சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.103   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கொடி உடை மும்மதில் ஊடு
பண் - பழம்பஞ்சுரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=DYWjG6i9I8M
4.055   திருநாவுக்கரசர்   தேவாரம்   தெண் திரை தேங்கி ஓதம்
பண் - திருநேரிசை   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2A7VC50MMRY
6.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   மண் அளந்த மணி வண்ணர்
பண் - திருத்தாண்டகம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கணம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=fs5u5igGi7o
7.072   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   எனக்கு இனித் தினைத்தனைப் புகல்
பண் - காந்தாரம்   (திருவலம்புரம் வலம்புரநாதர் வடுவகிர்க்கண்ணம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=UPQ5PIB3Qzg

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.103   கொடி உடை மும்மதில் ஊடு  
பண் - பழம்பஞ்சுரம்   (திருத்தலம் திருவலம்புரம் ; (திருத்தலம் அருள்தரு வடுவகிர்க்கணம்மை உடனுறை அருள்மிகு வலம்புரநாதர் திருவடிகள் போற்றி )
கொடி உடை மும்மதில் ஊடு உருவக் குனி வெஞ்சிலை தாங்கி
இடிபட எய்த அமரர்பிரான், அடியார் இசைந்து ஏத்தத்
துடி இடையாளை ஒர்பாகம் ஆகத் துதைந்தார், இடம்போலும்
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன்நகரே.

[1]
கோத்த கல்லாடையும், கோவணமும், கொடுகொட்டி
கொண்டு ஒரு கை,
தேய்த்து அன்று அநங்கனைத் தேசு அழித்து, திசையார் தொழுது ஏத்த,
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும்
வாய்த்த முத்தீத் தொழில் நால் மறையோர் வலம்புர
நன்நகரே.

[2]
நொய்யது ஒர் மான்மறி கைவிரலின் நுனை மேல் நிலை ஆக்கி,
மெய் எரிமேனி வெண் நீறு பூசி, விரிபுன் சடை தாழ,
மை இருஞ் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும்
வைகலும் மா முழவம்(ம்) அதிரும் வலம்புர நன்நகரே.

[3]
ஊன் அமர் ஆக்கை உடம்பு தன்னை உணரின் பொருள் அன்று;
தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்துமினோ!
ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம்போலும்
வானவர் நாள்தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன்நகரே.

[4]
செற்று எறியும் திரை ஆர் கலுழிச் செழுநீர் கிளர்
செஞ்சடை மேல்
அற்று அறியாது, அனல் ஆடு நட்டம், அணி ஆர் தடங்கண்ணி
பெற்று அறிவார், எருது ஏற வல்ல பெருமான், இடம்போலும்
வற்று அறியாப் புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன்நகரே.

[5]
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு, உமையோடு உடன் ஆகி,
சுண்ண வண்ணப்பொடி மேனி பூசிச் சுடர்ச் சோதி நின்று இலங்க,
பண்ண வண்ணத்தன பாணி செய்ய, பயின்றார் இடம்போலும்
வண்ண வண்ணப் பறை பாணி அறா வலம்புர நன்நகரே.

[6]
புரிதரு புன்சடை பொன்தயங்க, புரிநூல் புரண்டு இலங்க,
விரைதரு வேழத்தின் ஈர் உரி-தோல் மேல் மூடி, வேய் புரை தோள்
அரை தரு பூந்துகில் ஆர் அணங்கை அமர்ந்தார் இடம்போலும்
வரை தரு தொல்புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன்நகரே.

[7]
தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலைபத்து
உடையானை,
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க, ஒரு கால்விரல் ஊன்றி,
மிண்டு அது தீர்த்து அருள் செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம்போலும்
வண்டு இணை தன்னொடு வைகு பொழில் வலம்புர
நன்நகரே.

