ஊன் ஆய், உயிர் புகல் ஆய், அகலிடம் ஆய், முகில் பொழியும் வான் ஆய், வரு மதி ஆய், விதி வருவான் இடம்-பொழிலின் தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும்-திருச் சுழியல், நானாவிதம் நினைவார்தமை நலியார், நமன்தமரே.
|
1
|
உடம்புகளாகியும் , அவைகளில் புகுதலை யுடைய உயிர்களாகியும் , அகன்ற நிலமாகியும் , மேகங்கள் நின்று மழையைப் பொழியும் வானமாகியும் , வினைப்பயன் வருதற்கு வழியாகிய உள்ள மாகியும் நிற்பவனாகிய இறைவனது இடம் , சோலைகளில் தேனை விரும்பி வண்டுக் கூட்டம் இசைபாடுகின்ற திருச்சுழியலாகும் . அதனைப் பல்லாற்றானும் நினைபவர்களை , கூற்றுவன் ஏவலர்கள் துன்புறுத்தமாட்டார்கள் . | |
தண்டு ஏர் மழுப்படையான், மழவிடையான், எழு கடல் நஞ்சு உண்டே புரம் எரியச் சிலை வளைத்தான்,-இமையவர்க்கா,- திண் தேர்மிசை நின்றான் அவன், உறையும் திருச் சுழியல்- தொண்டே செய வல்லார் அவர் நல்லார்; துயர் இலரே.
|
2
|
தண்டுபோல மழுப்படையை ஏந்தியவனும் , இளமையான இடபத்தை யுடையவனும் , தேவர்கள் பொருட்டு , கடலில் எழுந்த நஞ்சினையுண்டு , திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் திண்ணிய தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலிற் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள் , இன்பம் உடையவரும் , துன்பம் இல்லாதவரும் ஆவர் . | |
கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற, கொவ்வைத்துவர் வாயார் குடைந்து ஆடும் திருச் சுழியல், தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார், அவ் அத் திசைக்கு அரசு ஆகுவர்; அலராள் பிரியாளே.
|
3
|
ஓசையையுடைய கடல் , முழக்கம்செய்து , தான் கொணர்ந்த முத்துக்களைக் கரையின்கண் சேர்க்க , அங்கு , கொவ்வைக் கனிபோலும் சிவந்த வாயையுடைய மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற கடவுளை வழிபட்டு மீள்கின்ற வரது திருவடிகளை வணங்குவோர் , தாம் தாம் வாழ்கின்ற நாட்டிற்கு அரசராய் விளங்குவர் ; அவ்வரசிற்குரியவளாகிய திருமகள் அவர் களை விட்டு நீங்காள் . | |
மலையான் மகள் மடமாது இடம் ஆகத்தவன், மற்றுக் கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான், திருச் சுழியல் அலை ஆர் சடை உடையான், அடி தொழுவார் பழுது உள்ளம் நிலையார்; திகழ் புகழால் நெடுவானத்து உயர்வாரே.
|
4
|
மலையரையனுக்கு மகளாகிய இளைய மாது தனது திருமேனியின்கண் இடப் பகுதியினளாக , கொலைத் தொழிலை யுடைய யானையின் தோலைப் போர்த்துள்ள எம் பெருமானாகிய , திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற , நீர் பொருந்திய சடையை உடையவனது திருவடியைத் தொழுபவர்கள் , மனத்தில் குற்றம் பொருந்தாதவராவர் ; இவ்வுலகில் விளங்குகின்ற புகழை நாட்டிய மகிழ்வோடு நீண்ட வானுலகத்திற்கும் மேற்செல்வார்கள் . | |
உற்றான், நமக்கு; உயரும் மதிச் சடையான்; புலன் ஐந்தும் செற்று ஆர் திருமேனிப் பெருமான்; ஊர் திருச் சுழியல் பெற்றான், இனிது உறைய; திறம்பாமைத் திருநாமம் கற்றார் அவர் கதியுள் செல்வர்; ஏத்தும்(ம்)மது கடனே.
|
5
|
நமக்கு உறவாயுள்ளவனும் , மேன்மை தங்கிய சந்திரனை யணிந்த சடையை யுடையவனும் , ஐம்புலன்களையும் வென்று பொருந்திய திருமேனியையுடைய பெருமானும் ஆகிய இறைவனது ஊர் திருச்சுழியலே . அதன்கண் நீங்காது இனிது எழுந் தருளியிருக்கப்பெற்ற அவனது திருநாமத்தைப் பயின்றவர் , உயர் கதியிற் செல்வர் ; ஆதலின் உலகீர் , அவனது திருப்பெயரைப் போற்று மின் ; அதுவே உங்கட்குக் கடமையாவது . | |
| Go to top |
மலம் தாங்கிய பாசப் பிறப்பு அறுப்பீர்! துறைக் கங்கைச்- சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திருச் சுழியல் நிலம் தாங்கிய மலரால்; கொழும் புகையால், நினைந்து ஏத்தும்! தலம் தாங்கிய புகழ் ஆம்; மிகு தவம் ஆம்; சதுர் ஆமே!
