சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.072   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருவலம்புரம் - காந்தாரம் லதாங்கி நவரோசு கனநப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு வடுவகிர்க்கண்ணம்மை உடனுறை அருள்மிகு வலம்புரநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=UPQ5PIB3Qzg   Add audio link Add Audio

எனக்கு இனித் தினைத்தனைப் புகல் இடம் அறிந்தேன்;
பனைக் கனி பழம் படும் பரவையின் கரை மேல்
எனக்கு இனியவன், தமர்க்கு இனியவன், எழுமையும்
மனக்கு இனியவன் தனது இடம் வலம்புரமே.

1
எனக்கு இனியவனும் , தனக்கு என்னைப்போலும் அன்பராய் உள்ளார்க்கு இனியவனும் , எழுபிறப்பிலும் எங்கள் மனத்துக்கு இனியனாகின்றவனும் ஆகிய இறைவனது இடம் , பனை மரத்தின்கண் பழுத்த பழங்கள் வீழ்கின்ற கடலினது கரைக்கண் உள்ள , ` திருவலம்புரம் ` என்னும் தலமே . இதனை அறிந்தேனாகலின் , எனக் கும் சிறிது புகலிடம் இங்கு உளதாதலை இப்பொழுது யான் அறிந் தேனாயினேன் .

புரம் அவை எரிதர வளைந்த வில்லினன், அவன்;
மர உரி புலி அதள் அரைமிசை மருவினன்;
அர உரி இரந்தவன், இரந்து உண விரும்பி நின்று;
இரவு எரி ஆடி தன் இடம் வலம்புரமே.

2
திரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும் , புதியவனும் , மரவுரியையும் புலித்தோலையும் அரை யிற் பொருந்தியவனும் , பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும் இரந்து உண்ண விரும்புபவனும் , இரவின்கண் தீயில் நின்று ஆடுப வனும் ஆகிய இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

நீறு அணி மேனியன், நெருப்பு உமிழ் அரவினன்,
கூறு அணி கொடுமழு ஏந்தி(ய) ஒர் கையினன்,
ஆறு அணி அவிர்சடை அழல் வளர் மழலை வெள்-
ஏறு அணி அடிகள் தம் இடம் வலம்புரமே.

3
நீறணிந்த மேனியை யுடையவனும் , சினங் காரண மாகக் கண்களால் நெருப்பை உமிழ்கின்ற பாம்பை அணிந்தவனும் , பிளத்தலைப் பொருந்திய கொடிய மழுவை ஏந்திய ஒரு கையை உடையவனும் , நீரை அணிந்த , ஒளிவிடும் சடையாகிய நெருப்பு வளரப்பெற்றவனும் ஆகிய , இளமையான வெள்ளிய இடபக் கொடியை உயர்த்துள்ள இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

கொங்கு அணை சுரும்பு உண, நெருங்கிய குளிர் இளந்
தெங்கொடு பனை பழம் படும் இடம்; தேவர்கள்
தங்கிடும் இடம்; தடங்கடல்-திரை புடைதர
எங்களது அடிகள் நல் இடம் வலம்புரமே.

4
மலர்களில் உள்ள தேனை ஆங்கு வந்த வண்டுகள் உண்ண , நெருங்கிய , குளிர்ந்த , இளைய தென்னை மரங்களும் , பனை மரங்களும் பழம் விளைகின்ற இடமும் , பெரியகடலினது அலைகள் கரையை மோத , தேவர்கள் தங்கியிருக்கும் இடமும் , எங்கள் இறை வனது நல்ல இடமும் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

கொடு மழு விரகினன், கொலை மலி சிலையினன்,
நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன், இடம்;
படு மணி முத்தமும் பவளமும் மிகச் சுமந்து
இடு மணல் அடை கரை இடம் வலம்புரமே.

5
கொடிய மழுவை எடுக்க வல்லவனும் , கொலை பொருந்திய வில்லையுடையவனும் , மூன்று பெரிய மதில்களை ஓர் இமைப்பொழுதில் பொடியாக்க வல்லவனும் ஆகிய இறைவனது இடம் , கடலில் உண்டாகின்ற மாணிக்கங்களையும் , முத்துக்களையும் , பவளங்களையும் மிகுதியாகத் தாங்கி நிற்கின்ற மணல் பொருந்திய கடற்கரையாகிய இடமும் , திருவலம்புரம் எனப்படுவதும் ஆகிய தலமே .
Go to top

கருங்கடக் களிற்று உரிக் கடவுளது இடம்; கயல்
நெருங்கிய நெடும் பெ(ண்)ணை அடும்பொடு விரவிய
மருங்கொடு, வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து
இருங்கடல் அணைகரை இடம் வலம்புரமே.