[8]
தார் உறு தாமரைமேல் அயனும், தரணி அளந்தானும்,
தேர்வு அறியா வகையால் இகலித் திகைத்துத் திரிந்து ஏத்த,
பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம்போலும்
வார் உறு சோலை மணம் கமழும் வலம்புர நன்நகரே.

[9]
காவிய நல்-துவர் ஆடையினார், கடு நோன்பு மேற்கொள்ளும்
பாவிகள், சொல்லைப் பயின்று அறியாப் பழந் தொண்டர் உள் உருக,
ஆவியுள் நின்று அருள் செய்ய வல்ல அழகர் இடம்போலும்
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன்நகரே.

[10]
நல் இயல் நால்மறையோர் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
வல்லியந் தோல் உடை ஆடையினான் வலம்புர நன்நகரைச்
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர், தொல்வினை போய்,
செல்வன சேவடி சென்று அணுகி, சிவலோகம் சேர்வாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.055   தெண் திரை தேங்கி ஓதம்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருவலம்புரம் ; (திருத்தலம் அருள்தரு வடுவகிர்க்கண்ணம்மை உடனுறை அருள்மிகு வலம்புரநாதர் திருவடிகள் போற்றி )
தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழுங்காலை,
தொண்டு இரைத்து அண்டர் கோனைத் தொழுது, அடி வணங்கி, எங்கும்
வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம் புரத்து அடிகள் தம்மைக்
கொண்டு, நல் கீதம் பாடக் குழகர் தாம் இருந்த ஆறே!

[1]
மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை,
பிடிக் களிறு என்னத் தம்மில் பிணை பயின்று அணை வரால்கள்
தொடுத்த நல் மாலை ஏந்தித் தொண்டர்கள் பரவி ஏத்த,
வடித் தடங்கண்ணி பாகர்-வலம்புரத்து இருந்த ஆறே!

[2]
தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்தச் சேர்த்தி,
ஆன் இடை அஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி,
வான் இடை மதியம் சூடும் வலம் புரத்து அடிகள் தம்மை
நான் அடைந்து ஏத்தப் பெற்று, நல்வினைப் பயன் உற்றேனே.

[3]
முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு, மொய் சடைகள் தாழ,
வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி,
புளை கயப் போர்வை போர்த்து, புனலொடு மதியம் சூடி,
வளை பயில் இளையர் ஏத்தும் வலம் புரத்து அடிகள் தாமே.

[4]
சுருள் உறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த,
இருள் உறு கதிர் நுழைந்த இளங் கதிர்ப் பசலைத் திங்கள்
அருள் உறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த,
மருள் உறு கீதம் கேட்டார் வலம் புரத்து அடிகளாரே.

[5]
நினைக்கின்றேன், நெஞ்சு தன்னால் நீண்ட புன் சடையினானே!
அனைத்து உடன் கொண்டு வந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி;
புனை(க்)கின்றேன், பொய்ம்மை தன்னை; மெய்ம்மையைப் புணர மாட்டேன்;
எனக்கு நான் செய்வது என்னே, இனி? வலம் புரவனீரே!

[6]
செங்கயல் சேல்கள் பாய்ந்து, தேம் பழம் இனிய நாடி
தம் கயம் துறந்து போந்து, தடம் பொய்கை அடைந்து நின்று,
கொங்கையர் குடையுங் காலைக் கொழுங் கனி அழுங்கினார் அம்
மங்கல மனையின் மிக்கார் வலம் புரத்து அடிகளாரே!

[7]
அருகு எலாம் குவளை, செந்நெல், அகல் இலை ஆம்பல் நெய்தல்;
தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும், படப்பை எல்லாம்
குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி
மருவல் ஆம் இடங்கள் காட்டும், வலம் புரத்து அடிகளாரே!

[8]
கருவரை அனைய மேனிக் கடல் வண்ணன் அவனும் காணான்;
திரு வரை அனைய பூமேல் திசை முகன் அவனும் காணான்;
ஒரு வரை உச்சி ஏறி ஓங்கினார், ஓங்கி வந்து(வ்)
அருமையின் எளிமை ஆனார் அவர், வலம்புரவனாரே.

