்கேசி   (திருப்புன்கூர் சிவலோகநாதர் சொக்கநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000