6
கரிய மதநீரையுடைய யானைத் தோலையுடைய இறைவனது இடம் , நெருங்கிய , நீண்ட பனைமரங்கள் , கயல் மீன் களோடும் , அடும்பங் கொடிகளோடும் கலந்து நிற்கின்ற இடத்தின்கண் , வலம்புரிச் சங்குகளும் , சலஞ்சலச் சங்குகளும் தம் தம் பெண் சங்குகளோடு மணஞ்செய்து கொள்ளுதலைப் பொருந்தி , பெரிய கடலினின்றும் வருகின்ற கடற்கரையாகிய இடமும் , ` திருவலம்புரம் ` எனப்படுவதும் ஆகிய தலமே .

நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர்,
வரி புரி பாட நின்று ஆடும் எம்மான், இடம்;
புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து
எரி எரி ஆடி தன் இடம் வலம்புரமே.

7
நரிகள் விரும்புகின்ற காடே அரங்கமாக நடனம் ஆடுபவனும் , யாழ் இசையைப்பாட நின்று ஆடுகின்ற எம்பெரு மானும் , பின்னிய , சுரிந்த , கட்டிய கூந்தலையுடைய மங்கையை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்து , எரிகின்ற நெருப்பில் ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

பாறு அணி முடைதலை கலன் என மருவிய,
நீறு அணி, நிமிர்சடை முடியினன்; நிலவிய
மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது,
ஏறு உடை அடிகள் தம் இடம் வலம்புரமே.

8
பருந்தைக்கொண்ட , முடைநாற்றம் பொருந்திய தலையை உண்கலமாகப் பொருந்தியவனும் , நீற்றை அணிந்தவனும் , நீண்ட சடைமுடியை உடையவனும் இடபத்தை உடைய தலைவனும் ஆகிய இறைவனது இடம் , விளங்குகின்ற , மாறிமாறியும் கூட்டமாயும் வருகின்ற அலைகளையுடைய கடலையும் , வயல்களையும் அழகிய சோலைகளையும் உடையதாகிய , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .

சடசட விடு பெ(ண்)ணை பழம் படும் இட வகை;
பட வடகத்தொடு பல கலந்து உலவிய
கடை கடை பலி திரி கபாலிதன் இடம் அது;
இடி கரை மணல் அடை இடம் வலம்புரமே.

9
தோல் ஆடையை உடுத்துக்கொண்டும் , சாம்பலைப் பூசிக்கொண்டும் உலாவுகின்றவனும் , இல்லங்களின் வாயில் தோறும் பிச்சைக்குத் திரிகின்ற தலை ஓட்டினை உடையவனும் ஆகிய இறைவனது இடம் , ` சடசட ` என்னும் ஓசையை வெளிப் படுத்துகின்ற பனைமரங்கள் பழம் பழுக்கின்ற இடங்களின் வகை பலவும்மிகுமாறு , இடிகின்ற கரையை மணல்கள் அடைக்கின்ற இடமும் , ` திருவலம்புரம் ` எனப்படுவதும் ஆகிய தலமே .

குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர், கண்டு அடி வீழ்ந்தவர், கனை கழல்
தண்டு உடைத் தண்டிதன் இனம் உடை அர உடன்
எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே.

10
கரகத்தையுடைய உறியை உடையசமணர்களது பொய்ம்மையை நன்குணர்ந்தவர்களும் , உணர்ந்து தனது திருவடியில் வீழ்ந்து வணங்கியவர்களும் , ஒலிக்கின்ற கழலை அணிந்த , தண்டேந்தி நிற்கும் தண்டி முதலிய சிவகணத்தவர்களும் செய்கின்ற , ` அரகர ` என்னும் ஓசையுடன் , எட்டுத் திசைகட்கும் ஒரு விளக்குப் போல்பவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம் , ` திருவலம் புரம் ` என்னும் தலமே .
Go to top

வரும் கலமும் பல பேணுதல், கருங்கடல்,
இருங் குலப் பிறப்பர் தம் இடம் வலம்புரத்தினை,
அருங் குலத்து அருந்தமிழ் ஊரன்-வன்தொண்டன்-சொல்
பெருங் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே.

11
கரிய கடலின்கண் வருகின்ற மரக்கலங்கள் பலவற்றையும் பேணுதலுடைய உயர் குடிப் பிறப்பினரது இடமும் , ` திருவலம்புரம் ` எனப்படுவதும் ஆகிய தலத்தினை அரிய குலத்தில் தோன்றிய , அரிய தமிழ்ப் பாடலில் வல்ல , வன்றொண்டனாகிய நம்பியாரூரனது சொல்லால் , பெரிய குழாமாகிய அடியவரோடும் கூடிநின்று துதித்தல் , பெருமையைத் தருவதாம் .

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவலம்புரம்
3.103   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கொடி உடை மும்மதில் ஊடு
Tune - பழம்பஞ்சுரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
4.055   திருநாவுக்கரசர்   தேவாரம்   தெண் திரை தேங்கி ஓதம்
Tune - திருநேரிசை   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
6.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   மண் அளந்த மணி வண்ணர்
Tune - திருத்தாண்டகம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
7.072   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   எனக்கு இனித் தினைத்தனைப் புகல்
Tune - காந்தாரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000