[9]
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம் தன்னை
ஆள் வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக் கீழ், அன்று,
தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி,
ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.058   மண் அளந்த மணி வண்ணர்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவலம்புரம் ; (திருத்தலம் அருள்தரு வடுவகிர்க்கணம்மை உடனுறை அருள்மிகு வலம்புரநாதர் திருவடிகள் போற்றி )
மண் அளந்த மணி வண்ணர் தாமும், மற்றை மறையவனும், வானவரும், சூழ நின்று
கண் மலிந்த திரு நெற்றி உடையார்; ஒற்றைக் கத நாகம் கை உடையார்; காணீர் அன்றே?
பண் மலிந்த மொழியவரும், யானும், எல்லாம் பணிந்து இறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல,
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

[1]
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீவண்ணர்; சிறந்து இமையோர் இறைஞ்சி ஏத்த,
கொலை நவின்ற களியானை உரிவை போர்த்து, கூத்து ஆடி, திரிதரும் அக் கூத்தர்; நல்ல
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண, கடு விடை மேல், பாரிடங்கள் சூழ, காதல்
மலை மகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

[2]
தீக் கூரும் திருமேனி ஒரு பால், மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்;
ஆக்கூரில்-தான் தோன்றி புகுவார் போல, அருவினையேன் செல்வதுமே, அப்பால் எங்கும்
நோக்கார், ஒரு இடத்தும்; நூலும் தோலும் துதைந்து   இலங்கும் திருமேனி வெண் நீறு ஆடி,
வாக்கால் மறை விரித்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

[3]
மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர்; இந் நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேல் கோத்த குழகனார்; குளிர்கொன்றை சூடி இங்கே
போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்ல, புறக்கணித்து, தம்முடைய பூதம் சூழ,
வா வா! என உரைத்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே.

[4]
அனல் ஒரு கையது ஏந்தி, அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி,
புனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன் போல் மேனிப் புனிதனார், புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த,
சின விடையை மேற்கொண்டு, திரு ஆரூரும் சிரபுரமும் இடை மருதும் சேர்வார் போல,
மனம் உருக, வளை கழல, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

[5]
கறுத்தது ஒரு கண்டத்தர்; காலன் வீழக் காலினால்   காய்ந்து உகந்த காபாலி(ய்)யார்;
முறித்தது ஒரு தோல் உடுத்து, முண்டம் சாத்தி, முனி கணங்கள் புடை சூழ, முற்றம் தோறும்
தெறித்தது ஒரு வீணையராய்ச் செல்வார்; தம்
வாய்ச் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ,
மறித்து ஒரு கால் நோக்காதே, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

[6]
பட்டு உடுத்து, பவளம் போல் மேனி எல்லாம் பசுஞ்சாந்தம் கொண்டு அணிந்து, பாதம் நோவ
இட்டு எடுத்து நடம் ஆடி, இங்கே வந்தார்க்கு, எவ் ஊரீர், எம்பெருமான்? என்றேன்; ஆவி
விட்டிடும் ஆறு அது செய்து, விரைந்து நோக்கி, வேறு ஓர் பதி புகப் போவார் போல,
வட்டணைகள் பட நடந்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

[7]
பல்லார் பயில் பழனப் பாசூர் என்று, பழனம் பதி பழைமை சொல்லி நின்றார்;
நல்லார் நனி பள்ளி இன்று வைகி, நாளைப் போய், நள்ளாறு சேர்தும் என்றார்;
சொல்லார், ஒரு இடமா; தோள் கை வீசி, சுந்தரராய், வெந்த நீறு ஆடி, எங்கும்
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