|
6
|
மாசினை உடைய பாசத்தால் வருகின்ற பிறப்பினை அறுக்க விரும்புகின்றவர்களே , துறைகளை உடையதாதற்கு உரிய கங்கையாகிய நீரினைத் தாங்கியுள்ள முடியையுடைய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடமாகிய திருச்சுழியலை , நிலம் சுமந்து நிற்கின்ற மலர்களாலும் , செழுமையான நறும்புகைகளாலும் வழி பட்டு , நினைந்து துதிமின்கள் ; உமக்கு இவ்வுலகம் சுமக்கத்தக்க புக ழோடு கூடிய மிக்க தவம் உளதாகும் திறல் உளதாகும் . | |
சைவத்த செவ் உருவன்; திருநீற்றன்(ன்), உரும் ஏற்றன்; கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும்(ம்) எரிசெய்தான்; தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன்; திருச் சுழியல் மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல்(ல்) எளிது அன்றே!
|
7
|
சிவாகமங்களிற் சொல்லப்பட்ட வேடத்தையுடைய சிவந்த திருமேனியை யுடையவனாய்த் திருநீற்றை யணிபவனும் , இடிபோலும் குரலையுடைய இடபத்தை யுடையவனும் , கையின்கண் வைத்த ஒரு வில்லாலே மூன்று கோட்டைகளையும் எரித்தவனும் , தெய்வத் தன்மையையுடைய தவத்தோர் வணங்கித் துதிக்கின்ற அழகனும் ஆகிய இறைவனது திருச்சுழியலை உள்ளத்துள் வைத்து , அவனது திருவடியை நினைபவரது வினைகள் நீங்குதல் எளிது . | |
பூ ஏந்திய பீடத்தவன் தானும், அடல் அரியும், கோ ஏந்திய வினயத்தொடு குறுகப் புகல் அறியார்- சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திருச் சுழியல், மா ஏந்திய கரத்தான், எம சிரத்தான் தனது அடியே.
|
8
|
எருதினை , ஏந்துகின்ற கொடியாகப் பெற்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில் , மானை ஏந்திய கையை யுடையவனும் , எங்கள் தலைகளின்மேல் உள்ளவனும் ஆகிய அவனது திருவடிகளை , தலைமை அமைந்த வணக்கத்தோடு அணுகச்சென்று அடைதலை , மலராகிய , உயர்ந்த இருக்கையில் உள்ளவனாகிய பிரமனும் , வலிமையுடைய திருமாலும் ஆகிய இவர்தாமும் அறியமாட்டார் . | |
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி செண்டு ஆடுதல் புரிந்தான் திருச் சுழியல் பெருமானைக் குண்டாடிய சமண் ஆதர்கள் குடைச் சாக்கியர் அறியா, மிண்டாடிய அது செய்தது(வ்) ஆனால், வரு விதியே
|
9
|
தன்னையே மதித்துக் கொள்ளுதலைச் செய்துநின்ற தக்கனது பெருவேள்வியை , பந்தாடுதல்போலத் தகர்த்து வீசி விளையாடினவனாகிய திருச்சுழியலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை , மூர்க்கத்தன்மை பேசுகின்ற சமணராகிய அறிவிலிகளும் , குடையை உடையவராகிய புத்தர்களும் அறியாமல் , வலிமை பொருந்திய வாதுசெய்து , அதன் வண்ணமே யாவார்களாயின் , அஃது அவர் வினைப்பயனேயாகும் . | |
நீர் ஊர் தரு நிமலன், திருமலையார்க்கு அயல் அருகே தேர் ஊர் தரும் அரக்கன் சிரம் நெரித்தான், திருச் சுழியல் பேர் ஊர் என உறைவான், அடிப்பெயர் நாவலர்கோமான் ஆரூரன-தமிழ்மாலைபத்து அறிவார் துயர் இலரே.
|
10
|
அருவிகள் பாய்கின்ற இறைவனது திருமலையில் எதிரொலி உண்டாக , அதன் அருகில் தனது ஊர்தியைச் செலுத்திய இராவணனது தலையை நெரித்தவனும் , திருச்சுழியலைத் தனது பெரிய ஊராகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனது திருவடிப் பெயரைப் புனைந்தவனும் , திருநாவலூரார்க்குத் தலை வனும் ஆகிய நம்பியாரூரனது இத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் உணர்கின்றவர் , துன்பம் யாதும் இலராவர் . | |
| Go to top |