[8]
பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு, போர்   வெண்மழு ஏந்தி, போகா நிற்பர்;
தங்கார் ஒரு இடத்தும், தம்மேல் ஆர்வம் தவிர்த்து அருளார்; தத்துவத்தே நின்றேன் என்பர்;
எங்கே இவர் செய்கை? ஒன்று ஒன்று ஒவ்வா; என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி,
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

[9]
செங்கண் மால் சிலை பிடித்து, சேனையோடும் சேதுபந்தனம் செய்து, சென்று புக்கு,
பொங்கு போர் பல செய்து, புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடி ஆய் வீழ,
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி,
அடர்த்து, அவற்கே அருள் புரிந்த அடிகள், இந் நாள்
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.072   எனக்கு இனித் தினைத்தனைப் புகல்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருவலம்புரம் ; (திருத்தலம் அருள்தரு வடுவகிர்க்கண்ணம்மை உடனுறை அருள்மிகு வலம்புரநாதர் திருவடிகள் போற்றி )
எனக்கு இனித் தினைத்தனைப் புகல் இடம் அறிந்தேன்;
பனைக் கனி பழம் படும் பரவையின் கரை மேல்
எனக்கு இனியவன், தமர்க்கு இனியவன், எழுமையும்
மனக்கு இனியவன் தனது இடம் வலம்புரமே.

[1]
புரம் அவை எரிதர வளைந்த வில்லினன், அவன்;
மர உரி புலி அதள் அரைமிசை மருவினன்;
அர உரி இரந்தவன், இரந்து உண விரும்பி நின்று;
இரவு எரி ஆடி தன் இடம் வலம்புரமே.

[2]
நீறு அணி மேனியன், நெருப்பு உமிழ் அரவினன்,
கூறு அணி கொடுமழு ஏந்தி(ய) ஒர் கையினன்,
ஆறு அணி அவிர்சடை அழல் வளர் மழலை வெள்-
ஏறு அணி அடிகள் தம் இடம் வலம்புரமே.

[3]
கொங்கு அணை சுரும்பு உண, நெருங்கிய குளிர் இளந்
தெங்கொடு பனை பழம் படும் இடம்; தேவர்கள்
தங்கிடும் இடம்; தடங்கடல்-திரை புடைதர
எங்களது அடிகள் நல் இடம் வலம்புரமே.

[4]
கொடு மழு விரகினன், கொலை மலி சிலையினன்,
நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன், இடம்;
படு மணி முத்தமும் பவளமும் மிகச் சுமந்து
இடு மணல் அடை கரை இடம் வலம்புரமே.

[5]
கருங்கடக் களிற்று உரிக் கடவுளது இடம்; கயல்
நெருங்கிய நெடும் பெ(ண்)ணை அடும்பொடு விரவிய
மருங்கொடு, வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து
இருங்கடல் அணைகரை இடம் வலம்புரமே.

[6]
நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர்,
வரி புரி பாட நின்று ஆடும் எம்மான், இடம்;
புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து
எரி எரி ஆடி தன் இடம் வலம்புரமே.

[7]
பாறு அணி முடைதலை கலன் என மருவிய,
நீறு அணி, நிமிர்சடை முடியினன்; நிலவிய
மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது,
ஏறு உடை அடிகள் தம் இடம் வலம்புரமே.

[8]
சடசட விடு பெ(ண்)ணை பழம் படும் இட வகை;
பட வடகத்தொடு பல கலந்து உலவிய
கடை கடை பலி திரி கபாலிதன் இடம் அது;
இடி கரை மணல் அடை இடம் வலம்புரமே.

[9]
குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர், கண்டு அடி வீழ்ந்தவர், கனை கழல்
தண்டு உடைத் தண்டிதன் இனம் உடை அர உடன்
எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே.

[10]
வரும் கலமும் பல பேணுதல், கருங்கடல்,
இருங் குலப் பிறப்பர் தம் இடம் வலம்புரத்தினை,
அருங் குலத்து அருந்தமிழ் ஊரன்-வன்தொண்டன்-சொல்
பெருங் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list